தீமா கதீப் |
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்
‘ஐ.நா சபையில் பலஸ்தீன் ஒரு முழு உறுப்பு நாடாக வேண்டும். நாம் அதனை ஆதரித்துப் பேசுவோம்’ இந்தக் குரல் வெனிஸியூலா நாட்டைச் சேர்ந்தவர்களுக்கோ அல்லது வெனிஸியூலாவில் வாழ்பவர்களுக்கோ பரிச்சயமானதே. ஒலிப் பதிவு செய்யப்பட்ட இந்தக் குரல், உள்நாட்டு வானொலி நிலையமொன்றில், சிதறிய வர்த்தக விளம்பரங்களுக்கு இடையே அடிக்கடி ஒலிக்கும்.
‘எமக்கு சமாதானம் வேண்டும். பலஸ்தீன் மீதான ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது தேவை. எமக்கு இந்த உலகில் சமாதானம் வேண்டும்.’ இந்த ஒலிக் குரல் ஒரு ஹிப்-ஹொப் பாடலுக்குப் பின்னர் ஒலிக்கின்றது. இது வெனிஸியூலாவின் முன்னாள் ஜனாதிபதி ஹியுகோ சாவேஸின் குரல். பலஸ்தீன வரலாறு குறித்தும், அதன் விடுதலைக்கு அழைப்பு விடுத்தும் அவர் பேசிய நீண்ட உரைகளிலிருந்து பெறப்பட்ட சிறிய ஒலி துணுக்குகளே இவை.
இன்னுமொரு அரச சார்பு உள்நாட்டு வானொலி நிலையமொன்றின் அறிவிப்பாளர் தன் சக அறிவிப்பாளரிடம், காஸாவின் பிந்திய தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். அவர் சொல்வதைக் கேளுங்கள்: ‘காஸாவில் நடப்பவை, சில வாரங்களுக்கு முன்னர் மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பானவை அல்ல. அது ஒரு பூமியின் கதை.’
அறிவிப்பாளர் தொடர்ந்தும் பேசுகிறார்: ‘இஸ்ரேல் எந்தவொரு உரிமையும் இல்லாமல் ஆக்கிரமிக்கின்றது. இதன் மூலம் பலஸ்தீனர்கின் உரிமையை அது மறுக்கின்றது. எமது வெனிஸியூலா நிலத்தால் தொடர்புபடாத, இரண்டு சிறிய நிலங்காக சுருக்கப்பட்டு, எமது நாட்டின் ஏனைய அனைத்துப் பகுதிகளும் புதியதொரு நாட்டினால் ஆக்கிரமிக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்! இதுதான் இன்று காஸாவினதும் மேற்குக் கரையினதும் நிலை. நம்ப முடியாதுள்ளது அல்லவா? அப்படித்தானே?’
வெனிஸியூலாவின் தலைநகர் கராகாஸிலுள்ள வெனிஸோலானோ சதுக்கத்தில் ஒரு அரபு வம்சாவளிப் பெண் காஸாவுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார். அப்பெண்ணைக் கடந்து செல்லும் ஒரு வழிப்போக்கர், அங்கே உள்ள பதாதைகளுடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக, அங்கே தரிக்கிறார். அந்த பதாதைகளில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கின்றன. ‘இஸ்ரேல் இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் ஒரு குற்றவாளி’, ‘பலஸ்தீனை விடுதலை செய்’, ‘இஸ்ரேல் முதற்தரப் பயங்கரவாதி’
அங்கிருந்து சற்றே தூரத்தில், வெனிஸியூலா வெளிவிவகார அமைச்சின் தலைமையகம் அமைந்துள்ளது. அந்தத் தலைமையகம் Casa Amarilla என்று அழைக்கப்படுகின்றது. இந்தத் தலைமையகம்தான் காஸாவுக்கான நன்கொடைகள் சேர்க்கப்படுகின்ற மத்திய நிலையம். இங்கு உணவு, மருந்துப் பொருட்கள், ஆடைகள்… சேர்க்கப்படுகின்றன. காஸா மீதான இஸ்ரேலின் தற்போதைய தாக்குதல்கள் ஆரம்பித்ததன் பின்னர், வெனிஸியூலாவின் மனிதாபிமான உதவிகளைச் சுமந்து செல்லும் இரண்டாவது தொகுதிக்கே இந்த உதவிகள் சேகரிக்கப்படுகின்றன. இவை கராகஸிலுள்ள பலஸ்தீன தூதுவராலயத்தின் ஒருங்கிணைப்புடன் ஆகாய மற்றும் கடல் மார்க்கமாக காஸாவுக்கு அனுப்பப்படும்.
இப்றாஹீம் 23 வயதுடைய பலஸ்தீன வம்சாவளி வெனிஸியூலன். அவர் நன்கொடைப் பொருட்களின் பட்டியை மீள்பரிசீலனை செய்து கொண்டிருக்கிறார். மெத்தைகள், தலையனைகள், ஆடைகள்… என்று நீள்கிறது பட்டியல். சில அரபு வம்சாவளியினரையும் விட, வெனிஸியூலா நாட்டவர் காஸா மீது அதிக அக்கறை கொண்டுள்ளமையையிட்டு இவர் ஆச்சரியப்படுகிறார். ‘அவர்களைப் பாருங்கள்! தமது பைகளை பணத்தால் நிரப்பிக் கொள்வதுதான் அவர்களது தேவை என்று அவர்கள் சொல்கின்றனர்.’ அப்போது பாதையைக் கடந்து செல்லும் ஒருவர், ‘உதவி தேவையுடைய ஏனைய நாடுகளுக்கு உதவுவது பற்றி நான் கணக்கிலெடுப்பதில்லை. ஆனால், பால், சீனி போன்ற எமக்குத் தேவையான பொருட்களே இங்கு இல்லாதபோது, நாம் எவ்வாறு ஏனையோரு கொடுக்க முடியும்? எமது பொருளாதார நிலை வரண்டு போயுள்ளது.’ என்கிறார். இன்னுமொரு இளம் வெனிஸியூலா பெண் ஒருவர், ‘உண்மை. ஆனால், நீங்க அதிர்ஷ்டசாலியாகவும், பால்மாவை பெறுகிறவராகவும் இருக்கும்போது, அவற்றை ஏன் காஸா மக்களோடு பகிர்ந்து கொள்ள முடியாது?’ என்று வினவுகிறார்.
கராகஸின் கிழக்குப் பகுதியிலுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் என்றே பலரும் எதிர்பார்ப்பர். இவர்கள் சாவேஸுக்கு எதிரானனவர்கள் என்று அறியப்படுகின்றனர். சில எதிர்க்கட்சிப் புள்ளிகள் இஸ்ரேலுடன் தொடர்புகளைக் கொண்டிருப்பதால், இவர்கள் வித்தியாசமான நிலைப்பாட்டில் இருப்பர் என்றே பலரும் நினைக்கின்றனர். உண்மையில், பெரும்பாலான நேரங்களில் அரசாங்கம் சொல்வதை எதிர்ப்பதிலேயே எதிர்த்தரப்பு தமது நிலைப்பாட்டை உருவாக்கிக் கொள்கின்றனர். ஆனால், சில விடயங்கள் விதிலக்குகள் உள்ளன. காஸா விவகாரத்தில் இதனை அவதானிக்கலாம்.
ஜுவான் ஒரு தொழிலதிபர். அவர் சட்டத்தரணிகளுடன் பகலுணவை உட்கொள்வதில் பிஸியாக உள்ளார். அவர் அனைத்து விடயங்களையும் சில சொற்களிலேயே அவசரமாகச் சொல்லிவிடுகிறார்: ‘காஸாவில் நடப்பது ஒரு படுகொலை.’ சோஷலிஸ அரசாங்கத்தை எதிர்க்கும் வேறு பலரும் கூட, அப்பாவிக் குழந்தைகளைக் கொள்வது குறித்த தமது வெறுப்பை வெளிப்படுத்தினர். ஒருவர் அதனை ‘வெட்கங்கெட்ட’ செயல் என்கிறார்.
Canaan என்பது பலஸ்தீனர்களுக்கான மனிதநேய மற்றும் கலாசார உதவிகளை முன்னெடுப்பதிலும், பலஸ்தீன் பற்றிய தகவல்களை பரப்புவதையும் நோக்காகக் கொண்டு செயற்படுகின்ற ஒரு வெனிஸியூல அரச சார்பற்ற நிறுவனம். சுஸானா கலீல் இந்த நிறுவனத்தில் செயற்படுகின்ற வெனிஸியூலாவைச் சேர்ந்த ஒரு பலஸ்தீன செயற்பாட்டாளர். 1999 இல் ஹியூகோ சாவேஸ் ஆட்சிக்கு வந்தது முதல், பலஸ்தீன் குறித்த வெனிஸியூலாவின் நிலைப்பாடு மிகுந்த அளவில் மாறியிருப்பதாக அவர் கூறுகிறார். ‘பலஸ்தீன் குறித்து வெனிஸியூலா மக்களை அவர் அறிவூட்டியுள்ளார். வெனிஸியூலா தற்போது சர்வதேச சியோனிஸத்தையும், இஸ்ரேலின் இனவாத ஆக்கிரமிப்பு அரசையும் விமர்சிக்கும் உறுதியான ஒரு நாடு என்பது குறித்து பெருமையடைகிறேன்.’
ஹியுகோ சாவேஸ் |
லத்தீன் அமெரிக்காவின் இடதுசாரிகள் பாரம்பாரியமாகவே பலஸ்தீனை ஆதரித்தே வருகின்றனர். ஆனால், இம்முறை அவர்களைச் சூழ மிதவாத செயல்முறை இடதுசாரிகளும் இணைந்து கொண்டனர். பிராந்தியத்திலுள்ள கொலம்பியா, வொஷிங்டன், டெல்அவிவ் கூட்டாளிகள் கூட இஸ்ரேலை விமர்சித்தன.
காஸா மீதான தற்போதைய தாக்குதல்கள் லத்தீன் அமெரிக்காவின் -இக்வடோர், பிரேஸில், பெரு, எல்சல்வாடோர், சிலி ஆகிய- ஐந்து நாடுகளையும், இஸ்ரேலிலுள்ள தமது தூதர்களை மீளழைக்கத் தூண்டியுள்ளன. சிலியும் பிரேஸிலும் இஸ்ரேலுடனான வர்த்த பேச்சுவார்த்தைகளைத் துண்டித்துள்ளன. வெனிஸியூலாவும் பொலிவியாவும் இஸ்ரேலின் தாக்குதல்களை இனப்படுகொலை என்று தெரிவித்துள்ளன. பொலிவிய ஜனாதிபதி இவோ மொரல்ஸ், இனி பொலிவியாவை தரிசிக்கும் அனைத்து இஸ்ரேலியர்களும் விஸா பெற வேண்டும் என்று அறிவித்துள்ளார். அத்தோடு, இஸ்ரேலை ஒரு ‘பயங்கரவாத நாடு’ என்றும் அறிவித்துள்ளார்.
காஸா மீதான இஸ்ரேலின் அப்போதைய தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக, இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை 2009 இலேயே துண்டித்து, கராகஸிலிருந்த இஸ்ரேலிய தூதுவராலயத்தின் இராஜதந்திர பணியார்களை வெளியேற்றியிருந்தது வெனிஸியூலா. பொலிவியாவும் 2009 இல் இஸ்ரேலுடனான உறவுகளைத் துண்டித்த அததேவேளை, நிகரகுவாவும் சற்றுத் தாமதித்து அதே முடிவை நடைமுறைப்படுத்தியது. கியூபாதான் 1970 களிலேயே இஸ்ரேலுடனான உறவைத் துண்டித்த முதல் நாடு.
இன்று, பலஸ்தீனுக்கு உதவுவதற்காகவும், பலஸ்தீன விவகாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் வெனிஸியூலாவில் எடுக்கப்படுகின்ற முயற்சிகள் அரசியல் தலைமைத்துவத்தின் வழிவந்தவையாகும். ஆனால், லத்தீன் அமெரிக்காவின் ஏனைய பகுதிகளில் சிலபோது அது நேர் எதிராகவே உள்ளது.
சிலியில் அவ்வாறுதான் உள்ளது. லத்தீன் அமெரிக்காவில் பலஸ்தீன சமூகம் அதிகமாக வாழ்வது சிலியில்தான். அரசியல்வாதிகள், கலைஞர்கள், தொழில்முனைவோர், எழுத்தாளர்கள் என்று செல்வாக்குமிக்கோரை இவர்கள் கொண்டுள்ளனர்.
பலஸ்தீன் ஃபெடரேஷனின் சிலியிலுள்ள செயலூக்கம் மிக்க பலஸ்தீன் ஆதரவு சிவில் சமூக இயக்கமாகும். மொரிஸியோ அபூ கோஷ், தற்போது சிலியில் உருவாகியுள்ள பலஸ்தீனுடனான மக்கள் ஒருமைப்பாடு எதிர்பார்க்கப்படாததாகும் என்கிறார். அவர் தொடர்ந்து சொல்கிறார்: ‘கடந்த நான்கு வருடங்களில் சமூக ஊடகங்களின் உதவியோடு பலஸ்தீன் குறித்த தகவல்கள் பரப்பப்படுவது அதிகரித்திருப்பதை நாம் அவதானிக்கிறோம். யூதர்கள்தான் நிரந்தரமாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் என்று சித்தரிப்பதற்கான முயற்சிகள் சியோனிஸ லொபியினால் முன்னெடுக்கப்படுகின்றபோதும், பலஸ்தீன் குறித்து இணையளத்தில் கருத்துப் பகிரும் சிலி நாட்டவர்களில் 95மூ ஆனோர், பலஸ்தீனுக்கு ஆதரவாகவே கருத்துப் பகிர்கின்றனர்.’
பலஸ்தீன சமூகத்தினர் ஏற்பாடு செய்கின்ற பலஸ்தீன் ஆதரவு செயற்பாடுகளுக்கு மக்கள் வழங்கும் ஆதரவு குறித்து அபூ கோஷ் சந்தோஷமடைகிறார். -உதாரணமாக, சிலியின் தலைநகர் சென்டியாகோவிலுள்ள இஸ்தேலிய தூதரகத்தை நோக்கிய ஆர்ப்பாட்டம்.-
ஊடக யுத்தம் மிகக் கடுமையாகவே உள்ளது. பெரும்பாலான உள்நாட்டு ஊடகங்கள் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டையே பின்பற்றி வருகின்றன. அவை இஸ்ரேல் ஆதரவுக் குரல்களுக்கு பெருமளவு இடம் ஒதுக்கி வருகின்றன. ஹமாஸ் ஒரு தீவிரவாத இயக்கம் என்றும் இஸ்ரேலுக்கு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உள்ளது என்றும் அவை திருப்பித் திருப்பிச் சொல்லி வருகின்றன. அத்தோடு, இந்த விவகாரம் இஸ்லாத்துக்கும் யூதத்துக்கும் இடையிலான மத மோதல் என்று சித்தரிக்கவும் அவை முயற்சிக்கின்றன. சிலபோது, பலஸ்தீன் மண் இஸ்ரேலால் இராணுவ ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது அல்லது காஸா மீது முற்றுகை இடப்பட்டுள்ளது என்பவற்றையும் அவை மறுத்து வருகின்றன.
இருப்பினும், சிலியில் செயற்படும் பலஸ்தீன லொபி என்று நாம் அழைக்க முடியுமான செயல்வாதம், ஊடகங்கில் ஊடுறுவி பல முக்கியமான ஆளுமைகள் மூலம், பலஸ்தீன் குறித்த வித்தியாசமான கருத்துக்களை வழங்கும்படி பார்த்துக் கொண்டுள்ளது. அவ்வாறான ஒருவர்தான் சென்டியாகோவிலுள்ள ரெகோலிடா மாநகர சபை மேயர் டெனியல் ஜேட். இவர் பலஸ்தீன விவகாரம் குறித்து வாதாடுவதற்காக தொலைக்காட்சியில் ஆர்வத்துடன் அடிக்கடி தோன்றுவார்.
டெல்அவிவிலுள்ள தூதுவரை மீளழைக்கும் அளவுக்கு, அழுத்தங்களை வழங்கக் கூடிய வகையில் பலஸ்தீன சமூகம் அடைந்துள்ள வெற்றி குறித்து நாம் அவரிடம் வினவினோம். அதற்கு அபூ கோஷ் சிரித்து விட்டு, இந்த வெற்றிகரமான லொபியில் பங்கு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களையும், செல்வாக்குமிக்க பலஸ்தீன வம்சாவளி தொழிலதிபர்களையும் தன்னால் வெளிப்படுத்த முடியாது என்று சொன்னார். மேலும் அவர் இப்படியும் கூறினார்: ‘இஸ்ரேலுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் துண்டிக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்குவதற்கு நாம் தற்போது நோக்கம் கொண்டுள்ளோம்.’
ஒரு வாரத்துக்கு முன்னர் சென்டியாகோ வீதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் இந்த நோக்கம் தெளிவாகத் தெரிந்தது. அதேநேரம், இதேபோன்ற, பெரியதொரு ஆர்ப்பாட்டம் கராகஸ் வீதிகளிலும் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம், இஸ்ரேலிய தலைவர்களை யுத்த குற்ற விசாரணை செய்யுமாறு சர்வதேச சமூகத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையில் அமைந்திருந்தது. இதில் கலந்து கொண்ட பலர் அரபுகளாகவோ, அரபு வம்சாவளியினராகவோ இருந்தனர். ஆனால், பெரும்பாலானோர் பலஸ்தீனுடன் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும், காஸா மீது தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் மீது கோபத்தை வெளிப்படுத்தும் சாதாரண வெனிஸியூலர்களாகவே இருந்தனர்.
நிகொலஸ் மதுரோ |
காஸாவில் அநாதையான சில சிறுவர்களை வெனிஸியூலாவுக்கு அழைத்து வருமாறு ஜனாதிபதி நிகொலஸ் மதுரோ அறிவித்திருந்ததன் பின்னர், அவரைத் தொடர்பு கொண்ட கராகஸிலுள்ள பலஸ்தீன் தூதுவர் லிண்டா சுபஹ் அலி, ‘எமது அரபு சகோதரர்கள் வழங்கும் ஆதரவை விட அதிகமான ஆதரவை நீங்களும் லத்தீன் அமெரிக்க மக்களும் எமக்கு வழங்கி வருகின்றனர். உங்களுக்கு நன்றிகள்!’ என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment