Monday, December 26, 2016

தொல்பொருள் இடங்களை அழிக்குமாறு இஸ்லாம் கூறுகிறதா?

இந்தோனோசியாவிலுள்ள 09 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போரோபதூர் விகாரை

அஷ்கர் தஸ்லீம்
புராதன தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சிதைக்கும்படி இஸ்லாம் போதிப்பதாக, பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற கலந்துரையாடலொன்றின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஆனால், இஸ்லாம் இவ்வாறான கருத்துக்கைள ஒருபோதும் போதித்ததில்லை. இது இஸ்லாத்தின் மீது அபாண்டம் சுமத்தும் ஒரு நடவடிக்கையாகும்.
இந்த விவகாரம் குறித்து நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் வினவப்பட்டபோது, அவ்வாறு எதுவும் கூறப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மறாhக, இலங்கையின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இந்த நாட்டின் சிங்களவர், பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான இடங்களல்ல. மாறாக, இந்த நாட்டின் அனைவருக்கும் சொந்தமானது என்பதையே தேரர் புரிய வைத்ததாக விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உண்மையில், தொல்பொருள் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை அழிக்கும்படி இஸ்லாம் ஒருபோதும் போதித்ததில்லை. மாறாக, இப்போது பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளாக உள்ள நாடுகளில், இஸ்லாத்துக்கு முன்னர் காணப்பட்ட மதங்களின் அடையாளங்களை பாதுகாப்பதில் முஸ்லிம்கள் பெரும் அக்கறை எடுத்துள்ளனர்.

Monday, December 12, 2016

நபிகளாரின் போதனைகள் அகிலத்தாரையடைய முஸ்லிம்கள் தடையாக இருந்துவிடக்கூடாது!

அஷ்கர் தஸ்லீம்

அகிலத்தாருக்கு அருட்கொடையாக வந்த நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்களது பிறந்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த சிறப்புமிகு நாளில், நபிகளாரின் மணம் கமழும் வாழ்வு, அவரது போதனைகள் என்பன குறித்து நாம் ஒரு கனம் மீட்டிப் பார்க்க வேண்டும்.
இந்த அகிலத்தாருக்கு வழிகாட்டுவதற்காக, இறைவன் காலத்துக்கு காலம் நபிமார்களையும் தூதுவர்களையும் இந்த உலகுக்கு அனுப்பினான். அந்தத் தொடரில் இறுதியாக வந்த நபியும் தூதருமே பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களாவார்.
நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்களது வாழ்வு இந்த அகிலத்தாருக்கு முன்னுதாரணமானதாகும். ஒரு மனிதனின் வாழ்வில் அவன் சந்திக்கின்ற அனைத்து கட்டங்களுக்குமான அழகிய முன்னுதாரணங்களையும் வழிகாட்டல்களையும் நபிகளார் தனது வாழ்வு மூலம் தந்துள்ளார்.
நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்கள், தனது வாழ்நாள் முழுவதும் அவர் உதிர்த்த பொன்மொழிகள், அவரது நடத்தைகள், போதனைகளை எடுத்தொழுகுவதன் மூலம், இவ்வுலகத்தாருக்கு வெற்றி கிட்டும்.

Sunday, November 27, 2016

ஒரு இனத்துக்கான நிகழ்ச்சி நிரல்கள் பன்மை சமூக அமைப்பிற்கு பாதிப்பு - அஷ்ரபின் அரசியல் வாரிசுகள் புரிந்துகொள்வார்களா?



ரவூப் ஹக்கீம்
அஷ்கர் தஸ்லீம்

சமகால சூழ்நிலைகளை கருத்திற்கொண்டுஇலங்கை முஸ்லிம் அரசியல் புனருத்தாரணம் செய்யப்படல் வேண்டும் என்பது தவிர்க்க முடியாத வாதமாக தற்போது எழுந்து வருகின்றது. இவ்வளவு காலமும் முஸ்லிம் அரசியல் எவ்வாறான பாத்திரத்தை வகித்து வந்தது என்ற வரலாற்றை ஒருகணம் மீள்விசாரணை செய்துஅதில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலையில் முஸ்லிம் அரசியல் உள்ளது.
மன்னர் காலம் தொட்டு இன்று வரையிலான முஸ்லிம் அரசியலை பல்வேறு பகுதிகளாகப் பிரித்து நோக்க முடியும். இந்த ஒவ்வொரு காலப் பகுதியிலும்இந்த நாட்டின் தலைமைத்துவங்களோடு சேர்ந்துஇந்த நாட்டை வளப்படுத்தும் பணியில் முஸ்லிம் அரசியல் பங்களிப்பு செய்திருப்பதை அவதானிக்கலாம்.
ஆனால்பல்வேறு அரசியல் கருத்தியல்கள் செல்வாக்கு செலுத்துகின்றஇந்த நவீன யுகத்தில்முஸ்லிம் அரசியலின் போக்கு எவ்வாறு அமைய வேண்டும் என்பது முக்கியமானதாகும். இதற்காகதற்போதைய முஸ்லிம் அரசியலை விமர்சனபூர்வமாக நோக்குவது தவிர்க்க முடியாத காரணியாக உள்ளது.

Tuesday, October 11, 2016

மத்திய கிழக்கு மீதான அமெரிக்க யுத்தம்: 'போலி செய்திகளும் பொய்யான கொடிகளும்'


ஜனாதிபதி சட்டத்தரணி எம்எம். சுஹைர்
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

அல்காஇதா தலைவர்கள் வீடியோக்களில் தோன்றி, அமெரிக்க கூட்டணி மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமிப்பதற்கு பதிலடியாக, மேற்கு நாடுகளின் தலைநகரங்களில் தாக்குதல் மேற்கொள்வதாக எச்சரித்த பயங்கரமான வீடியோக்கள் உங்களுக்கு நினைவிருக்கின்றனவா? வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் தலைகளை வெட்டுவதற்காக, கையில் கத்தி ஏந்திய வண்ணம் காட்சி தந்த ஐ.எஸ்.ஐ.எஸ் கொலையாளிகளின் புகைப்படங்கள் நினைவிருக்கின்றனவா?
இதுபோன்ற வெறுக்கத்தக்க வீடியோக்களும், புகைப்படங்களும் உலகெங்கும் பரவியுள்ளதை நீங்கள் நூற்றுக்கணக்கான தடவைகள் பார்த்திருப்பீர்கள். ஆனால்,உண்மையாக கொலை செய்யப்படும் காட்சிகள் கொண்ட வீடியோக்களை நான் இன்னும் பார்த்ததில்லை. கொலை செய்யப்பட்டதன் பின்னர் எடுக்கப்பட்ட வீடியோக்களைகூட நான் பார்த்ததில்லை. கொலை செய்வதற்கு முன்னர் மாத்திரம் வீடியோ எடுப்பதற்கோ, புகைப்படம் எடுப்பதற்கோ அவர்கள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டனர்? ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் மிருகத்தனங்கள் வெளிக்காட்டப்பட வேண்டுமாயின், கொலை செய்யப்படும் காட்சிகள் அல்லது கொலை செய்யப்பட்டதன் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று ஒருவர் சிந்திக்கலாம்.
ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டபோது,ஈராக்கில் அமைக்கப்பட்ட கேம்ப் விக்டரியில் (Camp Victory), அமெரிக்க பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து பணிபுரிந்த ஒரு பிரித்தானிய கம்பனி, பொய்யான செய்திகளையும், பொய்யான டிவிடிக்களையும் (DVD) தயாரித்து வந்துள்ளதாக, பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ஒரு ஊடகவியலாளர் பணியகம் தெரிவிக்கின்றது. எவ்வாறாயினும், இந்த பெருமளவிலான போலி செய்திகளின் உள்ளடக்கம் இன்னும் தெளிவற்றதாகவே உள்ளது.

Thursday, September 15, 2016

புத்தக கண்காட்சிக்கு செல்வோருக்கு சில அறிவுரைக் குறிப்புக்கள்...



அஷ்கர் தஸ்லீம்

இலங்கையின் புத்தக பிரியர்களுக்கு செப்டம்பர் மாதம் என்றால் ஒரு புது உற்சாகம் பிறப்பது இயல்புதான். ஏனெனில், கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வருடாந்தம் நடைபெறும் புத்தகக் கண்காட்சி செப்டம்பர் மாதமல்லவா நடைபெறுகின்றது.

இந்த வருடமும் புத்தகக் கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வழமைபோன்றே, புத்தகப் பிரியர்கள் தமக்கு தேவையான புத்தகங் களையும், புதிதாக வெளி வந்துள்ள புத்தகங் களையும் பெற்றுக் கொள்வதற்கு, இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு செல்லலாம்.

இந்தப் புத்தகக் கண்காட்சியின் விசேடம் என்னவென்றால், இலங்கையின் பிரபலமான அனைத்து வெளியீட்டாளர்களும் போல், இங்கு கலந்து கொள்வதுதான். எனவே, இலங்கையில் வெளிவரும் மிகப் பெரும்பாலான அனைத்து புத்தகங்களும் போல் இங்கு விற்பனைக்கு வைக்கப்படுகின்றது.

புத்தக வெளியீட்டாளர்கள் போன்றே, இலங்கையிலுள்ள புத்தக கடைகளும் இங்கு தமது விற்பனை கூடங்களை அமைத்திருப்பது இன்னுமொரு விசேடமாகும். எனவே, பல புத்தகக் கடைகளுக்கு ஏறி இறங்கி கஷ்டப்படுவதை விடவும், ஒரே இடத்தில் அனைத்து புத்தகக் கடைகளினதும் விற்பனைக் கூடங்களை தரிசிக்கும் வாய்ப்பு இங்கு ஏற்படுகின்றது.

சரி நண்பர்களே, இம்முறை இந்த புத்தக கண்காட்சிக்குச் செல்லும் உங்களுக்கான சில ஆலோசனைகளை, இந்த கட்டுரையில் நாம் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். நாம் இங்கு பகிர்ந்து கொள்ளும் ஆலோசனைகள் உங்களுக்கு பிரயோசனமளிக்கும் என்று நம்புகிறோம்.

Tuesday, August 30, 2016

ஐ.எஸ். - ஒரு நோய் அறிகுறி, ஆனால் அது நோயல்ல!

ஆங்கிலத்தில்: டானியா ஒகம்பொஸ்
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்
இஸ்லாமிய தேசம் என்று தம்மை பிரகடனம் செய்து கொண்டு .எஸ் இயக்கம், தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த 12 வீதமான நிலப் பகுதியை 2016 இன் ஆரம்ப மாதங்களில் இழந்துள்ளது. ஈராக்கிய நகரங்களான ரமாடி மற்றும் பலூஜா ஆகியனவும் இதில் உள்ளடங்குகின்றன. இந்தத் தகவல்கள் .எஸ்.எஸ்ஸின் நெருக்கடி கண்காணிப்புக் குழு மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இவ்வருடம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், .எஸ் தம் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களை இழக்க ஆரம்பித்தது. ஜூலையின் ஆரம்பப் பகுதியில் .நா உதவியில் லிபியாவில் இயங்கும் அரசு (.எஸ்)இன் கட்டுப்பாட்டிலிருந்த முக்கிய வட ஆபிரிக்க நகரான சிர்டேயை கைப்பற்றியது. சில நாட்களின் பின்னர், அமெரிக்காவின் ஆதரவுடன் இயங்கும் சிரிய எதிர்தரப்பு போராளிகள் சிரியாவின் மன்பிஜ் என்ற பகுதியை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
.எஸ். யுத்த களத்தில் தோல்வியடைந்து வருவதை சுட்டிக்காட்டுவது போன்று, .எஸ். ஒரு பாரம்பரிய இராணுவம் என்ற தரத்திலிருந்து படிப்படியாக தோல்வியடைந்து வரும் வேகம் அதிகரிக்கும் என்பது புலனாகின்றது.
சிரியாவிலும் ஈராக்கிலும் இன,மத சூழலமைவு மிகவும் சிக்கலான நிலையில் உள்ளதால், .எஸ், இராணுவ ரீதியாக தோற்றகடிக்கப்பட்டதன் பின்னர், அங்கு ஆட்சியும் சமூக ஐக்கியமும் சவாலுக்கு உட்படும் என்பது புலனாகின்றது.

Thursday, August 18, 2016

துருக்கி - ரஷ்ய உறவின் மறுமலர்ச்சி

அஷ்கர் தஸ்லீம்
துருக்கிக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான உறவு மீண்டும் சீரடையத்தொடங்கியுள்ளது. துருக்கி ஜனாதிபதி ரஜப் தையிப் அர்தூகான் கடந்த வாரம் ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டு விலாடிமிர் புடினை சந்தித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இருபக்க உறவு சீரடையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சிரிய விவகாரம் குறித்த முரண்பாடுகளும் கடந்த வருடம் ரஷ்யாவின் போர்விமானத்தை துருக்கி இராணுவம் சுட்டிவீழ்த்தியமையுமே துருக்கி ரஷ்யாஉறவு சிதைந்தமைக்கான பிரதான காரணங்களாகும்.
சிரிய ஜனாதிபதி பஷார் அல்அஸாத் சிரிய பொதுமக்கள் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்களை துருக்கி எதிர்த்துவருவதோடு, பஸார் அல் அஸாதின் இராணுவத்தினருக்கெதிராக போராடி வரும் போராளிகளுக்கு உதவிவருகின்றது. மறுபக்கம் ரஷ்யா பஷார் அஸாதின் நெருங்கிய கூட்டாளி என்பதால் அவருக்கு இராணுவ ரீதியாகவும் உதவி வருகின்றது.
இந்நிலையில் கடந்த வருட இறுதியில் ரஷ்ய போர் விமானமொன்று துருக்கி எல்லையினுள் வந்ததாக கூறி துருக்கி இராணுவம் அதனை சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்த சம்பவமே இரு நாடுகளுக்குமிடையிலான உறவை முற்றாக துண்டிக்கும் நிலைக்கு கொண்டு சென்றது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ரஷ்யர்கள் துருக்கியை தரிசிக்கக்கூடாதென்று ரஷ்யா அறிவுறுத்தியது.

Tuesday, August 9, 2016

இலங்கையர் என்ற அடையாளத்துடன் அனைவரும் ஒன்றுபட வேண்டும் - ருவன் விஜேவர்தன


தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

(தேசிய ஐக்கியத்துக்கான மன்றம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவுக்கு வௌ;ளவத்தை எக்ஸலன்ஸி மண்டபத்தில் நடத்திய பாராட்டு உபசாரத்தின்போது அமைச்சர் ஆற்றிய உரை)

இந்த மதிப்புமிக்க நிகழ்வில் நான் பாராட்டப்படுவதன் மூலம் நான் உண்மையில் கௌரவிக்கப்படுகிறேன். இப் பெரும் நிகழ்வில் சில வார்த்தைகளை பேசுவதற்கு சந்தர்ப்பம் அளித்த தேசிய ஐக்கியத்துக்கான மன்றத்தின் தலைவர் என்.எம். அமீன் மற்றும் அமைச்சர் .எச்.எம். பௌஸி ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்.எம். அமீன், நாம் அனைவரும் அறிந்திருப்பதுபோல் ஒரு முன்னணி ஊடகவியலாளர் மட்டுமல்ல, அவர் ஐக்கியம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை ஆதரித்துப் பேசும் ஒருவருமாவார். தேசிய ஐக்கியத்துக்கான மன்றத்தின் தலைவராக இருப்பதன் மூலம், எமது நாட்டு சமூகங்களுக்கு மத்தியில் சமாதானம், நல்லிணக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம், எமது நாட்டுக்கு பெரும் சேவையை அவர் செய்துள்ளார்.

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் .எச்.எம். பௌஸி அறிமுகம் தேவையற்ற ஒருவர். இலங்கையின் மிகவும் சிரேஷ்ட முஸ்லிம் அமைச்சரான அவர், அவரது பொது வாழ்வை, அவரது நாட்டுக்கும், அவரது சமூகத்துக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணித்துள்ளார். 1959 இல் அவர் அரசியலுக்கு நுழைந்தது முதல், இலங்கை முஸ்லிம் சமூகத்தை உயர்த்தி விடுவதற்காக அயராது விடாமுயற்சியுடன் செயற்பட்டிருக்கிறார் அவர். வயதில் என்னை விட இரு மடங்காக உள்ளபோதும், எமது பாராளுமன்றத்தில் களங்கமில்லாத அரசியல்வாதியாக அவர் உள்ளார். அவரும் நானும் வித்தியாசமான, பல நேரங்களில் எதிர்த்தரப்பு நிற்கும் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம். ஆனாலும், நான் எப்போதும் மெச்சுகின்ற, மிகவும் மதிக்கின்ற ஒரு அரசியல்வாதியே அவர் என்பதை நான் சொல்லியாக வேண்டும்.

Thursday, July 14, 2016

ஐ.எஸ்ஸை உருவாக்கியது டோனி பிளேயரும், ஜோர்ஜ் புஷ்ஷுமே!


ஆங்கிலத்தில்: அஸ்ஸாம் தமீமி
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

பதிமூன்று வருடங்களுக்கு முன்னர், அப்போதைய பிரித்தானியாவின் பிரதமர் டோனி பிளேயர், ஐக்கிய இராச்சியத்தை யுத்தத்துக்கு அழைத்துச் செல்வதை, பொய்யான தகவல்களின் அடிப்படையில் நியாயப்படுத்தியிருந்தார்.

வேறு எவருமன்றி, அவர் மட்டுமே அறிந்த காரணங்களுக்காக, அப்போதைய அமெரிக்காவின் நவீனபழமைவாத ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷோடு இணைந்து கொண்டார் டோனி பிளேயர். அப்போது போருக்கு எதிரான இயக்கதிலிருந்த நானும் எனது சகாக்களும், யுத்தத்துக்கு செல்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து டோனி பிளேயரையும், ஐக்கிய இராச்சிய அரசையும் எச்சரித்தோம்.

எமது ஆலோசனைகளுக்கு செவிசாய்க்காது, நாம் எள்ளி நகையாடப்பட்டோம். ஏலவே எம்மில் பலரிடமும் ஆலோசனை சில விவகாரங்கள் குறித்து ஆலோசனைகள் பெறப்பட்டிருந்தபோதும், அது முதல் அவ்வாறான ஆலோசனை பெறுவதிலிருந்தும், அரசின் உத்தியோகபூர்வ தொடர்புகளிலிருந்தும் நாம் வெளியேற்றப்பட்டோம். பிளேயர் நிர்வாகம் எம்மை அவமதித்தே நடந்து கொண்டது. சிலபோது நாம் தேசத்தின் எதிரி என்ற தரத்தில் கூட நடத்தப்பட்டோம்.

Friday, July 8, 2016

டோனி பிளேயர் ஒரு போர் குற்றவாளி!


ஆங்கிலத்தில்: ஜெமீ மெரில்
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்
(ஜெமீ மெரில்லின் கட்டுரையின் முக்கியமான பகுதிகள் இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.)

சில நாட்களுக்கு முன்னர் மிகவும் பரப்பாகவும், பிஸியாகவும் இருந்த பக்தாத் நகரின் கர்ராடா பகுதி தியில் எரிந்துகொண்டிருக்கம் சந்தர்ப்பத்திலும்கூட, கடந்த ஞாயிறு முதல் பல குடும்பங்கள் அங்கு வருகின்றன.

2003 இல் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்ததன் பின்னர், மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டோரின் சடலங்கள் வீதியோரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஐ.எஸ். தீவிரவாதிகள் மேற்கொண்ட இத்தாக்குதலில் 250 அளவிலானோர் கொல்லப்பட்டனர்.

கடந்த புதன் கிழமை வெளியிடப்பட்ட சில்கோட் அறிக்கையின்படி, அமெரிக்காவின் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு அவசியமற்றதொன்றாகும். அப்போதைய ஈராக்கின் தலைவராக இருந்த சத்தாம் ஹுஸைன் உடனடியாக அச்சுறுத்தலாக விளங்காதமையால், அமைதியான மாற்று வழிமுறைகள் கைக்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று அவ்வறிக்கை சுடு;டிக்காட்டுகின்றது.

இராணுவ ரீதியான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் ஏற்படும் விபரீதம் குறித்து பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் பலமுறை எச்சரிக்கப்பட்டாலும் அவற்றை அவர் புறக்கணித்து விட்டார் என்று ஸர் ஜோன் சில்கோட்டின் ஈராக் விவகாரம் குறித்த விசாரணை குறிப்பிடுகின்றது.

Tuesday, July 5, 2016

துருக்கி - இஸ்ரேல் உடன்படிக்கை காஸா முற்றுகையை நீக்குமா?


ஆங்கிலத்தில்: யுவோன் ரிட்லி
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

நாம் ரமழானின் இறுதி நாட்களை கடத்தி வருகின்ற நிலையில், உலகெங்கும் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் தர்மங்கள் வழங்கி வருகின்றனர். வழமைபோன்றே, காஸாவும் அதிகளவு தேவைகளைக் கொண்ட பிரதேசமாக இருந்து வருகின்றது.

கடந்த ஒரு தசாப்த காலமாக காஸாவின் நிலை மோசமாக உள்ளது. இஸ்ரேலும், எகிப்தும் காஸாவை சூழ இட்டுள்ள முற்றுகை காரணமாக, மனிதநேய உதவிகளும், காஸாவின் உட்கட்டமைப்பை மீளக்கட்டியெழுப்பவதற்கான பணிகளும் தடைப்பட்டுப் போயுள்ளன. காஸாவில் இரண்டு மில்லியன் பலஸ்தீனியர்கள் வாழ்கின்றனர்.

எனது தனிப்பட்ட அனுபவத்தின்படி, உதவிகளில் தங்கியிருக்கும் நிலையை பலஸ்தீனாகள் விரும்புவதில்லை என்பதை அறிந்த வைத்திருக்கின்றேன். இருப்பினும், மோசமான முற்றுகை காரணமாக காஸாவில் வாழ்வோர் பெருமளவு வறுமையாலும், கஷ்டத்தாலும் துன்பம் அனுபவித்து வருகின்றனர். உண்மை சொல்வதென்றால், மேற்குக் கரையை ஆளும் பலஸ்தீன அதிகார காஸாவின் இந்நிலை குறித்து சந்தோசமாகவே உள்ளது. அரபுலகிலுள்ள பலஸ்தீன அதிகார சபையின் சில கூட்டாளிகளும் இது குறித்து சந்தோசமாகவே உள்ளன.

Sunday, July 3, 2016

சீக்கியமும் முஸ்லிம்களும் பஞ்சாபும்



அஷ்கர் தஸ்லீம்

தலைப்பாகை அணிந்து. முறுக்கு மீசை வைத்த ஆண்களை, ஹிந்திப் படங்களில் அடிக்கடி காண்கிறோம். இந்திய, பாகிஸ்தானிய முஸ்லிம்களின் பெயருக்குப் பின்னால், ‘கான்” (இம்ரான் கான், ஆமிர் கான்…) என்று வருவது போல, இவாகளின் பெயருக்குப் பின்னால் ‘சிங்’ என்ற சொல் இருக்கும். ஆம், நீங்கள் நினைப்பவர்கள்தான் அவர்கள். சீக்கிய மதத்தைப் பின்பற்றும் பஞ்சாபி இனத்தவர்… சீக்கியமும் பஞ்சாபியும் பின்னிப் பிணைந்தவை.
உலகில் 20 மில்லியன் சீக்கியர் உள்ளனர். இவாகளில் பெரும்பாலானோர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலேயே வாழ்கின்றனா. அதுபோக, பஞ்சாபிலிருந்து சென்று, கனடாவிலும், ஐக்கிய இராச்சியத்திலும், அமெரிக்காவிலும் பல சீக்கியர்கள் குடியேறியுள்ளனர்.
16 ஆம் நூற்றாண்டில் பஞ்சாப் பிராந்தியத்தில் சீக்கிய மதம் ஸ்தாபிக்கப்பட்டது. குரு நானக் என்பவரே சீக்கிய மதத்தை ஸ்தாபித்தவா. அவரைத் தொடர்ந்து 9 சீக்கிய குருக்கள் உருவாகியுள்ளனா. 10 ஆவத குருவான கோபிந்த் சிங், இனிமேல் குருக்கள் உருவாக மாட்டர் என்றும், சீக்கியத்தின் மத நூலான ‘குரு கிரந்த் ஸாஹிப்’ இனிமேல் நிரந்தர குருவாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Wednesday, June 22, 2016

வலுக்கும் ட்ரம்ப் எதிர்ப்பு


ஆங்கிலத்தில்: நோவா சபோ
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்அமெரிக்க
(நவமணி 22.06.2016)

தேர்தலில் டொனல்ட் ட்ரம்பும், ஹிலரி கிளின்டனும் போட்டியிடும் நிலை உத்தியோகபூர்வமற்ற முறையில் உறுதியாகியுள்ளபோதும், தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று இதுவரையும் மிகச் சரியாக அனுமானிக்க முடியாத நிலையே தொடர்கிறது. ஹிலரி கிளின்டன் மிதவாத போக்கை பின்பற்றுகையில், டொனல்ட் ட்ரம்ப் மிகவும் கடும்போக்கை வெளிப்படுத்தி வருகிறார்.தான் ஆட்சிக்கு வரும்போது, அமெரிக்காவுக்கு முஸ்லிம்கள் நுழைவதை தடை செய்யப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். அத்தோடு, அமெரிக்காவில் குடியேறி வருவோருக்கு எதிரான கருத்துக்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.

ட்ரம்பின் இந்த நடவடிக்கைகளால் அமெரிக்க சிறுபான்மையின மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளதோடு, ட்ரம்பின் அறிவிப்புக்களுக்கும் செயற்பாடுகளுக்கும் எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். ட்ரம்பம் அதிகாரத்தக்கு வருவதாயின், சிறுபான்மையின மக்கள் எதிர்கொள்ள நேரிடும் அசௌகரியங்கள் குறித்து சிறுபான்மையினத்தவர் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.

அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைவதைத் தடுப்பதாகவும், அமெரிக்காவில் குடியேற வருவோரை எதிர்ப்பதாகவும் கூறும் டொனல்ட் ட்ரம்ப், அவரது மூதாதையரும்கூட அமெரிக்காவை ஆக்கிரமித்து குடியோர் என்பதை மறந்து போயுள்ளார் போலும்.

Thursday, June 16, 2016

போதையை போதனைகளால் மட்டும் அழிக்க முடியாது!

அஷ்கர் தஸ்லீம்



 ஒருகொடவத்தையிலுள்ள கொள்கலன் தளத்திலிருந்து 91.3 கிலோ அளவிலான கொக்கைன் போதைப் பொருட்களை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர். இலங்கை வரலாற்றில் பெருமளவு போதைப் பொருள்கைப்பற்றப்பட்ட முதற் சந்தர்ப்பம் இதுவே.

ரூ. 2 பில்லியன் பெறுமதி வாய்ந்த இந்த கொக்கைன், பிரேஸில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 1 கிலோ பக்கட்களாக ஒழுங்குபடுத்தியே இப்போதைப் பொருள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நிதியமைச்சின் விசேட பிரிவினரால் கொடுக்கப்பட்ட துப்பின் அடிப்படையிலேயே இப்போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் சிசிர விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

40 வருடங்களாக சீனி இறக்குமதியில் ஈடுபட்டிருந்த ஒரு வியாபாரியே இந்த கொக்கைன் போதைப் பொருளை இலங்கைக்கு இறக்குமதி செய்துள்ளார். இந்த வியாபாரியும் இதற்கு ஒத்துழைத்த இன்னும் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மத்திய தரைக் கடலில் நங்கூரமிடும் ரஷ்யா!

லியுக் கெஃபி
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

சைக்ஸ் பீகோ உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு இந்த மே மாதத்தோடு ஒரு நூற்றாண்டு கழிந்துள்ளது. எனவே, முதலாம் உலக மகா யுத்தத்துக்குப் பின்னர் பிரான்ஸினதும், பிரித்தானியாவினதும் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளாக மத்திய கிழக்கு துண்டாடப்பட்டது பெருமளவு நினைவுகூரப்பட்டது.

ஆனாலும், சைக்ஸ் பீகோ உடன்படிக்கைக்கு சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட கொன்ஸ்தாந்துநோபிள் உடன்படிக்கை குறித்து அவ்வளவாக யாரும் அறிந்ததாக இல்லை. முதலாம் உலக ரஷ்யா, பிரான்ஸ், இந்த உடன்படிக்கையின்படி, துருக்கியின் ஜலசந்திகளையும், அப்போதைய உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் தலைநகரான கொன்ஸ்தாந்துநோபிளயும் ரஷ்யா பயன்படுத்துவதற்கு அனுமதித்திருந்தது.

ரஷ்யாவுக்கு மத்திய தரைக் கடலை எதுவிதத் தடையுமின்றி நெருங்குவது கஷ்டமாகவே இருந்தது. 1914 இல் மகா யுத்தத்தின் முதல் வருடத்தில் ரஷ்யாவின் ஏற்றுமதிப் பொருட்களில் 50 வீதமானவையும், அதன் விவசாய ஏற்றுமதிகளில் 90 வீதமானவையும் துருக்கி ஜலசந்திகள் ஊடாகவே கொண்டு செல்லப்பட்டன.

1917 இல் ரஷ்யாவில் நிகழ்ந்த புரட்சி, ரஷ்யாவை யுத்தத்திலிருந்து வெளியேற்றி விட்டிருந்தது. அதாவது கொன்ஸ்தாந்துநோபிள் உடன்படிக்கை ஒருபோதும் உணரப்படுவதாக இருக்கவில்லை.

ஐரோப்பிய இஸ்லாமோபோபியா குறித்து…


-அஷ்கர் தஸ்லீம்-

(இன்திஸார் கெரிகி என்ற தூனிஸிய பூர்வீக பிரித்தானிய பெண் எழுத்தாளரின் கட்டுரையைத் தழுவி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இன்திஸார் கெரிகி, ஒப்பீட்டு அரசியல் உளவியல் துறையில் தனது கலாநிதி ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.)

கடந்த நூற்றாண்டின் மத்திமப் பகுதியில், வட ஆபிரிக்க அரபு நாடுகளிலிருந்தும், தெற்காசிய நாடுகளிலிருந்தும் இலட்சக் கணக்கான முஸ்லிம்கள், ஐரோப்பிய நாடுகளில் சென்று வாழத் தொடங்கினர். கல்வி மற்றும் தொழில் நோக்காக ஐரோப்பா சென்ற இவர்கள் அங்கேயே குடியேறி தற்போது இரண்டாம் மூன்றாம் தலைமுறையினர்கூட தோன்றிவிட்டனர்.

பிரான்ஸ், ஜேர்மன் ஆகிய நாடுகளில் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். பிரான்ஸில் மொரோக்கோ, அல்ஜீரியா, தூனிஸியா போன்ற வட ஆபிரிக்க அரபு நாடுகளைச் சோந்த அரபு மற்றும் அமாஸிக் இன முஸ்லிம்கள் செறிவாக உள்ளனர்.

ஜேர்மனியில் துருக்கி இன முஸ்லிம் மிக செறிவாக வாழ்கின்றனர். அதுபோக, இங்கிலாந்து உள்ளிட்ட இன்னும் பல ஐரோப்பிய நாடுகளில் தெற்காசிய -குறிப்பாக பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் இந்திய- முஸ்லிம்கள் அதிகளவு வாழ்கின்றனர்.

இரண்டாம். மூன்றாம் தலைமுறைகளாக தற்போது ஐரோப்பாவில் வாழும் இம்முஸ்லிம்கள் சமீப காலமாக அதிகரித்து வரும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளாலும், வன்முறைகளாலும் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, முஸ்லிம் பெண்கள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்.