ரஜப் தையிப் அர்தூகான் |
(அஷ்கர் தஸ்லீம்)
-இக்கட்டுரை அல்ஜஸீரா இணையதள செய்தியை தழுவி எழுதப்பட்டுள்ளது.-
இன்று (10.08.2014) துருக்கியில்
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய பிரதமர் ரஜப் தையிப்
அர்தூகான் முன்னணி வேட்பாளராக உள்ளார்..
துருக்கி வரலாற்றில்
முதற் தடவையாக, ஜனாதிபதி
ஒருவர் இம்முறை மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்படவுள்ளார். இதற்கான அரசியலமைப்பு சீர்திருத்தம்
2007 இல் கொண்டு வரப்பட்டது.
கலாசார ரீதியாக பிரிந்து
போயுள்ள துருக்கியில், 10 வருடங்களுக்கு மேற்பட்ட தனது ஆட்சியை அர்தூகான்
தக்க வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தேர்தலில் அர்தூகானின்
பிரதான போட்டியாளராக அக்மலுத்தீன் இஹ்ஸானொக்லூ உள்ளார். இஹ்ஸானொக்கு ஒரு இராஜதந்திரி.
இஸ்லாமிய ஒத்துழைப்பு நிறுவனத்தின் செயலாளராக இருந்தவர். இவரும் பெருமளவான வாக்குகளைப்
பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்மலுத்தீன் இஹ்ஸானொக்லூ |
இஹ்ஸானொக்லுவுக்கு
இடதுசாரி மதச்சார்பற்ற CHP கட்சியும்,
MHP கட்சியும் ஆதரவளித்து வருகின்றன.
இந்த இரு கட்சிகளும் துருக்கியின் பிரதான எதிர்க்கட்சிகளாகும். அத்தோடு, சிறியளவிலான மூன்று கட்சிகளும் இஹ்ஸானொக்லுவுக்கு
ஆதரவளித்து வருகின்றன.
எவ்வாறிருப்பினும்,
இஹ்ஸானொக்லூ துருக்கியர் மத்தியில்
அவ்வளவு அறிமுகமானவர் அல்ல.
ஸலாஹுத்தீன் டெமிர்டாஸ் |
ஸலாஹுத்தீன் டெமிர்டாஸ்
துருக்கியின் குர்திஷ் சிறுபான்மையினர் மத்தியில் பிரபலமான ஒருவர். இவர்தான் துருக்கி
ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது பிரதான வேட்பாளர். HDP கட்சி இவருக்கு ஆதரவளிக்கின்றது. இக்கட்சி சிறுபான்மை
உரிமைகள் சார்பு கட்சியாகும். இக்கட்சிக்கு துருக்கியின் குர்திஷ் மக்கள் ஆதரவளிக்கின்றனர்.
A&G என்ற நிறுவனம் நடத்திய
கருத்துக்கணிப்பின்டி, அர்தூகான் 55.1%
, இஹ்ஸானொக்லூ 33% ,
ஸலாஹுத்தீன் டெமிர்டாஸ்
11.6% வாக்குகளைப் பெறும் என்று அறிவிக்கப்படுகிறது.
AKP யின் உள்ளுராட்சி
வெற்றிகள்
துருக்கியின் உள்ளுராட்சி
சபைத்தேர்தல் நடந்து, வெறும் மூன்று மாதங்களின்
பின்னரே, ஜனாதிபதித் தேர்தல்
நடைபெறுகின்றது. உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அர்தூகானின் AKP பாரிய வெற்றியை பெற்றிருந்தது.
உள்ளுராட்சி சபைத்
தேர்தல் நடைபெறும்போது, ஒரு அரசியல் பதட்ட
நிலை காணப்பட்டது. இணைய கட்டுப்பாடு, அடிக்கடி நடைபெற்ற அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், அர்தூகானின் அரசாங்கத்தைச் சூழ உள்ளவர்கள் மீதான
ஊழல் குற்றச்சாட்டுகள் இந்த அரசியல் பதட்ட நிலையை ஏற்படுத்தியிருந்தன. எவ்வாறாயினும்,
இந்தப் பதட்ட சூழ்நிலை அர்தூகானின்
ஜனாபிமானத்தைக் குறைத்துவிடவில்லை.
அர்தூகான் தனது தேர்தல்
பிரச்சார நடவடிக்கைகளின்போது, உட்கட்டமைப்பு செயற்திட்டங்கள்,
வெளியுறவுக் கொள்கை நடவடிக்கைகள்,
பொருளாதார சீர்திருத்தங்கள்,
தற்போது துருக்கிய அரசியலில்
ஒரு அடையாளப் பதவியாக மாத்திரமே உள்ள ஜனாதிபதிப் பதவியை, மிகுந்த செயலூக்கம் மிக்கதொரு பதவியாக உறுதி செய்யும் அரசியலமைப்பு சீர்திருத்தம்
ஆகியன குறித்து பேசியுள்ளார்.
மாறாக இஹ்ஸானொக்லூ,
ஐக்கியம், நடுநிலமை குறித்துப் பேசியுள்ளார்.
நீண்ட கால பொருளாதார
குழப்ப நிலையிலும், அரசியல் சறுக்கலிலும்
இருந்த துருக்கியில், AKP கட்சி 2001 இல் ஸ்தாபிக்கப்பட்டது.
அது முதல், எதிர்பார்க்கப்படாத
வகையில் AKP வளர்ந்து ஸ்திரத்தன்மையடைந்தது.
எவ்வாறாயினும்,
அர்தூகான் ஜனாதிபதியாகத் தெரிவு
செய்யப்பட்டால், தனது பிடியில் நாட்டை
இறுகப் பிடித்துக் கொள்ளக் கூடியஒரு எதேச்சாதிகாரியாகவும், மிகுந்த பிற்போக்குவாத தலைவராகவுமே AKP கட்சியின் மதச்சார்பற்ற எதிரிகள் அவரை நோக்குகின்றனர்.
தேர்தலின் முதற் சுற்றில்
எந்தவொரு வேட்பாளரும் 50% க்கு அதிகமான வாக்குகளைப் பெறாதபோது, முதல் இரு இடங்களையும் பிடிக்கும் வேட்பாளர்களுக்கு
இடையிலான இரண்டாம் சுற்று ஓகஸ்ட் 24 ஆம் திகதி நடைபெறும்.
No comments:
Post a Comment