ஆனந்த சமரகோன் |
ஒரு நாட்டின் தேசிய
உணர்வை பிரதிபலிக்கும் வகையிலேயே தேசிய கீதங்கள் அமைகின்றன. தேசிய கீதம் என்பது ஒரு
நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாகும்.
இலங்கையின் தேசிய
கீதம் பற்றித் தேடிப்பார்க்கையில், இலங்கையில் பல தேசிய
கீதங்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளதை அவதானிக்கலாம்.
இலங்கையில் பிரித்தானியர்
ஆட்சி நிலவிய காலத்தில், பிரித்தானியாவுக்காகப்
பாடப்பட்ட ஒரு பாடலும் தேசிய கீதமாகப் பாடப்பட்டு வந்துள்ளது. 1745 இல் இலங்கை பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட
ஒரு பாடலும் தேசிய கீதமாகப் பாடப்பட்டு வந்துள்ளது.
அத்தோடு, பௌத்த பிக்குகளும் தேசப்பற்றுள்ளோரும் எழுதிய பல
பாடல்களும் தேசிய கீதமாகப் பாடப்பட்டு வந்துள்ளது. இந்த வகையில், திபெத் இனத்தவரான எஸ்.மஹிந்த தேரர் எழுதிய 'தின தினே தினே சிரிலக ஜாதிக ஆலே' என்ற பாடல் முக்கியமானதாகும்.
இலங்கை பிரித்தானியர்
ஆட்சியின் கீழ் இருந்தபோது, பிரித்தானிய தேசிய
கீதத்தின் தாளத்திற்கேற்ப ஜே.பீ வெலிவிட என்பவர் 1937 இல் எழுதிய பாடலொன்றும் தேசிய கீதமாகப் பாடப்பட்டுள்ளது.
எம்.ஜி. பெரேரா என்பவர் எழுதிய பாடலொன்றும் இக்காலப் பகுதியில் தேசிய கீதமாகப் பாடப்பட்டு
வந்துள்ளது.
டி.எஸ். முனசிங்க
என்பவர் எழுதி டி.சூரியசேன என்பவர் இசையமைத்த பாடலொன்றும் 1943 இல் இலங்கையின் தேசிய ஒன்றுகூடல்களில் தேசிய கீதமாகப்
பாடப்பட்டு வந்துள்ளது. 1946 இல் ஆனந்த சமரகோன்
எழுதிய 'நமோ நமோ மாதா...'
என்ற பாடலும் தேசிய கீதமாகப்
பாடப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய
கீதம் குறித்த வரலாற்றை நோக்குகையில், 1948 க்கு முற்பட்ட காலப் பகுதியில் தேசிய
உணர்வை ஊற்றெடுக்கச் செய்யும் பல பாடல்கள் தேசிய கீதமாகப் பாடப்பட்டு வந்துள்ளதை அவதானிக்கலாம்.
இலங்கைக்கு சுதந்திரத்தைப்
பெற்றுக் கொடுப்பதற்காக உழைத்த தேசத் தலைவர்கள் நாட்டுக்கு நிலையான ஒரு தேசிய கீதத்தின்
தேவையை உணர்ந்து 1948 ஜனவரி 31 இல் தேசிய கீதத்துக்கான ஒரு போட்டியை ஏற்பாடு செய்தனர்.
இந்தப் போட்டியின்
இறுதியில், பி.பீ. இலங்கசிங்க
எழுதிய 'லங்கா மாதா... யஸ
மஹிமா', ஆனந்த சமரகோன் எழுதிய
'நமோ நமோ மாதா' ஆகிய பாடல்களுக்கிடையில் பலத்த போட்டியொன்று நிலவியது.
இறுதியில், பி.பீ இலங்கசிங்க
எழுதிய பாடல்தான் வெற்றி பெற்ற பாடலாகத் தெரிவு செய்யப்பட்டது.
இந்தப் பாடலுக்கு
லயனல் எதிரிசிங்க என்பவர் இசையமைத்திருந்தார். வெற்றி பெற்ற இந்த பாடலுக்காக பணப் பரிசும்
வழங்கப்பட்டது. பின்னர், 1948 பெப்ரவி 4 ஆம் திகதி நிகழ்ந்த முதலாவது சுதந்திர தினத்தில்
இந்தப் பாடல் பாடப்பட்டது.
தேசிய கீதத்துக்காக
பாடல்களை தெரிவு செய்யும் குழுவில், இந்தப் பாடலை எழுதியவரும் அதற்கு இசையமைத்தவரும் உள்ளடக்கப்பட்டிருந்தால்,
இந்தத் தெரிவு பக்கச்சார்பானது
என்ற குற்றச்சாட்டு அக்காலத்தில் எழுந்தது.
இந்தக் குற்றச்சாட்டுக்கமைய,
இந்தப் பாடலை தேசிய கீதமாகப்
பாடுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. பின்னர், 1949 இல் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் ஆனந்த சமரகோன்
எழுதிய 'நமோ நமோ மாதா...'
பாடல் பாடப்பட்டது. ஆயினும்,
இந்தப் பாடலுக்கும் எதிர்ப்புக்கள்
கிளம்பின.
1950 இல் தேசிய கொடி உத்தியோகபூர்வமாக
ஏற்றுக் கொள்ளப்பட்டபோதும், தேசிய கீதம் குறித்து
எந்தவொரு உத்தியோகபூர்வ நிலைப்பாடுகளும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்தப் பாடலை தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்
என்று ஜே.ஆர் ஜயவர்தன கெபினட் சபையில் ஒரு பிரேரணையை முன்வைத்தார்.
இந்தப் பாடலிலுள்ள
சில வரிகளை நீக்கி மீண்டும் செம்மைப்படுத்தித் தருமாறு, ஆனந்த சமரகோனிடம் ஒலிவர் குணதிலக 1951 இல் வேண்டிக் கொண்டார். அதன்படி, சில வரிகள் நீக்கப்பட்டு மீண்டும் தேசிய கீதம் செம்மைப்படுத்தப்பட்டது.
பின்னர், 1951 நவம்பர் 22 இல் கெபினட் சபை இந்தப் பாடலை தேசிய கீதமாக ஏற்றுக்
கொண்டது.
'நமோ நமோ மாதா...'
என்ற இந்தப் பாடல் தேசிய கீதமாக
ஏற்றுக் கொள்ளப்பட்டதாக 1952 மார்ச் 12 ம் திகதி பத்திரிகை விளம்பரம் மூலம் அறிவிக்கப்பட்டது.
இந்தப் பாடலையும் தேசிய கீதமாகப் பாடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன.
எவ்வாறாயினும்,
1961 பெப்ரவரி மாதம் ஆனந்த சமரகோனுக்கு
தெரியாமலேயே இந்தத் தேசிய கீதத்தில் 'சிறீ லங்கா மாதா அப சிறீ லங்கா...'
என்ற வரிகள் இணைக்கப்பட்டன.
இன்று வரை இந்தப் பாடலே தேசிய கீதமாகப் பாடப்பட்டு வருகின்றது.
நன்றி: மவ்பிம
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்
No comments:
Post a Comment