Thursday, November 15, 2018

அனைவரதும் உயர் கல்விக் கனவை நனவாக்கும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம்


கொழும்பு நாவலயில் அமைந்துள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் தலைமை வளாகம்.

இலங்கையில் க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களில், இஸட் புள்ளிகளின் அடிப்படையில் வருடாந்தம் 30,000 மாணவர்களே தேசிய அரச பல்கலைக்கழகங்களில் பாடநெறிகளுக்காக இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
எனவே, உயர் தரப்ப பரீட்சையில் சித்தியடையும் பெரும் தொகை மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களில் கற்கும் வாய்ப்பை இழக்கின்றனர். ஆனால் பல்கலைக்கழகம் சென்று படிக்க முடியவில்லையே என்று இவர்கள் கவலையடையத் தேவையில்லை! ஏனென்று கேட்கிறீர்களா? தொடர்ந்தும் கட்டுரையை வாசியுங்கள்.

இலங்கையில் 15 அரச பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் ஒரு பல்கலைக்கழகம் தனித்துவமான பல்கலைக்கழகமாக உள்ளது. அதுதான் 'இலங்கை திறந்த பல்கலைக்கழகம்'. உயர் தரப் பரீட்சையில் அதிகளவு இஸட் புள்ளிகளெல்லாம் இங்கு தேவையில்லை.
ஒவ்வொரு கற்கை நெறிக்குமான தகைமைகள் உள்ள எல்லோரும் இந்தப் பல்கலைக்கழகத்தில் இணைந்து கற்கலாம். நீங்கள் உயர் தரத்தில் சித்தியடையவில்லையென்றால், சாதாரண தரத்தின் பெறுபேறுகளை வைத்து சான்றிதழ் கற்கை நெறிகளை பயின்று விட்டு, பின்னர் பட்டப்படிப்பைக் கூடத் தொடரலாம்.
தொழில் செய்வோர் இலகுவாகக் கற்கும் வகையில், விரிவுரைகளும்கூட வார இறுதி நாட்களில் நடாத்தப்படுகின்றன.
இலங்கை திறந்த பல்கலைகக்கழகத்தில் உள்ள கற்கை நெறிகள் குறித்துப் பார்ப்பதற்கு முன்னர், இப்பல்கலைக்கழகம் பற்றிய சில அடிப்படையான தகவல்களைப் பார்ப்போம். இலங்கை திறந்த பல்கலைக்கழகமானது இலங்கையில் திறந்த மற்றும் தொலைக் கல்வியை வழங்கும் மிக முக்கியமான ஒரு கல்வி நிறுவனமாகும்.
1978 இன் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் கீழ், 1980 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை திறந்த பல்கலைக்கழகமானது, இலங்கையிலுள்ள ஏனைய அரச பல்கலைக்கழகங்கள் போன்றே சட்ட அந்தஸ்தையும், கல்விசார் அந்தஸ்தையும் கொண்டிருக்கின்றது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்நாட்டு விவகார அமைச்சினால், 13.03.92 ஆம் திகதியில் வெளியிடப்பட்ட 1692 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்று நிருபத்தின்படி, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பட்டங்கள், பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் கண்காணிப்பின் கீழ் உள்ள ஏனைய பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் பட்டங்களுக்கு சமமானதாகும்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகம் கொண்டிரு;ககின்ற கற்பித்தல் முறைமை மற்றும் உட்கட்டமைப்பின் காரணமாக, நாடு முழுவதிலும் 35,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கற்கின்றனர். இவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் 9 பிராந்திய நிலையங்களிலும், 18 கல்வி நிலையங்களிலும் தமது கற்கை நெறிகளைத் தொடர்கின்றனர்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் மத்திய வளாகமும், கொழும்பு பிராந்திய நிலையமும் நாவலையில் அமைந்துள்ளன. பிராந்திய நிலையங்கள் கண்டி, மாத்தறை, யாழ்ப்பாணம், அநுராதபுரம், பதுளை, குருணாகல், இரத்தினபுரி மற்றும் மட்டக்களப்பில் அமைந்துள்ளன. கல்வி நிலையங்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, பொலன்னறுவை,, புத்தளம், குலியாபிடிய, மாத்தளை, கம்பஹா, களுத்துறை, ஹட்டன், பண்டாரவளை, மொனராகலை, அம்பாறை, அம்பலங்கொடை, காலி, அம்பலன்தொட ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன.
சரி... இலங்கை திறந்த பல்கலைக்கழகம் பற்றிய அடிப்படையான விடயங்களைப் பார்த்தோம். இனி, இப்பல்கலைக்கழகத்தில் உள்ள பீடங்கள் மற்றும் கற்கை நெறிகள் குறித்துப் பார்ப்போம். இங்கு 5 பீடங்கள் உள்ளன.

1. கல்விப் பீடம்
இப் பீடமானது குழந்தை பருவ மற்றும் ஆரம்ப கல்வித் துறை, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை கல்வித் துறை, விசேட தேவை கல்வித் துறை என 06 துறைகளைக் கொண்டியங்குகின்றது. இ;ப்பீடமானது சான்றிதழ் கற்கைகள் முதல் பட்டப்பின் படிப்பு வரையில் பல்வேறு கற்கை நெறிகளை வழங்குகின்றது.
 2. பொறியியல் தொழில்நுட்பப் பீடம்
இப் பீடமானது விவசாய மற்றும் தோட்டப் பொறியியல் துறை, சிவில் பொறியியல் துறை, மின் மற்றும் கம்பியூட்டர் துறை, இயந்திர பொறியியல் துறை, கணிதம் மற்றும் கணிதம் மற்றும் பொறியியல் தத்துவ துறை, ஆடை அணிகலன் பொறியியல் துறை என 06 துறைகளைக் கொண்டியங்குகின்றது. இப்பீடமானது சான்றிதழ் கற்கை நெறிகள் முதல் பட்டப்பின் படிப்பு வரையில் பல்வேறு கற்கை நெறிகளை வழங்குகின்றது.
3. சுகாதார விஞ்ஞான பீடம்
இப்பீடமானது அடிப்படை விஞ்ஞானங்கள், சுகாதாரக் கல்வி மற்றும் ஆய்வு, தாதி (நர்ஸிங்), பார்மசி, உளவியல் மற்றும் ஆலோசனை ஆகிய ஆகிய ஆறு துறைகளைக் கொண்டியங்குகின்றது. இப்பீடம் பட்டப்படிப்பு வரையிலான கற்கைகளை வழங்குகின்றது.
4. மானிட மற்றுமு; சமூக விஞ்ஞான பீடம்
இப்பீடமானது முகாமைத்துவ கற்கைகள், சட்டக் கற்கைகள், மொழிக் கற்கைகள், சமூகக் கற்கைகள் என 4 துறைகளைக் கொண்டியங்குகின்றது. இப்பீடம் சான்றிதழ் கற்கைகள் முதல் பட்டப் பின் படிப்பு கற்கைகள் வரையான பல்வேறு கற்கை நெறிகளை வழங்குகின்றது.
5. இயற்கை விஞ்ஞானங்கள் பீடம்
இப்பீடமானது தாவரவியல், இரசாயனவியல், கம்பியூட்டர் விஞ்ஞானம், கணிதம், பௌதிகவியல், விலங்கியல் ஆறு துறைகளைக் கொண்டியங்குகின்றது. இப்பீடமானது சான்றிதழ் கற்கை நெறிகள் முதல் பட்டப் படிப்பு வரையிலான கற்ககை நெறிகளை வழங்குகின்றது.
இலங்கை திறந்த பல்கலைக்கழகம் பற்றிய மேலதிக விபரங்களை அறிந்துகொள்வதற்கு பின்வரும் இணையதளத்தை தரிசியுங்கள்:



அஷ்கர் தஸ்லீம்

No comments: