Thursday, July 14, 2016

ஐ.எஸ்ஸை உருவாக்கியது டோனி பிளேயரும், ஜோர்ஜ் புஷ்ஷுமே!


ஆங்கிலத்தில்: அஸ்ஸாம் தமீமி
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

பதிமூன்று வருடங்களுக்கு முன்னர், அப்போதைய பிரித்தானியாவின் பிரதமர் டோனி பிளேயர், ஐக்கிய இராச்சியத்தை யுத்தத்துக்கு அழைத்துச் செல்வதை, பொய்யான தகவல்களின் அடிப்படையில் நியாயப்படுத்தியிருந்தார்.

வேறு எவருமன்றி, அவர் மட்டுமே அறிந்த காரணங்களுக்காக, அப்போதைய அமெரிக்காவின் நவீனபழமைவாத ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷோடு இணைந்து கொண்டார் டோனி பிளேயர். அப்போது போருக்கு எதிரான இயக்கதிலிருந்த நானும் எனது சகாக்களும், யுத்தத்துக்கு செல்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து டோனி பிளேயரையும், ஐக்கிய இராச்சிய அரசையும் எச்சரித்தோம்.

எமது ஆலோசனைகளுக்கு செவிசாய்க்காது, நாம் எள்ளி நகையாடப்பட்டோம். ஏலவே எம்மில் பலரிடமும் ஆலோசனை சில விவகாரங்கள் குறித்து ஆலோசனைகள் பெறப்பட்டிருந்தபோதும், அது முதல் அவ்வாறான ஆலோசனை பெறுவதிலிருந்தும், அரசின் உத்தியோகபூர்வ தொடர்புகளிலிருந்தும் நாம் வெளியேற்றப்பட்டோம். பிளேயர் நிர்வாகம் எம்மை அவமதித்தே நடந்து கொண்டது. சிலபோது நாம் தேசத்தின் எதிரி என்ற தரத்தில் கூட நடத்தப்பட்டோம்.

நாம் மிகவும் சரியான நிலைப்பாட்டில் இருந்தோம் என்பது  சில்கோட் அறிக்கையின் மூலம்  நிரூபணமாகியுள்ளது. இன்று ஈராக் மட்டுமல்லாது, முழு மொத்த மத்திய கிழக்கும் இரத்த கடலில் மூழ்கியுள்ளது. 2003 முதல் தீவிரவா அச்சுறுத்தல் மிக வேகமாக வளர்ந்துள்ளது. அல்காஇதா பிரிந்துபோய், சுயபிரகடனம் செய்துள்ள ஐஸிஸ் (இஸ்லாமிய தேசம்) உருவாகி, உலகெங்கும் அது குழப்பத்தையும் கொலைகளையும் மேற்கொண்டு வருகின்றது. எதிர்பார்க்கைகளற்ற உணர்வும், ஆழமான கசப்புணர்வும் பிராந்தியத்திலிருந்து மட்டுமன்றி, முழு உலகிலிருந்தும் அல்காஇதாவுக்கும், ஐஸிஸ்கும் இளைஞர்களை கொண்டு வந்து குவித்துள்ளது.

கார்டியன் பத்திரிகை, ‘ஈராக் மீதான ஆக்கிரமிப்பு ஐக்கிய இராச்சியம் மீதான தீவிரவாத அச்சுறுத்தலை அதிகரித்துள்ளதோடு, ஐஸிஸ் உருவாக்கத்துக்கு அது பங்களிப்பு செய்துள்ளது.’ என்று செய்தி வெளியிட்டுள்ளது. சில்கோட் அறிக்கையின் பகுதியாக வெளியிடப்பட்டுள்ள புலனாய்வு தகவல்களிலிருந்து இது உறுதியாகுவதாக கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

போருக்கு எதிராக இயக்கத்தில் செயற்பட்ட எனது சகாக்கள் இந்த நிலையை நீண்ட காலத்துக்கு முன்னரே எச்சரித்திருந்ததை நான் நினைவுபடுத்திக் கொள்கிறேன். இந்த நிலையை ஏற்படும் என்பதை எதிர்பார்ப்பதற்கு நீங்கள் ஒரு மேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இது மிகவும் அப்பட்டமானதாகும். பல தொலைக்காட்சி மற்றும் வானொலி நேர்காணல்களின்போதும், ஈராக் மீதான யுத்தம் ஆரம்பிக்கப்படுவதற்கும் எதிராகவும், யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்றும் ஹைட் பார்க்கில் கூடிய மில்லியன் கணக்கான மக்களுக்கு மத்தியில் நான் ஆற்றிய சிறிய உரையிலும் இந்த எச்சரிக்கையை நான் பல முறை விடுத்தேன்.

மறுநாள் காலையில் லண்டன் நகரத்து வலதுசாரிப் பத்திரிகையொன்று, தீவிரவாதம் பரவும், அச்சுறுத்தல் இன்னும் பெரிதாகிவிடும் என்ற எனது எச்சரிக்கையை கேலி செய்திருந்தது.

யுத்தத்துக்கு சென்று இரு வருடங்களின் பின்னர், சரியாக 11 வருடங்களுக்கு முன்னர், 2005 ஜூலை 7 ஆம் திகதி, லண்டன் நகரில் ஒரு பெரிய குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஐக்கிய இராச்சியம் யுத்தத்தில் இறங்கியதற்கு பழிவாங்குவதற்காக தாமே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக அல்காஇதா உரிமை கோரியிருந்தது. இன்று எரியும் ஈராக்கின் சாம்பல்களிலிருந்து முளைத்துள்ள ஐஸிஸுடன் ஒப்பிடுகையில், அல்காஇதா சற்று லேசானதாகவே தோன்றும்.

டோனி பிளேயரும், ஜோர்ஜ் புஷ்ஷும், அவர்களுக்கு உதவியவர்களும், இவ்வுலக்கு செய்தவற்றோடு அப்படியே ஓரமாகிவிடுவதற்கு அனுமதிக்க முடியாது. ஐஸிஸ் உருவாகுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கியவர்கள் இவர்கள்தான். ஈராக் ஆக்கிரமிக்கபட்டதால் பாதிக்கப்பட்டவர்கள், அனைத்து தரப்புக்களிலும் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களளுக்கு நீதி கிடைக்க வேண்டும். வெறும் ஒரு மன்னிப்பை கேட்டு விடுவதாலோ, சில முதலைக் கண்ணீர் துளிகளாலோ அது நடந்து விடாது.


No comments: