Friday, January 24, 2014

ரஷ்ய தூதரகத்துக்காக காணிகளை இழக்கப்போகும் முஸ்லிம்கள் - பள்ளிவாசலும் அகற்றப்படலாம்!




ரஷ்ய தூதரகம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் காட்சி

(அஷ்கர் தஸ்லீம்)

 7 பௌத்தாலோக மாவத்தை அஷ்ரப் மாவத்தையிலுள்ள மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலையும் அதனைச் சூழ உள்ள வீடுகளையும் அகற்றுமாறு அரசாங்கம் விடுத்துள்ள பணிப்புரை பிரதேச வாசிகளை ஆழ்ந்த கவலைக்குள்ளாக்கியுள்ளது.
அப்புறப்படுத்துமாறு வேண்டப்பட்டிருக்கும் மஸ்ஜதுன் நூர்




அஷ்ரப் மாவத்தைக்கு அருகாமையில் ரஷ்ய நாட்டின் தூதரகம் அமையவுள்ளது. எனவே, அதனை அண்மித்துள்ள பகுதியில் அமைந்துள்ள இந்தப் பள்ளிவாசலையும் அதனைச் சூழவுள்ளவர்களையும் அப்புறப்படுத்துமாறு ரஷ்ய தூதரகம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இதற்கமையவே, நகர அபிவிருத்தி அதிகார சபை குறித்து பள்ளிவாசலையும் அதனைச் சூழ உள்ளோரையும் குறித்த பிரதேசத்திலிருந்து வெளியேறுமாறு தெரிவித்துள்ளது.

சண்டே டைம்ஸ் பத்திரிகைக்குக் கருத்துத் தெரிவித்துள்ள ரஷ்ய தூதரக பேச்சாளர், இந்த பிரதேசத்தில் இருப்போர் ஆக்கிரமிப்பாளர்கள் எனவும், எனவேதான் அவர்களை அப்புறப்படுத்துமாறு தாம் வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிவாசலையும் பிரதேசவாசிகளையும் அப்புறப்படுத்தும் விவகாரம் குறித்து அமைச்சரவையில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சர் பௌசியும் அமைச்சர் ரவூப் ஹகீமும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

எனவே, சிரேஷ்ட அமைச்சர் ரத்னசிரி விக்ரமனாயகவின் தலைமையில் அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர் ரவூப் ஹகீம் ஆகியோரை உள்ளடக்கி குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு இந்த விவகாரம் குறித்து ஆராயவுள்ளது.

எம்.எச்.எம் பவாஸ்
இந்த விவகாரம் குறித்து நாம், அஷ்ரப் மாவத்தையிலுள்ள மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலின் துணைச் செயலாளர் எம்.எச்.எம் பவாஸிடம் கேட்டோம். அதற்கவர், இந்தப் பள்ளிவாசல் அப்புறப்படுத்தப்பட்டால், நாம் தொழுகைகளுக்காக பம்பலப்பிட்டி, கிருலபனை, பொரளை ஆகிய இடங்களுக்குத்தான் செல்ல வேண்டி வரும். அவை தூரத்தில் அமைந்திருக்கின்றன. இந்தப் பள்ளிவாசலை அண்மித்துள்ளவர்களும் இப்பிரதேசத்தில் தொழில்களில் ஈடுபவர்களும், பாடசாலை மாணவர்களும் இங்கு வந்துதான் தொழுவார்கள். எனவே, இந்தப் பள்ளிவாசல் நீக்கப்படுவது மிகப் பெரும் கஷ்டத்தையே கொண்டு வருகின்றது என்று தெரிவித்தார்.

தொடர்ந்தும் எம்மோடு பேசிய அவர், இந்தப் பிரதேசத்தைச் சூழ 12 பௌத்த விகாரைகள் இருக்கின்றன. அவற்றை நீக்கும்படி சொன்னால், நீக்குவார்களா? ஒருபோதும் நடக்காது. தூதரகத்தின் இரு பக்கங்களிலும் இரு பௌத்த விகாரைகள் இருக்கின்றன. இந்த நிலையில் பள்ளிவாசலை மட்டும் அப்புறப்படுத்த வேண்டும் என ஏன் சொல்கிறார்கள் என்று கேட்டார்.

மேலும் எம்மோடு பேசிய அவர், ரஷ்யா என்பது ஒரு வல்லரசு. அந்த வல்லரசு இந்த சிறிய பள்ளிவாசலைப் பார்த்துப் பயப்படுகின்றது என்று சொல்வது ஒரு கேலியான விடயம். நாம் எமது முடிவில் உறுதியாக இருக்கின்றோம். இந்தப் பள்ளிவாசலை அப்புறப்படுத்துவதற்கு நாம் இடம் தர மாட்டோம். அவர்களுக்குத் தேவையாக இருந்தால், தூதரகத்தை வேறொரு இடத்துக்கு மாற்றிக் கொள்ளட்டும் என்றும் குறிப்பிட்டார்.

ரஷ்ய தூதரகம் அமையவுள்ள காணியை சுமார் 30 வருடங்களுக்கு முன்னரே சோவியத் ரஷ்யா வாங்கியிருந்தது. பின்னர், சோவியத் ரஷ்யா துண்டு துண்டான போது, இந்தக் காணியை பிரதேசத்தவர்கள்தான் பாதுகாத்துக் கொடுத்துள்ளனர். தற்போது சில வருடங்களுக்கு முன்னர், தூதரகக் கட்டிடத்தையும் தூதரது வீடு உள்ளிட்ட பல கட்டிடங்கள் இந்த காணிக்குள் கட்டப்பட்டு வருகின்றது. இந்தக் கட்டுமாணப் பணிகள் 2016 அளவில் பூர்த்தியாக்கப்படவுள்ளன.

ரஷ்ய தூதரகம் அமையவுள்ள காணியை சுற்றி 20 அடிகளையும் விட உயரமான மதில் கட்டப்பட்டிருக்கின்றது. எனவே, அவர்களது காணிக்கு வெளியே உள்ள இந்தப் பள்ளிவாசலையும் தத்தமது சொந்தக் காணிகளில் வசித்து வரும் மக்களையும் தான் ரஷ்ய தூதரகம் வெளியேற்றுமாறு அரசாங்கத்திடம் வேண்டியுள்ளது.

ஏ.ஆர்.எம். ஹனீபா
நாம் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் தலைவர் ஏ.ஆர்.எம். ஹனீபா அவர்களுடனும் பேசினோம். அவர் எம்மோடு பேசுகையில், நாம் இந்தப் பிரதேசத்தில் 100 வருடங்களுக்கு மேல் வரலாற்றைக் கொண்டிருக்கிறோம். வெள்ளைக்காரர்களின் ஆட்சிக் காலத்தேய பதிவுகள் எம்மிடம் இருக்கின்றன. எனவே, எம்மை அங்கீகாரமற்றவர்கள் என்று சொல்லி எம்மை இந்தப் பிரதேசத்தை விட்டுச் செல்லுமாறு எப்படிச் சொல்ல முடியும் என்று கேட்டார்.

முஸ்லிம் அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் ஜும்ஆ தொழுகைக்காக இங்கு வந்திருக்கிறார்கள். அஸ்வர் ஹாஜியார் இந்தப் பள்ளிவாசலுக்கு அடிக்கடி வந்து செல்வார். இப்போது அனைவரம் மௌமாக இருக்கிறார்கள். தாம் ஸுஜூது செய்து தொழுத இடங்கள் உடைக்கப்படப் போகின்றது என்றால் அவர்கள் பேச வேண்டுமல்லவா? என்றும் அவர் எம்மோடு கேட்டார்.

இலங்கையில் பள்ளிவாசல்கள் மீதான கல்வீச்சும் தாக்குதல் நடவடிக்கைகளும் பரவி வருகின்ற நிலையில, வெளிநாட்டுத் தூதரகமொன்றும் பள்ளிவாசலொன்றை அப்புறப்படுத்துமாறு வேண்டுவது முஸ்லிம்களை ஆழ்ந்து சிந்திக்கும் படி செய்துள்ளது. முஸ்லிம் அரசியல்வாதிகளும் சிவில் சமூக நிறுவனங்களும் அஷ்ரப் மாவத்தை மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் குறித்தும் அதனைச் சூழவுள்ள முஸ்லிம்கள் குறித்தும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதேசவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


No comments: