Thursday, August 18, 2016

துருக்கி - ரஷ்ய உறவின் மறுமலர்ச்சி

அஷ்கர் தஸ்லீம்
துருக்கிக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான உறவு மீண்டும் சீரடையத்தொடங்கியுள்ளது. துருக்கி ஜனாதிபதி ரஜப் தையிப் அர்தூகான் கடந்த வாரம் ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டு விலாடிமிர் புடினை சந்தித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இருபக்க உறவு சீரடையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சிரிய விவகாரம் குறித்த முரண்பாடுகளும் கடந்த வருடம் ரஷ்யாவின் போர்விமானத்தை துருக்கி இராணுவம் சுட்டிவீழ்த்தியமையுமே துருக்கி ரஷ்யாஉறவு சிதைந்தமைக்கான பிரதான காரணங்களாகும்.
சிரிய ஜனாதிபதி பஷார் அல்அஸாத் சிரிய பொதுமக்கள் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்களை துருக்கி எதிர்த்துவருவதோடு, பஸார் அல் அஸாதின் இராணுவத்தினருக்கெதிராக போராடி வரும் போராளிகளுக்கு உதவிவருகின்றது. மறுபக்கம் ரஷ்யா பஷார் அஸாதின் நெருங்கிய கூட்டாளி என்பதால் அவருக்கு இராணுவ ரீதியாகவும் உதவி வருகின்றது.
இந்நிலையில் கடந்த வருட இறுதியில் ரஷ்ய போர் விமானமொன்று துருக்கி எல்லையினுள் வந்ததாக கூறி துருக்கி இராணுவம் அதனை சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்த சம்பவமே இரு நாடுகளுக்குமிடையிலான உறவை முற்றாக துண்டிக்கும் நிலைக்கு கொண்டு சென்றது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ரஷ்யர்கள் துருக்கியை தரிசிக்கக்கூடாதென்று ரஷ்யா அறிவுறுத்தியது.

துருக்கி ரஷ்ய உறவு இவ்வாறு சிதைந்து பல மாதம் கடந்த பின்னரே நல்லிணக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஜுலை மாதம் 15 அம் திகதி துருக்கி இராணுவ தரப்பொன்று துருக்கியின்
சட்டபூர்வ அரசுக்கெதிராக சதிப்புரட்சி மேற்கொள்ள முயற்சித்து தோல்விகண்ட சம்பவத்திற்கு முன்னரே அர்தூகானின் ரஷ்ய விஜயம் தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், துருக்கியில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக இவ்விஜயம் பிற்போடப்பட்டது.
துருக்கியின் வெளியுறவுக்கொள்கை பூச்சிய எதிரி என்ற கொள்கையை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டிருந்த போதும் அரபு வசந்தத்தைத் தொடர்ந்து அதில் மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக எகிப்து, சிரிய விவகாரங்கள் தொடர்பில் துருக்கியின் நிலைப்பாடு அவ்வந்த நாட்டு மக்களின் ஜனநாயக அபிலாஷைகளுக்கு சார்பாக இருந்ததனால் எகிப்தின் சீசியும் சிரியாவின் அஸாதும் துருக்கியின் எதிரிகளாக உருவெடுத்தனர். இவ்வாறான நிலையிலேயே ரஷ்யாவுடனான முரண்பாடும் எழுந்தது.
ஐரோ- மத்திய கிழக்கு பிராந்தியத்தின் முக்கிய பொருளாதார, இராணுவ சக்தியான துருக்கி, பிராந்தியத்தின் விவகாரங்களின் தலையிடுவது அதன் செல்வாக்கை இன்னும் உறுதிப்படுத்துவதாகவே அமையும். எனவே, துருக்கியின் விம்பத்தை  சர்வதேச ரீதியில் இன்னும் மேலெழ செய்வதில் சிரிய விவகாரத்தில் அது கொண்டுள்ள நேர்மையான நிலைப்பாடு வழிவகுத்துள்ளது. எவ்வாறாயினும் 2010 இற்கு பிந்திய துருக்கியின் வெளியுறவுக் கொள்கை பிராந்தியத்திலும் சர்வதேசத்திலும் அதற்கு எதிரிகளையே உருவாக்கித் தந்துள்ளது. எகிப்து, சிரியா, ஈரான், ரஷ்யா என்பன இவற்றில் முக்கியமான நாடுகளாகும்.
துருக்கிக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இருபக்க பொருளாதார நலன்கள் பல உள்ளன. ரஷ்ய போர் விமானம் துருக்கி இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதன் பின்னர், துருக்கிக்கு ரஷ்யர்கள் பயணம் மேற்கொள்ளக்கூடாது என்று ரஷ்யா தடுத்ததன் பின்னர், துருக்கியின் சுற்றுலாத்துறையில் பாரிய நஷ்டங்கள் ஏற்படத் தொடங்கின. ரஷ்ய சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியிருந்த ஹோட்டல்கள் வெறிச்சோடிப்போயிருந்தன.
துருக்கியில் கட்டுமானக் கம்பனிகள் பல உள்ளன. இவற்றில் பலவும் ரஷ்யாவில் பல்வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்தன. ஆனால், துருக்கி - ரஷ்ய உறவுகள் பாதிக்கப்பட்டதன் பின்னர், அவற்றின் செயற்பாடுகள் தடைப்பட்டன. தற்போது இந்த தடங்கல்கள் நீக்கப்பட்டு வருகின்றன.
எனவே, துருக்கி - ரஷ்யாவுக்கு இடையிலான உறவின் பொருளாதாரம் குறித்த பகுதி மிகவும் விரிவான ஒரு பகுதியாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் பொருளாதார துறையில் பல்வேறு சிக்கல்களை இரு நாடுகளுக்கும் ஏற்படுத்தும் நிலை இருந்து வந்தது.லிபிய விவகாரத்தில் அமெரிக்கா காட்டிய அக்கறையுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், பஷார் அல்அஸாதை தூக்கியெறிவதில் அமெரிக்கா காட்டும் அசிரத்தையை மேலோட்டமாகப் பார்க்கையிலேயே புரிகின்றது. 
எனவே, துருக்கியின் பாரம்பரிய நேட்டோ கூட்டாளி நாடுகள் சிரிய விவகாரத்தில் காட்டும் அசமந்தப் போக்கு அர்தூகானை வெகுவாக விசனப்படுத்தியுள்ளது.இது இவ்வாறிருக்கையில், சிரிய ஜனாதிபதி பஷார் அல்அஸாதின் கூட்டாளியான ரஷ்யாவுக்கும் துருக்கியின் நிலைப்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சிரிய விவகாரத்துக்கு ஒரு முடிவு கட்டுவதாயின் அர்தூகானின் ஆதரவு அவசியமானதாகும். 
ஏனெனில், சிரிய பொது மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளை ஆதரித்து வரும் ஐரோ-மத்திய கிழக்கு பிராந்தியத்தின் ஒரே தலைவர் அர்தூகான் ஆவார்.இதனால்தான், பஷார் அல்அஸாதின் கூட்டாளியான ஈரானும், துருக்கி ரஷ்ய உறவு சீரடைய வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளது. துருக்கிய ரஷ்ய உறவு சீரடைவது குறித்து அறிந்ததும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் துருக்கி விரைந்துள்ளார்.
ஈரான் வெளியுறவு அமைச்சரின் துருக்கி விஜயம் குறித்து, ஈரானின் கடும்போக்காளர்கள் மத்தியில் அவ்வளவு வரவேற்பு இல்லை. ஏனெனில், துருக்கி ரஷ்ய நெருக்கம், சிரியாவில் ஈரானின் கதாபாத்திரத்தை ஓரம்கட்டிவிடுமோ என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.
இதேநேரம், துருக்கி ரஷ்யாவுடன் மீண்டும் உறவுகளை புதுப்பிப்பது குறித்து நேட்டோவும் அதன் நாடுகளும் துரிதமான கருத்துத் தெரிவித்துள்ளன. துருக்கி ரஷ்ய உறவு மீளவும் ஆரம்பிக்கப்பட்டிருப்பினும், நேட்டோவுடனான துருக்கியின் விசுவாசத்தில் அது எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது என்று அவை தெரிவித்துள்ளன.
இது இவ்வாறிருக்க, அர்தூகானை சந்தித்து மறுநாளே, பாதுகாப்பு சபையின் முக்கியமான உறுப்பினர்களை சந்தித்து, கிரீமியா விவகாரம் குறித்து உக்ரைனுடனான பதற்ற நிலை அதிகரித்து வருவது பற்றி புடின் கலந்துரையாடியுள்ளார். கிரீமியா பகுதியை 2014 ஆம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதோடு, அங்கு எழுந்த ஒரு பயங்கரவாத முயற்சியை தாம் தடுத்தாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
துருக்கியின் வட பகுதியில் அமைந்திருக்கின்ற கிரீமியாவை, ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டமை குறித்து துருக்கி மிகக் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்தபோதும், துருக்கி - ரஷ்ய உறவு மீண்டும் சீரடைந்து வரும் நிலையில், கிரீமிய விவகாரம் குறித்து துருக்கி அவ்வளவு பேசாது என்றே பலரும் கருதுகின்றனர்.
ஐரோ-மத்திய கிழக்கின் தவிர்க்க முடியாத பொருளாதார, இராணுவ ஜாம்பவானாக பரிணமித்துள்ள துருக்கியை, எவ்வாறேனும் தன் பக்கத்திற்கு இழுத்துக் கொள்ளவே ரஷ்யா முயற்சிக்கின்றது. சிரிய விவகாரம் மாத்திரமன்றி, ஏனைய பல விவகாரங்களிலும் துருக்கியின் ஆதரவு மிகவும் அவசியப்படுவதை ரஷ்யா புரிந்து கொண்டுள்ளது.
துருக்கியை மேற்கு முகாமிலிருந்து பிரித்தெடுப்பதற்கு ரஷ்யா எவ்வளவுதான் முயற்சித்தபோதும், நேட்டோ நாடான துருக்கி, அதன் நேட்டோ கூட்டாளிகளுடன் சில முக்கிய பொறுப்புக்களையும் கொண்டிருக்கின்றது. எனவே, நினைத்த மாத்திரத்தில் துருக்கி அதன் முகாமை மாற்றிக் கொள்வது சாத்தியமற்றதே.
அடுத்த முக்கிய விடயம் என்னவென்றால், துருக்கி ஒருபோதும் மேற்கு முகாமுடனோ, ரஷ்ய முகாமுடனோ இணையாது, தனக்கான தனித்துவமான வெளியுறவுக் கொள்கையைப் பேணவே விரும்புகின்றது. இந்த தனித்துவமான வெளியுறவுக் கொள்கையைப் பேணும்போது சில விவகாரங்களில் மேற்கு நாடுகளுடனும், சில விவகாரங்களில் ரஷ்யாவுடனும் இணைந்து அல்லது அவற்றுக்கு சார்பாக செயற்படும் நிலை தோன்றும்.
துருக்கி - ரஷ்ய உறவு சீரடைந்து வரும் நிலையில், அமெரிக்காவும் துருக்கியுடனான உறவை பலப்படுத்திக் கொள்ளவே முயற்சிக்கின்றது. எனவேதான், அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் மற்றும் உப ஜனாதிபதி ஜோ பிடென் ஆகியோரின் எதிர்வரும் துருக்கி விஜயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
அத்தோடு, துருக்கியில் மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிவடைந்த இராணுவ தரப்பொன்றின் சதி முயற்சியில், அமெரிக்காவில் வாழும் துருக்கியரான மதபோதகர் பத்ஹல்லாஹ் குலானின் ஈடுபாடு குறித்த கலந்துரையாடல்களை மேற்கொள்வதாக, அமெரிக்க நீதிபதி குழுவொன்றும் சமீபத்திலேயே துருக்கிக்கு அனுப்பப்படவுமுள்ளனர்.
எனவே, அமெரிக்காவும் துருக்கியுடனான உறவை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள முயற்சிப்பது இதன் மூலம் தெளிவாகின்றது. எவ்வாறாயினும், அமெரிக்க இராணுவ ஜெனரல்களுடன் நண்பர்களாயிருந்த, துருக்கி சதிப் புரட்சி முயற்சியில் ஈடுபட்ட சில துருக்கி இராணுவத்தினரை துருக்கி கைது செய்தமை குறித்து, அமெரிக்கா மத்திய கட்டளைத்தளபதி ஜெனரல் ஜோசப் வெடெல் மற்றும் அமெரிக்க உளவுத் துறை பணிப்பாளர் ஜேம்ஸ் க்ளெப்பர் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் குறித்து துருக்கி விசனமடைந்துள்ளது.
அத்தோடு, சிரிய விவகாரத்தில் அமெரிக்கா காட்டும் அசமந்தப் போக்கு துருக்கியை விசனமடையச் செய்துள்ளது. லிபிய விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது போன்று, பஷார் அல்அஸாதை தூக்கியெறிவதிலும் அமெரிக்கா கவனமெடுத்திருக்க வேண்டும் என்பதுவே துருக்கி தரப்பின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆனால், அமெரிக்காவின் நடவடிக்கைகள் மந்த கதியிலேயே நடைபெற்று வருகின்றன. இதற்கான பிரதான காரணம், தமக்கு விசுவாசமான ஒரு குழுவை அமெரிக்கா இன்னும் சிரியாவில் உருவாக்கவில்லை என்பதுவே, சிரிய நிலவரங்களைப் பார்க்கும்போது புரிகின்றது.
ஏனெனில், பஷார் அல்அஸாதை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் குழுக்களில் பலவும் சுதந்திரமான சிந்தனைப் போக்கைக் கொண்டிருக்கின்றன. மதச்சார்பற்ற போராட்டக் குழுக்களாயினும், இஸ்லாமிய போராட்டக் குழுக்களாயினும் அவை அனைத்தும் சிரியாவில் வேறு நாடுகளது அரசியல் தலையீடுகளை அவ்வளவாக விரும்புவதில்லை.
ஆனால், சிரிய போராட்டக் குழுக்களும், அரசியல் குழுக்களும் பெரும்பாலும் துருக்கியின் தயவிலேயே உள்ளன. சிரியாவின் எதிர்க்கட்சித் தரப்பு துருக்கியிலிருந்தே செயற்படுகின்றது. ஏனெனில், துருக்கியின் நேர்மையான வெளியுறவுக் கொள்கையை சிரியாவின் மக்கள் சக்திகள் நன்கு புரிந்து வைத்துள்ளன.
எவ்வாறாயினும், துருக்கி ரஷ்ய உறவு இவ்விரு நாடுகளுக்கும் நலனைக் கொண்டு வருவதோடு, 5 வருடங்களையும் தாண்டிப் போயுள்ள சிரிய விவகாரத்தையும் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதுவே அமைதி விரும்பிகளின் எதிர்பார்ப்பு.

No comments: