Thursday, October 2, 2014

கணவர்களுக்கு மட்டும்!


ஸஹர் கஸ்ஸைமாஹ்

தமிழில்: அஷ்கர் தஸ்லீம்


வீட்டை சுத்தமாக்கி விட்டாயா?
இரவுச் சாப்பாடு தயாரா?
குழந்தைகளுக்கு உணவூட்டி விட்டாயா?
எனது ஆடைகளைக் கழுவி விட்டாயா?

மனைவியை மனைவியாக நோக்காது, தனது பணிப் பெண்ணாகவும், குழந்தைகளைப் பெறும் இயந்திரமாகவும் நோக்கும் கணவர்களிடமிருந்து, பெண்கள் இரவு பகலாக செவிமடுக்கும் கேள்விகள்தான் இவை.

பெண்களும் ஆண்களும் மிகுந்த வேலைப்பளுவுக்கு மத்தியிலேயே வாழ்கின்றனர். ஆனால், சில கணவர்கள் திருமணத்தில் பொதிந்துள்ள உண்மையான விடயங்களையும், தமது மனைவிமாரின் உரிமைகளையும் மதிக்காது நடக்கின்றமை மிகுந்த கவலைக்குரியதாகும்.

இவர்கள் வெற்றிகரமான குடும்பமொன்றின் அஸ்திவாரமான குழந்தைகளின் சந்தோசம், சகாக்ககள் ஆகியவற்றைப் பிடுங்கிக் கொள்கின்றனர். இவ்வாறான சமநிலையற்ற நிலைமை தொடர்கின்றபோது, குடும்பம் பிரச்சினைகளுக்குள்ளும் கவலைகளுக்குள்ளும் சிக்கிக் கொள்கின்றது.

மார்க்க பக்தியுள்ள குடும்பங்களில் கூட, தமது மனைவியரை சரியாகப் புரிந்து கொள்ளாத, திருமணம் முடித்த ஒரு ஜோடிக்கு இடையிலான உறவைப் புரிந்து கொள்ளாத கணவர்களைக் காணலாம்.




மனைவிமாரும் மனிதர்களே…

ஒரு புறம் அல்லாஹ்வின் கட்டளைகளை நடைமுறைப்படுத்திக் கொண்டு, இன்னொரு புறம், தனது மனைவியை எவ்வாறு நடத்த வேண்டுமென்ற அல்லாஹ்வின் வழிகாட்டல்களை பின்பற்றுவதற்கு மறந்துபோகின்ற சில கணவர்களைக் காணும்போது வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது.

இவ்வாறான கணவர்கள் வீட்டுக்கு வெளியே கனிவு, பொறுமை, புன்சரிப்பு என்பனவற்றை அணிகலன்களாகக் கொண்டிருப்பர். ஆனால், வீட்டுக்கு வந்தவுடன, அவரது சிரித்த முகம் கோபமானதாகவும் கவலையானதாகவும் மாறிவிடுகின்றது. அவரது கனிவும், மென்மையும் பதட்டமாகவும் துன்பமாகவும் மாறிவிடுகின்றன. தன் மனைவி மீது தன் கட்டளைகளை சத்தமிட்டு முரட்டுத்தனமாக வெளிப்படுத்துவார் அவர்.

தான் வீட்டுக்கு வெளியே பல சவால்களையும், அழுத்தங்களையும் சந்திப்பது போன்றே, தன் மனைவியும் வீட்டு வேலைகள், பிள்ளைகளின் வேலைகளினால் அதிகமான சவால்களுக்கும் அழுத்தங்களுக்கும் உட்பட்டிருப்பார் என்பதனையும் இவ்வாறான கணவர்கள் மறந்து விடுகின்றனர்.

தன் மனைவியும் முழு நாளும் வேலை செய்திருக்கிறாள், அவளுக்கும் ஓய்வு வேண்டும் என்பதனை இவ்வாறான கணவர்கள் மறந்து விடுகின்றனர். கணவன் வீட்டுக்கு வெளியே சென்று தொழில் செய்து தனது குடும்பத்தைக் கவனிப்பதனை விடவும், மனைவி வீட்டுக்குள்ளே இருந்து தனது பணிகளை செய்வதன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது. மனைவிதான் குழந்தைகளை வளர்த்து, குடும்பத்தைப் பாதுகாக்கும் பணியை செய்கிறாள். அதனால் அவளது பணி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

பின்வரும் காட்சியை நாம் அடிக்கடி காண்கிறோம்:

ஒரு மனைவி வீட்டை சுத்தம் செய்தல், துணி துவைத்தல், சமைத்தல் போன்ற வேலைகளைச் செய்து களைப்படைகிறாள். பின்னர், தனக்கு சற்று உதவுமாறு தன் கணவனிடத்தில் வேண்டுகிறாள். ஆனால் அவனோ, ஒரு ஆண் தன் மனைவிக்கு உதவுவதை வெட்கத்துக்குரியதாகக் கருதி, மறுத்து விடுகின்றான்.

இங்கு அவனுக்கு அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்புக்குரிய நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது மனைவியரின் வேலைகளில் உதவி புரிந்தார் என்பது தெரியாதா?

உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள், சில பெண்களுக்கு சமையல் கற்றுக் கொடுத்தது தெரியாதா? தனக்கு சமைக்க முடியாதவிடத்து உமர் (ரழி) அவர்கள் ஏனையோருக்கு எவ்வாறு சமையல் கற்றுக் கொடுப்பார்?

ஒரு கணவனுக்கு எவ்வாறான வேலைகள் இருந்தபோதும், இஸ்லாத்தைப் பரப்புவதை தனது வேலையாகக் கொண்ட நபி முஹம்மத் (ஸல்) அவர்களை விடவும், அவர் பிஸியானவராக இருக்க முடியாது. அத்தோடு, கலீபாவின் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியிருந்த உமர் (ரழி) அவர்களை விடவும் பிஸியானவராகவும் இருக்க முடியாது.

அன்பை வெளிப்படுத்துங்கள்…

சில மனைவியர் தம் கணவர்களிடமிருந்து எந்தவொரு அன்பான, நன்றி வார்த்தைகளையும் செவிமடுத்ததில்லை என்ற செய்தி எனக்கு ஆச்சரியமாகவே உள்ளது. தான் மிகவும் நேசித்த நபர் குறித்து நபி முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டபோது, அது ஆயிஷா (ரழி) அவர்கள்தான் என்று சொல்வதற்கு நபியவர்கள் தயங்கவில்லை.

இவ்வாறு அவர் அதனை தெளிவாகப் பிரகடனப்படுத்தினார். எனவே, எந்தவொரு கணவனரும் தன் மனைவியை காதலிப்பதற்கோ அதனை ஏனையோர் முன் தெரிவிப்பதற்கோ வெட்கப்படத் தேவையில்லை.

சில கணவன்மார் தம் மனைவிமாருடன் கதைப்பதில்லை, போலியான வேலைப்பளுக்களைச் சொல்லியும், தஃவா வேலைகளைக் காரணம் காட்டியும் குடும்பத்தோடு தம் நேரங்களைக் கழிப்பதில்லை என்பதும் கூட வேதனை தருவதாகவே உள்ளது.

வீட்டுக்கு வெளியே தஃவா வேலைகளில் ஈடுபடுவது சிறந்ததொரு செயலாக இருப்பினும் கூட, மனைவியோடும் குழந்தைகளோடும் நேரத்தைக் கழித்து சந்தோசமாக இருப்பதும் ஒரு கணவனின் பணி என்பதை மறந்து விடக்கூடாது.

திருமணம் முடித்த ஜோடிகள் பேசாமலும், ஒன்றாக இணைந்து நேரத்தைக் கழிக்காமலும் எவ்வாறு இருக்க முடியும்? அல்லது இருவருக்கும் இடையில் இடைவெளி அதிகரித்த நிலையில் அவர்கள் எவ்வாறு சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியும்?

மனைவியிடமின்றி வேறு எவரிடம் தன் சந்தோசங்களையும் துக்கங்களையும் ஒரு கணவன் பகிர்ந்து கொள்ள முடியும்?

வாழ்வில் ஏற்படும் சவால்களை விடா முயற்சியுடனும் பொறுமையுடனும் வெற்றி கொள்ளுமாறு தூண்டுவதற்கு மனைவியால் அன்றி வேறு யாரால்தான் முடியும்?

கணவனின் இரகசியங்களை செவிமடுக்கவும் அவற்றைப் பாதுகாக்கவும் மனைவியால் அன்றி வேறு யாரால் முடியும்?

ஈமானை அதிகரிக்கச் செய்ய உதவுவதற்கு மனைவியால் அன்றி வேறு யாரால் முடியும்?

தன் மனைவியை சிறந்த முறையில் நடத்துபவர்தான் மனிதர்களில் சிறந்தவர் என நபிகளார் கூறியுள்ளார்கள். எம் வாழ்வில் அனைதது விவகாரங்களிலும் நபிகளாரின் முன்னுதாரணங்களை நாம் பின்பற்ற வேண்டுமல்லவா?

நபிகளார் தம் மனைவிமாருடன் பேசிக் கொண்டும், அவர்களுடன் சிரித்துக் கொண்டும் நேரத்தைக் கழித்துள்ளார்கள். அதுமட்டுமல்லாது, தன் மனைவிமாருடன் அவர் விளையாடியுமுள்ளார்.

ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது, நபிகளார் தனது மனைவி உம்மு ஸல்மா (ரழி) அவர்களின் ஆலோசனைக்கு செவி சாய்த்தார்கள். உம்மு ஸல்மா (ரழி) அவர்கள், நபிகளாரிடம் முதலாவதாக தாங்கள் தலையை மழித்து குர்பான் கொடுக்க வேண்டுமென்று ஆலோசனை கூறினார். நபிகளாரும் அவ்வாறே செய்தார். உம்மு ஸல்மா (ரழி) அவர்களின் இந்த முதிர்ச்சியான ஆலோசனை நடக்கவிருந்த இக்கட்டான சூழ்நிலையை இல்லாமலாக்கி, முஸ்லிம் தேசத்தைப் பாதுகாத்தது. எனவே, நாம் ஏன் இந்த முன்னுதாரணத்தை விட்டும் தூரமாகி நிற்கின்றோம்?

சிலர் நினைப்பதுபோல், குழந்தைகளை வளர்ப்பது வெறுமனே தாயின் பணி மட்டுமல்ல. இந்தப் பணியை தாய் தந்தை இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். பெற்றோர் இருவருமே குடும்பம் குறித்த கட்டாயமான பங்களிப்பை வழங்க வேண்டியவர்களே. இங்கு தாயின் பொறுப்பு அதிகமாக உள்ளபோதும், தந்தையின் பொறுப்பும் குடும்பத்தின் ஸ்திரத்தன்மையில் பாரிய முக்கியத்துவத்தை வகிக்கின்றது.

குழந்தைகளுக்கு தந்தையின் பிரசன்னம் எப்போதும் அவசியமானது. பாடசாலையில் வழங்கப்படும் வீட்டு வேலைகளில் உதவுவதற்கு, அல்குர்ஆனை மனனம் செய்து கொள்வதற்கு, இஸ்லாத்தை கற்பிப்பதற்கு என பல விடயங்களுக்கும் தந்தையின் பிரசன்னம் குழந்தைகளுக்கு அவசியமானதே. எப்போதும் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்கு தந்தை எமக்காக இருக்கிறார் என்று குழந்தைகள் உணர வேண்டும்.

அன்புள்ள கணவன்மாரே!

உங்கள் மனைவியர் உங்கள் வாழ்க்கைத் துணை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் தான் உங்கள் வாழ்வின் பாதி. உங்கள் மனைவிதான் உங்கள் வாழ்வின் அருளாக இருக்கப் போகின்றவள். அவ்வாறு அவள் அருளாக இருப்பதற்கான சந்தர்ப்பத்தை நீங்கள் வழங்கினால் மாத்திரமே, அவளால் அவ்வாறு இருக்க முடியும்.

அவளால் மாத்திரமே உங்கள் வதனத்தில் சிரிப்பைக் கொண்டு வரவும், உங்கள் கண்களிலிருந்து வடியும் வலி நிறைந்த கண்ணீரை துடைக்கவும் முடியும். நீங்கள் சந்திக்கும் சவால்களின்போது, உங்கள் குடும்பத்துக்கு ஈமானையும் சந்தோசத்தையும் உற்சாகத்தையும் பொறுமையையும் வழங்கும் திறனும் அவளிடம்தான் உள்ளது. குடும்பத்துக்கு சந்தோசத்தையும் வெற்றியையும் கொண்டு வருவதற்காக அனைத்தையும் அவள் அர்ப்பணிக்க தயாராகவே உள்ளாள்.

திருமணம் பேரானந்தமானது, அங்கு எதுவித கடினங்களும் இல்லை என்று எவராலும் சொல்ல முடியாது. ஆனால், உறவுகளின் அடிப்படை உறுதியாகவும், தமது துணைவரின் / துணைவியின் உரிமைகள் குறித்து சிறந்த பார்வையும் இருந்தால், திருமண வாழ்வில் ஏற்படும் சவால்கள் இலகுவில் இல்லாமல் போய்விடும்.

இன்று தம்பதிகள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்காக எல்லாக் கணவர்களையும் நான் இங்கு கடிந்து கொள்ளவில்லை. நான் இங்கு முஸ்லிம் சமூகத்திலுள்ள குறிப்பான ஒரு வகையினர் குறித்தே பேசியுள்ளேன். அதாவது, இந்த வகைக் கணவர்கள், கணவன் மனைவி இருவருக்கும் இடையிலான உறுதியான உறவின் மூலமே சந்தோசமான உறுதியான முஸ்லிம் குடும்பம் உருவாகுகின்றது என்ற கருத்தைப் புரியாதவர்கள்.

No comments: