Tuesday, October 11, 2016

மத்திய கிழக்கு மீதான அமெரிக்க யுத்தம்: 'போலி செய்திகளும் பொய்யான கொடிகளும்'


ஜனாதிபதி சட்டத்தரணி எம்எம். சுஹைர்
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

அல்காஇதா தலைவர்கள் வீடியோக்களில் தோன்றி, அமெரிக்க கூட்டணி மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமிப்பதற்கு பதிலடியாக, மேற்கு நாடுகளின் தலைநகரங்களில் தாக்குதல் மேற்கொள்வதாக எச்சரித்த பயங்கரமான வீடியோக்கள் உங்களுக்கு நினைவிருக்கின்றனவா? வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் தலைகளை வெட்டுவதற்காக, கையில் கத்தி ஏந்திய வண்ணம் காட்சி தந்த ஐ.எஸ்.ஐ.எஸ் கொலையாளிகளின் புகைப்படங்கள் நினைவிருக்கின்றனவா?
இதுபோன்ற வெறுக்கத்தக்க வீடியோக்களும், புகைப்படங்களும் உலகெங்கும் பரவியுள்ளதை நீங்கள் நூற்றுக்கணக்கான தடவைகள் பார்த்திருப்பீர்கள். ஆனால்,உண்மையாக கொலை செய்யப்படும் காட்சிகள் கொண்ட வீடியோக்களை நான் இன்னும் பார்த்ததில்லை. கொலை செய்யப்பட்டதன் பின்னர் எடுக்கப்பட்ட வீடியோக்களைகூட நான் பார்த்ததில்லை. கொலை செய்வதற்கு முன்னர் மாத்திரம் வீடியோ எடுப்பதற்கோ, புகைப்படம் எடுப்பதற்கோ அவர்கள் எவ்வாறு அனுமதிக்கப்பட்டனர்? ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் மிருகத்தனங்கள் வெளிக்காட்டப்பட வேண்டுமாயின், கொலை செய்யப்படும் காட்சிகள் அல்லது கொலை செய்யப்பட்டதன் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று ஒருவர் சிந்திக்கலாம்.
ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டபோது,ஈராக்கில் அமைக்கப்பட்ட கேம்ப் விக்டரியில் (Camp Victory), அமெரிக்க பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து பணிபுரிந்த ஒரு பிரித்தானிய கம்பனி, பொய்யான செய்திகளையும், பொய்யான டிவிடிக்களையும் (DVD) தயாரித்து வந்துள்ளதாக, பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ஒரு ஊடகவியலாளர் பணியகம் தெரிவிக்கின்றது. எவ்வாறாயினும், இந்த பெருமளவிலான போலி செய்திகளின் உள்ளடக்கம் இன்னும் தெளிவற்றதாகவே உள்ளது.

லண்டனை தளமாகக் கொண்ட துப்பறியும் ஊடகவியல் பணியகமொன்று (Bureau of Investigative Journalism ), இம்மாதம் 02 ஆம் திகதி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அமெரிக்கா தலைமையில் ஈராக்கில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தின்போது, அமெரிக்காவின் பெண்டகன், ஒரு பிரித்தானிய கம்பனியிடம், (அ) ஈராக் குறித்த போலி செய்திகள், (ஆ) அல்காஇதாவின் போலி பிரசார டிவிடிக்கள் (DVD), (இ) அரபு செய்தி நிறுவனங்களின் பாணியில் உருவாக்கப்பட்ட செய்திகள் என்பவற்றை தயாரிப்பதற்காக ஒப்பந்தங்கள் மேற்கொண்டிருந்ததாக இந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட, இந்த இலாபநோக்கற்ற துப்பறியும் ஊடகவியல் பணியகம்,போலி செய்திகளும் பொய்யான கொடிகளும் என்று தலைப்பிட்டு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், அமெரிக்காவின் பெண்டகன் சர்ச்சைக்குரிய பிரித்தானிய கம்பனிக்கு,ஈராக்கில் மிக இரகசியமான பிரசார திட்டங்களுக்காக, அரை பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. இங்கு பிரசாரம் என்ற சொல் மூலம், தவறாக வழிநடத்தும் செய்திகளும், உண்மையற்ற தகவல்களுமே நாடப்படுகின்றது.
“ஈராக்கில் கிளர்ச்சி கடும் சீற்றம் கொண்டிருந்த வேளையில், இந்த பிரித்தானிய நிறுவனத்தின் பணியாட்கள், அமெரிக்க இராணுவத்தின் முக்கிய புள்ளிகளுடன் ஈராக்கின் கேம்ப் விக்டரி (Camp Victory) தலைமையகத்தில் பணியாற்றினர். பெண்டகனுடன் இணைந்து செயற்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் பெயர் Bell Pottinger என்பதாகும். அதன் தலைவர் டிம் பெல் (Tim Bell) என்பவரின் தகவல்களின்படி, இந்த நிறுவனம் ஈராக்கில் பெண்டகன், சீ.ஐ.ஏ (C.I.A) மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்ஸில் என்பவற்றுடன் இணைந்து செயற்பட்டுள்ளது. துப்பறியும் ஊடகவியல் பணியகத்தின் அறிக்கை வெளிவருவதற்கு முன்னர், கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி, இவர் தனது தலைமை பதிவியிலிருந்து நீங்கியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து, துப்பறியும் ஊடகவியல் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிய, யூ.கே. சண்டே டைம்ஸ் (UK Sunday Times) பத்திரிகைக்கு கருத்து தெரிவித்துள்ள டிம் பெல், பல்வேறு உடன்படிக்கைகளால் மூடப்பட்ட, இரகசிய இராணுவ நடவடிக்கைகளுக்காக, தனது நிறுவனம் பணியாற்றியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
“2007 மே மாதம் முதல் 2011 டிசம்பர் வரையிலும்  மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்களின்படி, தகவல் நடவடிக்கைகள் மற்றும் உளவியல் நடவடிக்கைகளுக்காக, பெண்டகனுக்கும் Bell Pottinger நிறுவனத்துக்கும் இடையில் 540 மில்லியன் அமெரிக்க டொலர் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. 2006 ஆம் ஆண்டும், இதனையொத்த வருடாந்த பரிவர்த்தனை -120 மில்லியன் அமெரிக்க டொலருக்கான ஒப்பந்தமும் அமுலிலிருந்துள்ளது என்று துப்பறியும் ஊடகவியல் பணியகம் அடையாளம் கண்டுள்ளது. என்று துப்பறியும் ஊடகவியல் பணியகத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. துப்பறியும் ஊடகவியல் பணியகம் அடையாளம் கண்டுள்ள பண பரிவர்த்தனை மட்டும் 660 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். (80 பில்லியன் இலங்கை ரூபா.)
அமெரிக்க இராணுவத்தின் ஒப்பந்த கணிப்பீடுகள், பாதுகாப்பு திணைக்களத்தின் மத்திய கொள்வனவு பரிவர்த்தனை பதிவுகள், Bell Pottinger நிறுவனத்தின் பதிவுகள், இராணுவ பிரசாரம் குறித்த விசேட வெளியீடுகள் என்பவற்றின் மூலம் இந்த தகவல்கள் திரட்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக துப்பறியும் ஊடகவியல் பணியகம் தெரிவித்துள்ளது. அத்தோடு,ஈராக்கில் தகவல் நடவடிக்கைகளுக்காக செயற்பட்ட முன்னாள் அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் 6 பேரை நேர்கண்டதாகவும் துப்பறியும் ஊடகவியல் பணியகம் தெரிவித்துள்ளது.
துப்பறியும் ஊடகவியல் பணியகம் இவ்வாறு குறிப்பிடுகின்றது. தகவல் நடவடிக்கைகளுக்காக செயலணியின் (Information Operations Task Force (IOTF)  கீழ், Bell Pottinger நிறுவனம், கூட்டணி படைகளை நேரடியாக மூலாதாரமாகக் கொண்டும், சில நேரம் அவ்வாறன்றியும் சில விடயங்களை தயாரித்து, தமக்காக செயற்பட்டதாக, பெண்டகன் உறுதிப்படுத்தியுள்ளது. தகவல் நடவடிக்கைகளுக்கான செயலணியின் அனைத்து வெளியீடுகளும் உண்மையானவை என்று அவர்கள் வலியுறுத்தினர். எவ்வாறாயினும் துப்பறியும் ஊடகவியல் பணியகத்தின், ஆராய்வின்படி, அவர்கள் சொல்லும் உண்மைத்தன்மை முரண்படுகின்றது.
துப்பறியும் ஊடகவியல் பணியகத்தின் தகவல்களின்படி, Bell Pottinger நிறுவனத்தின் வெளியிடுகள்,ஈராக்கில் கூட்டணி படைகளின் அப்போதைய தளபதியாக இருந்த ஜெனரல் டேவிட் பெட்ரஸ் (David Petraeus) என்பவரின் ஒப்புதலின் பேரிலேயே வெளிக்கொணரப்பட்டுள்ளன. இவர் 2011 ஆம் ஆண்டு, மீளழைக்கப்பட்டு சீ.ஐ.யிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர், ஓர் ஊடகவியலாளருடனான சர்ச்சைக்குரிய விவகாரம் காரணமாக இராஜினாமா செய்தார். டேவிட் பெட்ரஸ் ஒப்புதல் வழங்காத விடயங்கள், வெள்ளை மாளிகையின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
2003 இல் ஈராக்குக்கு எதிராக சட்டபூர்வமற்ற, நியாயமற்ற யுத்தத்தை ஆரம்பித்த அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் அனுமதி, இந்த போலி வீடியோக்களுக்கும், போலிச் செய்திகளுக்கும் கிடைக்கப் பெற்றுள்ளன என்பது அம்பலமாகின்றது. எனினும், இந்த அறிக்கை அவ்வாறு சுட்டிக்காட்டவில்லை. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் வாடிக்கையாளரான இஸ்ரேலை பலப்படுத்துவதற்காக, ஜோர்ஜ் புஷ் ஈராக் மீது யுத்தம் மேற்கொண்டு, ஈராக்கை துவம்சம் செய்து, பல தசாப்தங்கள் பின்நோக்கி ஈராக்கை கொண்டு சென்றதாக ஈராக்கியர்கள் குறிப்பிடுகின்றனர். 2009 ஜனவரி 20 ஆம் திகதி, அமெரிக்க ஜனாதிபதியான பராக் ஒபாமா, 2011 இல் ஈராக்கிலிருந்து கடைசி துருப்புக்களை வெளியேற்றியபோதும், இன்னும் அங்கு அமெரிக்க படையினர் உள்ளனர்.
ஈராக்கில் அமெரிக்காவுக்காக பணியாற்றி, Bell Pottinger நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் முதன்முதலாக ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில், கேம்ப் விக்டரியில் பணியாற்றியமை, ஆச்சரியமாகவும், கண்கணை திறந்து விட்டதாகவும், வாழ்வை மாற்றியமைத்ததாகவும் அமைந்தது. என்று குறிப்பிட்டுள்ளார். மார்டின் வேல்ஸ் (–Martin Wells) என்ற இவர் Bell Pottinger நிறுவனத்தின் வீடியோ எடிட்டராக பணியாற்றியுள்ளார். ஆனால், இவர் தற்போது இந்த நிறுவனத்தில் பணியாற்றுவதில்லை.
இராணுவத்திடமிருந்து கிடைக்கப்பெறும் கடுமையான அறிவுறுத்தல்களுக்கு அமையவே, அல்காஇதா பிரசார வீடியோக்களும், செய்திகளும் தயாரிக்கப்பட்டதாகவும், இராணுவம் சோதனை நடத்தும் இடங்களில் இந்த சிடிக்கள் (CD) கைவிடப்படுவதாகவும் மார்டின் வேல்ஸ் குறிப்பிடுகிறார். இந்த சிடிக்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் குறியீடு மூலம், இந்த போலி வீடியோக்களை தயாரித்தவர்களுக்கு, அல்காஇதா அனுதாபிகளை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
அல்காஇதாவின் தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்களின் தகவல்கள் அடங்கிய சிடிக்கள் தயாரிக்கப்பட்டு, உலகெங்கும் ஒளிபரப்பப்பட்டன. இவற்றில் சில வீடியோக்களில், மேற்கு நாடுகளின் தலைநகரங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டிருந்தன. இந்த போலியான வீடியோக்கள், அமெரிக்காவில் உள்ளவர்களை, எமது இராணுவமும், கூலிப்படையினரும் – Black Water கூலிப்படையை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்- உலகின் இன்னுமொரு பகுதியில் நியாயமான ஒரு யுத்தத்தை மேற்கொள்கின்றனர் என்று சமாதானப்படுத்துவதற்கு உதவின.
தொலைக்காட்சி சேவை, வானொலி, வீடியோ தயாரிப்பு, விளம்பர பலகைகள், பிரசார நடவடிக்கைகள், கருத்துக் கணிப்புக்கள் என்று பல்வேறு சேவைகளையும் வழங்கும் 40 அளவிலான நிறுவனங்கள், ஏற்கனவே ஈராக்கில் செயற்பட்டு, அவற்றுக்கு கூலியும் வழங்கப்படுகின்ற நிலையில், ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்துக்கு ஏன் பெண்டகன் இவ்வளவு பெரிய தொகை செலவழிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. கேம்ப் விக்டரி கட்டிடத்தில் Bell Pottinger பணியாளர்களும், அமெரிக்க இராணுவமும் ஒரே கட்டிடத்தில், ஆனாலும் பாதுகாப்பாக பிரிக்கப்பட்ட நிலையில் பணியாற்றினர் என்பதும் நோக்கத்தக்கதாகும். இந்த வாய்ப்பு ஏனைய 40 ஊடகங்களுக்கும் கிடைக்கவில்லை.
2012 இல் ஆஞுடூடூ கணிணாணாடிணஞ்ஞுணூ நிறுவனம் வாங்கப்பட்டதன் பின்னர், அதன் நிர்வாககமும் மாறியுள்ளது என்பது நோக்கத்தக்கதாகும். துப்பறியும் ஊடகவியல் பணியகத்தின் தகவல்களின்படி, இப்போதுள்ள நிர்வாகத்துக்கு, அமெரிக்காவில் செயற்பட்டு, 2011 மூடப்பட்ட குழுவுடன் எந்த தொடர்பும் இல்லை.
அல்காஇதா அனுதாபிகளை அடையாளம் காணுதல் என்ற பேரில். ஈராக்கியர்கர்களை மோசடி செய்யவும், அநேகமாக அமெரிக்கர்களையும், ஒருவேளை முழு மொத்த உலகத்தாரையும் மோசடி செய்யும் பேரிலும், பெண்டகன் எவ்வாறெல்லாம் நிதி வழங்கியுள்ளது என்பது, துப்பறியும் ஊடகவியல் பணியகத்தின் விசாரணைகளின் மூலம் திடுக்கிடும் தகவல்களாக வெளிவந்துள்ளன. துப்பறியும் ஊடகவியல் பணியகத்தின் கண்டறிவுகளை பெண்டகன் ஏற்றுக் கொள்ள வேண்டும். குறைந்தது, அவற்றை தெளிவுபடுத்தவாவது வேண்டும். இந்த கண்டிக்கத்தக்க செயல்களுக்கு பொறுப்பானவர்கள், துப்பறியும் ஊடகவியல் பணியகத்தின் முன்னால் தமது விளக்கங்களை வழங்குவதன் மூலமே, இதனைச் செய்ய முடியும். இந்த விவகாரங்கள் குறித்து பொதுவெளியில் விளக்கமளிக்கப்படல் வேண்டும். அதேநேரம். இரகசியம் பேணுதல் என்ற போர்வைக்கு இது உட்படவும் கூடாது. திருப்திகரமான பதில்கள் கிடைக்காதபோது,ஈராக் விவகாரம் குறித்த சில்கோட் விசாரணை போன்ற ஒரு பொது விசாரணை குறித்து துப்பறியும் ஊடகவியல் பணியகம் சிந்திக்கலாம். இதனை ஐ.நா. மனித உரிமை ஆணையகம் மற்றும் அதுபோன்ற நிறுவனங்களுக்கு சீர்தூக்கி பார்க்கலாம். ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்கு எதிராகவும் இவ்வாறான உபாயங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என்றும் விளக்கமளிப்படல் வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ்ஸினரால் கைது செய்யப்பட்டவர்களின் தலைகள் துண்டிக்கப்படும் கொடூரமான காட்சிகளின் படங்களை இந்த உலகம் அடிக்கடி காண்கின்றது. இவை உண்மையானவையா? போலியானவையா? இவை ஆக்கிரமிப்புக்களை நியாயப்படுத்துவதற்கான உளவியல் போரின் ஒரு பகுதியா? இந்த கேள்விகள், பிரித்தானிய ஊடகவியலாளர்களின் அதிர்ச்சி தரும் அம்பலப்படுத்தல்களிலிருந்து எழுகின்றன.
அதேநேரம். சில ஊடகங்களின் அறிக்கைகள் நம்ப முடியாதளவு வேடிக்கையாக உள்ளன. அக்டோபர் 06 ஆம் திகதி செய்தி வெளியிட்டிருந்த மெட்ரோநியூஸ் (–Metro News), ஐ.எஸ்.ஐ.எஸ். பூனைகளுக்கு எதிராக பத்வா வெளியிட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் சிரேஷ்ட மதபோதகர் ஒருவர், இஸ்லாமிய சட்டத்தின் பிரகாரம், பூனைகள் வீடுகளுக்கு உள்ளே இனப்பபெருக்க நடவடிக்கைளில் ஈடுபடுவதை தடை செய்துள்ளார் என்று அச்செய்தி குறிப்பிட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அங்கத்தவர்கள் வீட்டுக்கு வீடு சென்று, பூனைகளை வேட்டையாடி வருவதாக மெட்ரோ நியூஸ் குறிப்பிட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ்ஸினருக்கு பைத்தியம் பிடித்தவிட்டதா அல்லது. இந்த செய்தியை எழுதியவர்கள் அவ்வாறு தோற்றமளிக்குமாறு செய்தியை எழுதினார்களா?
கடந்த 100 வருடங்களாக பல்வேறு காரணங்களை கூறி, ஒன்றன் பின் ஒன்றாக, மேற்கு உலகு, மூன்றாம் உலக நாடுகள் மீது மேற்கொண்டு வரும் யுத்தங்கள் சட்டபூர்வமானவையா? நியாயமானவையா? என்று அறிந்து கொள்ளும் உரிமை உலகத்தாருக்கு உள்ளது. மேற்கு ஊடகங்களில் கணிசமானவை, ஆயுத உற்பத்தி உற்பத்திசாலைகள் தொடர்ந்தும் இயங்கவும், மூன்றாம் உலக நாடுகள் மீது ஆயுதங்களை பரிசோதித்து பார்க்கவும் ஏற்ற வகையில், ஆயுத உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுகின்றன என்ற கருத்து உலகம் முழுவதும் பரவி வருகின்றது.
‘போலி செய்திகளும், பொய்யான கொடிகளும்’ என்ற தலைப்பில் லண்டன் துப்பறியும் ஊடகவியலாளர்கள் வெளியிட்ட அறிக்கை, மேற்கின் சர்வதேச ஊடகங்களில் இடம்பிடிக்காமை, மேற்கு ஊடகங்கள் அடைந்திருக்கும் பரிதாபமான நிலையை காட்டுகின்றது. ஆனாலும், இதில் சில விதிவிலக்குகளும் உள்ளன.

No comments: