Thursday, June 14, 2012

உய்குர் முஸ்லிம்களின் டோக்கியோ மாநாடு சொல்லும் செய்தி


சுதந்திரமாக இருந்த 20 மில்லியன் உய்குர் முஸ்லிம்களின் மத, மொழி மற்றும் அரசியல் சுதந்திரத்தைப் பறித்து அவர்களை எதிர்காலமற்றவர்களாக மாற்றிக் கொண்டிருக்கின்ற சீனா மனித இனம் வெட்கித்துத் தலை குணிய வேண்டிய இன்னொரு இடமாகும். சர்வதேச அரசியலில் மேற்குலக எதிர்ப்பு அணியில் இருந்த போதும் சீனாவின் இந்த உள்நாட்டுக் கொள்கை பெருத்த விசனத்தையே ஏற்படுத்துகின்றது.

இந்தப் பின்னணியில்தான் 2012 மே 14ம் திகதி டோக்கியோவில் நடைபெற்ற கிழக்குத் துருக்கிஸ்தானுக்கான சர்வதேச உய்குர் மாநாட்டு அமைப்பின் 4வது மாநாடு நோக்கப்படுகிறது. அமைப்பின் தலைவி ரபீஆ கதீரின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு ஜப்பானின் பல அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர்.

Sunday, June 10, 2012

அஹ்மத் தாவூத் ஒக்லு -நவீன துருக்கியின் வெளியுறவுக் கொள்கைச் சிற்பி-

'நாம் எமது மதம் மற்றும் அடையாளம் குறித்துப் பெருமையடைகிறோம். அதேவேளை நாம் ஐரோப்பிய கலாசாரத்தினதும் வரலாற்றினதும் ஒரு பகுதியாகவும் இருக்கிறோம். இதனையும் நாம் பெருமையாகக் கொள்கிறோம்.'


அல்ஜஸீரா ஊடகவியலாளர் ராகே ஒமாரிடம் இந்தக் கருத்தைச் சொன்னவர் துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் அஹ்மத் தாவூத் ஒக்லு. இஸ்லாமிய உலகுடன் சிறந்த உறவை கட்டியெழுப்பி வருகின்ற அதேவேளை மேற்குலகுடனும் சிறந்த உறவை பேண விரும்புகின்ற இந்த வகை அணுகுமுறையை துருக்கியின் வெளியுறவுக் கொள்கையாகக் கொண்டு வருவதில் அதிகம் பங்காற்றியவராக தாவூத் ஒக்லுவைக் குறிப்பிடலாம்.

1956 பெப்ரவரி 26ம் திகதி Konya என்ற ஊரில் பிறந்த தாவூத் ஒக்லு, இரண்டாம் நிலைக் கல்வியை ஸ்தான்பூல் உயர் பாடசாலையில் பெற்றார். 1983ல் பொஸ்பொரஸ் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் பட்டப்படிப்பை முடித்த தாவூத் ஒக்லு, முதுமாணிக் கற்கை நெறியையும் தொடர்ந்தார். பின்னர் பொஸ்பொரஸ் பல்கலைக்கழகத்திலேயே அரசறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையில் கலாநிதிப் பட்டத்தை நிறைவு செய்தார்.

Wednesday, June 6, 2012

துருக்கி: நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி புதிய தலைமைகளை நோக்கி...


கலாநிதி முஹம்மத் அப்பாஸி 
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

துருக்கியின் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லாஹ் குல்லின் 8 வருட பதவிக் காலம் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டுடன் முடிவடைய இருக்கின்ற நிலையில் ஆளும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி புதிய தலைமைகளைத் தேடத் தொடங்கியுள்ளது.

அப்துல்லாஹ் குல் பாராளுமன்றத்தினாலேயே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். தற்போது பாராளுமன்றத்தால் ஜனாதிபதி தெரிவுசெய்யப்படும் முறைமை ரத்து செய்யப்பட்டு நேரடியாக மக்களாலேயே ஜனாதிபதி தெரிவுசெய்யப்படும் வகையில் சட்டம் மாற்றப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சட்டத்தின் படி 5 வருடங்களுக்காக ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார். ஜனாதிபதி இரண்டு தடவைகள் பதவி வகிக்கலாம். அடுத்த ஜனாதிபதியாக தற்போதைய பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான் தெரிவுசெய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அர்தூகான் எனும் அரசியல் ஆளுமை






சமகால அரபு இஸ்லாமிய உலகில் மிகுந்த மக்கள் அபிமானத்தை வென்ற தலைவர்களுள் துருக்கியப் பிரதமர் அர்தூகான் முன்னணியிலுள்ளார் என்பதில் எதுவித ஐயமும் இருப்பதாகத் தெரியவில்லை. இஸ்லாமியவாதிகள், முஸ்லிம் அல்லாத நடுநிலைப் போக்கு கொண்டோர் எனப் பல தரப்பினரும் அவரை ஆதரிக்கின்றனர். இவற்றுக்கெல்லாம் மிக முக்கிய காரணம் அவர் துருக்கியை பொருளாதார சுபீட்சத்தைநோக்கி வழிநடாத்திச் சென்றார் என்பதற்கப்பால், அவர் சர்வதேச அரசியலில் நேர்மைக்காகப் போராடுகிறார் என்பதுதான்.

1954 ல் துருக்கியின் Rize என்ற கிராமத்தில் பிறந்தார் அர்தூகான். தனது ஐந்து குழந்தைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் எனக் கருதிய அர்தூகானின் தந்தை குழந்தைகளோடு இஸ்தான்புல் நகருக்குக் குடிபெயர்ந்தார். அப்போது அர்தூகானுக்கு வயது 13. ஆரம்பக் கல்வியை இஸ்லாமியப் பாடசாலையொன்றில் பெற்ற அர்தூகான், பின்னர் இஸ்தான்புல் மர்மரா பல்கலைக்கழகத்தில் இனைந்து முகாமைத்துவத்   துறையில் பட்டப் படிப்பை முடித்தார். அர்தூகான் தொழில் ரீதியில் ஒரு உதைப்பந்தாட்ட வீரரும் ஆவார்.