Friday, July 11, 2014

2023 இல் உலகில் சிறந்த 10 நாடுகளுக்குள் துருக்கி இருக்க வேண்டும் என்பதுவே துருக்கியின் திட்டம்


நேர்காணல்ஸாரா அலி
தமிழில்அஷ்கர் தஸ்லீம்


ரஜப் தைய்யிப் அர்தூகான்
அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான முஹம்மத் ஸாஹித் குல் துருக்கியைச் சேர்ந்தவர். அல்முஜ்தமஃ சஞ்சிகை இவருடன் நடத்திய நேர்காணலில், துருக்கி பிரதமர் Hதூகானின் தேர்தல் திட்டமிடல்கள், அரபுலக விவகாரங்கள் தொடர்பாக அவரது நிலைப்பாடுகள், அயல் நாடுகளோடும் உலக நாடுகளோடும் எதுவித பிரச்சினைகளையூம் கொண்டிராத அவரது 'பூச்சிய பிரச்சினை" கொள்கை ஆகியன குறித்து கலந்துரையாடப்படுள்ளது. நண்பர்களோடு இந்த நேர்காணலைப் பகிர்ந்து கொள்கிறேன்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அர்தூகான் பெற்ற மாபெரும் வெற்றி, அவரது ஜனாபிமானம் அதிகரித்திருக்கின்றது என்பதற்கான சான்றா?


கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி (AKP) வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், தமக்கு சமூக சொகுசையூம், பொருளாதார அபிவிருத்தியையும், அரசியல் பாதுகாப்பையும், வெற்றியையும் பெற்றுத் தந்த தலைமையுடன் தாம் இருப்பதை மக்கள் நிரூபித்திருக்கின்றனர்.

47 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளமையானது, துருக்கிய மக்களின் நம்பிக்கையை ரஜப் தையிப் அர்தூகான் பெற்றுள்ளார் என்பதற்கான சான்றாகும். அத்தோடு, மக்கள் எதிர்க்கட்சிகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கான ஆதாரமுமாகும்.

துருக்கி எதிர்கொள்ளும் சில பெரிய பிரச்சினைகள் உள்ளன. சிரிய நெருக்கடியும், சில மேற்குலக நாடுகளுடனான நெருக்கடியான உறவுகளும் இவற்றில் சிலவை. இவற்றை துருக்கி எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது?

சிரிய நெருக்கடி துருக்கி மாத்தரம் எதிர்கொள்ளுமொரு பிரச்சினையல்ல. இது துருக்கியின் பிரச்சினையுமல்ல. மனிதாபிமான நெருக்கடியால் துன்புறுகின்ற எமது சகோதர மக்கள் எதிர்கொள்கின்றதொரு பிரச்சினையே இது.

சிரியாவுடனான துருக்கியின் எல்லை 900 கி.மி நீளமானது. எனவே, சிரிய மக்கள் மீது நிகழ்த்தப்படும் படுகொலைகளுக்கு முன்னால் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்க துருக்கியால் முடியாது. சுதந்திரம், ஜனநாயகம், சமூக சீர்திருத்தம் என்பவற்றைக் கோரியதற்கப்பால் சிரிய மக்கள் வேறெந்தக் குற்றமும் செய்துவிடவில்லை.

சிரியா குறித்த துருக்கியின் பிரச்சினை சிரியாவுடனான பிரச்சினையன்று, சிரியாவுக்கான பிரச்சினையாகும். எகிப்து, வளைகுடா நாடுகள் அல்லது வேறு அரபு நாடுகளுடனான துருக்கியின் பிரச்சினையும் அவ்வாறானதாகும். அனைத்து அரபு நாடுகளுடனும் சிறந்த உறவை பேணுவதற்கே துருக்கி விரும்புகின்றது.

அத்தோடு, சுதந்திரம், ஜனநாயகம், சமூக நீதி, பொருளாதார அரசியல் நீதி என்பவற்றுக்கான மக்களின் கோரிக்கையுடனும் துருக்கி நிற்கின்றது. ஆனால் எந்தவொரு நாட்டினதும் உள் விவகாரங்களில் துருக்கி தலையிடுவதில்லை.

எகிப்தில் நிகழ்ந்த சதிப் புரட்சிக்கு எதிரான நிலைப்பாட்டையும், ஜனாதிபதி கலாநிதி முஹம்மத் முர்ஸிக்கு ஆதாரவான நிலைப்பாட்டையும் துருக்கி எடுத்திருந்தது. இந்த நிலை தொடருமா? புரட்சியை ஆதரித்த அரபு நாடுகளுடனான துருக்கியின் உறவின் பின்னணியில் இதை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?

எகிப்தின் சதிப்புரட்சியை, அதுவொரு சதிப் புரட்சி என்பதற்காக துருக்கி எதிர்க்கவில்லை. சதிப் புரட்சி அரசியலமைப்பு ரீதியானதொரு செயற்பாடல்ல. அது சட்டபூர்வமற்றதாகும். அத்தோடு, அது மக்களின் உரிமைகளுக்கு எதிரானது. அது எந்தவொரு நலவையும் ஏற்படுத்துவதில்லை.
கலாநிதி முஹம்மத் முர்ஸி

முன்னாள் ஜனாதிபதி முஹம்மத் முர்ஸியை துருக்கி ஆதரிப்பதற்கான காரணம் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஆவார் என்பது மாத்திரமே. ஜெனரல் அஹ்மத் ஷபீக் வெற்றிபெற்றிருந்து, அவருக்கு எதிராக சதிப்புரட்சி நடந்திருந்தாலும் துருக்கி இந்த நிலைப்பாட்டையே எடுத்திருக்கும்.

துருக்கி இராணுவப் புரட்சிகளால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, துருக்கியிலோ அல்லது வேறெந்த நாடுகளிலோஅரபு, ஆபிரிக்க, ஐரோப்பிய அல்லது எந்த நாடாக இருந்தாலும் - சதிப் புரட்சிகள் நிகழ்ந்தால் துருக்கி அதனை புறக்கணிக்கும். உலகில் எந்தவொரு இராணுவப் புரட்சியையும் துருக்கி அங்கீகரிக்காது.

பெருமளவு ஜனாபிமானத்தைப் பெற்றுக் கொடுத்த கடந்த தேர்தலின்போது, அர்தூகான் முன்வைத்த திட்டங்கள் என்ன?

2014 மார்ச் 30 இல் நடைபெற்ற தேர்தல் உள்ளுராட்சி சபைத் தேர்தலாகும். அது பாராளுமன்றத் தேர்தலல்ல. எனவே, இத் தேர்தலின்போது, அறிவிக்கப்படும் திட்டங்கள் தேசியளவிலல்லாது குறித்த பிரதேச எல்லைகளுக்குள்ளான திட்டங்களாகவே இருக்கும். இத் திட்டங்கள் அவ்வப் பிரதேச மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்ட திட்டங்களாகவே இருக்கும்.


AKP  கட்சியை பொருத்தவரை, இந்த வருடத்துக்கான அதன் திட்டம் சமூக வெளிப்படைத் தன்மையும், துருக்கியின் சமூகங்களுக்குப் பொருந்தும் வகையிலான ஜனநாயக மாற்றங்களைக் கொண்டு வருவதும், துருக்கியில் பொருளாதார அபிவிருத்தியையும் அரசியல் பலத்தையும் சாத்தியப்படுத்துவதுமாகும்.

2023 இல் உலகில் சிறந்த 10 நாடுகளுக்குள் துருக்கி இருக்க வேண்டும் என்பதுவே துருக்கியின் திட்டம். இதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டும்.

சதிப் புரட்சிக்கான முயற்சிகளைத் திட்டமிட்டார் என்றும் அரசுக்கு எதிராக சதி செய்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள அர்தூகானின் எதிராளியான பத்ஹுல்லாஹ குலானுடன் அர்தூகான் எவ்வாறு நடந்து கொள்வார்?

மூன்று வகையான எதிர் தரப்புக்கள் இருக்கின்றன. இந்த மூன்று வகையினரையும் பிரித்தறிய வேண்டும்.

1.முதலாவது வகையினர் அரசியல் எதிர்த் தரப்பினராகும். இவர்கள் அரசியல் எதிர்ப்புக்காக அரசியலமைப்பு மூலம் கிடைக்கப் பெற்றுள்ள உரிமைகளைப் பயன்படுத்துகின்றனர்.

2.இரண்டாவது வகையினர் நாட்டை தோல்வியின் பாலும், குழப்பங்களின் பாலும் இட்டுச் செல்லும் நாசகார எதிர்த்தரப்பாகும்.

3.மூன்றாவது வகையினர் துருக்கிக்கு எதிராக சதி செய்து, அதன் தேசிய பாதுகாப்பில் உளவு பார்க்கின்ற, நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகின்ற, வெளியிலுள்ள துருக்கியின் எதிரிகளுக்கு அதன் இரகசியங்களை வழங்குகின்ற எதிர்த்தரப்பாகும்.

பத்ஹுல்லாஹ் குலான் இந்த மூன்று வகையான எதிHப்புக்களையும் மேற்கொண்டுள்ளார். ஆரம்பத்தில் அவர் அரசாங்கத்தின் அரசியலையும் அதன் நடவடிக்கைகளையும் விமர்சித்தார். அவரது இயக்கம் சட்ட ரீதியான அரசியல் எதிர்க்கட்சியாகக் கூட இருக்கவில்லை.

பத்ஹுல்லாஹ் குலான்
துருக்கிய அரசாங்கத்தை எதிர்த்த அவரது இரண்டாவது நடவடிக்கை, மாவிமர்மரா கப்பல் விவகாரமாகும். மாவிமர்மரா கப்பல் காஸாவை சூழ விதிக்கப்பட்டுள்ள முற்றுகையை உடைப்பதற்காக மனிதாபிமான உதவிகைள எடுத்துச் சென்றிருந்தது. இதன்போது, இஸ்ரேலிய படை கப்பல் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் 9 துருக்கியர்கள் ஷஹீதாக்கப்பட்டனர்.

இந்த மாவிமர்மரா கப்பல் விவகாரத்தில் இஸ்ரேலின் நிலைப்பாட்டை குலான் ஆதரித்ததோடு, அதில் ஷஹீதாக்கப்பட்ட 9 பேருக்கும்இ துருக்கி அரசாங்கம்தான் பொறுப்புக் கூற வேண்டும் என்று கருத்து வெளியிட்டிருந்தார். பத்ஹுல்லாஹ் குலானின் இந்தக் கருத்து துருக்கி மக்களின் உணர்வுகளை கீறி விட்டது. அத்தோடு, அது இஸ்லாமிய உணர்வையும் கீறிவிட்டிருந்தது.

பத்ஹுல்லாஹ் குலானின் மூன்றாவது எதிர்ப்பு நடவடிக்கை எதிர்பாராத ஒன்றாகும். அவரது இயக்கம், இரகசியமான முறையில் அரச சிவில் இராணுவ நிறுவனங்களை உளவு பார்த்துள்ளது. இவ்வாறு உளவு பார்க்கப்பட்டு, அந்தத் தகவல்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டன

கடந்த இரு வருடங்களில் மாத்திரம் 3 மில்லியன் துருக்கியர்களை குலான் இயக்கம் உளவு பார்த்துள்ளது. தனிப்பட்ட, வீட்டு, குடும்ப வாழ்வும் இவ்வாறு உளவு பார்க்கப்பட்டுள்ளன. பிரதமர் ர்தூகானை கூட இவர்கள் உளவு பார்த்துள்ளனர்.

தேர்தல் வெற்றியின் பின்னர், அர்தூகான் நீதித் துறையின் மீது ஆதிக்கம் செலுத்துவதாகவும் இணைய சுதந்திரத்தை முடக்குவதாகவும் பல்வேறுபட்ட ஊடகங்ள் மூலம் எதிர்க்கட்சிகள் தெரிவித்துவருகின்றனவே. இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

ரஜப் தையிப் அர்தூகான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதமர். அவருக்கான உரிமைகள் இருப்பது போலவே அவர் மீதான கடமைகளும் உள்ளன. இவற்றை துருக்கியின் அரசியலமைப்பு தீர்மானிக்கின்றது. ஒரு ஜனநாயக நாட்டில் பிரதமரொருவர் இவற்றை மீறிச் செயற்பட முடியாது. ஜனநாயகமற்ற நாடுகளில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கலாம்

பிரதமர் தனது எல்லையை மீறிச் செயற்படுவதாக இருந்தால் அதனை விசாரிக்கும் உரிமையை துருக்கியின் பாராளுமன்றம் பெற்றிருக்கின்றது.
நீதித் துறையில் தலையிடுவதற்கோ, இணைய சுதந்திரத்தை முடக்குவதற்கோ, டுவிட்டர், யூடியூப் போன்றவற்றை தடை செய்வதற்கோ பிரதமருக்கு முடியாது. பாராளுமன்றத்தினதோ, நீதித் துறையினதோ, நீதிமன்றத்தினதோ தீர்மானத்துக்கு அமையவே இவற்றை நடைமுறைப்படுத்த முடியும். மறாக, அரசியல் தீர்மானங்களால் இவற்றை நடைமுறைப்படுத்த முடியாது.

டுவிட்டர், யூடியூப் என்பவற்றை தடை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பிழையானது. நீதிமன்றமேயன்றி அரசாங்கமல்ல இதற்கு பொறுப்பு என்று நீதித்துறை தீர்ப்பளித்ததன் மூலம் இது தெளிவாகின்றது.
இருப்பினும், டுவிட்டர், யூடியூப் போன்ற கம்பனிகள் ஏனைய கம்பனிகள் போன்றே தமது இலத்திரனில் உற்பத்திகளை விற்பனை செய்கின்றன என்பதனை எதிர்தரப்புகள் புரிந்து கொள்ள வேண்டும்.


அர்தூகான் தொடர்ந்தும் ஆட்சி செய்யத்தக்க வகையில் அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டு வருவார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்ற நிலையில், அவர் அவ்வாறானதோர் நடவடிக்கையில் இறங்குவாரா?

ஜனநாயக நாடுகளில் பிரதமரொருவர் அரசியலமைப்பை மாற்றுவதோ எழுதுவதோ இல்லை. நான்காவது தடவையாகவும் பிரதமர் பதவிக்கு போட்டிடுவதைத் தடுக்கும் வகையான எந்தவொரு சட்டமும் துருக்கியின் அரசியலமைப்பில் இல்லை. AKP கட்சியின் உள்ளக யாப்புதான் கட்சியின் தலைவர் மூன்று தடவைக்கு மேல் பதவி வகிப்பதை தடுக்கின்றது. அப்பதவி பிரதமர் பதவியாகவோ அமைச்சு பதவியாகவோ இருக்கலாம்.

எனவே, எதிர்வரும் தேர்தலில் அர்தூகான் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதை தடுப்பது AKP கட்சியின் உள்ளக யாப்பு என்பதை இங்கு புரிந்து கொள்ள வேண்டும். சிலவேளை கட்சி அங்கத்தவர்கள் அர்தூகான் நான்காவது தடவையாகவும் போட்டியிடுவதற்கான அனுமதியை வழங்கலாம். அவ்வாறு இல்லாதபோது அர்துகான் நான்காவது தடவையாக பிரதமர் பதவிக்கு போட்டியிட முடியாது. இது AKP கட்சி அங்கத்தவர்களுக்கு மட்டுமேயான கட்சியின் சட்டமாகும்

No comments: