Wednesday, June 15, 2016

மத பன்மைத்துவத்துக்கு ஊக்கமளித்த நபிகளாரும் முரணாக செயற்படும் ஐ.எஸ்ஸும்!



-க்ரெய்க் கொன்ஸிடைன்-
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

இந்த சம்பவத்தை மனத்திரை முன் கொண்டு வாருங்கள் ஒரு முஸ்லிம் தலைவர், அயல்நாட்டு கிறிஸ்தவர்களை தன்னாட்டுக்கு வருமாறு அழைக்கிறார். அந்த கிறிஸ்தவர்களும் அவ்வழைப்பை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கின்றனர். கிறிஸ்தவர்களை வரவேற்பதற்காக, முஸ்லிம் தலைவரும் தன்னாட்டு மக்களை தயார்படுத்தலானார். பின்னர் இரு குழுவினரும் சந்தித்துக் கொண்டனர்.

இந்த இரு சமூகத்தினரும் சந்திக்கும் முதற் சந்தர்ப்பம் இதுவே. அரச விவகாரங்கள். அரசியல், மதம் ஆகிய தலைப்புக்களிலேயே இவ்விரு குழுக்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இவ்விரு சமூகத்தினரும் பல விடயங்களில் ஒன்றுபட்டபோதும், மதம் குறித்த விடயங்களில் ஒன்றுபடவில்லை. இவர்களின் இச்சந்திப்பு குறித்து ஒற்றை வார்த்தையில் சொல்வதாயின், ‘இரு பக்க மரியாதையுடன் நடைபெற்ற சந்திப்பு’ என்று சொல்லலாம்.

பேச்சவார்த்தையின் இறுதியில், தற்போது நாம் வணக்க வழிபாட்டில் ஈடுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கிறிஸ்தவர்கள் முஸ்லிம் தலைவரிடம் கூறினர். கிறிஸ்தவாகள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான கிறிஸ்தவ தேவாலயமொன்று அங்கே இருக்கவில்லை.

எனவே, கிறிஸ்தவர்கள் வெறும் தரையில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக, ‘நீங்கள் ஓர் உண்மையான இறைவனை வணங்குகிறீர்கள். எனவே, தயவு செய்து எனது பள்ளிவாசலினுள் வந்து உங்கள் வணக்க வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். நாம் மனித சகோதரர்கள்.’ என முஸ்லிம் தலைவர் கூறினார். முஸ்லிம்களின் இடத்தைப் பயன்படுத்திக்கொள்ள கிறிஸ்தவர்களும் உடன்பட்டனர். சமாதானம் மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் இவ்விரு மத சமூகங்களுக்கும் இடையில் ஒரு பாலம் அமைக்கப்பட்டதை இங்கு அவதானிக்கலாம்.



நாம் மேலே விளக்கிய கதை ஒரு கற்பனைக் கதையல்ல. அது ஒரு வரலாற்றுச் சம்பவம் (இருப்பினும், அந்த சம்பவத்தின்போது நடைபெற்றிருக்கூடிய உரையாடலை வடிவமைத்தேன்) இந்த சம்பவத்தில் வரும் முஸ்லிம் தலைவர், நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆவர். கிறிஸ்தவர்கள் நஜ்ரான் அல்லாத தற்போதைய யெமன் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த சம்பவம் கி.பி 631 இல் மதீனாவில் நடைபெற்றது. அக்காலத்தில் முஸ்லிம் - கிறிஸ்தவ உரையாடல் எப்படி இருந்தது என்பதற்கு இது மிக சிறந்ததொரு உதாரணமாகும். அதையும் தாண்டி, இஸ்லாமிய வரலாற்றில் மதப் பன்மைத்துவம் எவ்வாறிருந்தது என்பதற்கும் இதுவொரு சிறந்த உதாரணமாகும்.

இப்போது 2016 சிரியாவின் டமஸ்கஸ் நகருக்கு உங்கள் கவனத்தைக் கொண்டு வாருங்கள். இந்த நகரும் -பெரும்பாலான மத்திய கிழக்குப் பகுதிகளும்- இருளில் மூழ்கியுள்ளன. கிறிஸ்தவ பாஸ்டர் எட்வட் அவப்டே என்பவருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் உயிர் அச்சுறுத்தல்கள் விடுத்துள்ளபோதும், அவர் கிறிஸ்தவ தேவலாயத்தில் வணக்க வழிபாடுகளை தலைமையேற்று நடாத்தி வருகிறார்.

பாஸ்டர் அவப்டேயின் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த பெருமளவிலானோர் நாட்டை விட்டும் வெளியேறியுள்ளனர். உலகில் கிறிஸ்தவாகள் வாழ்வதற்கு அபாயகரமான நாடுகளின் பட்டியலில் இந்நாடு ஐந்தாம் இடத்தில் உள்ளது.

ஐ.எஸ். திவிரவாத இயக்கம், தாம் கைப்பற்றியுள்ள சிரிய நாட்டுப் பகுதிகளிலுள்ள மத சிறுபான்மையினரை தொடர்ந்தும் துன்புறுத்தி வருகின்றது. மத்திய கிழக்கிலிருந்து அனைத்து கிறிஸ்தவத் தடயங்களையும் அழித்து விடுவதுதான் இந்தத் தீவிரவாத இயக்கத்தின் இறுதி இலக்கு.

இருப்பினும், ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் மத்திய கிழக்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராக, தினமும் மேற்கொண்டு வரும் படுகொலைகளும், கடத்தல்களும், நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்கள், இஸ்லாமிய அரசு குறித்து கொண்டிருந்த பார்வையோடு முழுமையாக முரண்படுகின்றது.

நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்கள், அவரது காலத்து கிறிஸ்தவர்களுடன் மேற்கொண்டிருந்த உடன்படிக்கைகள், உம்மாவில் (-உம்மா என்பது சமூகம் என்பதற்கான அரபு சொல்லாகும்-) வாழும் கிறிஸ்தவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றன. இந்த உடன்படிக்கைகள் கி.பி. 622 முதல் கி.பி. 632 வரையான காலப் பகுதிகளில் எழுதப்பட்டுள்ளன. அமைதியான கிறிஸ்தவ சமூகங்களை தாக்காது, அவர்களைப் பாதுகாக்க வேண்டுமென்று இவ்வுடன்படிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

இந்த உடன்படிக்கைகள் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில், பல நூற்றாண்டுகளாக பதிப்பில் இல்லாத புத்தகங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இஸ்லாமிய அறிஞர் ஜோன் அன்ட்ருவ் மொரோவ் (கனடாவைச் சேர்ந்த இவர் 16 வயதில் இஸ்லாத்தைத் தழுவி, இஸ்லாமிய கலைகளிலும், ஏனைய மானிடவியல் கலைகளிலும் பாண்டித்தீயம் பெற்றுள்ளார்.) இந்த உடன்படிக்கைகளை மொழிபெயர்த்து பெருமளவிலான வாசகர்களுக்கு எட்டச் செய்துள்ளார்.

ஜோன் அட்ரூவ் மொரோவ் ‘தன் சமகால கிறிஸ்தவர்களுடன் நபிகளார் முஹம்மத் (ஸல்) மேற்கொண்ட உடன்படிக்கைகள்’ (கூடஞு இணிதிஞுணச்ணணாண் ணிஞூ ணாடஞு கணூணிணீடஞுணா –தடச்ட்ட்ச்ஞீ தீடிணாட ணாடஞு இடணூடிண்ணாடிச்ணண் ணிஞூ ஏடிண் கூடிட்ஞு) என்ற நூலின் ஆசிரியராவார். மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான பரந் தளவில் மேற்கொள் ளப்படும் வன்முறை களுக்கு எதிராக செயற்படு வதற்கு, என்னைப் போன்ற புலமை வாதிகள் இந்த வகையான உடன் படிக்கை கடிளின் பால் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

நஜ்ரான் கிறிஸ்தவர்களுடனான உடன்படிக் கையில், முழு மையான மத சுதந்திரம் குறித்து நபிகளார் முஹம்மத் (ஸல்) வலுவான நிலைப்பாட்டில் இருந்துள்ளார். அவர் கிறிஸ்தவர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாகக் கருதவில்லை. மாறாக, இஸ்லாமிய அரசின் கீழ், சம உரிமையுள்ள பிரஜைகளாகவே கிறிஸ்தவர்களை நடாத்தினார் அவர்.

நபிகளார் முஹம்மத் (ஸல்) இவ்வாறு எழுதுகிறார்: ‘எனது குதிரை வீரர்களும், காலாட்படை வீரர்களும், இராணுவ வீரர்களும், எனது முஸ்லிம் சமூகத்தினரும் கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பர் என்று நான் பிரகடனப்படுத்துகிறேன். கிறிஸ்தவர்களை ஆதரிப்பதற்கும், அவர்களது தேவாலயங்கள், ஜெபகூடங்கள், கிறிஸ்தவ மதகுருமாரின் மடாலயங்கள் எங்கிருந்தபோதும் அவற்றைப் பாதுகாக்க நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன் கிறிஸ்தவர்களின் மதத்தையும், அவர்களது தேவாலயத்தையும் நான் பாதுகாப்பேன். எனக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரானோருக்கு என்னைப் பின்பற்றுவோரும் எனது தேசமும் எதிராக இருக்கும்.’ சமூகத்தில் வாழும்போது, கிறிஸ்தவாகள் கிறிஸ்தவர்களாகவே இருப்பதற்கான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதில் நபிகளார் முஹம்மத் (ஸல்) மிகத் தெளிவாக இருந்தார். இஸ்லாமிய அரசொன்றில் ஒருங்கிணைந்த பகுதியாக இது அமைய வேண்டும். எகிப்து, பாரசீகம், ஜெரூஸலம் போன்ற பகுதிகளிலும் இவ்வாறான உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

நஜ்ரான் கிறிஸ்தவர்களுடனான நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்களின் உடன்படிக்கை, கிறிஸ்தவர்களுடன் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்வது பற்றியோ அல்லது அவாகள் தமது மதத்தைப் பின்பற்றுவதற்கு ஆதரவு வழங்குவது பற்றியோ மட்டும் பேசவில்லை. மாறாக, கிறிஸ்தவர்களுக்கு உதவுவதும், அவர்களை பாதுகாப்பதும் முஸ்லிம்களின் கடமை என்று நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்கள் கட்டையிட்டுள்ளார்.

அண்மையில் வெளியிடப்பட்ட எனது ஆய்வுக் கட்டுரையொன்றில், நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்கள், தன் உடன்படிக்கைகளில் ஆதரவளிக்கின்ற மதப் பன்மைத்துவம் குறித்த கொள்கைகள், இஸ்லாமிய அரசுகளில் மாத்திரமன்றி, முழு உலகிலும் முஸ்லிம் - கிறிஸ்தவர்களுக்கு இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட முடியும், பயன்படுத்தப்பட வேண்டும் என்று நான் வாதிட்டுள்ளேன்.

நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்கள், வெறும் மத சகிப்புத்தன்மைக்கு அப்பால் மத பன்மைத்துவத்தை விரும்பியிருக்கிறார் என்பதை இவ்வுடன்படிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தன்னை பின்பற்றுவோரிடம், கலாசார மற்றும் மத ரீதியான பன்மைத்துவ சூழலில் ஆர்வத்தோடு உறவாடுமாறு அழைப்ப விடுத்துள்ளார். மத ரீதியான பன்மைச் சூழலில் கடமைகளையும் உடன்படிக்கைகளையும் ஏற்படுத்திக் கொள்ளுமாறும் நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். உம்மா -சமூகம்- கொண்டுள்ள வித்தியாசங்களை கண்டிப்பதற்குப் பதிலாக கொண்டாடுமாறே நபிகளார் முஹம்மத் (ஸல்) அவாகளின் உடன்படிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஐ.எஸ். இயக்கம் கிறிஸ்தவர்களை முறையற்ற வித்தில் நடாத்துவதை, நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்களின் கட்டளைகள் மற்றும் சிந்தனைகளின்படி, எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்பதை, நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்கள், அவரது காலத்து கிறிஸ்தவர்களுடன் மேற்கொண்ட உடன்படிக்கைகள் தெளிவாகச் சுட் டிக்காட்டுகின்றன. ஐ.எஸ். இயக்கம் மேற்கொள்வது ஓர் இனப்படுகொலை என்று அமெரிக்கா தெரிவித்துள்ள கருத்தை கவனத்திற் கொண்டு பார்க்கும்போது, நபிகளார் முஹம்மத் (ஸல்) அவாகளின் சிந்தனைகளுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடவடிக்கைகளுக்கும் முடிச்சுப்போட முடியாது. கிறிஸ்தவ மரபுரிமை என்பது மத்திய கிழக்கு சமூகக் கோப்பில் ஒரு பகுதியாகும். தொடர்ந்தும் அது அவ்வாறுதான் இருக்கும். நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்கள் கிறிஸ்தவர்களை நடாத்திய விதம் அதற்கான சாட்சியாகும்.

நபிகளார் முஹம்மத் (ஸல்) அவாகளின் உடன்படிக்கைகளை, இஸ்லாத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கும், இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கும் எதிரான ஒரு மருந்தாகப் பயன்படுத்த முடியும். ஐ.எஸ்ஸும் அதனது அபிமானிகளும் நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்களின் அழைப்புக்கு செவிதாழ்த்த வேண்டிய நேரம் வந்துள்ளது.

No comments: