Tuesday, October 11, 2016

மத்திய கிழக்கு மீதான அமெரிக்க யுத்தம்: 'போலி செய்திகளும் பொய்யான கொடிகளும்'


ஜனாதிபதி சட்டத்தரணி எம்எம். சுஹைர்
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

அல்காஇதா தலைவர்கள் வீடியோக்களில் தோன்றி, அமெரிக்க கூட்டணி மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமிப்பதற்கு பதிலடியாக, மேற்கு நாடுகளின் தலைநகரங்களில் தாக்குதல் மேற்கொள்வதாக எச்சரித்த பயங்கரமான வீடியோக்கள் உங்களுக்கு நினைவிருக்கின்றனவா? வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் தலைகளை வெட்டுவதற்காக, கையில் கத்தி ஏந்திய வண்ணம் காட்சி தந்த ஐ.எஸ்.ஐ.எஸ் கொலையாளிகளின் புகைப்படங்கள் நினைவிருக்கின்றனவா?
இதுபோன்ற வெறுக்கத்தக்க வீடியோக்களும், புகைப்படங்களும் உலகெங்கும் பரவியுள்ளதை நீங்கள் நூற்றுக்கணக்கான தடவைகள் பார்த்திருப்பீர்கள். ஆனால்,உண்மையாக கொலை செய்யப்படும் காட்சிகள் கொண்ட வீடியோக்களை நான் இன்னும் பார்த்ததில்லை. கொலை செய்யப்பட்டதன் பின்னர் எடுக்கப்பட்ட வீடியோக்களைகூட நான் பார்த்ததில்லை. கொலை செய்வதற்கு முன்னர் மாத்திரம் வீடியோ எடுப்பதற்கோ, புகைப்படம் எடுப்பதற்கோ அவர்கள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டனர்? ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் மிருகத்தனங்கள் வெளிக்காட்டப்பட வேண்டுமாயின், கொலை செய்யப்படும் காட்சிகள் அல்லது கொலை செய்யப்பட்டதன் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று ஒருவர் சிந்திக்கலாம்.
ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டபோது,ஈராக்கில் அமைக்கப்பட்ட கேம்ப் விக்டரியில் (Camp Victory), அமெரிக்க பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து பணிபுரிந்த ஒரு பிரித்தானிய கம்பனி, பொய்யான செய்திகளையும், பொய்யான டிவிடிக்களையும் (DVD) தயாரித்து வந்துள்ளதாக, பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ஒரு ஊடகவியலாளர் பணியகம் தெரிவிக்கின்றது. எவ்வாறாயினும், இந்த பெருமளவிலான போலி செய்திகளின் உள்ளடக்கம் இன்னும் தெளிவற்றதாகவே உள்ளது.