Friday, July 11, 2014

அல்பேனியாவிலும் கொஸோவாவிலும் இனி ஒரே கல்வித் திட்டம்!

லின்டிடா நிகொல்லா

ஐரோப்பாவின் இரு முஸ்லிம் நாடுகளான அல்பேனியாவும் கொஸோவாவும் உத்தியோகபூர்வமாக ஒரே கல்வித் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான உடன்டிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இனி, அல்பேனியாவிலும் கொஸோவாவிலுமுள்ள பாடசாலைகள் ஒரே பாடத்திட்டத்தைக் கொண்டியங்கும்.

இரு நாடுகளினதும் முன் பல்கலைக்கழக கல்வி குறித்த உடன்படிக்கையில் அல்பேனிய கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் லின்டிடா நிகொல்லாவும் கொஸோவா கல்வி அமைச்சர் ராமி புஜாவும் கைச்சாத்திட்டுள்ளனர்.



உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் லின்டிடா நிகொல்லா, கைச்சாத்திடப்பட்ட இந்த உடன்படிக்கையுடன் அல்பேனிய கல்வித் துறையில் ஒரு புது யுகம் உருவாகின்றது என்று தெரிவித்துள்ளார்.

'இந்தப் புதிய கல்வித் திட்டம் மூலம் கொஸோவாவை சேர்ந்த மாணவர்கள் அல்பேனிய பாடசாலைகளிலும் அல்பேனியாவைச் சேர்ந்த மாணவர்கள் கொஸோவா பாடசாலைகளிலும் இணைந்து கற்கலாம். அத்தோடு ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள பாடசாலைகளிலும் இணைந்து கற்கலாம். ஏனெனில், நாம் நடைமுறைப்படுத்துகின்ற இந்தக் கல்வித் திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகளினதும் உத்தியோகபூர்வ கல்வித் திட்டமாகும்." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராமி புஜா
கொஸோவா கல்வி அமைச்சர் ராமி புஜா, இந்த உடன்படிக்கையை வரலாற்று முக்கியத்துவம் மிக்க உடன்படிக்கை என்று தெரிவித்துள்ளார்.

'இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கை மூலம் தேசிய கல்வித் தளத்தில் முக்கியமான எட்டொன்றை நாம் எடுத்து வைத்துள்ளோம். அல்பேனியாவும் கொஸோவாவும் அறிவுத் துறையில் இப்போது ஒன்றிணைந்துள்ளன." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எடி ரமா
இந்த உடன்படிக்கை குறித்து கருத்துத் தெரிவித்தள்ள அல்பேனிய பிரதமர் எடி ரமா, இந்த உடன்படிக்கை அல்பேனியாவினதும் கொஸோவாவினதும் இணைந்த கல்வித் திட்டத்தின் அடிக்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.


இந்தப் புதிய கல்வித் திட்டம் மூலம் இரு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இவ்விரு நாடுகளிலும் எதுவித பிரச்சினைகளுமின்றி கல்வியைப் பெற முடியுமான நிலையை உருவாக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தின் கல்வித் திட்டத்தை ஒத்த இக்கல்வித் திட்டம் எதிர்வரும் செம்படம் முதல் அல்பேனியாவின் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வரவுள்ளது.

நன்றி- ஒன்இஸ்லாம் இணையதளம்

No comments: