Friday, December 20, 2013

பொன் தீவு கண்டல் காணி பிரச்சினை: வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் எதிர்கொள்ளும் இன்னுமொரு சவால்!

(அஷ்கர் தஸ்லீம்)

மன்னார் மாவட்டத்தின் நானட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பொன் தீவு கண்டல் மற்றும் பூவாரசம் குளம் பகுதி தமிழ் கிறிஸ்தவ - முஸ்லிம்களுக்கு இடையிலான காணி சம்பந்தப்பட்ட முறுகல் அந்தப் பிரதேச மக்கள் மத்தியில் பலத்த நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது.

புலிகளால் விரட்டப்பட்டு புத்தளத்தில் அகதிகளாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக்கு, பூவாரசம் குளம் மற்றும் பொன் தீவு கண்டல் பகுதிகளுக்கு இடைப்படட பிரதேசத்தில், அரசாங்கத்தால் காணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தக் காணிகள் தமது பூர்வீக பிரதேசம் என்றும் அவையும் தமக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழ் கிறிஸ்தவ தரப்பு கூறி வருகின்றது.


மன்னார் மாவட்டத்தின் நானட்டான் பிரதேச செயலகப் பகுதியில் தமிழ் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாகவும் முஸ்லிம்கள் சிறுபான்மையாகவும் வாழ்ந்து வருகின்றனர். புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் இங்கு மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றபோதும், முஸ்லிம்களுக்கும் தமிழ் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் இதுவரை எந்தவித சச்சரவுகளும் வந்ததில்லை.

1990 களில் புலிகளால் விரட்டப்பட்ட மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் புத்தளத்தின் பல பகுதிகளிலும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த அகதிகளாக வாழ்ந்து வந்தனர். 1990 ஆம் ஆண்டு முதல் 2004 வரை புத்தளத்தில் வாழ்ந்த இவர்களின் பிள்ளைகள் திருமணம் முடித்து குடும்பங்களானதன் காரணமாக சனத்தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் 2004 ஆம் ஆண்டு மீண்டும் மன்னாரில் குடியேறுவதற்காகச் சென்றவர்களுக்கு தமது காணிகளில் இடப்பற்றாக்குறை தோன்றியது. இந்த இக்கட்டான நிலையால் கஷ்டப்பட்ட நானட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பூவாரசம் குளம் பகுதி முஸ்லிம்கள், தமது குடும்பங்கள் வசிப்பதற்கு காணிகள் போதாது என்றும், அதனை நிவர்த்திக்கும் முகமாக காணிகளை வழங்குமாறும் 2005 ஆம் ஆண்டு, பிரதேச செயலகத்திடம் வேண்டுகோள் விடுத்தனர். பின்னர், 2010 ஆம் ஆண்டும் இவ்வாறான வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன.

இதனை கருத்திற் கொண்டு செயற்பட்ட பிரதேச செயலகம், காணி அற்றோருக்கு விண்ணப்பிக்குமாறு தெரிவித்தது. எனவே, காணி அற்றோர் 72 பேர் விண்ணப்பித்து இறுதியாக வடிகட்டி 55 முஸ்லிம்களுக்கு காணிகள் வழங்கப்பட்டன. அதேபோன்று தமிழ் கிறிஸ்தவர்கள் 36 பேருக்கும் காணிகள் வழங்கப்பட்டன. இந்த 36 பேரில் சுமார் 15 பேர் திருமணம் முடிக்காதவர்கள் என்றும் தெரிய வருகிறது.

மொத்தமாக ஒவ்வொருவருக்கும் 15 பேர்ச் காணி வழங்கப்பட்டுள்ளது. இந்த காணிகள் அனைத்தும் ஒரே வளவிலேயே அமைந்துள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட காணிகளில் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் பலருக்கும் வீடு கட்டுவதற்கான உதவிகள் வழங்கப்படவுமுள்ளது.

புலிகளால் விரட்டப்படாது, தமது சொந்தக் காணிகளிலேயே வாழ்ந்து வந்த தமிழ் கிறிஸ்தவர்களுக்கும் காணி வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில்தான், புலிகளால் விரட்டப்பட்டு பின்னர் மீள்குடியேறிய முஸ்லிம்களுக்கும் காணிகள் வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே, முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட காணிகளும் தமக்கே வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் கிறிஸ்தவ தரப்பு கோருவது எந்த வகையில் நியாயமானது என்று பூவாரசம் குள முஸ்லிம்கள் வினவுகின்றனர்.

புலிகளால் விரட்டப்பட்டு 15 வருடங்கள் அகதிகளாக வாழ்ந்து, பின்னர் தமது சொந்த ஊரில் மீள்குடியேறிய பின்பும் நிம்மதியான ஒரு வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு முடியாமல் பூவாரசம் குள முஸ்லிம்கள் தவிக்கின்றனர். இந்தக் காணிப் பிரச்சினையில் தமிழ் கிறிஸ்தவ பொதுமக்கள் ஈடுபட்டாலும், அவர்களை பின்னின்று இயக்குபவர்கள் மதகுருக்கள் என்றே பிரதேச முஸ்லிம்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.
 
புலிகளால் விரட்டப்பட்டு புத்தளத்தில் அகதிகளாக வாழ்ந்து வந்த காலங்களில் இந்த தமிழ் சகோதரர்கள் எமது பொருட்களை எடுத்து பயன்படுத்தி அனுபவித்து வந்தனர். நாம் மீள்குடியேறி இங்கு வந்த பின்பும் அது பற்றி அவர்களிடம் நாம் கேட்கவோ, பொருட்களை மீட்டெடுக்கவோ இல்லை. நாம் அவ்வளவு விட்டுக்கொடுப்புடன் வாழ்ந்து வந்தோம் என்று ஒரு முஸ்லிம் வயோதிபர் தெரிவித்தார். இவ்வாறு விட்டுக்கொடுப்புடன் வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காணிகளை சுவீகரித்துக் கொள்வதற்கு தமிழ் கிறிஸ்தவர்கள் முயற்சி எடுப்பது பிரதேச முஸ்லிம்களை மிகுந்த கவலைக்குள்ளாக்கியுள்ளது.

இந்தக் காணிகளை நாம் சட்டபூர்வமற்ற முறையில் கையகப்படுத்திக் கொள்ளவில்லை. இவை எமக்கு அரசாங்கத்தால் தரப்பட்டவை. இந்தக் காணிகள் பயன்படுத்தப்பட முடியாதவாறு இருந்தன. நாம் அனைவரும் எமது சொந்தப் பணத்தை சேகரித்தே இவற்றை புல்டோசர் கொண்டு செம்மைப்படுத்தியிருக்கிறோம் என்றார் பிரதேசவாதி ஒருவர்.

அவர்கள் எவ்வாறு இதனை அவர்களது பூர்வீகக் காணி என்று சொல்ல முடியும்? அவர்களின் பூர்வீகக் காணி என்றால் அவர்களிடம் காணி உறுதிகள் இருக்க வேண்டும். எனது பெற்றோர்கள் இந்த காணியில்தான் ஆடு மாடு மேய்த்தார்கள். எனக்கு இப்போது 56 வயதாகின்றது. நானும் 6 வயது முதல் இந்தக் காணியில் ஆடு மாடு மேய்த்துள்ளேன் என்று இன்னுமொரு பிரதேசவாசி கவலையுடன் தெரிவித்தார்.

இந்தப் பிரதேசத்தில் வாழும் தமிழ் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நெருக்கடிகள் ஏற்படக் கூடாது என்பதற்காக வடமகாண சபை அமைச்சர் டெனிஸ்வரன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் போன்றோர் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகக் குறிப்பிடும் பிரதேசவாசிகள், தாம் தொடர்ந்தும் தமிழ் கிறிஸ்தவர்களுடன் நல்லுறவைப் பேண விரும்புவதாகவும் குறிப்பிட்டனர்.

இரு இன மக்களும் அடுத்த இன மக்களது விஷேடங்களில் கலந்து கொள்ளும் வழமையைக் கொண்டிருக்கின்றனர். தமிழ் கிறிஸ்தவர்களின் விஷேட நிகழ்வுகளில் முஸ்லிம்கள்தான் சமையல் செய்வார்களாம். இவ்வாறு ஒற்றுமையாக இருந்த இந்த மக்களுக்கு மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற பதட்டம், வெகு சீக்கிரமே சீர் செய்யப்படல் வேண்டும் என்பதில் பிரதேச முஸ்லிம்கள் ஆர்வமாய் இருக்கின்றனர்.

நானட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பூவாரசம் குளம் மட்டும் பொன் தீவு கண்டல் பகுதி மக்கள் இதுவரை காலமும் மிகவும் அந்நியோன்யமாகவே இருந்து வந்துள்ளனர். ஆனால், திடீரென முளைத்துள்ள இந்தப் பிரச்சினை அவர்களது நீண்ட கால நல்லுறவை பாதித்திடுமோ என்று பிரதேச முஸ்லிம்கள் அங்கலாய்க்கின்றனர்.

இது இவ்வாறிருக்க, டிசம்பர் 9 ஆம் திகதி நானட்டான் பிரதேச செயலகத்துக்கு முன்னாள் ஒன்றுகூடிய தமிழ் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணிகளில் அவர்கள் குடியேறக்கூடாது என்று கோஷமிட்டதோடு, பிரதேச செயலகத்துக்கு கற்களை எறிந்து சேதப்பட்டுத்தியுள்ளனர்.

ஸ்தலத்துக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை அமைதிப்படுத்த முயன்றனர். பின்னர், ஸ்தலத்துக்கு வந்த மன்னார் ஆயர் ஜோசப் ராயப்பு மக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார்.

போருக்குப் பிந்திய இலங்கையில் முஸ்லிம் சிறுபான்மை மீது சிங்கள பேரினவாத சக்திகள் அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகின்ற சூழலில், இன்னுமொரு சிறுபான்மை இனமான தமிழ் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களோடு சச்சரவுகளை ஏற்படுத்திக் கொள்வது, சிறுபான்மை இனங்களை மேலும் மேலும் பலவீனப்படுத்தும் என்பதை மட்டும் அனைத்து சிறுபான்மை இனத்தவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.


No comments: