Thursday, September 15, 2016

புத்தக கண்காட்சிக்கு செல்வோருக்கு சில அறிவுரைக் குறிப்புக்கள்...



அஷ்கர் தஸ்லீம்

இலங்கையின் புத்தக பிரியர்களுக்கு செப்டம்பர் மாதம் என்றால் ஒரு புது உற்சாகம் பிறப்பது இயல்புதான். ஏனெனில், கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வருடாந்தம் நடைபெறும் புத்தகக் கண்காட்சி செப்டம்பர் மாதமல்லவா நடைபெறுகின்றது.

இந்த வருடமும் புத்தகக் கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வழமைபோன்றே, புத்தகப் பிரியர்கள் தமக்கு தேவையான புத்தகங் களையும், புதிதாக வெளி வந்துள்ள புத்தகங் களையும் பெற்றுக் கொள்வதற்கு, இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு செல்லலாம்.

இந்தப் புத்தகக் கண்காட்சியின் விசேடம் என்னவென்றால், இலங்கையின் பிரபலமான அனைத்து வெளியீட்டாளர்களும் போல், இங்கு கலந்து கொள்வதுதான். எனவே, இலங்கையில் வெளிவரும் மிகப் பெரும்பாலான அனைத்து புத்தகங்களும் போல் இங்கு விற்பனைக்கு வைக்கப்படுகின்றது.

புத்தக வெளியீட்டாளர்கள் போன்றே, இலங்கையிலுள்ள புத்தக கடைகளும் இங்கு தமது விற்பனை கூடங்களை அமைத்திருப்பது இன்னுமொரு விசேடமாகும். எனவே, பல புத்தகக் கடைகளுக்கு ஏறி இறங்கி கஷ்டப்படுவதை விடவும், ஒரே இடத்தில் அனைத்து புத்தகக் கடைகளினதும் விற்பனைக் கூடங்களை தரிசிக்கும் வாய்ப்பு இங்கு ஏற்படுகின்றது.

சரி நண்பர்களே, இம்முறை இந்த புத்தக கண்காட்சிக்குச் செல்லும் உங்களுக்கான சில ஆலோசனைகளை, இந்த கட்டுரையில் நாம் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். நாம் இங்கு பகிர்ந்து கொள்ளும் ஆலோசனைகள் உங்களுக்கு பிரயோசனமளிக்கும் என்று நம்புகிறோம்.

ஏன் புத்தகக் கண்காட்சிக்க செல்கிறீர்கள் என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

இந்தத் தலைப்பை பார்த்ததுமே உங்களுக்கு சற்று கேளிக்கையாக இருந்திருக்கும். ஏனெனில், புத்தகக் கண்காட்சிக்கு புத்தகம் வாங்கத்தானே செல்கிறோம் என்ற உங்களின் எண்ணம்தான் அதற்கான காரணம். ஆம், புத்தகம் வாங்கத்தான் புத்தகக் கண்காட்சிக்கு செல்கிறோம். ஆனால், அதிலும் சிற்சில வித்தியாசங்கள் உள்ளன.

அதாவது, ஏற்கனவே நீங்கள் எண்ணியிருக்கின்ற புத்தகங்களை மட்டும் வாங்கச் செல்கிறீர்களா? புத்தகக் கண்காட்சியில் காணும் சிறந்த புத்தகங்களை வாங்கச் செல்கிறீர்களா? புத்தக கண்காட்சி நடைபெறும் வளவினுள் நூட்ல்ஸ் சாப்பிட்டுக் கொண்டு உல்லாசமாக திரிந்து விட்டு வரச் செல்கிறீர்களா என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் ஏன் புத்தகக் கண்காட்சிக்கு செல்கிறீர் என்பதைப் பொருத்துத்தான், நீங்கள் கொண்டு செல்ல வேண்டிய பணத்தின் அளவு, கொண்டு செல்ல வேண்டிய ஏனைய விடயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே, நீங்கள் ஏன் புத்தகக் கண்காட்சிக்கச் செல்கிறீர்கள் என்பதை ஏற்கனவே தீர்மானித்துக் கொண்டால், உங்கள் பயணம் விளைவுமிக்கதாய் அமையும்.

புத்தகப் பட்டியலொன்றை தயாரித்துக் கொள்ளுங்கள்

நீங்கள் என்னென்ன புத்தகங்களை வாங்க எண்ணியிருக்கிறீர்களோ அவற்றை பட்டியல்படுத்தி எழுதிக் கொள்ளுங்கள். அப்போதுதான், புத்தகங்கள் தவறாது வாங்கிக் கொள்ளலாம். புத்தகப் பட்டியலை கணிணியில் தட்டச்சு செய்து பிரிண்ட் எடுத்துக் கொண்டால் மிகவும் இலகுவாக இருக்கும்.

நீங்கள் தேடும் புத்தகங்களை உங்களால் தேடிக் கொள்ள முடியாது போனால், புத்தகப் பட்டியலை விற்பனை கூட உதவியாளரிடம் காட்டி, அவற்றை இலகுவாகக் தேடிக் கொள்ளும் வாய்ப்பு அப்போது கிடைக்கும்.

எவ்வளவு தொகைக்கு புத்தகம் வாங்கப் போகிறீர்கள்?

புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வாங்குவதற்கு எவ்வளவு பணத்தை முதலீடு செய்யப் போகிறீர்கள் என்பதை ஏற்கனவே தீர்மானித்துக் கொள்ளுங்கள். புத்தகப் பிரியர்களுக்கு புத்தகங்களை கண்டதுமே, அவற்றின் மீது இனம்புரியாத ஒரு காதல் ஏற்படுவது இயல்பு. எனவே, கையிலிருக்கும் மொத்தப் பணத்தையுமே புத்தகங்களுக்காக செலவழிக்கும் பழக்கம் பல புத்தகப் பிரியர்களிடம் உள்ளது.

அப்படி, மொத்தப் பணத்தையும் செலவழித்து புத்தகங்கள் வாங்கி விட்டு, இறுதியில், பசியோடு வீடு வந்து சேர்ந்த புத்தகப் பிரியர்களும் உண்டு. எனவே, நீங்கள் எந்தளவு பணத்தை புத்தகங்களுக்காக முதலீடு செய்யப் போகிறீர்கள் என்பதை ஏற்கனவே திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதுதான் ஆரோக்கியமானது.

எப்போது செல்லப் போகிறீர்கள்?

இம்முறை புத்தகக் கண்காட்சி நடைபெறுவது செப்டம்பர் மாதம் 16-25 திகதி வரையிலாகும். இந்த காலப் பகதிக்குள் விடுமுறை தினங்களும் போயா தினங்களும் வருகின்றன. எனவே, நீங்கள் எந்தத் தினத்தில் புத்தக கண்காட்சிக்கு செல்லப் போகிறீர்கள் என்பதை ஏற்கனவே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக, வார நாட்களில் காலையிலேயே சென்றால், சன நெரிசலின்றி, மிகவும் வசதியாக எல்லா விற்பனை கூடங்களுக்கும் சென்று, நிம்மதியாக புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கின்றது.

வார இறுதி நாட்களில் சென்றால், சன நெரிசல் சற்று அதிகமாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எப்படியோ, வார நாட்களில் உங்களால் செல்ல முடியாதபோது, வார இறுதி நாட்கள்தான் உங்களுக்கு இருக்கும் ஒரே மாற்றீடு.

எந்த நாட்களாயினும் காலையிலேயே செல்வதுதான் பொருத்தமானது. ஏனெனில், காலைப் பொழுதில் மக்கள் அதிகமாக வராத காரணத்தால். சன நெரிசல் சற்று குறைவாகவே இருக்கும். மற்றைய காரணம் என்னவென்றால், காலையிலேயே சென்றால், அதிக நேரம் செலவழித்து புத்தகங்களை நிம்மதியாக தெரிவு செய்து கொள்ளலாம்.

கொண்டு போக வேண்டியவை

ஆடை:
புத்தக கண்காட்சியில் பொதுவாக மிக அதிகமான நேரம் செலவழிட வேண்டிய ஏற்படுவதால், உங்களுக்கு மிகவும் இலகுவான ஆடைகளையே அணிந்து செல்லுங்கள். நீங்கள் பொதுவாக வெயிலுக்கும், வியர்வைக்கும் பொருந்தி வராத ஆடைகள் அணிபவராயின், அவற்றை தவிர்த்து வெயிலுக்கும், வியர்வைக்கும் தாக்குபிடிக்கும் ஆடைகளை அணிந்து செல்லுங்கள்.

புத்தகக் கண்காட்சியின்போது, அதிகளவு மக்கள் வருவதனால், சன நெரிசலில் வியர்வை கொட்டி, உங்களது ஆடை ஈரமாகி, அது உங்களுக்கு தொந்தரவாக அமைந்து விடும் வாய்ப்புள்ளது. எனவே, புத்தக கண்காட்சிக்கு செல்லும்போது உங்களது ஆடை எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

பை:
பொதுவாக புத்தக விற்பனை கூடங்களில் நன்கு உறுதியான பைகள் தருவறு மிகவும் குறைவாகும். சில விற்பனை கூடங்களிலேயே அவ்வாறான உறுதியான பைகளை வழங்குவர். பெரும்பாலான கடைகளில் மிகவும் மெல்லிய பொலிதீன் உறைகள்தான் வழங்கப்படுகின்றன.

எனவே, நீங்கள் வாங்கும் புத்தகங்களை முறையாக சுமந்து வருவதற்கு பொருத்தமான உறுதியான ஒரு பையை எடுத்துச் செல்ல மறவாதீர்கள். ஏனெனில், விற்பனை கூடங்களில் தரும் பைகளை நீண்ட நேரம் சுமக்க முடியாது, விரல்களில் வலி ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உண்டு.

மற்றைய காரணம் என்னவென்றால், நீங்கள் அதிகளவு புத்தகம் வாங்கும்போது பல பைகளை கையில் சுமந்து கொள்வதும் உங்களுக்கு சிரமமாக அமையும். எனவே, பொருத்தமான உறுதியான ஒரு பெரிய பையை கொண்டு சென்றீர்கள் என்றால், அனைத்து புத்தகங்களையும் அதில் வைத்து சுமந்து செல்லாம்.

உணவு:
புத்தக கண்காட்சி நடைபெறும் பண்டாரநாயக சர்வதேச ஞாபகார்ந்த மாநாட்டு மண்டப வளாகத்தில், புத்தக கண்காட்சிக்கு வருவோருக்கு இலகுவாக உணவு பெற்றுக் கொள்வதற்கான சிற்றுண்டிசாலைகள் உள்ளபோதும், அவற்றை மாத்திரம் நம்பி செல்லாதீர்கள். உங்களுக்கு ஆரோக்கியமான வீட்டு உணவுதான் அவசியம் என்றால், வீட்டிலிருந்தே உணவு தயாரித்து எடுத்து வாருங்கள்.

மிக முக்கியமாக உங்களிடம் ஒரு தண்ணீர் போத்தல் எப்போதும் இருக்கட்டும். பல விற்பனை கூடங்களுக்கும் சென்று புத்தகம் வாங்குவதனால், அலைந்து திரிந்து களைப்புறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அவ்வாறான நேரங்களில் ஏற்படும் தாகத்தைத் தணிப்பதற்காக உங்களிடம் ஒரு தண்ணீர் போத்தல் எப்போதும் இருக்கட்டும்.

மருந்து:
நீங்கள் ஏதாவது ஒரு நோய்க்காக மருந்து உட்கொள்பவரென்றால், அம்மருந்துகளை தவறாது எடுத்துச் செல்லுங்கள். அதுதவிர, களைப்பு காரணமாக உங்களுக்கு தலைவலி ஏற்படும் என்றிருந்தால், அதற்குரிய மருந்துகளையும் எடுத்துச் செல்லுங்கள்.

வாகனம்:
நீங்கள் பொது போக்குவரத்தை (பஸ்) பயன்படுத்தி புத்தக கண்காட்சிக்கு செல்வதாயின், உங்களது பெரிய புத்தகப் பையை கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையில், அதற்கு பொருத்தமான நேரத்தில் செல்வதற்கு முயற்சியுங்கள்.

நீங்கள் உங்கள் சொந்த வாகனத்தில் செல்வதாயினும், நேரகாலத்தோடு புத்தக கண்காட்சிக்கு செல்ல முயற்சியுங்கள். ஏனெனில், நீங்கள் தாமதாகும் ஒவ்வொரு விநாடியும், உங்களது வாகனத்தை நிறுத்தி வைப்பதற்கான இடத்தை தேடிக் கொள்வது உங்களுக்கு கடினமாகிவிடும் வாய்ப்புள்ளது.

யாருடன் செல்லப் போகிறீர்?

புத்தக கண்காட்சி என்பது புத்தகப் பிரியர்களுக்கு மிகவும் சந்தோசமான ஒரு காலப் பகுதியாகும். செப்டம்பர் மாதம் எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் புத்தகப் பிரியர்களுக்கு புத்தக கண்காட்சி என்பது வருடாந்தம் வரும் பெருநாட்களைப் போன்றதாகும்.
இந்தளவு முக்கியத்துவம் பெறுகின்ற புத்தகக் காட்சிக்கு தனியே செல்வது சற்று சோம்பலை உருவாக்கக்கூடியதாகும். எனவே, தனியாக செல்லாது, நண்பர்களோடு இணைந்து சென்றால், மிகவும் குதூகலமாக சுற்றித் திரிந்து புத்தகங்களை தெரிவு செய்து வாங்கிக் கொள்ளலாம்.

அதிலும் குறிப்பாக, எந்த நண்பரோடு செல்வது என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், புத்தகங்கள் மீது அவ்வளவு ஈடுபாடு இல்லாத நண்பர்ளோடு சென்றால்,
நீங்கள் பல விற்பனை கூடங்களுக்கும் ஏறி இறங்கும்போது, அவர்களுக்கு அலுப்பு ஏற்பட்டு, உங்கள் பயணமே சற்று மந்தமாகி விடும் வாய்ப்புள்ளது. எனவே, எந்த நண்பரோடு அல்லது நண்பர்களொடு செல்கிறீர்கள் என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

தனியே செல்லாமல் நண்பர்களோடு செல்வதில் இன்னும் சில நன்மைகளும் உள்ளன. அதாவது, புத்தக கண்காட்சியின்போது அவசரமாக உங்களுக்கு ஏதாவது இடர்கள் ஏற்பட்டால் நண்பர்களின் உதவியும் உங்களுக்குக் கிடைக்கும்.

திட்டமிட்டு செயற்படுங்கள்.

புத்த கண்காட்சிக்குள் நுழைந்தவுடனே அங்கும் இங்கும் சுற்றி திரிந்து விற்பனை கூடங்களில் நுழையாதீர்கள். நீங்கள் புத்தக கண்காட்சிக்குள் நுழையும்போது, கண்காட்சி நடைபெறும் வளாகத்தின் வரைபடம் உங்களுக்கு வழங்கப்படும். புத்தக விற்பனை கூடங்கள் அமையப் பெற்றிருக்கும் இடங்களும், அவற்றின் பெயரும் அந்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவற்றை அவதானித்து அதன்படி, விற்பனை கூடங்களுக்கு சென்றால் உங்களுக்கு இலகுவாக இருக்கும்.

 *** *** ***

சரி நண்பர்களே, இந்தக் கட்டுரை உங்களுக்கும், உங்களது நண்பர்களுக்கும் பிரயோசனமளிக்கும் என்றிருந்தால், உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

(டிலி என்பவர் எழுதிய சிங்கள மொழி கட்டுரையை தழுவி எழுதப்பட்டுள்ளது.)




1 comment:

nawasdeen said...

Good article for us. It gave useful tips for visiting to book exhibition. Thanks