Monday, September 16, 2019

இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியலின் வரலாறு - தொடர் 02




பேராசிரியர் அப்துல் அஸீம்
தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்

இஸ்லாத்தில் நிதியளிப்பிற்கான முறையான ஏற்பாடு
இஸ்லாத்தின் ஆரம்ப காலகட்டத்தில், முறையான நிதியளிப்பின் அடித்தளத்தை குறிக்கும் முதல் நிறுவனமாக பைதுல் மால் (நிதி இல்லம்) அல்லது பொது திறைசேரி அமைந்திருந்தது. அடிப்படையில் இது ஒரு அரச நிதி நிறுவனமாகும். ஆனால், இது தனிநபர்களுக்கும் கடன்கள் அல்லது முதலீட்டு மூலதனத்தை வழங்கியது. இது கலீபாவிற்கும் பொதுமக்களுக்குமான ஒரு அரச வங்கியாக இயங்கியது. உதாரணமாக, இரண்டாவது கலீபாவான உமர் (ரழி) அவர்கள், வணிக நோக்கத்திற்காக 4000 (திர்ஹம்) தொகையை ஹிந்த் என்பவருக்குக்கு வழங்கினார் (அத்தபரி, 1407 ஹி., தொகுதி 2, பக். 576-77). 
பொது நிதியிலிருந்து வர்த்தக நோக்கத்திற்காக கடன் வழங்கப்பட்டதற்கு மற்றொரு உதாரணமும் உள்ளது. பஸராவின் ஆளுநரான அபூ மூசா அல்-அஷ்அரி (கி.பி. 662 மற்றும் 672 க்கு இடையில்), பைதுல்மாலுக்கு வழங்குவதற்காக மதீனாவில் உள்ள மத்திய திறைசேரிக்கு சிறிது பணம் அனுப்ப வேண்டியிருந்தது. இஸ்லாமிய கிலாபத்தின் தலைநகரான மதீனாவுக்குப் பயணிக்க விரும்பிய அப்துல்லாஹ் மற்றும் உபைதுல்லாவுக்கு (உமர் இப்னுல் கத்தாபின் இரண்டு மகன்கள்) அவர் அந்தத் தொகையை வழங்கினார். பின்னர் அவர்களிடம், 'நீங்கள் ஈராக்கிலிருந்து பொருட்களை வாங்கி மதீனாவில் விற்கலாம். பின்னர், மூலதனத்தை அமீருல் முஃமினீனுக்குக் (கலீபாவுக்கு) கொடுங்கள். இலாபத்தை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்.' என்றார். ஈராக்கில் பொருட்களை வாங்கி மதீனாவில் விற்றதன் மூலம், அவர்கள் இலாபம் ஈட்டினர். பின்னர், அவர்கள் உமர் (ரழி) அவர்களுக்கு மூலனத்தை செலுத்தியபோது, மூலதனம் மற்றும் இலாபம் ஆகிய இரு தொகையையும் ஒப்பகை;கும்படி அவர் கூறினார். அப்துல்லாஹ் அமைதியாக இருந்தார். ஆனால், இளைய மகன் உபைதுல்லாஹ் ஆட்சேபனை தெரிவித்தார்: 'மூலதனம் குறைந்துவிட்டால் அல்லது அழிக்கப்பட்டிருந்தால், நாங்கள் அதற்கு உத்தரவாதம் அளித்திருப்போம். எனவே எங்களுக்கு இலாபம் கிடைக்க வேண்டும்.' என்று கூறினார். ஒரு சிறிய வாதத்திற்குப் பிறகு, ஒரு சட்டநிபுணரின் ஆலோசனையின் பேரில், உமர் (ரழி) அவர்கள் அதை ஒரு கூட்டு ஒப்பந்தமாகக் கருத முடிவு செய்து, அசல் பணத்தையும் இலாபத்தின் பாதியையும் ஏற்றுக்கொண்டார். உமர் (ரழி) அவர்களின் இரு மகன்களும் இலாபத்தின் அடுத்த பாதியை எடுத்துக் கொண்டனர் (மாலிக், 2002, . 419, அறிவிப்பு எண் 1396).

மூன்றாவது கலீபாவான உஸ்மான் இப்னு அஃப்பான், கிரழ் (கிரழ் அல்லது முகரழா என்பது முழாரபாவுக்கான மாற்றுப்பதமாகும்) அடிப்படையில் வணிகத்தை நடத்துவதற்கு மூலதனம் வழங்கி வந்தார். அதாவது, இலாபத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின்படி வழங்கினார் (மேலது. அறிவிப்பு எண் 1397).
பல்வேறு சமூக மற்றும் மத அமைப்புகளில் வட்டி வசூலிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், இஸ்லாம் மட்டுமே வட்டி இல்லாத கடன் வழங்கும் திட்டத்தை வழங்கியுள்ளதோடு, கடன்பட்ட நபர்களுக்கு பணம் செலுத்த ஏற்பாடு செய்வதை அரசின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாகவும் ஆக்கியுள்ளது. பைதுல்மாலில் (அல்லது அரச திறைசேரி) வட்டி இல்லாத கடன்களை வழங்கவும், அவற்றை மீளப்பெறுவதற்குமான ஒரு சிறப்பு கிளை இருந்தது (ஹமீதுல்லா, பக். 491). இதை சுட்டிக்காட்டி, ஹமீதுல்லா (1955, 11) பின்வருமாறு வலியுறுத்துகிறார்: 'கடன்களுக்கான வட்டியை கடுமையான சொற்களில் கண்டனம் செய்த ஒரே மதம் இஸ்லாம் அல்ல (ஒப்பிடுக. அல்குர்ஆன், 2: 275-279, முதலியன), ஆனால், எனது அறிவின்படி, இப்பிரச்சினையிலிருந்து வெளியேறுவதற்கான வழியை வழங்கிய ஒரே மதம் இஸ்லாம்.'
உமையா கிலாபத்தின் போது, நிதி தேவைப்படும் நபர்களுக்கு உதவுதல், கடனை திருப்பிச் செலுத்த முடியாதவர்களுக்கு உதவுதல், திருமணச் செலவுகளுக்காக உதவுதல், மற்றும் விவசாய மேம்பாட்டுக்காக விவசாயிகளுக்கு கடன்கள் வழங்கல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்கான நிதி இல்லமாகவும் பைதுல்மால் செயற்பட்டது. அபூ உபைத் (1968, பக். 320, அறிவிப்பு எண் 625) குறிப்பிடுகிறார்: கலீபா உமர் இப்னு அப்தில் அஸீஸ், தகுதியுள்ள மக்களுக்கு, உண்மையான சில காரணங்களுக்காக கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களுக்கு கடன்களை திருப்பிச் செலுத்தவும், திருமணம் செய்ய விரும்பிய ஆனால் அவ்வாறு செய்ய முடியாமல் போன திருமணமாகாத ஒவ்வொரு பெண்ணுக்கும் உதவவும் நிதியுதவி வழங்குமாறும், செழிப்பை இழந்த நிலத்துக்கு வரி செலுத்த வேணடியிருந்த அனைவருக்கும் கடன் வழங்குமாறும், ஈராக்கில் உள்ள தனது ஆளுநருக்கு கடிதம் எழுதினார். விவசாயத்தில் முதலீடு செய்ய வழங்கப்பட்ட பணத்தை திருப்பிச் செலுத்தும் காலம் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரையானதாக இருந்தது. இவ்வாறு, கடன் வாங்கிய பணத்தைப் பயன்படுத்தவும், அவர்களின் உழைப்பின் பலனை அனுபவிக்கவும் போதுமான நேரம் வழங்கப்பட்டது.
பங்கீடு செய்யப்பட்ட உணவைக் குறிக்கும் ஸுகூக் (ஸுகூக் என்பது ஸக் என்பதன் பன்மைச் சொல்லாகும். ஒருவர் பெறுவதற்கு உரிமை பெற்றுள்ள உணவுப் பங்கீட்டின் அளவைக் குறிப்பிட்டு ஒரு நபருக்கு, ஆட்சியாளரால் வழங்கப்பட்டிருக்கும் ஆவணம் என்ற பொருளில் இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.) வாங்கி விற்பனை செய்ததாக தகவல்கள் உள்ளன. ஆனால், கையிருப்பில் இல்லாத ஒரு பொருளை விற்பனை செய்தல் என்ற வகையின் கீழ் இது வருவதால், நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்களின் சில தோழர்கள் எழுப்பிய ஆட்சேபனைகளின் காரணமாக, அது அதன் ஆரம்பத்திலேயே நிறுத்தப்பட்டது (மாலிக் பின் அனஸ், 2002, பக். 391, அறிவிப்பு எண் 1338).
நவீன வங்கிகளிலுள்ள நடைமுறை கணக்குகள் போன்ற வைப்புகளை ஏற்றுக்கொள்வது மற்றும் பணத்தை வணிகங்களில் பயன்படுத்துதல் என்ற விதத்தில் வங்கியை எவ்வாறு செயல்படுத்துவது என்பதற்கான வழியை நபித்தோழர் ஸுபைர் இப்னுல் அவ்வாம் (ரழி) அவர்கள் காட்டியுள்ளார். யாராவது அவரிடம் பணத்தை அமானிதமாக (பாதுகாப்பாக வைத்திருத்தல்) கொடுத்து வைக்க விரும்பினால், 'இதை எனக்கு கடனாகக் கொடுங்கள்' என்று அவர் கூறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது (அல்-அஸ்கலானி, 1397 ஹி., தொகுதி 6. பக். 328). இந்த வகையில் அவர் தனக்கு ஒரு நன்மையைப் பெற்றார். வைப்புத்தொகையாளருக்கும் மற்றொரு நன்மையைக் கொடுத்தார்;. அவர் பணத்தைப் பயன்படுத்த அனுமதி பெற்றதோடு, வைப்புத்தொகையாளருக்கு அதன் வருவாயும் உறுதி செய்யப்பட்டது. இதேபோன்ற ஒரு நடைமுறை பட்டுத் தொழிலில் செழிப்பான வியாபாரத்தை மேற்கொண்ட பிரபல சட்டவியலாளர் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களைப் பற்றியும் தெரிவிக்கப்படுகிறது (சித்தீகி, 2015, .15, பக். 154). இத்தகைய முன்னுதாரணம், நவீன இஸ்லாமிய வங்கிகளில் நடைமுறைக் கணக்குகள் வைத்திருக்கும் வைப்புத்தொகையாளர்களின் பணம், வங்கிக்கான கடன்களாக இருக்கும் என்ற புரிந்துணர்வை வங்கிக்கும், வைப்புத்தொகையாளருக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்வதற்கான பாதையை வகுத்தது.
மாபித் அல்-ஜர்ஹி, ஒரு சமீபத்திய கட்டுரையில், தற்போது, 'இஸ்லாமிய பொருளாதார நிபுணர்கள் மரபுவழி கடன் ஒப்பந்தத்துக்குப் பதிலீடாக 16 ஒப்பந்தங்களை முன்மொழிகின்றனர். அவற்றில் சில இலாபத்திலும் உற்பத்தியிலும் பங்காளித்துவத்தை அடிப்படையாகக் கொண்டவை. இன்னும் சில முதலீட்டு நிறுவனத்தை அடிப்படையாகக் கொண்டவை. மீதமுள்ளவை விற்பனை மற்றும் குத்தகை ஏற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவை' (அல்-ஜர்ஹி, 2016, .76). இந்த ஒப்பந்தங்களின் தோற்றம் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்திற்கு செல்கிறது. 'மரபுவழிக் கடன் ஒப்பந்தத்திற்கு பதிலீடாக இதுபோன்ற ஒப்பந்தங்களை வழங்குதல், மற்றும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இஸ்லாமிய உலகில் அவை பயன்படுத்தப்படுவது 'இஸ்லாமிய நிதியியல்' என்ற பெயருக்கு காரணமாக இருக்கலாம். இல்லையெனில், அதை 'யூத' அல்லது கிறிஸ்தவ நிதி என்று அழைப்பது பொருத்தமானதாக இருந்திருக்கும்' (மேலது. குறிப்பு எண் 4). கூட்டாண்மை அர்ப்பணிப்பு என்பது வியாபாரத்தை மேற்கொள்வதற்கான முறைகளில் ஒன்று மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். முன்னைய எழுத்தாளர்களின் கவனம் முழாரபா அல்லது கூட்டாண்மை மீதே இருந்தது. ஏனெனில், அவர்கள் அதை மிகவும் நியாயமானதாகவும், பலனளிப்பதாகவும் கருதினர் (சித்திகி, 1981 பி). மேலும், இது ஏனைய நிதி முறைகளை விட இஸ்லாமிய வங்கிகளுக்கு மிகவும் பொருத்தமானது என்றும் கருதினர்.

தொடரும்...



No comments: