Monday, September 17, 2012

அப்துல்லாஹ் குல் -துருக்கி ஜனாதிபதி-




'துருக்கியில் எவரும் எந்தப் பதவியையும் அடையலாம். அமைச்சர் முதல் ஜனாதிபதி வரையுள்ள அனைத்துப் பதவிகளும் அப்படித்தான். நாம் எவரையும் இவர் குர்தி இனம், இவர் துருக்கி இனம் என்று பிரித்துப் பார்ப்பதில்லை.'           (அப்துல்லாஹ் குல்)

நவீன துருக்கியின் வெற்றிகரமான அரசியல் ஒழுங்கு பற்றிய அவதானததில் தவிர்க்க முடியாததொரு ஆளுமையாக தற்போதைய துருக்கி ஜனாதிபதி அப்துல்லாஹ் குல்லை குறிப்பிட வேண்டும். அவர் மிகவும் நிதானமானவர். நுணுக்கமானவர்.



துருக்கியின் கைஸரி மாகாணத்தில் 1950 ஒட்டோபர் 29 ல் பிறந்த அப்துல்லாஹ் குல் 1971 ல் ஸ்தான்பூல் பல்கைலக்கழகத்தில் பொருளியல் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார். பின்னர், அதே பல்கலைக்கழகத்தில் முதுமாணிக் கற்கையையும் பூர்த்தி செய்து பின்னர் 1983ம் ஆண்டு கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். துருக்கிக்கும் இஸ்லாமிய உலகுக்குமிடையிலான பொருளாதார உறவை அதிகரிப்பது தொடர்பாகவே அவரது கலாநிதிப் பட்ட ஆய்வு அமைந்திருந்தது.

ஸகர்யா பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையை ஸ்தாபிப்பதில் பங்கெடுத்துக் கொண்ட அப்துல்லாஹ் குல் 1980-1983 க்கு இடைப்பட்ட காலத்தில் அங்கு பொறியியல் மாணவர்களுக்கு பொருளியல் பாடத்தையும் கற்பித்து வந்தார். அப்துல்லாஹ் குல்லின் வாழ்வில் 1983-1991 க்கு இடைப்பட்ட காலம் மிகவும் முக்கியமானது. இந்தக் காலப்பகுதியில்தான் அவர் சவூதி அரேபியாவின் ஜித்தாவில் அமைந்துள்ள இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியில் பொருளியலாளராகப் பணிபுரிந்தார்.

அப்துல்லாஹ் குல்லின் அரசியல் பிரவேசம் 20 வயதுக்கு முன்னரே ஆரம்பித்து விட்டது எனலாம். அதாவது, 1969 ல் துருக்கியின் இஸ்லாமிய அரசியல் முன்னோடி நஜ்முத்தீன் அர்பகான் தனது அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்த போதே அப்துல்லாஹ் குல்லும் அரசியல் களத்தில் குதித்தார். 1993ம் ஆண்டு அர்பகான் தலைமை வகித்த ரஃபாஹ் கட்சியின் சர்வதேச விவகாரப் பகுதியின் பொறுப்பாளராகத் தெரிவு செய்யப்பட்ட அப்துல்லாஹ் குல் 1995ம் ஆண்டு முதல் 2000 வரை துருக்கி பாராளுமன்றத்தில் வெளிவிவகாரக் குழுவின் உறுப்பினராகவும் செயற்பட்டார். பின்னர் 1996 முதல் 1997 வரை குல்லை உள்நாட்டு அமைச்சராக நியமித்திருந்தார் அர்பகான்.

நஜ்முத்தீன் அர்பாகன் ஸ்தாபித்த ஃபழீலா கட்சியில் சீர்திருத்தக் குழுவை வழிநடாத்திய அப்துல்லாஹ் குல் பின்னர் ஃபழீலா கட்சியிலிருந்து பிரிந்து அர்தூகானுடன் இணைந்து தற்போதைய துருக்கியின் ஆளும்கட்சியான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியை ஸ்தாபிப்பதில் பங்கெடுத்தார். பின்னர் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி ஆட்சியில் அமர்ந்தது. 2007 ஆகஸ்ட் 29 ல் துருக்கியின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட அப்துல்லாஹ் குல் இன்றுவரை துருக்கியின் ஜனாதிபதியாக செயற்பட்டு வருகிறார்.

ஜனாதிபதி அப்துல்லாஹ் குல்லின் 8 வருட பதவிக் காலம் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டுடன் முடிவடைய இருக்கின்ற நிலையில் ஆளும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி புதிய தலைமைகளைத் தேடத் தொடங்கியுள்ளது. அப்துல்லாஹ் குல் பாராளுமன்றத்தினாலேயே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். தற்போது பாராளுமன்றத்தால் ஜனாதிபதி தெரிவுசெய்யப்படும் முறைமை ரத்து செய்யப்பட்டு நேரடியாக மக்களாலேயே ஜனாதிபதி தெரிவுசெய்யப்படும் வகையில் சட்டம் மாற்றப்பட்டுள்ளது. நவீன துருக்கியின் முதலாவது இஸ்லாமியவாத ஜனாதிபதியாக அப்துல்லாஹ் குல் கணிக்கப்படுகின்றார் என்பதும் இங்கு முக்கியமானது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கியை இணைப்பதில் மிகவும் ஈடுபாடு காட்டி வரும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி அதன் திட்டங்களை மிகவும் நுணுக்கமாக முன்னெடுத்து வருகின்றது. அப்துல்லாஹ் குல் துருக்கியின் ஐரோப்பிய அங்கத்துவ முயற்சி குறித்து இப்படிக் கூறுகிறார்:

'துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதில் பல பொருளாதார பாதுகாப்பு நலன்கள் இருக்கின்றன. ஏனெனில் துருக்கி ஆசியாவுக்கும் மத்தியாசியாவுக்குமான வாயிலாகும். எனவே, துருக்கி ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடாக அடையாளப்படுத்தப்படுகின்றது. இன்று கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் சுரங்க வழி சக்திவளங்கள் துருக்கியூடாகவே செல்கின்றன. எனவே, துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதில் இருபக்க நலன்களும் இருக்கின்றன.

துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதன் மூலம் துருக்கியின் ஜனநாயகத்தன்மை இன்னும் முன்னேற்றமடையும். எமது பொருளாதாரம் அபிவிருத்தியடையும். துருக்கி மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.'

சர்வதேச இஸ்லாமிய தலைமைத்துவத்தை நோக்கிய சாணக்யம் நிறைந்த துருக்கியின் பயணத்தில் அப்துல்லாஹ் குல்லின் பங்களிப்பு என்றும் மதிக்கப்படும்.

No comments: