Monday, April 27, 2020

நெட்டை நெட்டை சிவிங்கி ஒட்டகச்சிவிங்கி - அரிய தகவல்கள்





அஷ்கர் தஸ்லீம்

ஒட்டகச்சிவிங்கி தான் உலகிலுள்ள மிக உயரமான பாலூட்டி விலங்காகும். அது கொண்டிருக்கின்ற உயரமான கால்களும், கழுத்தும் தான் இதற்கான காரணம். ஆபிரிக்க கண்டத்திலுள்ள திறந்த வெளி புல்நிலங்களில் இவற்றைக் காணலாம்.

ஒரு ஒட்டகச்சிவிங்கியின் கால்கள் ஒரு மனிதனின் சராசரி உயரமான 6 அடியையும் விட உயரமானதாகும். இந்த நீண்ட கால்களின் உதவியால், குறுகிய தூரங்களை மணிக்கு 35 மைல் வேகத்திலும், நீண்ட தூரங்களை சொகுசாக மணிக்கு 10 மைல் வேகத்திலும் கடக்கும் திறன் ஒட்டகச்சிவிங்கிகளுக்கு உள்ளது.


ஒட்டகச்சிவிங்கள் உயரமாக இருப்பதனால், மரங்களின் உச்சியிலுள்ள இல்லைகளையும், மொட்டுகளையும் அவற்றால் இலகுவாக அடைந்துகொள்ள முடியும். இவற்றின் நாக்கு 21 அங்குலம் நீளமானதாகும். எனவே, கிளைகளிலுள்ள இலைகளை மிக இலகுவாக இழுத்து உடைத்துச் சாப்பிடலாம். மாடுகளைப் போன்றே சாப்பிட்ட உணவை, மீளவும் வாயில் எடுத்து அசைபோடும் பழக்கம் ஒட்டகச்சிவிங்கிகளிடமும் உள்ளது.

ஒட்டகச்சிவிங்கிகள் உயரமாக இருப்பதனால், ஏனைய தாக்கி உண்ணும் ஊணுண்ணிகள் வருகின்றனவா என்று நோட்டமிடவும் அவற்றால் முடியும். உயரமாக இருப்பதனால் அனுகூலங்கள் இருப்பது போன்றே, சில பிரதிகூலங்களும் ஒட்டகச்சிவிங்கிகளுக்கு உள்ளன.

உதாரணமாக, நீர்த்துளைகளில் நீரருந்துவதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கின்றது. ஒட்டகச்சிவிங்கள் ஒரு தடவை நீர் அருந்தினால், அது சில நாட்களுக்குப் போதுமானதாகும். உண்ணும் தாவரங்களிலிருந்து தமக்குத் தேவையான நீரின் பெரும் பகுதியை அவை பெற்றுக்கொள்கின்றன.

பெண் ஒட்டகச்சிவிங்கிகள் நின்ற நிலையிலேயே குட்டிகளை ஈனுகின்றன. எனவே, பிறக்கும் குட்டிகள் 5 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தவாறு தான் இவ்வுலகில் பிரவேசிக்கின்றன. இக்குட்டிகள் பிறந்து 30 நிமிடங்களிலேயே எழுந்து நிற்கின்றன. 10 மணித்தியாலங்களின் பின்னர் தமது தாய்களுடன் இணைந்து ஓடவும் செய்கின்றன.

ஒரே இன ஒட்டகச்சிவிங்கிகளும், அதன் துணை இன ஒட்டச்சிவிங்கிகளும் மாத்திரம் உள்ளதாகவே அண்மைக் காலம் வரை நம்பப்பட்டு வந்தது. ஆனால், 2016 ஆம் ஆண்டு சில விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆய்வு முடிவுகளின்படி, தனித்துவமான 4 இன ஒட்டகச்சிவிங்கிகள் உள்ளமை தெரியவந்தது.

ஒட்டகச்சிவிங்கிகள் கூட்டாக இருப்பதையே விரும்புகின்றன. எனவே, சிறு குழுக்களாகவே அவை உலாவுகின்றன. இந்தக் குழுவில் சுமார் 15 ஒட்டகச்சிவிங்கிகள் காணப்படும். ஒரு வயது வந்த ஆண் ஒட்டகச்சிவிங்கி குழுவை வழிநடத்த, ஏனைய பெண் ஒட்டகச்சிவிங்கிகளும், இளம் ஆண் ஒட்டகச்சிவிங்கிகளும் குழுவில் இருக்கும்.

யார் பலமான ஒட்டகச்சிவிங்கி என்பதைப் பார்ப்பதற்காக, ஒட்டகச்சிவிங்கிகள் கழுத்துக்களாலும், தலைகளாலும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும். இவ்வாறான மோதல் போட்டிகள் அபாயகரமானவை அல்ல. ஒரு ஒட்டகச்சிவிங்கி தோல்வி ஏற்றுக்கொண்டு, ஒதுங்கிச் செல்லும்போது போட்டி முடிவடையும்.

ஒட்டகச்சிவிங்கிகள் காடுகளில் வாழும்போது அன்னளவாக 25 வருடங்கள் உயிர் வாழும். ஆனால், வளர்க்கப்படும் இடங்களில் நீண்ட காலம் வாழும். 40 வருடங்கள் அளவு வாழும் என்று அறியப்பட்டுள்ளது.


பொதுப் பெயர்: ஒட்டகச்சிவிங்கி
விஞ்ஞானப் பெயர்: Giraffa camelopardalis
வகை: பாலூட்டி
சராசரி ஆயுள் எதிர்பார்ப்பு (காட்டில்): 25 வருடங்கள்
உயரம்: 14 - 19 அடி
நிறை: 796 - 1270 கிலோ கிராம்

No comments: