Wednesday, August 20, 2014

பன்மை சமூகத்தைப் புரிந்து கொள்ளல்



அஷ்கர் தஸ்லீம்

இன்றைய உலகம் நிலத்தால் வரையறை செய்யப்பட்ட “நாடு”களாக மாறியுள்ளது. ஒவ்வொரு நாடும் வித்தியாசமான இனங்களையும் மதங்களையும் பிரதிநித்துவம் செய்கின்ற மக்கள் தொகையைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு வேறுபட்ட இனங்களும் மதங்களும் உள்ள ஒரு சூழலில் கலாசார பன்மைத்துவத்தை அவதானிக்கலாம்.

கீழைத்தேய நாடுகள் பாரம்பரியமாகவே பல்வேறு இனங்கள் செறிந்து வாழும் இயல்பைப் பெற்றுள்ளன. உதாரணமாக இந்தியாவில் பலநூறு மொழிகளைப் பேசும் இனத்தவர்கள் வாழ்வதைக் குறிப்பிடலாம். இந்தியாவின் தெற்கில் உள்ளவர்களுக்கும் கிழக்கில் உள்ளவர்களுக்கும் இடையிலான வெளிப்புற தோற்றம் சூடானியர்கள், மங்கோலியர்கள் அளவு வித்தியாசமானது.

மேற்குலகும் பல் இன இயல்பைக் கொண்டிருந்தபோதும், கைத்தொழில் புரட்சிக்குப் பின்னர் இடம்பெற்ற குடியேற்றங்கள் காரணமாக, மேற்குலக நாடுகளில் ஆசிய இனத்தவர்களினதும் வட ஆபிரிக்கர்களினதும் பிரசன்னம் அதிகமாகியது.

பிரான்ஸில் 10 சதவீத அளவில் வடஆபிரிக்க அரபு முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஜேர்மனில் துருக்கியர்கள் மிகப் பெரும் அளவில் வாழ்கின்றனர். பாகிஸ்தானிகளும், இந்தியர்களும், பங்காளிகளும் மேற்கு நாடுகளில் பெருமளவு பிரசன்னத்தைக் கொண்டுள்ளனர்.


மத்திய கிழக்கின் முக்கிய நகரங்களில் உலா வருவோர் பெரும்பாலும் வெளிநாட்டவர்களாகவே உள்ளனர். ஹிந்தி மொழி தெரியும் என்றால் எமிரேட்ஸின் டுபாயில் வாழலாம் என்று சொல்லுமளவு அங்கு ஹிந்தி பேசுவோர் உள்ளனர். ஏனைய அரபு நாடுகளிலும் தொழில் நிமித்தம் வசிக்கின்ற ஆசிய நாட்டவர்கள் அதிகம் உள்ளனர்.

எனவே, பல்வேறு இனங்களும் ஒரே நாட்டில், ஒரே நகரத்தில் வாழ்வது தவிர்க்க முடியாததொரு அம்சமாகவே உள்ளது. இந்த அடிப்படை விதியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதனைப் புரிந்து கொள்ளாது, இந்த நகரில் எமது இனத்தவர் மாத்திரமே வாழ வேண்டும், இந்த நாடு எம் இனத்துக்கு மாத்திரமே சொந்தமானது என்று கோஷமிடுவது எந்தவகையிலும் பொருத்தமற்றதொரு செயலாகும்.

ஒரு பன்மை சமூகத்தில் இனம், மதம் என்ற இரு கூறுகளையும் மிகச் சரியாக நிர்வகிப்பதன் மூலமே அச் சமூகத்தை பல்துறைகளிலும் முன்னேற்ற முடியும். இவற்றை நிர்வகிப்பதில் பிழைவிடும்போதுதான், தீர்க்க முடியாத பகைமைகளும், முடிவுக்குக் கொண்டுவர முடியாத யுத்தங்களும் உருவாகுகின்றன.



பன்மைத்துவத்தை புரிந்துகொள்ளாது, அதனை அங்கீகரிக்காது செயற்படுகின்ற போக்குகளை உலகின் பல பாகங்களிலும் நாம் காணலாம். தாமே சரியான கொள்கையில் உள்ளோம், பெரும்பான்மை இனம் என்பதால் தமக்கே அதிக பலமும் உரிமையும் உள்ளது என்ற மமதையில் செயற்படும் இவ்வாறானவர்களால், சிறுபான்மை இனங்கள் நிம்மதியிழந்து, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையைத் தொலைத்து, பதட்டத்துக்கு மத்தியில் வாழ்கின்றன.

சமகாலத்தில் பன்மைத்துவத்தை புரிந்துகொள்ளாத, அங்கீகரிக்காத போக்குகளுக்கு உதாரணமாக சியோனிஸத்தையும், ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் போக்கையும் சொல்லலாம்.

ஐரோப்பாவில் நிலவி வந்த செமிடிக் எதிர்ப்பு மத்திய காலம் முழுவதும் யூதர்களை நிம்மதி இழந்து வாழச் செய்தது. அப்போது, யூதர்களுக்கு தஞ்சம் வழங்கியது ஸ்பெயின் முஸ்லிம்களே. ஆனால், பலஸ்தீனில் சட்டவிரோதமாக யூத இனத்துக்கான தேசத்தை உருவாக்கியுள்ள சியோனிஸம், பலஸ்தீன முஸ்லிம்களின் சடலங்களின் மீது தமது இராஜ்ஜியத்தை விஸ்தரித்து வருகின்றது.

பலஸ்தீனில் அரபு முஸ்லிம்களுடன் யூதர்களும் நீண்ட காலம் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு மத்தியில் எவ்விதப் பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால், கடந்த நூற்றாண்டில் ரஷ்யா, பல்கேரியா மற்றும் ஐரோப்பாவின் பல பகுதிகளிலுமிருந்து யூதர்களைக் கொண்டு வந்து சேர்த்த சியோனிஸ இயக்கம், பாரம்பரியமாக சகவாழ்வு மேற்கொண்டு வந்த அரபுக்களின் நிலத்தில் தமது இனத்துக்கான நாட்டை சட்ட விரோதமாக உருவாக்கியது.

சியோனிஸ்டுகள் பலஸ்தீனப் பகுதி தமது இனத்துக்கு இறைவனால் வாக்களிக்கப்பட்ட பூமி என்று, யூதர்களின் மனதில் இனவாதத்தை விதைத்துள்ளது. இரு இனங்கள் சகவாழ்வு மேற்கொண்ட ஒரு நிலத்தை, தமது இனத்துக்கு இறைவனால் வாக்களிக்கப்பட்ட பூமி என்று சொல்லிக் களவாடுவது, பன்மைத்துவத்தை எதிர்ப்பதின் உச்சமாகும்.

நீண்ட நெடிய இஸ்லாமிய ஆட்சியின் கீழ் மத்திய கிழக்கு அரபுக் கிறிஸ்தவர்களும், ஏனைய இன மத சிறுபான்மையினரும் நிம்மதியாக வாழ்ந்து வந்த சூழல் இன்று மாறியுள்ளது. இஸ்லாத்தைப் போர்த்திக் கொண்டு, திடீரென முளைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம், ஈராக்கிலுள்ள கிறிஸ்தவர்களையும் யஸீட் மதத்தவர்களையும் படுகொலை செய்து வருகின்றது.

ஈராக் முஸ்லிம்களின் ஆளுகையின் கீழ் வருவதற்கு முன்னரே, அங்குள்ளவர்கள்  கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வந்தனர். அங்கிருந்த 2000 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் கலீபாக்களின் ஆட்சியில் பாதுகாப்பட்டு வந்தன. ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் அவற்றை அழித்து வருகின்றது.

மூடத்தனத்துக்கும் தீவிரவாதத்துக்கும் இனம், மதம் கிடையாது. அதனைத்தான் மேலே நோக்கிய இரு தரப்பிலும் அவதானிக்கிறோம். சியோனிஸம் பன்மைத்துவத்தை அங்கீகரிக்காது செய்த இந்தத் தவறு  பலஸ்தீனப் பகுதியில் வாழும் அரபுக்களினதும் பாரம்பரிய யூதர்களினதும் வாழ்வின் சுவையைப் பறித்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம், காட்டுமிராண்டித்தனமாக சிறுபான்மைக் கிறிஸ்தவர்களையும் யஸீட் மதத்தவர்களையும் அவர்களது பூர்வீகப் பிரதேசங்களிலிருந்து வெளியேற்றி, கொன்றொழிப்பதன் மூலம் என்ன இன்பத்தைப் பெறுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.

பன்மைத்துவத்தை அங்கீகரிக்காத இந்தப் போக்குகளின் வளர்ச்சிக்குப் பின்னால் தொழிற்படுவது சர்வதேச முதலாளித்துவமாகும். ஒவ்வொரு நாட்டிலும் பதட்டத்தை உருவாக்கி, அங்கே தமது பொருளாதார நலன்களைப் பெற்றுக் கொள்வதே முதலாளித்துவத்தின் நோக்கம். உலகில் சமாதானமும் அமைதியும் நிலவ வேண்டுமென்ற எந்த அவசியமும் முதலாளித்துவத்துக்குக் கிடையாது. தமது பைகளை பணத்தால் நிரப்பிக் கொள்வதே முதலாளித்துவத்தின் நோக்கம்.

ஆயுதங்களை வழங்கி யுத்தத்தை உருவாக்குவதும் முதலாளித்துவம்தான். அந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதாகச் சொல்லி, மக்களின் பணத்தை வரி என்ற பெயரில் சூரையாடுவதும் முதலாளித்துவம்தான்.

பன்மைத்துவத்தை அங்கீகரிக்காத மூடர்களுக்கு மத்தியில், இன, மத பன்மைத்துவத்தை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு, அதனை நிர்வகித்து வெற்றி பெற்ற நாடுகளாக மலேசியாவையும் சிங்கபூரையும் சொல்லலாம். இந்த இரு நாடுகளும் பொருளாதார ரீதியில் மிகவும் முன்னேறி வருபவை.

மலேசியாவும் சிங்கபூரும் பல் இன, பல் மத சூழலைக் கொண்ட இரு நாடுகளாகும். மலேசியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் பௌத்த, இந்து, கிறிஸ்தவ மதங்களைச் சார்ந்தோர் சிறுபான்மையினராகவும் உள்ளனர். சிங்கபூரில் சீன, மலாய், தமிழ் இனங்களைச் சார்ந்தோரும், பல வெளிநாட்டவர்களும் வாழ்கின்றனர். இங்கு பெரும்பான்மையானோர் பௌத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர். ஏனையோர் கிறிஸ்தவ, இந்து, இஸ்லாம் மதங்களைப் பின்பற்றுகின்றனர். இந்தப் பன்மைச் சமூகச் சூழலை இரு நாடுகளும் மிகச் சரியாக நிர்வகிப்பதனாலேயே, அங்கு முன்னேற்றத்தை அவதானிக்கிறோம்.

‘பன்மைத்துவத்தை அங்கீகரித்தல்’ என்ற அடிப்படை விதியை ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்வதன் மூலமே, இன மத பிரச்சினைகளற்ற ஒரு உலகை நோக்கிப் பயணிக்கலாம்.

No comments: