Thursday, June 16, 2016

ஐரோப்பிய இஸ்லாமோபோபியா குறித்து…


-அஷ்கர் தஸ்லீம்-

(இன்திஸார் கெரிகி என்ற தூனிஸிய பூர்வீக பிரித்தானிய பெண் எழுத்தாளரின் கட்டுரையைத் தழுவி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இன்திஸார் கெரிகி, ஒப்பீட்டு அரசியல் உளவியல் துறையில் தனது கலாநிதி ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.)

கடந்த நூற்றாண்டின் மத்திமப் பகுதியில், வட ஆபிரிக்க அரபு நாடுகளிலிருந்தும், தெற்காசிய நாடுகளிலிருந்தும் இலட்சக் கணக்கான முஸ்லிம்கள், ஐரோப்பிய நாடுகளில் சென்று வாழத் தொடங்கினர். கல்வி மற்றும் தொழில் நோக்காக ஐரோப்பா சென்ற இவர்கள் அங்கேயே குடியேறி தற்போது இரண்டாம் மூன்றாம் தலைமுறையினர்கூட தோன்றிவிட்டனர்.

பிரான்ஸ், ஜேர்மன் ஆகிய நாடுகளில் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். பிரான்ஸில் மொரோக்கோ, அல்ஜீரியா, தூனிஸியா போன்ற வட ஆபிரிக்க அரபு நாடுகளைச் சோந்த அரபு மற்றும் அமாஸிக் இன முஸ்லிம்கள் செறிவாக உள்ளனர்.

ஜேர்மனியில் துருக்கி இன முஸ்லிம் மிக செறிவாக வாழ்கின்றனர். அதுபோக, இங்கிலாந்து உள்ளிட்ட இன்னும் பல ஐரோப்பிய நாடுகளில் தெற்காசிய -குறிப்பாக பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் இந்திய- முஸ்லிம்கள் அதிகளவு வாழ்கின்றனர்.

இரண்டாம். மூன்றாம் தலைமுறைகளாக தற்போது ஐரோப்பாவில் வாழும் இம்முஸ்லிம்கள் சமீப காலமாக அதிகரித்து வரும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளாலும், வன்முறைகளாலும் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, முஸ்லிம் பெண்கள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்.


ஐரோப்பாவில் பரவியுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளால் -இஸ்லாமோபோபியாவினால்- முதலில் பாதிக்கப்படுவது முஸ்லிம் பெண்களாவர். முஸ்லிம் பெண்களுக்கு எதிரான பாகுபாடு குறித்து, இனவாதத்துக்கு எதிரான ஐரோப்பிய வலையமைப்பினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள முதன்மை விடயமும் அதுதான்.

இனவாதத்துக்கு எதிரான ஐரோப்பிய வலையமைப்பு தயாரித்துள்ள இவ்வறிக்கை, தொழில் வாய்ப்புக்களைப் பெறுதல், கல்வி மற்றும் வெறுப்பின் அடியே எழும் குற்றங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, எட்டு ஐரோப்பிய நாடுகளை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் பெண்கள் ஏனைய பெண்களைப் போன்றே பகுபாட்டுக்கு உட்படுவதாகவும், முஸ்லிம் பெண்களது பின்னணி, தோல் நிறம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை மையப்படுத்தியும் பாகுபாட்டுக்கு உட்படுத்தப்படுவதாகவும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

உதாரணமாக, ஐக்கிய இராச்சியத்தில் -தொழில் தேடும்- 30 பெண்களில் ஒருவரிடம், தாம் திருமணம் முடிக்க திட்டமிட்டிருப்பது குறித்தும், பிள்ளை பெற்றுக் கொள்ள திட்டமிட்டிருப்பது குறித்தும் உத்தியோகபூர்வமற்ற முறையில் விசாரிக்கப்பட்டிருக்கின்றது.

அதேவேளை, ஐக்கிய இராச்சியத்திலுள்ள எட்டு பாகிஸ்தானிய பெண்களில் ஒருவரிடம் இவ்வாறு வினவப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் தொழில் வழங்குவோரில் நான்கில் ஒருவர், கலாசார விவகாரங்களை -குறிப்பாக குழந்தைகளைப் பராமரிக்க அவாகள் அதிக அக்கறை எடுக்க வேண்டியிருப்பதனால்- பின்னணியாகக் கொண்டு, முஸ்லிம் பெண்களை வேலைக்கு அமர்த்தத் தயங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஹிஜாப் அணிகின்ற முஸ்லிம் பெண்களுக்கு எதிராக மிக அதிகமான பாரபட்சம் காட்டப்படுகின்றது. மதம் மற்றும் நம்பிக்கை சார்ந்த விடயங்களை மையப்படுத்தி தொழில் வாய்ப்புக்களில் பாகுபாடு காட்டப்படுவது சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்டுள்ளபோதும், ஐரோப்பா எங்கும் முஸ்லிம் பெண்கள் வழமையாகவே தொழில் வாய்ப்புக்களிலிருந்து புறந்தள்ளப்படுகின்றனர்.

விண்ணப்பத்தாரிகளைத் தெரிவு செய்யும்போது, அவர்கள் ஹிஜாப் அணிந்திருப்பதனால் எதிர்மறையான பெறுபேறுகள் எடுக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக, 44 வீதமான பெல்ஜிய நாட்டு தொழில் வழங்குவோர் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் பிரான்ஸிய உச்சரிப்பு பெயர்களைக் கொண்ட பெண்களும், அரபு உச்சரிப்பு பெயரைக் கொண்ட பெண்களும், தொழில்களுக்கு விண்ணப்பிக்கும்போத, அரபு உச்சரிப்புப் பெயர்களைக் கொண்ட பெண்கள் மீது பாரபட்சம் காட்டப்படுவதும் அவதானிக்கப்பட்டள்ளது.

இந்த அனைத்து பாரபட்சங்களுக்கு மத்தியிலும், தொழில்வாய்ப்பொன்றைப் பெறும் அதிஷ்டம் கொண்ட பெண்கள், தொழிலைப் பெற்ற பின்னரும் துன்புறுத்தல், அவமானப்படுத்தப்படல், பாகுபாடான பேச்சுக்கள், தொழிலில் தொடர்ந்தும் உயர்பதவிகளை நோக்கி நகர முடியாமை போன்ற பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு உட்பட்டே வருகின்றனர்.

ஐரோப்பிய நீதிமன்றமொன்றில் நடந்து வரும் ஒரு வழக்கு குறித்தும் இங்கு சொல்ல வேண்டும். ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவரின் ஹிஜாப் குறித்து, ஓர் வாடிக்கையாளர், கம்பனியிடம் முறையிட்டுள்ளார். இது கம்பனிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியாக கம்பனி கருதியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் கம்பனியில் பணிபுரியும் ஹிஜாப் அணியும் பெண்ணுக்கு சார்பாக நிற்காத கம்பனி, அவரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது.

பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மன் போன்ற நாடுகளில் தொழில் வாய்ப்புக்களிலிருந்து முஸ்லிம் பெண்களை ஓரம் கட்டுவதற்காக வேண்டி, ‘மதச்சாhபின்மை’ என்ற சொல் வித்தியாசமான விளக்கங்கங்களுக்கு உட்பட்டுத்தப்பட்டு வருகின்றது.

எல்லா தனிநபர்களையும் சமமாக நடாத்துவதனை மையமாகக் கொண்டே மதச்சார்பின்மை வியாக்கியானப்படுத்தப்பட்டுவந்தாலும், பல்வேறுபட்ட மதங்களையும், நம்பிக்கைக் கோட்பாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களை ஒடுக்குவதற்காக அது தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளால் முஸ்லிம் ஆண்களை விட, முஸ்லிம் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். முஸ்லிம் பெண்கள் மிக இலகுவாக அடையாளப்படுத்தப்படுவதால், வெறுப்பைத் தூண்டும் பேச்சு, வன்முறை, அத்துமீறல் போன்ற நடவடிக்கைகளுக்க இவர்கள் அதிகளவு உட்பட்டு வருகின்றனர்.

2015 இல் நெதர்லாந்தில் பதிவு செய்யப்பட்டிருந்த முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் 90 வீதமானவற்றில், முஸ்லிம் பெண்களே பாதிக்கப்பட்டுள்ளனர். 2014 இல், இஸ்லாமோபோபியாவுக்கு எதிரான நிறுவனமொன்று பதிவு செய்திருந்த முஸ்லிம் எதிர்ப்ப நடவடிக்கைகளில் 81.5 வீதமானவற்றில் முஸ்லிம் பெண்களே பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த அறிக்கையில் இன்னுமொரு முக்கியமான விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதாவது, முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட 79 வீதமானோர், அவை குறித்து எங்கும் முறைப்பாடுகளைப் பதிவு செய்தில்லை. அத்தோடு, இவ்வாறான முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவோருக்கு, ஆதரவு வழங்குகின்ற அல்லது ஆலோசனை வழங்குகின்ற நிறுவனங்கள் குறித்து, முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட 80 வீதமானோர் எதுவும் அறிந்திருக்கவில்லை என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வெறுப்பூட்டும் சபம்வங்களை அரச சார்பற்ற நிறுவனங்களே பதிவு செய்து வருகின்றன. ஐரோப்பிய அரசாங்கங்கள் இவற்றைப் பதிவு செய்வதில்லை. எனவே, முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்களை மிக இலகுவாகப் புறக்கணித்து விடும் வசதி ஐரோப்பிய அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளது.

செமிடிக் எதிhப்பு ஒரு குற்றமாக கருதப்படுவது போன்று, மத மற்றும் இன ரீதியான காரணங்களை மையமாக வைத்து முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளும் ஓர் குற்றமாக அறிவிக்கப்படுவதே ஐரோப்பிய நாடுகளில் இன மற்றும் மத சிறுபான்மைகளுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வழிசமைக்கும்.

No comments: