Monday, September 9, 2019

இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியலின் வரலாறு - தொடர் 01



பேராசிரியர் அப்துல் அஸீம்

தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்


இந்த ஆய்வுக் கட்டுரையானது, இஸ்லாத்தின் ஆரம்ப நாட்கள் முதல் கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் இஸ்லாமிய வங்கிகள் முறையாக ஸ்தாபிக்கப்பட்ட காலம் வரையில், இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியலின் தோற்றம் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யவிருக்கின்றது. அத்தோடு, பெரும்பாலும் ஆய்வு செய்யப்படாத ஒரு பகுதியான, இஸ்லாமிய வரலாற்றின் இறுதிப் பகுதிகளில் காணப்பட்ட வங்கியியல் நடவடிக்கைகள் மீதும் அவதானம் செலுத்தவுள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரையானது, 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வட்டியில்லா கடன் வழங்கும் குழுக்கள் காணப்பட்டதையும், 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப் பகுதியில் நவீன இஸ்லாமிய வங்கிகளின் அபிவிருத்திக்கு முன்னைய நிலையையும் பதிவு செய்கின்றது. இஸ்லாமிய வங்கியியலானது பொருளாதார வாழ்க்கையின் நடவடிக்கைகளை இஸ்லாமிய வழிமுறையின்படி செயற்வதற்கான ஒரு முயற்சியாகக் காணப்பட்டது. இது முதலில் கிராமிய மற்றும் விவசாய பொருளாதாரங்களில் உருவானது. மாறாக, வழமையாக சொல்லப்படுவது போன்று பெட்ரோடொலார் அல்லது மத்திய கிழக்கில் எண்ணெய் வள எழுச்சிக்குப் பின்னர் தான் இஸ்லாமிய வங்கியியல் உருவானது என்பது தவறான கருத்தாகும் என்று இந்த ஆய்வு முடிவுரை வழங்குகின்றது.


அறிமுகம்

இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியல் தான், இஸ்லாமிய பொருளாதாரத்தின் மிகவும் கட்புலனாகும் நடைமுறை ரீதியான அடைவாகும். எவ்வாறாயினும், இஸ்லாத்தின் ஆரம்ப காலம் முதலான இஸ்லாமிய பொருளாதாரத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு செய்வதற்கான முயற்சிகள் அரிதாகவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்தத் துறை குறித்த நூல்களில், பொதுவாக, 20 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பாதிக்கு முன்னைய வங்கியியல் மற்றும் நிதியியல் குறித்த தகவல்களை நாம் காண முடியாது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் காணப்பட்ட வட்டியில்லா கடன் வழங்கும் குழுக்கள் குறித்தும், நவீன இஸ்லாமிய வங்கிகளின் வருகைக்கு முன்னைய நிலை குறித்தும் பெரும்பாலான எழுத்தாளர்கள் அறிந்ததாக இல்லை. இந்த வெற்றிடத்தை நிரப்பவும், இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியலானது 20 ஆம் நூற்றாண்டின் பிரத்தியேகமான தயாரிப்பு என்ற தவறான புரிதலை நீக்கவும், இந்த ஆய்வுக் கட்டுரை முயல்கின்றது. அத்தோடு, இஸ்லாத்தின் ஆரம்ப நாட்கள் முதல் கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் இஸ்லாமிய வங்கிகள் முறையாக ஸ்தாபிக்கப்பட்ட காலம் வரையில், இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியலின் தோற்றம் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி குறித்தும் ஆய்வு செய்கின்றது. மேலும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வட்டியில்லா கடன் வழங்கும் குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தமை மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் காணப்பட்ட அரை-வங்கியியல் நிறுவனங்கள் குறித்த ஆரம்பகால பதிவுகளையும் இந்த ஆய்வு வழங்குகின்றது. வட்டியை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய வங்கிகளுக்கான ஒரு மாற்றீடாக இஸ்லாமிய வங்கிகள் வருவதற்கு முன்னர் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை இவ்வாய்வுக் கட்டுரை விளக்குகின்றது. இறுதியாக, இஸ்லாமிய வங்கியியலானது அடையாள உருவாக்கம் அல்லது 'அகில இஸ்லாமிய'த்தின் ஒரு தயாரிப்பு; அது மத்திய கிழக்கின் எண்ணெய் வள நாடுகளால் ஊக்குவிக்கப்பட்டது என்ற கருத்தை மறுக்கின்றது.


இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியல்

பாரம்பரிய வங்கி முறையைப் போலவே, நவீன இஸ்லாமிய வங்கியின் தோற்றமும், ஆரம்ப காலத்தில் கடன் வழங்குதல், வாங்குதல் மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கு நிதியளித்தல் என்பவற்றுடன் தொடர்புபட்டதாக இருப்பதைக் காணலாம். நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அல்குர்ஆன் வெளிப்படுத்தப்பட்ட மக்கா நகரம், இஸ்லாத்துக்கு முந்தைய காலத்திலிருந்து ஒரு சர்வதேச வர்த்தக மையமாக இருந்தது. மக்காவின் மக்கள் 'சர்வதேச பரிமாணங்கள் கொண்ட வணிக சாம்ராஜ்யத்தை' நிறுவியிருக்கலாம். வர்த்தகத்தை தமது முக்கிய தொழிலாகக் கொண்டிருப்பதால், அவர்களுக்கு வணிக நோக்கங்களுக்காக நிதி தேவைப்பட்டது. உபரி நிதியைக் கொண்டவர்கள் வணிகர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு மூலதனத்தை வழங்கி, இலாபத்தைப் பகிர்ந்து கொண்டனர். நபி முஹம்மத் (ஸல்) அவர்களும்கூட, தனக்கு நபித்துவம் கிடைப்பதற்கு முன்பு, வர்த்தகத்தில் ஈடுபட்டார். அத்தோடு, கதீஜா (ரழி) அவர்களின் நிதி மூலதனத்துடன் பல முறை பயணம் செய்தார். கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி, கதீஜா (ரழி) அவர்கள், நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முழாரபா அடிப்படையில் நிதி வழங்கினார். பத்ர் போருக்கு முன்பு, அபூ சுஃப்யான் தலைமையிலான வியாபார கரவனானது, பெருமளவில் அபூ சுஃப்யானின் நிதியையும், பிறரின் நிதியையும் கூட்டாண்மையாகக் கொண்டிருந்தது. முழாரபா மட்டுமே வணிக நிதியளிப்பின் ஒரே முறைமையாக இருக்கவில்லை என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். முராபஹா, முஷாரகா, ஸலம் போன்ற பிற வகை வர்த்தகங்களுக்கும் மூலதனம் வழங்கப்பட்டது.

வியாபாரங்களுக்கு நிதியிடும்போது அறவிடப்படும் வட்டிக்கு மாற்றீடாக, இஸ்லாமிய அமைப்பின் கீழ் இலாப நட்டப் பகிர்வு வழங்கப்பட்டது. வியாபாரத்தின் விளைவைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு உத்தரவாத இலாபத்துக்கும் எவரும் உரிமை பெற மாட்டர். முன்னரே தீர்மானிக்கப்பட்ட விகிதத்தின் அடிப்படையில் இலாபம் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். மாறாக, வழங்கப்பட்ட மூலதனத்திலிருந்து சம்பாதிக்க வேண்டிய சதவீதத்தின் அடிப்படையில் அல்ல. இழப்பு ஏற்பட்டால், மூலதன உரிமையாளர் மூலதன இழப்பைச் சுமப்பார். அதே நேரம் உழைக்கும் பங்குதாரர் தனது உழைப்பின் இழப்பைச் சுமப்பார். அதாவது, அவரது உழைப்புக்கு 'வெகுமதி வழங்கப்பட மாட்டாது'. இது முழாரபா கூட்டாண்மை என்று அழைக்கப்படுகிறது. 'தார்மீக இடர்', இலாப துணை அறிக்கை அல்லது அவரது தரப்பிலிருந்து அலட்சியம் போன்ற விடயங்கள் நிரூபிக்கப்பட்டால், உழைக்கும் பங்குதாரர் பொறுப்பேற்கச் செய்யப்படுவார்.

நபி (ஸல்) அவர்களின் பணக்கார தோழர்களான அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப் (ரழி), காலித் இப்னு அல்வலீத் (ரழி), உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) போன்ற சிலர், இஸ்லாத்திற்கு முந்தைய காலத்தில், மக்கா மற்றும் தாஇஃப் பிரதேச மக்களுடன் கடன் வழங்கும் தொழில்களை மேற்கொண்டிருந்தனர். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, அவர்கள் அதை கைவிட்டனர். இஸ்லாமிய அமைப்பில், கடன் கொடுத்தல் மற்றும் கடன் வாங்குதல் என்பன வட்டியின் அடிப்படையில் இல்லாமல் இருக்க வேண்டும். பணக்காரர் மற்றும் ஏழைகளின் படைப்பாளனான சர்வவல்லமையுள்ள அல்லாஹ்விடமிருந்தே, அதற்கான கூலியை ஒருவர் எதிர்பார்க்க வேண்டும். இவ்வாறான கடன்களை இஸ்லாம் ஊக்குவித்துள்ளது. அத்தோடு, அவை தர்மம் செய்வதை விட அதிக நற்கூலி வழங்கப்படும் ஒரு விடயம் என்றும் இஸ்லாம் கருதுகிறது. எனவே, முஸ்லிம்களிடையே இது மிகவும் பரவலாக இருந்ததில் எந்தவொரு ஆச்சரியமுமில்லை. மட்டுமன்றி, அல்குர்ஆனின் மிக நீண்ட ஆயத்தானது (வசனம்) கடன் வழங்கும், வாங்கும் பரிவர்த்தனைகளைப் பதிவது பற்றியதாக அமைந்திருப்பதும் ஆச்சரியத்துக்குரியதல்ல. உண்மையில், கடனை திருப்பிச் செலுத்துவதற்கான பிணையைப் பெறுவதற்கான வழிகாட்டுதலை அல்குர்ஆன் வழங்குகிறது:

"அன்றி, நீங்கள் பிரயாணத்திலிருந்து (அது சமயம் கொடுக்கல் வாங்கல் செய்ய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளரையும் நீங்கள் பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) அடமானமாக (ஏதேனும் ஒரு பொருளைப்) பெற்றுக் கொள்ளுங்கள். (இதில்) உங்களில் ஒருவர் (ஈடின்றிக் கடன் கொடுக்கவோ விலை உயர்ந்த பொருளை சொற்ப தொகைக்காக அடமானம் வைக்கவோ) ஒருவரை நம்பினால், நம்பப்பட்டவர் தன்னிடம் இருக்கும் அடமானத்தை (ஒழுங்காக)க் கொடுத்து விடவும். மேலும், தன்னுடைய இறைவனாகிய அல்லாஹ்வுக்கு (மிகவும்) பயந்து (நீதமாக நடந்து) கொள்ளவும். தவிர (அடமானத்தை எவரேனும் மோசம் செய்யக்கருதினால் உங்களுடைய) சாட்சியத்தை நீங்கள் மறைக்க வேண்டாம். எவரேனும் அதiனை மறைத்தால், அவருடைய உள்ளம் நிச்சயமாக பாவத்திற்குள்ளாக்கி விடுகின்றது. (மனிதர்களே!) நீங்கள் செய்யும் அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான்."
(அல்குர்ஆன் 02:283)

நபி (ஸல்) அவர்கள், தமது தோழர்களிடமிருந்து கடன் வாங்கிய பல சம்பவங்கள் உள்ளன. அவர் யூதர்களிடமிருந்தும் கடன் வாங்கினார். உண்மையில், நபி (ஸல்) இறந்தபோது, அவருடைய கவசம் ஒரு யூதரிடம் இருந்தது. அவர் அதை கடனுக்கான இணைப்பாக வைத்திருந்தார். அவர் தனது சொந்த தேவைகளுக்காகவும் பொது நோக்கங்களுக்காகவும் கடன் வாங்கியிருந்தார். சில நேரங்களில் அவர் பைதுல்மாலிலிருந்து (பொது திறைசேரி) எதிர்பார்க்கப்பட்ட வருவாயின் அடிப்படையில் கடன் வாங்கினார். அதாவது, திறைசேரியில் நிதி கிடைக்கும்போது அவர் திருப்பிச் செலுத்துவார்.

தனிப்பட்ட நிதியளிப்புதான் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் நடைமுறையாக இருந்தது. பொது திறைசேரியின் கடுமையான தேவைகள் காரணமாக, நபி (ஸல்) அவர்களின் வாழ்நாளில் கடன்கள் மற்றும் வணிக நிதியளிப்பிற்கான நிறுவன ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. எவ்வாறாயினும், கடன் வழங்குதல் மற்றும் கடன் வாங்குவது மிகவும் பொதுவானதாகக் காணப்பட்டது. அதனால் தான், ஸகாத் வழங்கப்பட வேண்டியவர்களில் ஒரு பிரிவினராக கடனில் மூழ்கியவர்கள் (காரிமீன்) பரிந்துரைக்கப்பட்டது:

"தானமெல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூலிப்பவர்களுக்கும், புதிதாக இஸ்லாமைத் தழுவியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்வதற்கும், வழிப்போக்கர்களுக்கும் (உரித்தானதாக) அல்லாஹ் ஏற்படுத்தியதாகும். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்."
(அல்குர்ஆன் 09:60)

இந்த அல்குர்ஆன் வசனத்தைக் குறிப்பிடுகையில், டாக்டர் ஹமீதுல்லா, இஸ்லாம் வட்டியை தடைசெய்தது மட்டுமல்லாமல், அதை முற்றிலுமாக ஒழிப்பதற்கான வழிமுறைகளையும் வழங்கியது என்பதையும், அத்துடன், கடன்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அரசாங்க வருவாயில் ஒரு பகுதியை ஒதுக்கவும் உத்தரவிட்டது என்றும் விளக்குகிறார். இந்த விதி மேலே மேற்கோள் காட்டப்பட்ட வசனத்திலிருந்து உய்;த்துணரப்படுகின்றது. அவ்வசனத்தின் ஆரம்பத்தில் ஏழைகள் மற்றும் தேவையுடையோர் குறிப்பிடப்பட்டிருப்பதால், 'கடன்பட்டவர்' பட்டினியால் வாடும் ஏழைகளைக் குறிக்கவில்லை என்று அவர் வாதிடுகிறார். மாறாக இது தற்காலிகமாக நிதி தேவைப்படும் 'நல்வாழ்வு வாழ்பவர்களை' குறிக்கிறது.

அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"ஏழைகளின் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்று குறிப்பிடாமல், வெறுமனே வட்டியை தடை செய்தமை, பயனற்றதாகிப் போயுள்ளமை அனைத்து நாகரிகங்களிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தேவைப்படுபவர்களுக்கு, மட்டுமன்றி , நல்வாழ்வு வாழ்பவர்களுக்கும் வட்டி இல்லாத கடன்களை வழங்குவது அரசின் முதல் கடமைகளில் ஒன்றாகும் என்று முதன்முதலில் கூறியது இஸ்லாம் ஆகும். முஸ்லிம் தேசத்தின் செலவுகளில் ஒன்றாக இதையும் அல்குர்ஆன் ஆக்கியுள்ளது."

1 comment:

Farij Jabir said...

பயனுள்ள ஒரு ஆக்கம். அடுத்த பகுதியை விரைவாக எதிர்பார்க்கிறேன்