இந்த வருடமும் (2014) கொழும்பில் நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். ஆர்வமுள்ள துறைகளிலுள்ள எல்லாப் புத்தகங்களை வாங்கி விட வேண்டும் என்ற ஆசைதான். ஆனாலும், யதார்த்ததம் அப்படியல்லவே.
நான் வாங்கிய புத்தகங்களில் என்னைக் கவர்ந்த புத்தகம் என்று “ஜின்னா: சர்ச்சைகளும் சாதனைகளும் சமவிகிதத்தில் கலந்த ஒரு சரித்திர புருஷனின் விறுவிறுப்பா வாழ்க்கை” என்ற புத்தகத்தைச் சொல்லலாம்
இந்தப் புத்தகத்தை தரண என்பவர் எழுதி, இந்தியாவின் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கிழக்குப் பதிப்பகத்தின் புத்தகங்களில் அவ்வளவு நாட்டம் இல்லாதபோதும், ஜின்னாவைப் பற்றிய நூல் என்பதால் வாங்கிக் கொண்டேன்.
மொத்தமாக 151 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தில், முகம்மத் அலி ஜின்னாவின் வாழ்க்கை வரலாறு சுவாரஷ்யமான மொழி நடையில் விறுவிறுப்பாக எழுதப்பட்டிருக்கின்றது.
முகம்மத் அலி ஜின்னாவின் பெற்றோர் இந்தியாவின் குஜராத் பகுதியைச் சேர்ந்தவர்கள். விவசாயிகள் வாழ்ந்து வந்த கிராமமொன்றில் ஜின்னாவின் தந்தையின் குடும்பம் வியாபாரக் குடும்பமாக இருந்து வந்துள்ளது.
ஜின்னாவின் தந்தை ஜெனாபாய் பெரிய வியாபாரியாக வரவேண்டுமென்ற எண்ணத்தில் கராச்சியில் குடியேறியுள்ளார். அங்குதான், ஜின்னா பிறந்துள்ளார்.
ஜின்னாவும் எடிசனைப்போல ஆரம்பத்தில் கல்வியில் அக்கறையே காட்டவில்லை. பின்னர், இது சரிப்பட்டு வராது என்று எண்ணிய ஜெனாபாய், தனது நண்பரொருவரின் ஆலோசனையின் பேரில், வியாபார உத்திகளைக் கற்று வருவதற்காக, ஜின்னாவை லண்டன் அனுப்பினார்.
லண்டன் வாழ்க்கைதான் ஜின்னாவைத் திருப்பிப்போட்டது எனலாம். லண்டனில் வைத்து சட்டத்துறையில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அங்கு சட்டம் பயின்று வழக்கறிஞராகினார்.
பின்னர், இந்தியா வந்து பம்பாயில் (தற்போதைய) மும்பாயில் வழக்கறிஞராகப் பணி புரிந்தார். இந்தியாவில் அப்போது காங்கிரஸ் இந்திய சுதந்திரத்துக்காக செயற்பட்டு வந்தது. அதற்கு சமாந்திரமாக முஸ்லிம் லீக் அமைப்பும் செயற்பட்டு வந்தது.
காங்கிரஸில் இணைந்து கொண்ட ஜின்னா, இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக உழைத்து வந்தார். பின்னர், ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, முஸ்லிம் லீக்கில் இணைந்து பாகிஸ்தான் என்ற தேசத்தை உருவாக்கினார்.
ஜின்னாவின் இந்த சுருக்க வரலாற்றை மிகவும் அழகாக இந்தப் புத்தகத்தில் வாசிக்கலாம். ஜின்னாவின் ஆளுமைப் பண்புகள் எவ்வாறிருந்தன என்பது இந்தப் புத்தகம் எங்கும் இழையோடியுள்ளது.
ஜின்னாவின் துணிவு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்பனதான் அவரை ஒரு தேசத்தை உருவாக்கும் அளவுக்கு இட்டுச் சென்றுள்ளன என்பதை இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது புரிந்து கொள்ளலாம்.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்து சென்றிருக்கக்கூடாது என்ற கருத்தை ஆழமாக நம்பி வந்தவன் நான். தற்போதைய இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளினதும் சனத்தொகையைக் கூட்டிப் பார்த்து வந்த நப்பாசையாகக் கூட இந்த “ஆழ்ந்த” (?) நம்பிக்கையைச் சொல்லலாம்.
இருப்பினும், ஜின்னா என்ற மகத்தான ஆளுமையை எம்மால் ஒருபோதும் நினைவுகூராமலிருக்க முடியாது.
விறுவிறுப்பான புத்தகம் என்பதால் மொத்தப் புத்தககத்தையும் பஸ்ஸில் வைத்தே வாசித்து முடித்துவிட்டேன். நண்பர்களும் வாசிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்கின்றேன்.
புத்தகம் பற்றிய தகவல்கள்
பெயர்- ஜின்னா- சர்ச்சைகளும் சாதனைகளும் சமவிகிதத்தில் கலந்த ஒரு சரித்திர புருஷனின் விறுவிறுப்பான வாழ்க்கை
ஆசிரியர் - தரணி
பக்கங்கள் - 151
வெளியீடு - கிழக்குப் பதிப்பகம், இந்தியா.
1 comment:
I want the book shops name that you bought the book
Post a Comment