Monday, December 10, 2012

யூஸுப் நபியின் கதை (சிறுவர்களுக்கானது) - பகுதி 01



சிறுவர்களுக்கான பல ஆக்கங்களை எழுதியும் மொழிபெயர்த்தும் இருக்கிறேன்... அல்ஹம்துலில்லாஹ்! கொஞ்சம் கொஞ்சம் பதிவேற்றலாம் என்று உத்தேசம்...

(அரபு மூலம்: அபுல் ஹஸன் அலி ஹஸன் அந்நத்வி




யூஸுஃப் ஒரு சின்னப் பையன்.
மிகவும் அழகானவன்.
விவேகமானவனும் கூட...
அவனுக்கு பதினொரு சகோதரர்கள் இருந்தனர்.
ஆனால், யூஸுஃபின் தந்தை யஃகூப் (அலை)
ஏனைய அனைத்து சகோதரர்களையும் விட,
யூஸுஃபைத்தான் அதிகம் நேசித்தார்.





ஒரு நாள் யூஸுஃப் ஆச்சரியமானதொரு கனவு கண்டான்.
அதில் பதினொரு கோள்களும் சூரியனும் சந்திரனும் வந்தன.
அவை அனைத்தும் யூஸுஃபுக்கு ஸுஜூத் செய்தன.

சிறுவனாயிருந்த யூஸுஃப் ஆச்சரியமடைந்தான்.
இந்தக் கனவு பற்றி அவனுக்கு எதுவும் புரியவில்லை.
கோள்களும் சூரியனும் சந்திரனும் எப்படி ஒரு மனிதனுக்கு
ஸுஜூத் செய்ய முடியும்?
யூஸுஃப் தந்தையிடம் சென்றான்.
தான் கண்ட ஆச்சரியமான கனவை அப்படியே சொன்னான்.

'என் தந்தையே!
நான் பதினொரு கோள்களையும்
சூரியனையும் சந்திரனையும் கனவில் கண்டேன்.
அவை எனக்கு ஸுஜூத் செய்தன.'

யூஸுஃபின் தந்தை யஃகூப் ஒரு நபி.
இந்தக் கனவை செவிமடுத்ததும் அவர் மிகவும் சந்தோஷமடைந்தார்.

'மகன் யூஸுஃப்!
அல்லாஹ் உனக்கு அருள்பாலிக்கட்டும்...
உனக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கின்றது...
அல்லாஹ், உன் பாட்டனார்களான இஸ்ஹாக், இப்றாஹீம்
ஆகியோர் மீது அருள் புரிந்தான்.
இப்போது உனக்கும் யஃகூப் வம்சத்துக்கும் அருள்புரிகிறான்.'
மேற்கூறியவாறு அவரது உபதேசம் தொடர்ந்தது.

நபி யஃகூப் (அலை) ஒரு வயோதிபர்.
மனிதர்களின் இயல்புகளை அவர் நன்கறிந்திருந்தார்.
ஷைத்தான் மனிதர்களை எவ்வாறு மிகைக்கிறான்,
மனிதர்களோடு அவன் எவ்வாறு விளையாடுகிறான்
என்பதையெல்லாம் அவர் நன்கறிந்திருந்தார்.

எனவே, யூஸுஃபைப் பார்த்து அவர் இவ்வாறு சொன்னார்.

'மகனே!...
இந்தக் கனவை உனது சகோதரர்களுக்குச் சொல்லிவிடாதே!
அவர்கள் உன் மீது பொறாமைப்படுவார்கள்...
உனது எதிரியாக மாறி விடுவார்கள்..'

(தொடரும்...)

No comments: