Friday, February 7, 2014

இலங்கையில் வாழும் ஆபிரிக்கர்களுடன் ஒரு நாள்

ஜோசப் எலியஸ்
(அஷ்கர் தஸ்லீம்)

எமது மூதாதையர் மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்தவர்கள். மொசாம்பிக் நாட்டுக்கு வந்த போர்த்துக்கேயர் எமது மூதாதையரை அடிமைகளாகப் பிடித்துக் கொண்டனர். எமது மூதாதையருக்கு போர்த்துக்கேய மொழியையும் கிறிஸ்தவ மதத்தையும் அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள். பின்னர்> இலங்கையை கைப்பற்றியதும் எமது மூதாதையரை அவர்களது காவலர்களாக இங்கே கொண்டு வந்தார்கள் என்று தமது இனத்தின் ஆபிரிக்கப் பூர்வீக வரலாற்றை என்னோடு பகிர்ந்து கொள்கிறார் புத்தளத்தில் வசிக்கும் ஆபிரிக்க கஃபீர் இனத்தைச் சேர்ந்த ஜோசப் எலியஸ்.

நான் எப்போதும் போல் அன்றும் பிபிசி இணையதளத்தில் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது அதிலிருந்த ஒரு செய்தி என்னை ஈர்த்தெடுத்தது. அந்த செய்தி இலங்கையில் வாழ்ந்து வரும் ஆபிரிக்க பூர்வீகத்தைக் கொண்ட கஃபீர் இன மக்கள் பற்றிப் பேசியது.

இலங்கையில் ஆபிரிக்கர்களா? அதுவும் நான்கு நூற்றாண்டுகளுக்கு மேல் இங்கு வாழ்கிறார்களா? எனக்கு இந்த செய்தி சற்று ஆச்சரியமாகவே இருந்தது. இலங்கையில் வாழும் ஆபிரிக்க கஃபீர் இனத்தவர்களை சந்திக்க வேண்டும் என்ற உற்சாகத்தை இந்த செய்தி எனக்குத் தந்தது. எனவே> புத்தளத்தைச் சேர்ந்த நண்பன் ஆஸாத்துடன் அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றேன்.


1505 இல் இலங்கையைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் இலங்கையின் கரையோரங்களில் தமது செல்வாக்கை ஸ்திரப்படுத்திக் கொண்டனர். அப்போது தமக்கு பாதுகாப்புக் கொடுப்பதற்காக இந்த ஆபிரிக்க கஃபீர் இனத்தவர்களை இங்கே கொண்டு வந்துள்ளார்கள். ஒல்லாந்தர் இலங்கையின் கரையோரங்களை ஆக்கிரமித்ததும் போர்த்துக்கேயர்கள் இலங்கையை விட்டுச் சென்றனர். ஆனால்> அவர்கள் கொண்டு வந்த ஆபிரிக்கர்கள் இலங்கையில் அப்படியே தங்கி விட்டனர். இவர்களில் சிலர் கண்டி மன்னர்களின் படைகளில் இணைந்துள்ளனர்.

புத்தளத்தில் ஆபிரிக்க கஃபீர் இன குடும்பங்கள் 50 அளவில் வாழ்கின்றன. திருகோணமலை> மட்டக்களப்பு> கொழும்பு ஆகிய பிரதேசங்களில் எமது இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். திருகோணமலையில் வாழ்பவர்களுடன் எமக்குத் தொடர்புகள் இருக்கின்றன. ஆனால்> மட்டக்களிப்பில் வாழ்பவர்களுடனான தொடர்புகள் எமக்குக் குறைவு. மட்டக்களப்பில் வாழும் எமது இனத்தவர்கள் தமிழ் மொழியையே பேசுகின்றனர் என்கிறார் முன்னால் கிராம சேவகரான கஃபீர் இனத்தைச் சேர்ந்த ஜோசப் எலியஸ்.

நாம் தமிழ் மொழியில்தான் கல்வி கற்றோம். ஆரம்பத்தில் எமது வீட்டு மொழி தமிழாகவே இருந்தது. புத்தளத்தில் அதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்து வந்ததால்> நாம் அவர்களது மொழியான தமிழையே பேசினோம். இப்போது சிங்களவர்கள் இங்கே அதிகரித்து விட்டார்கள். எனவே> எமது வீட்டு மொழியும் சிங்களமாக மாறியுள்ளது என்று ஆபிரிக்க கஃபிர் இனத்தவர்களது வீட்டு மொழி குறித்து கூறுகிறார் அவர்.


புத்தளத்தில் வாழும் கஃபீர் இனத்தவர்கள் குறித்து தகவல் சேகரித்துக் கொண்டிருந்தபோது> ஒரு கஃபீர் இன குடும்பம் வாழும் வீடொன்றுக்கு அண்மையிலுள்ள ஒரு இலங்கைப் பெண்ணை நாம் சந்தித்தோம். அப்போது அவர்> இந்த கஃபீர் இனத்தவரது மூதாதையர்கள் பாரிய கடினமான வேலைகளை செய்வார்களாம். ஆனால்> இப்போது இவர்களது இளம் தலைமுறையினர் அவ்வாறான கடின உழைப்புக்கு பழக்கப்பட்டவர்களாக இல்லை என்று கூறினார்.

ஆபிரிக்க கஃபீர் இனத்தவர்கள் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். தச்சு வேலை> விவசாயம்> மீன்பிடித் தொழில் என்று பல்வேறு தொழில்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். அதுபோக> மருத்துவமனை ஊழியர்களாகவும் அவர்கள் பணிபுரிகிறார்கள். சிலர் பொலிஸில் கடமையாற்றியதாகவும் ஜோசப் எலியஸ் குறிப்பிட்டார்.

மாரி வர்ஜினா என்ற பெண் புத்தளத்தில் வாழும் ஒரு ஆபிரிக்க கஃபீர் இனத்தவர். அவரிடம் நான்> உங்களது தலைமுடி> தோலின் நிறம்> முக வடிவம் என்பன இலங்கையின் ஏனைய இனத்தவர்களை விட வித்தியாசமானதாகவே இருக்கின்றது. இதன் காரணமாக> உங்களது சமூக வாழ்வில் ஏதும் பிரச்சினைகளை சந்திக்கிறீர்களா என்று கேட்டேன். அவர் பதிலளிப்பதைக் கேளுங்கள்:

'எமது தலைமுடி வித்தியாசமானதாகவே இருக்கின்றது. எமக்கு எமது மூதாதையரின் மொழி கூடத் தெரியாது. எமது மூதாதையரின் நாட்டுக்கு நாம் சென்றது கூடக் கிடையாது. இப்படி இருக்கiயில் எம்மை அந்நியர்களாகப் பார்ப்பதுதான் கவலையாக இருக்கின்றது. ஆனாலும்> இவ்வாறான நிலை அரிதாகவே இருக்கின்றது'

தற்போது ஆபிரிக்க கஃபீர் இனத்தவர்கள் சிங்களவர்களுடன் கலப்புத் திருமணங்களை செய்து வருவதனால்> அவர்களது இளம் தலைமுறையினரின் முகத் தோற்றத்தில் நாம் வித்தியாசங்களை அவதானிக்கலாம். ஆபிரிக்க இனத்தவர் என்பதற்கான அடையாளங்கள் இளம் தலைமுறையினரில் குறைந்தே வருகின்றது.

புத்தளத்தில் வாழும் ஆபிரிக்க கஃபீர் இனத்தவர்கள் கத்தோலிக்க மதத்தையே பின்பற்றுகின்றனர். ஆனால்> இலங்கைக்கு அவர்கள் கொண்டு வரப்படுவதற்கு முன்பு அவர்கள் முஸ்லிம்களாகவே இருந்தனர் என்றொரு குறிப்பு கிடைத்தது. இது பற்றி நான் ஜோசப் எலியஸிடம் கேட்டபோது, அந்தக் கருத்து பிழையானது என்றார் அவர்.

எமது இனத்தை மையப்படுத்திய எந்தவொரு கலாசார நிகழ்வும் எம்மிடம் இல்லை. நாம் சிங்களவர்கள் போல் தான் வாழ்கிறோம். எமது திருமணங்கள் கூட சிங்கள கலாசாரத்துக்கேற்பவே நடத்தப்படுகின்றன. அதுபோக> கத்தோலிக்க மத வைபவங்களை நாம் கொண்டாடுகிறோம் என்கிறார் மாரி வர்ஜினா.

'பைலா' எனும் சொல்லை அறிந்திராத இலங்கையர் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இலங்கைக்கு பைலா இசை மரபை அறிமுகப்படுத்தியவர்கள் போர்த்துக்கேயரே. பைலா இசை நடன மரபுக்கும் ஆபிரிக்க கஃபீர் இனத்தவர்களுக்கும் இடையில் நிறையவே தொடர்பு இருக்கின்றது. இது பற்றி நாம்> ஜோசப் எலியஸிடம் கேட்டோம்.

'பைலா என்பது நடனமாகும். மாஞ்சா அல்லது கஃபிரிஞ்சா என்பதுதான் இசை மரபாகும். இவை போர்த்துக்கேய மொழிச் சொற்கள். இந்தப் பாரம்பரியத்தை நாம் பாதுகாத்து வருகிறோம். இந்த இசை நடனத்தை அரங்கேற்றுவதற்காக அண்மையில் தென்னாபிரிக்காவுக்கும் எமது கஃபீர் இனத்தைச் சேர்ந்த குழுவொன்று சென்று வந்துள்ளது.'

சிங்களவர்> தமிழர்> சோனகர் என்பதற்கப்பால் இன்னும் பல இனங்கள் இலங்கையில் வாழ்ந்து வருகின்றன. இந்த இனங்களை தேடிச் செல்வதும் அவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதும் சுவையானது. இலங்கையில் வாழ்ந்து வரும் ஆபிரிக்க கஃபீர் இனத்தவர்களின் தனித்துவங்கள் பேணிப் பாதுகாக்கப்படல் வேண்டும். பைலா இசை மரபுதான் அவர்களிடம் எஞ்சியிருக்கும் ஒரேயொரு பாரம்பரியம். அதைப் பாதுகாப்பதற்கான எளிய ஏற்பாடுகள் அவர்களிடம் இருக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் இதற்கான ஒத்துழைப்புக்களை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

1 comment: