Thursday, June 14, 2012

உய்குர் முஸ்லிம்களின் டோக்கியோ மாநாடு சொல்லும் செய்தி


சுதந்திரமாக இருந்த 20 மில்லியன் உய்குர் முஸ்லிம்களின் மத, மொழி மற்றும் அரசியல் சுதந்திரத்தைப் பறித்து அவர்களை எதிர்காலமற்றவர்களாக மாற்றிக் கொண்டிருக்கின்ற சீனா மனித இனம் வெட்கித்துத் தலை குணிய வேண்டிய இன்னொரு இடமாகும். சர்வதேச அரசியலில் மேற்குலக எதிர்ப்பு அணியில் இருந்த போதும் சீனாவின் இந்த உள்நாட்டுக் கொள்கை பெருத்த விசனத்தையே ஏற்படுத்துகின்றது.

இந்தப் பின்னணியில்தான் 2012 மே 14ம் திகதி டோக்கியோவில் நடைபெற்ற கிழக்குத் துருக்கிஸ்தானுக்கான சர்வதேச உய்குர் மாநாட்டு அமைப்பின் 4வது மாநாடு நோக்கப்படுகிறது. அமைப்பின் தலைவி ரபீஆ கதீரின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு ஜப்பானின் பல அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர்.



இந்தியா, ரஷ்யா, துருக்கி உள்ளிட்டு 20 நாடுகளைச் சேர்ந்த 150 இராஜதந்திர ஆளுமைகளும் 120 சர்வதேச ஊடகவியலாளர்களும் கலந்து கொண்ட இம் மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசிய ரபீஆ கதீர், பல முஸ்லிம் நாடுகள் சீனாவின் கோபத்தை சம்பாதித்துக் கொள்ள விரும்பாது இப்படியான மாநாடுகளை தமது நாடுகளில் ஏற்பாடு செய்வதைத் தவிர்த்து வருகின்ற நிலையில் ஜப்பானில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்படுவதனையிட்டு ஜப்பான் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் தான் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்திருந்தார். அவரது உரையின் முக்கியமான சில பகுதிகளை இங்கே தருகின்றேன்...

'உய்குர் முஸ்லிம்களின் மத, மொழி மற்றும் கலாசாரத் தனித்துவத்தை ஒழிக்கும் வகையில் அவர்களது சனத்தொகையை ஐதாக்கும் திட்டத்தை மிகச் சூட்சமமான முறையில் நடைமுறைப்படுத்தி வருகிறது சீனா. இதற்காக உய்குர் முஸ்லிம்கள் வசிக்கும் கிழக்குத் துருக்கிஸ்தானில் ஹான் இன சீன பௌத்தர்கள் மில்லியன் கணக்கில் குடியேற்றப்பட்டு வருவதோடு உய்குர் முஸ்லிம்கள் தொழில் நிமித்தம் சீனாவின் ஏனைய பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டு வருகின்றனர்.

ஊடகங்கள் சொல்வது போன்று உய்குர் முஸ்லிம்கள் பிரிவினைவாதிகள் அல்லர். கிழக்குத் துருக்கிஸ்தானில் பலவந்தமாகக் குடியேறி வருகின்ற சீனர்களையே அவர்கள் வெறுக்கின்றனர். சீன அதிகாரங்கள் உய்குர் முஸ்லிம்களுக்குரிய அனைத்து மத அரசியல் சுதந்திரங்களையும் வழங்க வேண்டும். அவர்களது வளங்களைச் சுரண்டுவதைத் தவிர்த்து அவர்களுக்கெதிரான அராஜக அரசியலை மாற்றிக் கொள்ள வேண்டும்.

கிழக்குத் துருக்கிஸ்தான் விவகாரம் உய்குர் முஸ்லிம்களது பிரச்சினை மட்டுமலல. அது ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பிரச்சினை. திபெத் விவகாரம் எப்படி ஒரு சர்வதேச விவகாரமோ அதே போன்றுதான் கிழக்குத் துருக்கிஸ்தான் விவகாரமும். உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும்படி ஜப்பான் சீனாவுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.'

மாநாட்டின் இறுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த மாநாடு ஜப்பானில் நடாத்தப்பட்டதற்கான காரணங்களையும் கிழக்குத் துருக்கிஸ்தான் மக்களின் எதிர்காலம் குறித்தும் பேசினார் ரபீஆ கதீர். இந்த மாநாட்டைத் தடுப்பதற்காக சீனா இராஜதந்திர ரீதியில் பல முயற்சிகளை மேற்கொணட போதும் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு விஸா வழங்க மறுக்குமாறு ஜப்பானை சீனா தூண்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: