Sunday, April 24, 2016

குர்திஷ்: ஒரு சர்வதேசப் பிராந்தியத்தின் தன்னாட்சிக்கான போராட்டம்

ஐந்து நாடுகளிலும் பிரிந்திருக்கும் மாபெரும் குர்திஸ்தான் பிராந்தியம்


 அஷ்கர் தஸ்லீம்

மத்திய கிழக்குப் பிராந்தியம் எதிர்நோக்கும் நெருக்கடிகள், சர்வதேச அரசியலில் மிகுந்த தாக்கம் செலுத்தி வருகின்றது. உஸ்மானிய முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, துண்டாடப்பட்ட மத்திய கிழக்கில் குர்தி இன மக்கள் பிரதான நான்கு நாடுகளில் சிதறும் வகையில் நாடுகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஈராக், ஈரான், துருக்கி, சிரியா மற்றும் -சிறியளவில்- ஆர்மேனியா ஆகிய நாடுகளில் குர்தி இன மக்கள் வாழ்கின்றனர். மத்திய கிழக்கில் இன அடிப்படையில் நான்காவது பெரும்பான்மை இனமான குர்திகளுக்கு, இன அடிப்படையிலான தேசமொன்று இல்லை. எனவேதான், தமது இனத்துக்கான தேசமொன்றைக் கட்டியெழுப்பும் நோக்கில் குர்திக்கள் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஆயுத ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாரம்பரியமாகவே வாழ்ந்து வரும் இனமாக குர்திக்கள் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இன்றைய, தென்கிழக்கு துருக்கி, வட கிழக்கு சிரியா, வட ஈராக், வடமேற்கு ஈரான் மற்றும் தென்மேற்கு ஆர்மேனியா ஆகிய பகுதிகளிலேயே இவர்கள் மிகவும் செறிவாக வாழ்கின்றனர். இந்த ஐந்து பிராந்தியங்களும் ஒவ்வொன்றுடனும் இணைந்தவாறு, அவ்வந்த நாடுகளில் எல்லைப் பகுதிகளிலேயே அமைந்திருக்கின்றன. எனவே, குர்திக்கள் வாழும் இந்தப் பிராந்தியங்கள் இணைந்து மாபெரும்குர்திஸ்தான்பிராந்தியத்தை சமைக்கின்றது.