Wednesday, February 12, 2014

இமாம் பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி பற்றிய அறிமுகக் குறிப்பு

 (அஷ்கர் தஸ்லீம்)

இஸ்லாமிய வரலாற்றில் நீண்ட நெடிய காலம் முஸ்லிம் சமூகத்துக்குத் தலைமைத்துவத்தை வழங்கி வந்த இஸ்லாமிய கிலாபத் 1924 இல் இரத்துச் செய்யப்பட்டது. அப்போது துருக்கிய உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கீழிலிருந்த நாடுகள் துண்டு துண்டாகின. துருக்கி ஒரு மதச்சார்பற்ற நாடாக மாற்றப்பட்டது. துருக்கியர்களை விட்டும் இஸ்லாத்தை தூரமாக்கி விடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கிலாபத்துக்குப் பிந்திய மதச்சார்பற்ற ஆட்சியாளர் முஸ்தபா கமாலினால் மேற்கொள்ளப்பட்டன.

துருக்கியர்களை மதச்சார்பற்றோராக்குவதற்கான இந்த முயற்சிகளை எதிர்த்து செயற்பட்டவர்களுள் இமாம் பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி முதன்மையானவர். 1876 ஆம் ஆண்டு துருக்கியின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள 'நூர்ஸ்' என்ற கிராமத்தில் ஸஈத் நூர்ஸி பிறந்தார். இவரது தந்தை மிர்ஸா ஒரு சூபியாவார். ஸஈத் நூர்ஸி தன் இள வயதிலேயே மார்க்க மற்றும் ஏனைய துறைகளில் சிறந்த கல்வியைப் பெற்றுக் கொண்டார்.

Friday, February 7, 2014

இலங்கையில் வாழும் ஆபிரிக்கர்களுடன் ஒரு நாள்

ஜோசப் எலியஸ்
(அஷ்கர் தஸ்லீம்)

எமது மூதாதையர் மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்தவர்கள். மொசாம்பிக் நாட்டுக்கு வந்த போர்த்துக்கேயர் எமது மூதாதையரை அடிமைகளாகப் பிடித்துக் கொண்டனர். எமது மூதாதையருக்கு போர்த்துக்கேய மொழியையும் கிறிஸ்தவ மதத்தையும் அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள். பின்னர்> இலங்கையை கைப்பற்றியதும் எமது மூதாதையரை அவர்களது காவலர்களாக இங்கே கொண்டு வந்தார்கள் என்று தமது இனத்தின் ஆபிரிக்கப் பூர்வீக வரலாற்றை என்னோடு பகிர்ந்து கொள்கிறார் புத்தளத்தில் வசிக்கும் ஆபிரிக்க கஃபீர் இனத்தைச் சேர்ந்த ஜோசப் எலியஸ்.

நான் எப்போதும் போல் அன்றும் பிபிசி இணையதளத்தில் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது அதிலிருந்த ஒரு செய்தி என்னை ஈர்த்தெடுத்தது. அந்த செய்தி இலங்கையில் வாழ்ந்து வரும் ஆபிரிக்க பூர்வீகத்தைக் கொண்ட கஃபீர் இன மக்கள் பற்றிப் பேசியது.

இலங்கையில் ஆபிரிக்கர்களா? அதுவும் நான்கு நூற்றாண்டுகளுக்கு மேல் இங்கு வாழ்கிறார்களா? எனக்கு இந்த செய்தி சற்று ஆச்சரியமாகவே இருந்தது. இலங்கையில் வாழும் ஆபிரிக்க கஃபீர் இனத்தவர்களை சந்திக்க வேண்டும் என்ற உற்சாகத்தை இந்த செய்தி எனக்குத் தந்தது. எனவே> புத்தளத்தைச் சேர்ந்த நண்பன் ஆஸாத்துடன் அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றேன்.

Thursday, February 6, 2014

இலங்கையின் தேசிய கீதம் - சில வரலாற்றுக் குறிப்புக்கள்


ஆனந்த சமரகோன்
ஒரு நாட்டின் தேசிய உணர்வை பிரதிபலிக்கும் வகையிலேயே தேசிய கீதங்கள் அமைகின்றன. தேசிய கீதம் என்பது ஒரு நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

இலங்கையின் தேசிய கீதம் பற்றித் தேடிப்பார்க்கையில், இலங்கையில் பல தேசிய கீதங்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளதை அவதானிக்கலாம்.

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி நிலவிய காலத்தில், பிரித்தானியாவுக்காகப் பாடப்பட்ட ஒரு பாடலும் தேசிய கீதமாகப் பாடப்பட்டு வந்துள்ளது. 1745 இல் இலங்கை பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பாடலும் தேசிய கீதமாகப் பாடப்பட்டு வந்துள்ளது.