Monday, December 26, 2016

தொல்பொருள் இடங்களை அழிக்குமாறு இஸ்லாம் கூறுகிறதா?

இந்தோனோசியாவிலுள்ள 09 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போரோபதூர் விகாரை

அஷ்கர் தஸ்லீம்
புராதன தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சிதைக்கும்படி இஸ்லாம் போதிப்பதாக, பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற கலந்துரையாடலொன்றின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஆனால், இஸ்லாம் இவ்வாறான கருத்துக்கைள ஒருபோதும் போதித்ததில்லை. இது இஸ்லாத்தின் மீது அபாண்டம் சுமத்தும் ஒரு நடவடிக்கையாகும்.
இந்த விவகாரம் குறித்து நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் வினவப்பட்டபோது, அவ்வாறு எதுவும் கூறப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மறாhக, இலங்கையின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இந்த நாட்டின் சிங்களவர், பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான இடங்களல்ல. மாறாக, இந்த நாட்டின் அனைவருக்கும் சொந்தமானது என்பதையே தேரர் புரிய வைத்ததாக விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உண்மையில், தொல்பொருள் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை அழிக்கும்படி இஸ்லாம் ஒருபோதும் போதித்ததில்லை. மாறாக, இப்போது பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளாக உள்ள நாடுகளில், இஸ்லாத்துக்கு முன்னர் காணப்பட்ட மதங்களின் அடையாளங்களை பாதுகாப்பதில் முஸ்லிம்கள் பெரும் அக்கறை எடுத்துள்ளனர்.

தெற்காசியாவின் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், தென்கிழக்காசியாவின் மலேசியா, இந்தோனேசியா முதலிய நாடுகளில் இன்றும்கூட பல்லாயிரக்கணக்கான பௌத்த மத வழிபாட்டிடங்களையும், புத்தர் சிலைகளையும் காணலாம். இந்த நாடுகளில் இஸ்லாம் பரவுவதற்கு முன்னர் காணப்பட்ட அந்த தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த வழிபாட்டடிங்களையும், புத்தர் சிலைகளையும் பாதுகாப்பதில் முஸ்லிம்கள் பெரும் சிரத்தை எடுத்துள்ளனர்.
இலங்கையின் பௌத்த விசேட தினங்களில், புத்தரின் புனித தந்தங்களும், இன்னும் பல முக்கியத்துவம் வாய்ந்த புராதன பௌத்த அடையாளங்களும் பாகிஸ்தானிலும், பங்களாதேசிலுமிருந்தே தருவிக்கப்படுகின்றன. அந்த முஸ்லிம் நாடுகள் அவற்றை மிகவும் அக்கறையுடன் பேணிப் பாதுகாக்கின்றன.
இந்தோனேசியாவுக்கு செல்லும் ஒருவர், அது பௌத்த நாடா என்று எண்ணுமளவுக்கு அங்கே புராதன பௌத்த விகாரைகளும், புத்தர் சிலைகளும் காணப்படுகின்றன. அவற்றை அந்த நாட்டு முஸ்லிம்கள் தமது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகப் பேணிப் பாதுகாக்கின்றனர்.
இவ்வாறிருக்கையில், இஸ்லாம் புராதன தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அழிக்குமாறு போதிப்பதாக எவ்வாறு கூற முடியும்? இவ்வாறான போலியான புரளிகளை கட்டவிழ்த்து விடுவோரின் நோக்கம் மிகவும் தெளிவானதாகும். அதாவது, இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்து பெரும்பான்மையின மக்களின் மனங்களில் அச்சத்தை உருவாக்கவே இவர்கள் முயல்கின்றனர்.
இங்கு இன்னுமொரு முக்கிய விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும். அதாவது, ராஜபக்ஷவினரின் காலத்தில் இந்த கடும்போக்குவாத பௌத்த தேரர்களின் வன்முறைத்தனமான நடவடிக்கைகளுக்கு மௌன அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது நல்லாட்சியில் அதனையும் தாண்டிச் சென்று, அவர்களுக்கு ராஜ மரியாதை வழங்கப்படுகின்றதா என்று எண்ணத் தோன்றுகின்றது.
ஏனெனில், சர்வமத மன்றங்களில் இந்த கடும்போக்குவாத பௌத்த தேரர்கள் பங்குகொள்கின்ற நிலை உருவாகியுள்ளது. அதற்கும் மேல், ஜனாதிபதியும் நீதி அமைச்சரும் அவர்களுக்கு செவிமடுக்கும் நிலையும் உருவாகியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வருமுன் பேசியவையும், இப்போது அவர் நடந்து கொள்ளும் முறையும் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசமாகவே உள்ளது. அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானோ என்று சிந்திக்கத் தோன்றுகின்றது. இனியும் இந்த நாடு முன்னேறுமா?

No comments: