Wednesday, October 22, 2014

ரணிலுக்கு வெல்ல முடியுமா?


சுனந்த தேஷப்ரிய
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலொன்று நடைபெறலாம் என்ற பேச்சு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவே முன்னிறுத்தப்படுவார். எவ்வளவுதான் சட்ட ரீதியான தர்க்கங்கள் முன்வைக்கப்பட்டாலும், அரசாங்கத்தின் பலத்துடன் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிறுத்தப்படப்போவது மஹிந்த ராஜபக்ஷதான்.

எதுவித ஜனநாயக நடவடிக்கைகளுக்கும் இடம் வைக்காமலேயே ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் குதிக்க உள்ளார். அடக்குமுறைதான் அவரின் அரசியல் மூலோபாயம். வடக்கில் தமிழ் மக்களை வெல்வதற்காக, அங்கு உலா வரும் அதேவேளை, வடக்கையும் கிழக்கையும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்குத் தடை செய்யப்பட்ட பிரதேசங்களாக உத்தியோகபூர்வமற்ற முறையில் ஆக்கியுள்ளார் ராஜபக்ஷ.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதற்கேற்ப, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் வடக்குக்கும் கிழக்குக்கும்; செல்ல முடியாது. இதன் சமூக பொருளாதா விளைவுகள் யாழ் தேவி ரயிலை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்ததையும் விட பாரதூரமானதாகும். இது ராஜபக்ஷவின் தேர்தல் திட்டத்தில் சேதம் உண்டாக்கும் என்பது திண்ணம். என்றாலும், அவரின் அடக்குமுறை அரசியல் மூலோபாயம் தேர்தல் திட்டத்தை விடவும் உயரத்திலேயே இருக்கின்றது.

Monday, October 6, 2014

உடைந்துபோகவுள்ள அரசியல் முறைமையின் குழப்பம்: முடிவு எப்போது?


කඞාවැටෙන්නට යන දේශපාලන ක්‍රමයේ අර්බුදය: අවසානය කුමක්ද?
உடைந்துபோகவுள்ள அரசியல் முறைமையின் குழப்பம்:
முடிவு எப்போது?
விக்டர் ஐவனின் மேற்குறித்த புத்தகம் 52 பக்கங்களைக் கொண்டது. அவர் ஸ்தாபித்த ராவய வெளியீட்டகத்தின் வெளியீடாக இது வெளிவந்துள்ளது.
விக்டர் ஐவன் பற்றி நான் புதிதாக ஒன்றும் சொல்லத் தேவையில்லை. நாடறிந்த பிரபலமான அரசியல் ஆய்வாளர், ஊடகவியலாளர் அவர்.
இந்த புத்தகம் பற்றிய சுருக்கமான அறிமுகத்துக்காக, புத்தகத்தின் முன்னுரையை இங்கு தமிழ்படுத்தியுள்ளேன்.
முன்னுரை
இலங்கையின் அரசியல் முறைமை பெரியதொரு குழப்ப நிலைக்கு உட்பட்டிருக்கின்றது என்று சொல்லலாம். அரசாங்கக் குழப்பங்கள் மக்களுக்கு நன்றாகவே பழகிப்போயிருந்தாலும், அரசியல் முறைமையின் குழப்பம் மக்களுக்கு பழகிப்போனதொன்றல்ல.
அரசாங்கக் குழப்பங்கள் இலகுவானது. எனவே, அவற்றைப் புரிந்து கொள்வதும் இலகுவானது. அரசியல் முறைமையின் குழப்பம் நுணுக்கமானது. எனவே, அவற்றைப் புரிந்து கொள்வது அவ்வளவு இலேசானதல்ல.

Sunday, October 5, 2014

காலிக் கோட்டையில் பிடித்த படங்கள்


காலிக் கோட்டையில் பிடித்த படங்கள்










Thursday, October 2, 2014

கணவர்களுக்கு மட்டும்!


ஸஹர் கஸ்ஸைமாஹ்

தமிழில்: அஷ்கர் தஸ்லீம்


வீட்டை சுத்தமாக்கி விட்டாயா?
இரவுச் சாப்பாடு தயாரா?
குழந்தைகளுக்கு உணவூட்டி விட்டாயா?
எனது ஆடைகளைக் கழுவி விட்டாயா?

மனைவியை மனைவியாக நோக்காது, தனது பணிப் பெண்ணாகவும், குழந்தைகளைப் பெறும் இயந்திரமாகவும் நோக்கும் கணவர்களிடமிருந்து, பெண்கள் இரவு பகலாக செவிமடுக்கும் கேள்விகள்தான் இவை.

பெண்களும் ஆண்களும் மிகுந்த வேலைப்பளுவுக்கு மத்தியிலேயே வாழ்கின்றனர். ஆனால், சில கணவர்கள் திருமணத்தில் பொதிந்துள்ள உண்மையான விடயங்களையும், தமது மனைவிமாரின் உரிமைகளையும் மதிக்காது நடக்கின்றமை மிகுந்த கவலைக்குரியதாகும்.

இவர்கள் வெற்றிகரமான குடும்பமொன்றின் அஸ்திவாரமான குழந்தைகளின் சந்தோசம், சகாக்ககள் ஆகியவற்றைப் பிடுங்கிக் கொள்கின்றனர். இவ்வாறான சமநிலையற்ற நிலைமை தொடர்கின்றபோது, குடும்பம் பிரச்சினைகளுக்குள்ளும் கவலைகளுக்குள்ளும் சிக்கிக் கொள்கின்றது.

மார்க்க பக்தியுள்ள குடும்பங்களில் கூட, தமது மனைவியரை சரியாகப் புரிந்து கொள்ளாத, திருமணம் முடித்த ஒரு ஜோடிக்கு இடையிலான உறவைப் புரிந்து கொள்ளாத கணவர்களைக் காணலாம்.

Wednesday, October 1, 2014

“ஜின்னா: சர்ச்சைகளும் சாதனைகளும் சமவிகிதத்தில் கலந்த ஒரு சரித்திர புருஷனின் விறுவிறுப்பா வாழ்க்கை”


இந்த வருடமும் (2014) கொழும்பில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். ஆர்வமுள்ள துறைகளிலுள்ள எல்லாப் புத்தகங்களை வாங்கி விட வேண்டும் என்ற ஆசைதான். ஆனாலும், யதார்த்ததம் அப்படியல்லவே. 

நான் வாங்கிய புத்தகங்களில் என்னைக் கவர்ந்த புத்தகம் என்று “ஜின்னா: சர்ச்சைகளும் சாதனைகளும் சமவிகிதத்தில் கலந்த ஒரு சரித்திர புருஷனின் விறுவிறுப்பா வாழ்க்கை”  என்ற புத்தகத்தைச் சொல்லலாம்

இந்தப் புத்தகத்தை தரண என்பவர் எழுதி, இந்தியாவின் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கிழக்குப் பதிப்பகத்தின் புத்தகங்களில் அவ்வளவு நாட்டம் இல்லாதபோதும், ஜின்னாவைப் பற்றிய நூல் என்பதால் வாங்கிக் கொண்டேன்.

மொத்தமாக 151 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தில், முகம்மத் அலி ஜின்னாவின் வாழ்க்கை வரலாறு சுவாரஷ்யமான மொழி நடையில் விறுவிறுப்பாக எழுதப்பட்டிருக்கின்றது.

Wednesday, August 20, 2014

பன்மை சமூகத்தைப் புரிந்து கொள்ளல்



அஷ்கர் தஸ்லீம்

இன்றைய உலகம் நிலத்தால் வரையறை செய்யப்பட்ட “நாடு”களாக மாறியுள்ளது. ஒவ்வொரு நாடும் வித்தியாசமான இனங்களையும் மதங்களையும் பிரதிநித்துவம் செய்கின்ற மக்கள் தொகையைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு வேறுபட்ட இனங்களும் மதங்களும் உள்ள ஒரு சூழலில் கலாசார பன்மைத்துவத்தை அவதானிக்கலாம்.

கீழைத்தேய நாடுகள் பாரம்பரியமாகவே பல்வேறு இனங்கள் செறிந்து வாழும் இயல்பைப் பெற்றுள்ளன. உதாரணமாக இந்தியாவில் பலநூறு மொழிகளைப் பேசும் இனத்தவர்கள் வாழ்வதைக் குறிப்பிடலாம். இந்தியாவின் தெற்கில் உள்ளவர்களுக்கும் கிழக்கில் உள்ளவர்களுக்கும் இடையிலான வெளிப்புற தோற்றம் சூடானியர்கள், மங்கோலியர்கள் அளவு வித்தியாசமானது.

மேற்குலகும் பல் இன இயல்பைக் கொண்டிருந்தபோதும், கைத்தொழில் புரட்சிக்குப் பின்னர் இடம்பெற்ற குடியேற்றங்கள் காரணமாக, மேற்குலக நாடுகளில் ஆசிய இனத்தவர்களினதும் வட ஆபிரிக்கர்களினதும் பிரசன்னம் அதிகமாகியது.

பிரான்ஸில் 10 சதவீத அளவில் வடஆபிரிக்க அரபு முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஜேர்மனில் துருக்கியர்கள் மிகப் பெரும் அளவில் வாழ்கின்றனர். பாகிஸ்தானிகளும், இந்தியர்களும், பங்காளிகளும் மேற்கு நாடுகளில் பெருமளவு பிரசன்னத்தைக் கொண்டுள்ளனர்.

Wednesday, August 13, 2014

லத்தீன் அமெரிக்காவில் ஒலிக்கும் காஸாவின் குரல்!









தீமா கதீப்
(தீமா கதீப் பலஸ்தீன் பூர்வீகத்தைக் கொண்ட ஒரு சிரிய நாட்டு பெண் ஊடகவியலார். இவர் அல்ஜஸீராவின் லத்தீன் அமெரிக்க அலுவலகத்தின் முன்னாள் பிரதானி. இவரது Palestine present more than ever in Latin American politics என்ற கட்டுரை இங்கு மொழிபெயர்க்கப்படுகிறது)



தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

‘ஐ.நா சபையில் பலஸ்தீன் ஒரு முழு உறுப்பு நாடாக வேண்டும். நாம் அதனை ஆதரித்துப் பேசுவோம்’ இந்தக் குரல் வெனிஸியூலா நாட்டைச் சேர்ந்தவர்களுக்கோ அல்லது வெனிஸியூலாவில் வாழ்பவர்களுக்கோ பரிச்சயமானதே. ஒலிப் பதிவு செய்யப்பட்ட இந்தக் குரல், உள்நாட்டு வானொலி நிலையமொன்றில், சிதறிய வர்த்தக விளம்பரங்களுக்கு இடையே அடிக்கடி ஒலிக்கும்.

‘எமக்கு சமாதானம் வேண்டும். பலஸ்தீன் மீதான ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது தேவை. எமக்கு இந்த உலகில் சமாதானம் வேண்டும்.’ இந்த ஒலிக் குரல் ஒரு ஹிப்-ஹொப் பாடலுக்குப் பின்னர் ஒலிக்கின்றது. இது வெனிஸியூலாவின் முன்னாள் ஜனாதிபதி ஹியுகோ சாவேஸின் குரல். பலஸ்தீன வரலாறு குறித்தும், அதன் விடுதலைக்கு அழைப்பு விடுத்தும் அவர் பேசிய நீண்ட உரைகளிலிருந்து பெறப்பட்ட சிறிய ஒலி துணுக்குகளே இவை.

இன்னுமொரு அரச சார்பு உள்நாட்டு வானொலி நிலையமொன்றின் அறிவிப்பாளர் தன் சக அறிவிப்பாளரிடம், காஸாவின் பிந்திய தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். அவர் சொல்வதைக் கேளுங்கள்: ‘காஸாவில் நடப்பவை, சில வாரங்களுக்கு முன்னர் மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பானவை அல்ல. அது ஒரு பூமியின் கதை.’

Sunday, August 10, 2014

துருக்கி ஜனாதிபதித் தேர்தல் 2014 - வெல்லப்போவது யார்?

ரஜப் தையிப் அர்தூகான்

(அஷ்கர் தஸ்லீம்)

-இக்கட்டுரை அல்ஜஸீரா இணையதள செய்தியை தழுவி எழுதப்பட்டுள்ளது.-

இன்று (10.08.2014) துருக்கியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான் முன்னணி வேட்பாளராக உள்ளார்..

துருக்கி வரலாற்றில் முதற் தடவையாக, ஜனாதிபதி ஒருவர் இம்முறை மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்படவுள்ளார். இதற்கான அரசியலமைப்பு சீர்திருத்தம் 2007 இல் கொண்டு வரப்பட்டது.

கலாசார ரீதியாக பிரிந்து போயுள்ள துருக்கியில்10 வருடங்களுக்கு மேற்பட்ட தனது ஆட்சியை அர்தூகான் தக்க வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, July 17, 2014

காலிக்கோட்டையின் சுவாரஷ்யங்கள்...

காலிக் கோட்டையின் வெளிப்புறத் தோற்றம்.                            காலிக் கோட்டையின் வெளிப்புறத் தோற்றம்.


அஷ்கர் தஸ்லீம்

'காலிக் கோட்டையில் வாழும் முஸ்லிம்களில் 99 வீதமானோர் தொழுகின்றனர். எமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு முன்னமே, அவர்களுக்கு நாம் இஸ்லாத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறோம். எனவே, எமது அத்திவாரம் உறுதியாக உள்ளது' என்கிறார் காலிக்கோட்டையைச் சேர்ந்த ஷாஃபி ஹாஜியார்.

காலிக் கோட்டை எனும்போது, அதன் சுற்றிலும் அமைந்திருக்கின்ற பாரிய கருங்கல் சுவர்களும், கோட்டையினுள்ளே அமைந்திருக்கின்ற பள்ளிவாயலும்தான் எம் நினைவுக்கு வருகின்றன. தென் மாகாணத்துக்கு சுற்றுலா செல்வோர், தரிசிப்பதற்கு மறந்தேனும் மறக்காத ஓர் இடமாகவே இது உள்ளது. காலிக் கோட்டை குறித்தும் அதில் வாழும் முஸ்லிம்கள் குறித்தும் அறிந்து கொள்வதற்காக நானும் காலிக் கோட்டைக்குச் சென்றேன்.

இலங்கையை ஆக்கிரமித்த போர்த்துக்கேயர் 1588 இல் காலிக் கோட்டையை நிர்மாணித்தனர். பின்னர், 17 ஆம் நூற்றாண்டில், இலங்கையை ஆக்கிரமித்த ஒல்லாந்தர் அதனைப் புணர்நிர்மாணம் செய்தனர். 130 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோட்டையினுள், பல புராதன வரலாற்றுச் சின்னங்கள் இருக்கின்றன.

Saturday, July 12, 2014

கிண்ணியா - மங்கோலியா - ஆபிரிக்கா


கடந்த மே மாதம் (2014) இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள கிண்ணியாவுக்கு சென்றிருந்தேன். கிண்ணியா முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு பிரதேசம். அங்கிருந்தபோது நான் கிண்ணியா மக்கள் குறித்து முகநூலில் இட்ட ஒரு பதிவையும், அதற்கு இடப்பட்ட பின்னூட்டங்களில் தெரிந்தெடுத்த சிலவற்றையும் வலைத்தளத்திலும் பதிகிறேன். இங்கு பதிவேற்றியுள்ள படங்கள் மங்கோலிய மலாய, ஆபிரிக்க முகசாயலைக் காட்டுவதற்கான படங்களேயன்றி, கிண்ணியாவைச் சேர்ந்தவர்களுடையதல்ல.


தற்போது நான் கிண்ணியாவில் உள்ளேன். இதற்கு முதல் 5, 6 தடவைகள் கிண்ணியாவுக்கு வந்தும் உள்ளேன்.


நாம் தரிசிக்கும் ஊர்களின் வரலாறு, பண்பாடு, கலாசாரம் மற்றும் அந்த ஊர் பற்றிய இன்னோரன்ன விடயங்களையும் கேட்டறிந்து கொள்வது சுவாரஷ்யமானது.


நான் கிண்ணியாவுக்கு வரும்போதெல்லாம், இங்குள்ளவர்களின் முக சாயல்களை அதிக ஆர்வத்துடன் அவதானிப்பேன்

சிறிய கண்களையுடைய, சிறியதாக வளர்ந்த தாடியுடைய மஞ்சள் நிற மங்கோலிய சாயலுடைய முகங்களை இங்கு அதிகம் காண்கிறேன்.

அத்தோடு, தடித்த உதடுகளையுடைய, சுருட்டை முடிகொண்ட ஆபிரிக்க சாயலையுடைய முகங்களையும் இங்கு காண்கிறேன்.

Friday, July 11, 2014

அல்பேனியாவிலும் கொஸோவாவிலும் இனி ஒரே கல்வித் திட்டம்!

லின்டிடா நிகொல்லா

ஐரோப்பாவின் இரு முஸ்லிம் நாடுகளான அல்பேனியாவும் கொஸோவாவும் உத்தியோகபூர்வமாக ஒரே கல்வித் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான உடன்டிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இனி, அல்பேனியாவிலும் கொஸோவாவிலுமுள்ள பாடசாலைகள் ஒரே பாடத்திட்டத்தைக் கொண்டியங்கும்.

இரு நாடுகளினதும் முன் பல்கலைக்கழக கல்வி குறித்த உடன்படிக்கையில் அல்பேனிய கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் லின்டிடா நிகொல்லாவும் கொஸோவா கல்வி அமைச்சர் ராமி புஜாவும் கைச்சாத்திட்டுள்ளனர்.

2023 இல் உலகில் சிறந்த 10 நாடுகளுக்குள் துருக்கி இருக்க வேண்டும் என்பதுவே துருக்கியின் திட்டம்


நேர்காணல்ஸாரா அலி
தமிழில்அஷ்கர் தஸ்லீம்


ரஜப் தைய்யிப் அர்தூகான்
அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான முஹம்மத் ஸாஹித் குல் துருக்கியைச் சேர்ந்தவர். அல்முஜ்தமஃ சஞ்சிகை இவருடன் நடத்திய நேர்காணலில், துருக்கி பிரதமர் Hதூகானின் தேர்தல் திட்டமிடல்கள், அரபுலக விவகாரங்கள் தொடர்பாக அவரது நிலைப்பாடுகள், அயல் நாடுகளோடும் உலக நாடுகளோடும் எதுவித பிரச்சினைகளையூம் கொண்டிராத அவரது 'பூச்சிய பிரச்சினை" கொள்கை ஆகியன குறித்து கலந்துரையாடப்படுள்ளது. நண்பர்களோடு இந்த நேர்காணலைப் பகிர்ந்து கொள்கிறேன்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அர்தூகான் பெற்ற மாபெரும் வெற்றி, அவரது ஜனாபிமானம் அதிகரித்திருக்கின்றது என்பதற்கான சான்றா?


கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி (AKP) வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், தமக்கு சமூக சொகுசையூம், பொருளாதார அபிவிருத்தியையும், அரசியல் பாதுகாப்பையும், வெற்றியையும் பெற்றுத் தந்த தலைமையுடன் தாம் இருப்பதை மக்கள் நிரூபித்திருக்கின்றனர்.

47 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளமையானது, துருக்கிய மக்களின் நம்பிக்கையை ரஜப் தையிப் அர்தூகான் பெற்றுள்ளார் என்பதற்கான சான்றாகும். அத்தோடு, மக்கள் எதிர்க்கட்சிகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கான ஆதாரமுமாகும்.

Wednesday, February 12, 2014

இமாம் பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி பற்றிய அறிமுகக் குறிப்பு

 (அஷ்கர் தஸ்லீம்)

இஸ்லாமிய வரலாற்றில் நீண்ட நெடிய காலம் முஸ்லிம் சமூகத்துக்குத் தலைமைத்துவத்தை வழங்கி வந்த இஸ்லாமிய கிலாபத் 1924 இல் இரத்துச் செய்யப்பட்டது. அப்போது துருக்கிய உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கீழிலிருந்த நாடுகள் துண்டு துண்டாகின. துருக்கி ஒரு மதச்சார்பற்ற நாடாக மாற்றப்பட்டது. துருக்கியர்களை விட்டும் இஸ்லாத்தை தூரமாக்கி விடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கிலாபத்துக்குப் பிந்திய மதச்சார்பற்ற ஆட்சியாளர் முஸ்தபா கமாலினால் மேற்கொள்ளப்பட்டன.

துருக்கியர்களை மதச்சார்பற்றோராக்குவதற்கான இந்த முயற்சிகளை எதிர்த்து செயற்பட்டவர்களுள் இமாம் பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி முதன்மையானவர். 1876 ஆம் ஆண்டு துருக்கியின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள 'நூர்ஸ்' என்ற கிராமத்தில் ஸஈத் நூர்ஸி பிறந்தார். இவரது தந்தை மிர்ஸா ஒரு சூபியாவார். ஸஈத் நூர்ஸி தன் இள வயதிலேயே மார்க்க மற்றும் ஏனைய துறைகளில் சிறந்த கல்வியைப் பெற்றுக் கொண்டார்.

Friday, February 7, 2014

இலங்கையில் வாழும் ஆபிரிக்கர்களுடன் ஒரு நாள்

ஜோசப் எலியஸ்
(அஷ்கர் தஸ்லீம்)

எமது மூதாதையர் மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்தவர்கள். மொசாம்பிக் நாட்டுக்கு வந்த போர்த்துக்கேயர் எமது மூதாதையரை அடிமைகளாகப் பிடித்துக் கொண்டனர். எமது மூதாதையருக்கு போர்த்துக்கேய மொழியையும் கிறிஸ்தவ மதத்தையும் அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள். பின்னர்> இலங்கையை கைப்பற்றியதும் எமது மூதாதையரை அவர்களது காவலர்களாக இங்கே கொண்டு வந்தார்கள் என்று தமது இனத்தின் ஆபிரிக்கப் பூர்வீக வரலாற்றை என்னோடு பகிர்ந்து கொள்கிறார் புத்தளத்தில் வசிக்கும் ஆபிரிக்க கஃபீர் இனத்தைச் சேர்ந்த ஜோசப் எலியஸ்.

நான் எப்போதும் போல் அன்றும் பிபிசி இணையதளத்தில் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது அதிலிருந்த ஒரு செய்தி என்னை ஈர்த்தெடுத்தது. அந்த செய்தி இலங்கையில் வாழ்ந்து வரும் ஆபிரிக்க பூர்வீகத்தைக் கொண்ட கஃபீர் இன மக்கள் பற்றிப் பேசியது.

இலங்கையில் ஆபிரிக்கர்களா? அதுவும் நான்கு நூற்றாண்டுகளுக்கு மேல் இங்கு வாழ்கிறார்களா? எனக்கு இந்த செய்தி சற்று ஆச்சரியமாகவே இருந்தது. இலங்கையில் வாழும் ஆபிரிக்க கஃபீர் இனத்தவர்களை சந்திக்க வேண்டும் என்ற உற்சாகத்தை இந்த செய்தி எனக்குத் தந்தது. எனவே> புத்தளத்தைச் சேர்ந்த நண்பன் ஆஸாத்துடன் அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றேன்.

Thursday, February 6, 2014

இலங்கையின் தேசிய கீதம் - சில வரலாற்றுக் குறிப்புக்கள்


ஆனந்த சமரகோன்
ஒரு நாட்டின் தேசிய உணர்வை பிரதிபலிக்கும் வகையிலேயே தேசிய கீதங்கள் அமைகின்றன. தேசிய கீதம் என்பது ஒரு நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

இலங்கையின் தேசிய கீதம் பற்றித் தேடிப்பார்க்கையில், இலங்கையில் பல தேசிய கீதங்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளதை அவதானிக்கலாம்.

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி நிலவிய காலத்தில், பிரித்தானியாவுக்காகப் பாடப்பட்ட ஒரு பாடலும் தேசிய கீதமாகப் பாடப்பட்டு வந்துள்ளது. 1745 இல் இலங்கை பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பாடலும் தேசிய கீதமாகப் பாடப்பட்டு வந்துள்ளது.

Friday, January 24, 2014

ரஷ்ய தூதரகத்துக்காக காணிகளை இழக்கப்போகும் முஸ்லிம்கள் - பள்ளிவாசலும் அகற்றப்படலாம்!




ரஷ்ய தூதரகம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் காட்சி

(அஷ்கர் தஸ்லீம்)

 7 பௌத்தாலோக மாவத்தை அஷ்ரப் மாவத்தையிலுள்ள மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலையும் அதனைச் சூழ உள்ள வீடுகளையும் அகற்றுமாறு அரசாங்கம் விடுத்துள்ள பணிப்புரை பிரதேச வாசிகளை ஆழ்ந்த கவலைக்குள்ளாக்கியுள்ளது.
அப்புறப்படுத்துமாறு வேண்டப்பட்டிருக்கும் மஸ்ஜதுன் நூர்




அஷ்ரப் மாவத்தைக்கு அருகாமையில் ரஷ்ய நாட்டின் தூதரகம் அமையவுள்ளது. எனவே, அதனை அண்மித்துள்ள பகுதியில் அமைந்துள்ள இந்தப் பள்ளிவாசலையும் அதனைச் சூழவுள்ளவர்களையும் அப்புறப்படுத்துமாறு ரஷ்ய தூதரகம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.