Monday, December 12, 2016

நபிகளாரின் போதனைகள் அகிலத்தாரையடைய முஸ்லிம்கள் தடையாக இருந்துவிடக்கூடாது!

அஷ்கர் தஸ்லீம்

அகிலத்தாருக்கு அருட்கொடையாக வந்த நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்களது பிறந்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த சிறப்புமிகு நாளில், நபிகளாரின் மணம் கமழும் வாழ்வு, அவரது போதனைகள் என்பன குறித்து நாம் ஒரு கனம் மீட்டிப் பார்க்க வேண்டும்.
இந்த அகிலத்தாருக்கு வழிகாட்டுவதற்காக, இறைவன் காலத்துக்கு காலம் நபிமார்களையும் தூதுவர்களையும் இந்த உலகுக்கு அனுப்பினான். அந்தத் தொடரில் இறுதியாக வந்த நபியும் தூதருமே பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களாவார்.
நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்களது வாழ்வு இந்த அகிலத்தாருக்கு முன்னுதாரணமானதாகும். ஒரு மனிதனின் வாழ்வில் அவன் சந்திக்கின்ற அனைத்து கட்டங்களுக்குமான அழகிய முன்னுதாரணங்களையும் வழிகாட்டல்களையும் நபிகளார் தனது வாழ்வு மூலம் தந்துள்ளார்.
நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்கள், தனது வாழ்நாள் முழுவதும் அவர் உதிர்த்த பொன்மொழிகள், அவரது நடத்தைகள், போதனைகளை எடுத்தொழுகுவதன் மூலம், இவ்வுலகத்தாருக்கு வெற்றி கிட்டும்.

ஒரு தடவை நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்கள், தான் இந்த உலகுக்கு வந்ததன் நோக்கம் குறித்து கூறுகையில், ‘நற்பண்புகளை பூரணப்படுத்தவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்.’ என்று கூறியுள்ளார். இன்னுமொரு தடவை நபிகளார் பற்றி, அண்ணை ஆயிஷா அவர்களிடம் வினவப்பட்டபோது, ‘அவரது பண்பாடு அல்குர்ஆனாக இருந்தது.’ என்று கூறியுள்ளார்.
இந்த வகையில், இந்த உலகுக்கு பண்பாடுகளை சொல்லிதந்து அதனைப் பூரணப்படுத்தும் பணியை, நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்கள் செவ்வனே செய்துள்ளார்கள். அவரது பொன்மொழிகள் மட்டுமன்றி, அவரது முழு வாழ்வுமே பண்பாடாகவே அமைந்திருந்தது.
ஒரு சிறந்த வியாபாரியான நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்கள், மிகவும் இள வயதிலேயே, அரபு நாட்டின் தூர பிரதேசமான சிரியாவுக்கு வியாபார கரவன்களோடு சென்று, வியாபாரம் செய்திருக்கிறார். நம்பிக்கை, நாணயத்துக்கு பெயர் போனவரான நபிகளாருக்கு, அல்அமீன் (நம்பிக்கையாளர்), அஸ்ஸாதிக் (உண்மையாளர்) என்ற சிறப்புப் பெயர்களையும் அக்கால சமூகம் வழங்கியிருந்தது.
நபிகளாரின் குடும்ப வாழ்வும் மிகவும் பசுமையானது. தனது மனைவியரை மிகவும் நேசித்த அவர், அனைவரையும் நீதமாக நடத்தினார். தனது பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் பண்பாட்டின் சிகரங்களாக வளர்த்தெடுத்தார்.
ஒரு ஆன்மீகவாதியின் பக்குவமும், அதேநேரம் ஒரு போர் வீரனின் வீரமும் நபிகளாரிடமிருந்தது. அநீதிக்கு எதிராக போராட்டம் மேற்கொண்ட ஒரு வீரர் அவர். தனது தோழர்களுடன் இணைந்து, அக்கிரமக்காரர்களுக்கு எதிரான போராட்டங்களை அவர் மேற்கொண்டார்.
இப்படி ஒரு மனிதனின் முழு மொத்த வாழ்க்கைக்குமான வழிகாட்டல்களும், முன்னுதாரணங்களும் நபிகளாரின் வாழ்வில் ஏராளம் பொதிந்துள்ளன. இந்த பண்பாடுகளையும் வழிகாட்டல்களையும் உலகத்தார் எடுத்தொழுக வேண்டும். அப்போது உலகத்தாரின் வாழ்வு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும், பசுமையானதாகவும் மாறும்.
இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நபிகளாரின் பிறந்த தினத்தில், நபிகளாரின் பண்பாடுகளை எடுத்து நடப்பதற்கு உறுதிபூணுவதோடு, இந்த நாட்டு மக்களுக்கு நபிகளாரை அறிமுகப்படுத்தும் பாரிய பொறுப்பும் பணியையும் இலங்கை முஸ்லிம்களையே சாரும்.
முஸ்லிம்களுக்கு இஸ்லாத்திற்கும் எதிராக போலிப் பிரசாரங்கள் உலகலாவிய ரீதியில் மாத்திரமன்றி இலங்கையிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதைக் காண்கின்றோம். இஸ்லாத்தின் போதனைகளையும், நபிகளாரின் வாழ்வியல் வழிகாட்டல்களையும் முஸ்லிம்கள் உலகுக்கு பரைசாற்றத் தவறியதன் பின்விளைவுகளே இவையாகும்.
அண்மையில் நடைபெற்ற தொலைக்காட்சி கலந்துரையாடலொன்றின்போது, நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்கிய ஊடகவியலாளரொருவர் இலங்கை முஸ்லிம்கள் மீது பெரும் குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார். தான் நபிகளார் பற்றி அறிந்துகொள்ள ஆவலாக இருந்ததாகவும், தனக்கு பல முஸ்லிம் நண்பர்கள் இருந்தாலும் இறுதிவரை அவை சாத்தியமாகவில்லையென்றும் தெரிவித்திருந்தார்.
இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள தற்கால பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின் போதனைகளும், நபிகளாரின் வாழ்வியல் வழிகாட்டல்களும் ஏனைய சமூகங்களை சென்றடையவில்லை என்பதும் ஒரு காரணமாகும். இலங்கை முஸ்லிம்கள் நபிகளாரின் வழிகாட்டல்களையும், முன்மாதிரிகளையும் வாழ்வில் எடுத்தியம்பவேண்டும். ஏனைய சமூகத்தாருக்கு நபிகளாரின் சிறந்த முன்மாதிரிகள் தெளிவுபடுத்தப்படவேண்டும்.
நல்லிணக்கம் தொடர்பாக அதிகமாக பேசப்படும் காலமொன்றில் மதங்களுக்கிடையே புரிந்துணர்வு வளராதவரைக்கும் நல்லிணக்கம் வெறும் பேச்சாகவே இருந்துவிடும். அகிலத்தாருக்கு அருட்கொடையாக வந்த முஹம்மத் நபியின் போதனைகள் அகிலத்தாரை சென்றடையச் செய்வது முஸ்லிம்களின் கடமையாகும்.

No comments: