Wednesday, August 20, 2014

பன்மை சமூகத்தைப் புரிந்து கொள்ளல்



அஷ்கர் தஸ்லீம்

இன்றைய உலகம் நிலத்தால் வரையறை செய்யப்பட்ட “நாடு”களாக மாறியுள்ளது. ஒவ்வொரு நாடும் வித்தியாசமான இனங்களையும் மதங்களையும் பிரதிநித்துவம் செய்கின்ற மக்கள் தொகையைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு வேறுபட்ட இனங்களும் மதங்களும் உள்ள ஒரு சூழலில் கலாசார பன்மைத்துவத்தை அவதானிக்கலாம்.

கீழைத்தேய நாடுகள் பாரம்பரியமாகவே பல்வேறு இனங்கள் செறிந்து வாழும் இயல்பைப் பெற்றுள்ளன. உதாரணமாக இந்தியாவில் பலநூறு மொழிகளைப் பேசும் இனத்தவர்கள் வாழ்வதைக் குறிப்பிடலாம். இந்தியாவின் தெற்கில் உள்ளவர்களுக்கும் கிழக்கில் உள்ளவர்களுக்கும் இடையிலான வெளிப்புற தோற்றம் சூடானியர்கள், மங்கோலியர்கள் அளவு வித்தியாசமானது.

மேற்குலகும் பல் இன இயல்பைக் கொண்டிருந்தபோதும், கைத்தொழில் புரட்சிக்குப் பின்னர் இடம்பெற்ற குடியேற்றங்கள் காரணமாக, மேற்குலக நாடுகளில் ஆசிய இனத்தவர்களினதும் வட ஆபிரிக்கர்களினதும் பிரசன்னம் அதிகமாகியது.

பிரான்ஸில் 10 சதவீத அளவில் வடஆபிரிக்க அரபு முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஜேர்மனில் துருக்கியர்கள் மிகப் பெரும் அளவில் வாழ்கின்றனர். பாகிஸ்தானிகளும், இந்தியர்களும், பங்காளிகளும் மேற்கு நாடுகளில் பெருமளவு பிரசன்னத்தைக் கொண்டுள்ளனர்.

Wednesday, August 13, 2014

லத்தீன் அமெரிக்காவில் ஒலிக்கும் காஸாவின் குரல்!









தீமா கதீப்
(தீமா கதீப் பலஸ்தீன் பூர்வீகத்தைக் கொண்ட ஒரு சிரிய நாட்டு பெண் ஊடகவியலார். இவர் அல்ஜஸீராவின் லத்தீன் அமெரிக்க அலுவலகத்தின் முன்னாள் பிரதானி. இவரது Palestine present more than ever in Latin American politics என்ற கட்டுரை இங்கு மொழிபெயர்க்கப்படுகிறது)



தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

‘ஐ.நா சபையில் பலஸ்தீன் ஒரு முழு உறுப்பு நாடாக வேண்டும். நாம் அதனை ஆதரித்துப் பேசுவோம்’ இந்தக் குரல் வெனிஸியூலா நாட்டைச் சேர்ந்தவர்களுக்கோ அல்லது வெனிஸியூலாவில் வாழ்பவர்களுக்கோ பரிச்சயமானதே. ஒலிப் பதிவு செய்யப்பட்ட இந்தக் குரல், உள்நாட்டு வானொலி நிலையமொன்றில், சிதறிய வர்த்தக விளம்பரங்களுக்கு இடையே அடிக்கடி ஒலிக்கும்.

‘எமக்கு சமாதானம் வேண்டும். பலஸ்தீன் மீதான ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது தேவை. எமக்கு இந்த உலகில் சமாதானம் வேண்டும்.’ இந்த ஒலிக் குரல் ஒரு ஹிப்-ஹொப் பாடலுக்குப் பின்னர் ஒலிக்கின்றது. இது வெனிஸியூலாவின் முன்னாள் ஜனாதிபதி ஹியுகோ சாவேஸின் குரல். பலஸ்தீன வரலாறு குறித்தும், அதன் விடுதலைக்கு அழைப்பு விடுத்தும் அவர் பேசிய நீண்ட உரைகளிலிருந்து பெறப்பட்ட சிறிய ஒலி துணுக்குகளே இவை.

இன்னுமொரு அரச சார்பு உள்நாட்டு வானொலி நிலையமொன்றின் அறிவிப்பாளர் தன் சக அறிவிப்பாளரிடம், காஸாவின் பிந்திய தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். அவர் சொல்வதைக் கேளுங்கள்: ‘காஸாவில் நடப்பவை, சில வாரங்களுக்கு முன்னர் மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பானவை அல்ல. அது ஒரு பூமியின் கதை.’

Sunday, August 10, 2014

துருக்கி ஜனாதிபதித் தேர்தல் 2014 - வெல்லப்போவது யார்?

ரஜப் தையிப் அர்தூகான்

(அஷ்கர் தஸ்லீம்)

-இக்கட்டுரை அல்ஜஸீரா இணையதள செய்தியை தழுவி எழுதப்பட்டுள்ளது.-

இன்று (10.08.2014) துருக்கியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான் முன்னணி வேட்பாளராக உள்ளார்..

துருக்கி வரலாற்றில் முதற் தடவையாக, ஜனாதிபதி ஒருவர் இம்முறை மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்படவுள்ளார். இதற்கான அரசியலமைப்பு சீர்திருத்தம் 2007 இல் கொண்டு வரப்பட்டது.

கலாசார ரீதியாக பிரிந்து போயுள்ள துருக்கியில்10 வருடங்களுக்கு மேற்பட்ட தனது ஆட்சியை அர்தூகான் தக்க வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.