அஷ்கர் தஸ்லீம்
'காலிக் கோட்டையில் வாழும் முஸ்லிம்களில் 99 வீதமானோர் தொழுகின்றனர். எமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு முன்னமே, அவர்களுக்கு நாம் இஸ்லாத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறோம். எனவே, எமது அத்திவாரம் உறுதியாக உள்ளது' என்கிறார் காலிக்கோட்டையைச் சேர்ந்த ஷாஃபி ஹாஜியார்.
காலிக் கோட்டை எனும்போது, அதன் சுற்றிலும் அமைந்திருக்கின்ற பாரிய கருங்கல் சுவர்களும், கோட்டையினுள்ளே அமைந்திருக்கின்ற பள்ளிவாயலும்தான் எம் நினைவுக்கு வருகின்றன. தென் மாகாணத்துக்கு சுற்றுலா செல்வோர், தரிசிப்பதற்கு மறந்தேனும் மறக்காத ஓர் இடமாகவே இது உள்ளது. காலிக் கோட்டை குறித்தும் அதில் வாழும் முஸ்லிம்கள் குறித்தும் அறிந்து கொள்வதற்காக நானும் காலிக் கோட்டைக்குச் சென்றேன்.
இலங்கையை ஆக்கிரமித்த போர்த்துக்கேயர் 1588 இல் காலிக் கோட்டையை நிர்மாணித்தனர். பின்னர், 17 ஆம் நூற்றாண்டில், இலங்கையை ஆக்கிரமித்த ஒல்லாந்தர் அதனைப் புணர்நிர்மாணம் செய்தனர். 130 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோட்டையினுள், பல புராதன வரலாற்றுச் சின்னங்கள் இருக்கின்றன.
காலிக்கோட்டையின் உள்ளே சுற்றி வரும்போது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை காணலாம். அவர்கள், கோட்டையினுள் இருக்கின்ற, வரலாற்றுச் சிறப்புமிக்க போர்த்துக்கேய, ஒல்லாந்தர் காலத்து கட்டிடங்களைக் காணவும், கோட்டையைச் சூழ உள்ள கடலை இரசிக்கவும் அங்கே வருகின்றனர்.
காலிக் கோட்டையினுள் இருக்கின்ற கடல்சார் தொல்பொருள் நூதனசாலை முக்கியமான ஒரு நூதனசாலையாகும். இலங்கையில் இவ்வகையைச் சார்ந்த ஒரேயொரு நூதனசாலை இது மட்டும்தான். இது அமைந்திருக்கின்ற கட்டிடம் 1670 இல் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடடம் ஆசியாவிலே மிகப் பழைமைவாய்ந்த மிக நீளமான கட்டிடமாகும். இக்கட்டிடடம் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் ஒல்லாந்தரின் களஞ்சியமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கடல்சார் தொல்பொருள் நூதனசாலை
இந்த நூதனசாலையில் அரபு கடல் பிரயாணிகள் பயன்படுத்திய கப்பல்களின் நங்கூரங்கள், இலங்கைக் கடல் பரப்பில் மூழ்கிப்போன கப்பல்களின் சிதலங்கள் என பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நூதனசாலையிலுள்ள பொருட்களைப் பார்வையிட்டால், இலங்கை பண்டைய சீன, அரபு நாடுகளுடன் கொண்டிருந்த கலாசார, பொருளாதார உறவுகளை நன்கு புரிந்து கொள்ளலாம்.
இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அரபுக் கப்பலொன்றின் நங்கூரம்
காலிக் கோட்டையினுள் சிங்களவர், முஸ்லிம்கள், சிறிதளவு தமிழர்கள் என மூவினத்தவர்களும் வாழ்கின்றனர். அங்கே, ஜாமிஉல் ஹைராத் ஜும்ஆ பள்ளிவாசலும், ஷாதுலிய்யா தரீக்காவின் இரண்டு ஸாவியாக்களும் அமைந்திருக்கின்றன.
இலங்கையின் பிரபலம் வாய்ந்த பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா அரபுக் கல்லூரியும் காலிக் கோட்டையினுள்தான் அமைந்திருக்கின்றது. பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்காக, அதன் அதிபர் மௌலவி ஏ.டபிள்யூ.எம். ரிஸ்வி அவர்களை நாம் சந்தித்தேன். அவர் சொல்வதைக் கேளுங்கள்:
'காலிக் கோட்டையினுள் இருக்கின்ற பள்ளிவாசலில் ஸெய்யித் அஹ்மத் ஆலிம் என்றொருவர் இருந்திருக்கிறார். அவரை எல்லோரும் கொழும்பு ஆலிம் என்று அழைப்பார்களாம். அக்காலத்தில் கல்வியின் முக்கியத்துவம் பற்றி அவர் ஒரு உரையை ஆற்றியுள்ளார்.
இந்த உரையால் தாக்கமுற்ற ஸேர். மாகான் மாகார் அவர்களின் தாயார், இஸ்லாமியக் கல்விக்காக ஒரு கல்லூரியை ஸ்தாபிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அந்த எண்ணத்தின் காரணமாக, 1892 ஆம் ஆண்டு ஸேர். மாகான் மாகார் அவர்களின் முயற்சியால் இந்த மத்ரஸா ஸ்தாபிக்கப்பட்டது.'
பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா அரபுக் கல்லூரி
பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா அரபுக் கல்லூரி குறித்த அறிமுகத்தை அவ்வாறு தொடர்ந்த அவர், பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யாவின் அதிபர்களாகவும் பணிப்பாளர்களாவும் பணிபுரிந்தவர்கள் பற்றியும் அவர்களது காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் கதைத்தார்.
122 வருடங்களையும் தாண்டி, ஆலிம்களை உருவாக்கி வருகின்ற இந்த மத்ரஸாவை, அதனை ஸ்தாபித்தது முதல் இன்றுவரை, மாகான் மாகார் குடும்பமே பரிபாலித்து வருகின்றது. 1992 ஆம் ஆண்டு பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யாவின் நூற்றாண்டு விழாவையொட்டி தபால் திணைக்களத்தினால் முத்திரையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை முஸ்லிம்களின் மத்தியில் பிரபலமான அப்துஸ்ஸமத் ஆலிம், அப்துல் லதீப் ஆலிம், மஸ்ஊத் ஆலிம் ஆகியோர் இந்த மத்ரஸாவில் தான் கல்வி பெற்றிருக்கிறார்கள். மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஃமூன் அப்துல் கையூமும், இங்கு சிறிது காலம் கல்வி கற்றிருக்கிறாராம். ஆனால், அதனை நிரூபிப்பதற்கான எழுத்து ரீதியான எந்தவொரு ஆதாரமும் அங்கு இருக்கவில்லை. எனவே, ஆவணப்படுத்தலில் எமது சமூகம் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யாவின் அதிபர்.
ஷாஃபி ஹாஜியாரின் அன்னளவான கணிப்பீட்டின்படி சுமார் 40, 50 வருடங்களுக்கு முன்னர், கோட்டையினுள் 95 வீதமானோர் முஸ்லிம்களே. காலப்போக்கில் முஸ்லிம்கள் தமது காணிகளை வெளிநாட்டவர்களுக்கும் உள்நாட்டவர்களுக்கும் விற்பனை செய்ததனால், தற்போது காலிக் கோட்டையின் முஸ்லிம் சனத்தொகை 65 வீதமளவு குறைந்திருப்பதாகவும் சொல்கிறார் அவர்.
காலிக் கோட்டையினுள் இருக்கின்ற முஸ்லிம்களும் சிங்களவர்களும் தமது காணிகளை வெளிநாட்டவர்களுக்கும் வசதிவாய்ந்த உள்நாட்டவர்களுக்கும் விற்பனை செய்து வருகின்றனர். கோட்டை வாசிகளிடமிருந்து காணிகளை விலைக்கு வாங்கும், வெளிநாட்டவர்கள், அவற்றில் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளுக்கான ஹோட்டல்களை நடத்தி வருகின்றனர்.
காலியின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கோட்டையினுள்ளே காணிகள் மிகவும் கூடிய விலைக்கு விற்கப்படுகின்றன. வெளிநாட்டவர்கள் பன்மடங்கு விலை கொடுத்து அவற்றை வாங்குகின்றனர்.
'ஒரு வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்வோர், தமது வீட்டை வெளிநாட்டவர்களுக்கு விற்பதன் மூலம், கொழும்பிலோ காலியிலோ தனித்தனியாக வாழ்வதற்கான வீடுகளை வாங்குகின்ற அளவு பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.' என்கிறார் ஷாஃபி ஹாஜியார்.
தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொருவருக்கும் இதுவொரு நிவாரணமாக அமைகின்றபோதும், சமூகம் என்ற வகையில், காலிக் கோட்டையில் முஸ்லிம்களின் வீதசார வீழ்ச்சியையே இது கொண்டு வருகின்றது.
காலிக்கோட்டைக்கு அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதனால், ஏதும் ஒழுக்க சீர்கேடுகள் ஏற்படுகிறதா என்றும் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் பதிலளிப்பதைக் கேளுங்கள்:
'சுற்றுலாப் பயணிகளாக வருபவர்களிடம் நாம் எமது இஸ்லாத்தைப் பற்றிச் சொல்கிறோம். நாம் ஒருவரைப் பார்த்துப் புன்னகைப்பதும் ஒரு சிறந்த விடயம்தான். எம்மிடம் பல மொழிகளிலும் இஸ்லாமியப் புத்தகங்கள் இருக்கின்றன.
எமது பள்ளிவாசலினுள் ஒரு சுற்றுலாப் பயணி நுழைந்தால், அவர் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கான சிறந்ததொரு ஆவணமான முஹம்மத (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரையை அங்கே, நாம் ஆங்கிலத்தில் தொங்க விட்டுள்ளோம்.
சுனாமிக்கு இரு மாதங்களுக்கு முன்னர் டொக்டர். போல் ரிசர் என்றொருவர் என்னோடு அறிமுகமாகியிருந்தார். என் வீட்டுக்கு வந்த அவரிடம் நான், றால றந உhழழளந ஐளடயஅ? என்றொரு புத்தகத்தை வாசிக்குமாறு கொடுத்தேன்.
அதனை வாசித்த அவர், இந்த புத்தகத்தின்படி நான் ஏற்கனவே, முஸ்லிமாகத்தானே இருக்கின்றேன் என்றார். அப்போது நான், கலிமா சொல்வது பற்றி அவரிடம் குறிப்பிட்டேன். அவர் கலிமா மொழிந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். தற்போது அவர் அவரது தாய்நாட்டில் இஸ்லாத்தை மிகுந்த ஈடுபாட்டோடு பின்பற்றி வருகிறார்.
முஸ்லிம்கள் தமது வீடுகளை, ஹோட்டல்களாகப் பயன்படுத்துவதற்காக வெளிநாட்டவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். அத்தோடு, அங்கே மதுபானம், பன்றி இறைச்சி என்பன பரிமாறப்படக்கூடாது என்று நிபந்தனையும் போட்டிருக்கிறார்கள்.'
தூரத்தே தெரிவது காலிக் கோட்டையிலுள்ள கலங்கரை விளக்கம் (Lighthouse)
காலிக் கோட்டை அழகானதொரு பிரதேசம். அங்கே, அனைத்து இன மக்களும் சகவாழ்வு மேற்கொள்கின்றனர். காலை முதல் மாலை வரை காலிக் கோட்டை சுற்றி, ரசித்து, பல விடயங்களை அறிந்து கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment