Sunday, July 3, 2016

சீக்கியமும் முஸ்லிம்களும் பஞ்சாபும்



அஷ்கர் தஸ்லீம்

தலைப்பாகை அணிந்து. முறுக்கு மீசை வைத்த ஆண்களை, ஹிந்திப் படங்களில் அடிக்கடி காண்கிறோம். இந்திய, பாகிஸ்தானிய முஸ்லிம்களின் பெயருக்குப் பின்னால், ‘கான்” (இம்ரான் கான், ஆமிர் கான்…) என்று வருவது போல, இவாகளின் பெயருக்குப் பின்னால் ‘சிங்’ என்ற சொல் இருக்கும். ஆம், நீங்கள் நினைப்பவர்கள்தான் அவர்கள். சீக்கிய மதத்தைப் பின்பற்றும் பஞ்சாபி இனத்தவர்… சீக்கியமும் பஞ்சாபியும் பின்னிப் பிணைந்தவை.
உலகில் 20 மில்லியன் சீக்கியர் உள்ளனர். இவாகளில் பெரும்பாலானோர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலேயே வாழ்கின்றனா. அதுபோக, பஞ்சாபிலிருந்து சென்று, கனடாவிலும், ஐக்கிய இராச்சியத்திலும், அமெரிக்காவிலும் பல சீக்கியர்கள் குடியேறியுள்ளனர்.
16 ஆம் நூற்றாண்டில் பஞ்சாப் பிராந்தியத்தில் சீக்கிய மதம் ஸ்தாபிக்கப்பட்டது. குரு நானக் என்பவரே சீக்கிய மதத்தை ஸ்தாபித்தவா. அவரைத் தொடர்ந்து 9 சீக்கிய குருக்கள் உருவாகியுள்ளனா. 10 ஆவத குருவான கோபிந்த் சிங், இனிமேல் குருக்கள் உருவாக மாட்டர் என்றும், சீக்கியத்தின் மத நூலான ‘குரு கிரந்த் ஸாஹிப்’ இனிமேல் நிரந்தர குருவாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

எனவே, சீக்கியாகள் குரு கிரந்த் ஸாஹிபை தமது நிரந்தர குருவாகக் கருதுகின்றனா. குரு கிரந்த் ஸாஹிப் பஞ்சாபி மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. குரு நானக்கும், ஏனைய சீக்கிய குருக்களும் எழுதிய ஆக்கங்களை உள்ளடக்கியிருக்கின்ற இந்நூல், இந்து, முஸ்லிம் மகான்கள் எழுதிய ஆக்கங்களையும்கூட கொண்டிருக்கின்றது.
பஞ்சாபி மக்கள் வாழும் பிராந்தியம்
பஞ்சாபிகள் என்றாலே சீக்கியம், சீக்கியர்கள் என்றாலே பஞ்சாப் என்பதுபோல் தோன்றினாலும், அதிகமான பஞ்சாபிகள் முஸ்லிம்களே. இந்தியாவின் வடமேற்கேயும், பாகிஸ்தானின் கிழக்கேயும் ஒன்றோடொன்று ஒட்டிய வகையில் அமைந்துள்ள பிராந்தியங்களிலேயே பஞ்சாபி இனத்தவர் வாழ்கின்றனர். இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிக்கப்பட்டபோது, இப்பிராந்தியம் இரு நாடுகளுக்கும் இடையில் பிரிக்கப்பட்டது.
பஞ்சாப் என்ற சொல் இரண்டு பாரசீக மொழிச் சொற்களைக் கொண்டமைந்ததாகும். பாஞ் (ஐந்து), ஆப் (நீர்) என்பனவே அவை. ஐந்து நீரைக் கொண்ட பிரதேசத்தைச் சேர்ந்தோர் என்பதுவே இதன் பொருள். ஜேலும், சேனப், ரவி, சுட்லெஜ், பீஸ் என்ற நதிகளே இங்கு ‘ஐந்து நீர்’ என்பதன் மூலம் கருதப்பட்டுள்ளது.
துருக்கி-பாரசீக பின்னணியைக் கொண்ட மன்னர்கள் இந்தியாவை ஆண்டபோது, பஞ்சாப் என்ற பெயர் புழக்கத்துக்கு வந்துள்ளது.
பஞ்சாபி மொழி இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வெவ்வேறு லிபிகளைக் கொண்டே எழுதப்படுகின்றது. இந்தியாவில் குர்முகி லிபியிலும், இந்தியாவின் ஹிமாசல் பிரதேசம் மற்றும் ஹரியானாவில் தேவநகரி லிபியிலும் எழுதப்படுகின்றது. பாகிஸ்தானில், உர்தூ லிபிக்கு மிக நெருங்கிய ஷஹ்முகி என்ற லிபியிலேயே பஞ்சாபி மொழி எழுதப்படுகின்றது.
பாகிஸ்தானில் வாழும் பஞ்சாபிகள் பெரும்பாலும் ஸுன்னி முஸ்லிம்களே. இருப்பினும், ஷீஆ முஸ்லிம்களும் உள்ளனர். இந்தியாவில் வாழும் பஞ்சாபிகளில் 60 வீதமானோர் சீக்கியர்கள். அத்தோடு 37 இந்திய பஞ்சாபிகள் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர்.
இந்திய பஞ்சாப் பகுதியில் சீக்கியர்களது புனிதத் தலங்களும், புகழ்பெற்ற வணக்க வழிபாட்டிடங்களும் அமைந்துள்ளதோடு, பாகிஸ்தான் பஞ்சாப் பகுதியில், பிரபலமான சூபிக்களும் வாழ்ந்துள்ளனர்.
பஞ்சாபிகளில் அதிகமானொர் முஸ்லிம்களாக இருந்தபோதும், சீக்கியர்கள் கொண்டிருக்கின்ற வெளித் தெரியும் கலாசார அடையாளங்கள், பஞ்சாபிகளின் அடையாளமாக சீக்கியர்களை மாற்றியிருக்கின்றமையும் சுவாரஷ்யமானதுதான்.

No comments: