Wednesday, February 12, 2014

இமாம் பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி பற்றிய அறிமுகக் குறிப்பு

 (அஷ்கர் தஸ்லீம்)

இஸ்லாமிய வரலாற்றில் நீண்ட நெடிய காலம் முஸ்லிம் சமூகத்துக்குத் தலைமைத்துவத்தை வழங்கி வந்த இஸ்லாமிய கிலாபத் 1924 இல் இரத்துச் செய்யப்பட்டது. அப்போது துருக்கிய உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கீழிலிருந்த நாடுகள் துண்டு துண்டாகின. துருக்கி ஒரு மதச்சார்பற்ற நாடாக மாற்றப்பட்டது. துருக்கியர்களை விட்டும் இஸ்லாத்தை தூரமாக்கி விடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கிலாபத்துக்குப் பிந்திய மதச்சார்பற்ற ஆட்சியாளர் முஸ்தபா கமாலினால் மேற்கொள்ளப்பட்டன.

துருக்கியர்களை மதச்சார்பற்றோராக்குவதற்கான இந்த முயற்சிகளை எதிர்த்து செயற்பட்டவர்களுள் இமாம் பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி முதன்மையானவர். 1876 ஆம் ஆண்டு துருக்கியின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள 'நூர்ஸ்' என்ற கிராமத்தில் ஸஈத் நூர்ஸி பிறந்தார். இவரது தந்தை மிர்ஸா ஒரு சூபியாவார். ஸஈத் நூர்ஸி தன் இள வயதிலேயே மார்க்க மற்றும் ஏனைய துறைகளில் சிறந்த கல்வியைப் பெற்றுக் கொண்டார்.


பிரித்தானிய அமைச்சர் க்லாட்ஸ்டன், முஸ்லிம்களின் கைகளில் அல்குர்ஆன் இருக்கும் வரை அது தமக்கு தடையாக இருக்கப் போவதாகவும், எனவே, முஸ்லிம்களை விட்டும் அல்குர்ஆனை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தபோது, இமாம் பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி, சிலுவை யுத்தங்கள் இன்னும் முடிவடைந்து விடவில்லை, எதிரிகள் இஸ்லாத்தை அழிப்பதற்காக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தார். இந்த சம்பவத்தால் அதிகம் கவலைகொண்ட இமாமவர்கள், தான் அல்குர்ஆனின் அற்புதங்களை ஆய்வு செய்யப் போவதாகவும், அதன் கருத்துக்கள் குறித்து ஆராயப் போவதாகவும் முடிவெடுத்தார்.



இமாமவர்கள் வாழ்ந்த காலத்தில், கல்வி என்பது இஸ்லாமியக் கல்வி, பௌதிகக் கல்வி என்று பாகுபடுத்தப்பட்டே இருந்தது. எனவே, எல்லா அறிவையும் வழங்க வேண்டும் என்பதற்காக, எகிப்தின் அல்அஸ்ஹர் பல்கலைக்கழகம் போன்று ஸஹ்ரா பல்கலைக்கழம் என்றொரு பல்கலைக்கழகத்தை ஸ்தாபிக்க வேண்டுமென்று கருதிய இமாம் பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி, 1896 இல் இஸ்தான்பூல் பயணமானார். பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான பல முயற்சிகள் எடுக்கப்பட்டும், இறுதியில் அது கைகூடாமல் போனது.

1911 இல் டமஸ்கஸ் சென்ற இமாமவர்கள், அங்குள்ள உமையா பள்ளிவாசல் அவரது பிரசித்தமான டமஸ்கஸ் பிரசங்கத்தை நிகழ்த்தினார். இந்த உரையில், இஸ்லாமிய உலகைப் பீடித்துள்ள நோய்கள் பற்றியும் அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பேசினார். முஸ்லிம்களது பின்னடைவுக்கான காரணிகளை பின்வருமாறு வகைப்படுத்தினார் அவர்:

1. நம்பிக்கையீனம்
2. சமூக அரசியல் வாழ்வில் உண்மை இழந்திருந்தமை
3. பகைமை
4. முஃமின்களை இணைக்கும் சகோதரத்துவ இணைப்புக்களை அறியாமை
5. கொடுங்கோண்மை
6. சுயநலத்தை நோக்காகக் கொண்ட செயற்பாடுகளுடன் சுருங்கிப் போதல்


முதலாம் உலகப் போரில் உஸ்மானிய சாம்ராஜ்யம் பங்கெடுப்பதை இமாம் பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி எதிர்த்தபோதும், யுத்தம் அறிவிக்கப்பட்டதும், அவரும் அவரது மாணவர்களும் யுத்தத்தில் பங்கெடுத்தனர். யுத்த முகாம்களிலும் அல்குர்ஆனை போதித்து வந்தார் அவர். இந்தக் கடுமையான யுத்த சூழ்நிலையிலும் அரபு மொழியில் அமைந்த தனது முதல் நூலான 'இஷாராதுல் இஃஜாஸ் ஃபி மழான்னில் ஈஜாஸ்' என்ற நூலை எழுதினார்.

முதலாம் உலகப் போர் முடிவடைந்ததும் 1918 இல் ஆங்கிலேயர் இஸ்தான்பூலைக் கைப்பற்றினர். இந்த ஆக்கிரமிப்பின் பாரதூரத்தை இமாம் பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி அறிந்திருந்தார். எனவே, ஆங்கிலேயர்களின் அச்சுறுத்தல்கள் குறித்து மக்களுக்கு அவர் விளக்கினார். இது ஆங்கிலேயர்களுக்கு எதிரான மக்களின் புரட்சியை அதிகரிக்கச் செய்தது.

1920 நடைபெற்ற துருக்கியின் சுதந்திரப் போரில் துருக்கிய போராளிகள் வெற்றிபெற்றனர். பின்னர் அங்காராவில் ஒரு சபை ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைவராக முஸ்தபா கமால் பதவியேற்றார். அப்போது அவர், தான் இஸ்லாத்தை முன்னுரிமைப்படுத்துவதாகக் காட்டிக் கொண்டிருந்தார்.

இமாம் பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி இஸ்லாத்தின் எதிரிகளோடு யுத்தம் புரிந்தார். எனவே, இவரை பாராட்டுவதாக அறிவிக்கப்பட்டு, அங்காரா வருமாறு இமாமவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்காரா வந்த இமாமவர்களுக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இருப்பினும், முஸ்தபா கமால் தலைமையிலான குழு இஸ்லாமிய ஷரீஆவுக்கு எதிராக செயற்படப் போவதை அறிந்த இமாமவர்கள், தன்னை கௌரவிக்கும் நிகழ்வுக்கு சமூகம் தராது ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தார்.

இந்தக் கடிதத்தில், நீங்கள் ஐரோப்பியர்களைப் பின்பற்றுவதைத் தேர்ந்தெடுத்தால், இஸ்லாமிய உலகின் அன்பை இழந்து விடுவிர்கள் என்று குறிப்பிட்டிருந்தார் அவர். அத்தோடு, மார்க்கத்துடனான வாழ்வின் முக்கியத்துவம் பற்றியும் இஸ்லாமிய குடியரசு முறைமை குறித்தும் அதில் அவர் தெளிவுபடுத்தியிருந்தார். சிறிது காலத்தின் பின்னர் 1923 இல் அங்காராவை விட்டு 'வான்' என்ற பகுதிக்குச் சென்ற இமாமவர்கள் அங்கேயே தங்கி விட்டார். இந்தப் பயணத்துக்குப் முன்னைய இமாமவர்களை 'பழைய ஸஈத்' என்றும், பின்னைய இமாமவர்களை 'புதிய ஸஈத்' என்றும் வழங்குவர்.

இமாம் பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி அவர்கள் அங்காராவில் தங்கியிருந்த காலப் பகுதியில், முஸ்தபா கமாலின் இலக்குகள், அவர் அழைப்பு விடுக்கும் நாட்டின் தன்மை, ஷரீஆ மற்றும் மதச்சார்பின்மை பற்றிய அவர நிலைப்பாடுகள் என்பன பற்றி நன்கு புரிந்து கொண்டார்.

இமாமவர்களது வாழ்க்கையில் 'புதிய ஸஈத்' என வழங்கப்படும் காலத்தில் சிந்தனைப் பகுதிக்கான அவரது பங்களிப்பை அதிகம் காணலாம். இந்த சிந்தனைகள்தான் தற்கால துருக்கியர்களின் சிந்தனையை வடிவமைத்துள்ளது.

இமாம் பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி அவர்கள், தம் வாழ்வின் புதிய அத்தியாயத்தை (புதிய ஸஈத்) அரசியலை விட்டும் ஒதுங்கியவராகவே அமைத்துக் கொண்டார். 'வான்' என்ற பிரதேசத்தில் வாழ்ந்து வந்த இமாமவர்கள், தன்னைச் சூழ இளைஞர்களை அழைத்து அல்குர்ஆனின் சிந்தனைகளைப் போதித்து வந்தார்.

1926 - 1950 க்கு இடைப்பட்ட காலப் பகுதியில் 130 க்கும் மேற்பட்ட ரஸாஇல்களை துருக்கி மொழியில் அவர் எழுதினார். இவை ஆன்மீகம், பகுத்தறிவு சார் விடயங்களை ஆராய்ந்தன. இந்த விளக்கவுரைகள் அனைத்தும் அல்குர்ஆனின் மையக்கருத்துக்களையும் அதன் விளக்கங்களையும் மையப்படுத்தியே அமைந்திருந்தன.

இமாமவர்கள் ஒரு அல்குர்ஆன் வசனத்துக்கான தப்ஸீரை இரு வகையில் விளக்குவார். முதலாவதாக, குறித்த அல்குர்ஆன் வசனத்தின் வெளிப்படையான கருத்தை விளக்குவார். இரண்டாவதாக, அந்த அல்குர்ஆன் வசனத்தின் பின்னணியில் நின்று ஈமானின் அத்தாட்சிகளையும் அதிலுள்ள பிரபஞ்ச இரகசியங்கள், தற்காலத்துடன் அது எவ்வாறு தொடர்புபடுகின்றது, அதன் நாகரிகப் பங்கு என்ன என்பன பற்றியும் விளக்குவார். இவ்வாறு இமாமவர்கள் எழுதிய அல்குர்ஆனுக்கான விளக்கவுரைகள்தான் ரிஸாலா ஏ நூர் என வழங்கப்படுகின்றது.

இந்தக் காலப் பகுதியில் முஸ்தபா கமால் அரபு லிபியில் துருக்கிய மொழி எழுதப்படுவதை தடை செய்திருந்தான். இதனை எதிர்ப்பதற்காக இமாம் பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸியின் மாணவர்கள் ரிஸாலா ஏ நூரின் பிரதிகளை அரபு லிபியிலேயே எழுதினார்கள். இவ்வாறு எழுதப்படும் விளக்கவுரைகள் மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன. பின்னர், அவற்றைப் பெற்றுக் கொள்வோரும் இன்னும் பல பிரதிகளை தம் கைகளாலேயே எழுதி விநியோகித்தனர்.

சுமார் 20 வருடங்களாக ரிஸாலா ஏ நூர் பிரதிகள் கைகளாலேயே எழுதப்பட்டன. இளைஞர்களும் யுவதிகளும் இந்தப் பணியில் மிகுந்த உற்சாகத்தோடு ஈடுபட்டு வந்தனர். துருக்கியர்கள் இரவு நேரங்களில் விழித்திருந்து ரிஸாலா ஏ நூர் பிரதிககளை; தமது கைகளாலேயே எழுதி வந்தனர். இதனை அவதானித்த மதச்சார்பற்ற அரசாங்கம் அவர்களை கைது செய்து வந்தது.

இமாமவர்களின் ரிஸாலா ஏ நூர் துருக்கியின் நாலா புறங்களிலும் பரவி மக்கள் மத்தியில் இடம் பிடிக்கலானது. இதனை அவதானித்த மதச்சார்பற்ற அரசாங்கம், இமாமவர்களை ஸ்பார்டா எனும் பிரதேசத்தில் அமைந்திருந்த பார்லா என்ற பகுதிக்கு நாடுகடத்தியது. இங்கு வெளித்தொடர்புகள் அனைத்தும் தடை செய்யப்பட்டு இமாமவர்கள் தனிமையில் விடப்பட்டிருந்தார்.

ஆயினும், தனக்குக் காவலர்களாக நியமிக்கப்பட்டிருந்தவர்களை தனது சிந்தனைகள் மூலம் கவர்ந்திழுத்துக் கொண்டார் இமாமவர்கள். பின்னர், இமாமவர்களின் மாணவர்கள் அனுப்பும் கையெழுத்துப் பிரதிகளை சரிபார்க்கும் பணியை செய்து வந்தார். தொடர்ந்து எட்டு வருடங்கள் இமாமவர்கள் இங்குதான் வாழ்ந்து வந்தார்.

1923 இல் அரபு மொழியில் அதான் சொல்வது தடை செய்யப்பட்டபோது, இமாமவர்களும் அவரது மாணவர்களும் பள்ளிவாசலுக்குள் அரபு மொழியிலேயே அதான் சொல்லி வந்தனர். எனவே, இமாமவர்களையும் அவரது பல மாணவர்களையும் அரசாங்கம் கைது செய்தது. இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இவர்களில் இமாமவர்களுக்கும் அவரது 120 மாணவர்களுக்கும் 11 மாத கால சிறைத் தண்டணை வழங்கப்பட்டது.

அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக இரகசிய இயக்கமொன்றை உருவாக்குகிறார் என்ற குற்றச்சாட்டின்பேரில் 1935 இல் இமாம் பதீஉஸ்ஸமான் நூர்ஸி மீண்டும் கைது செய்யப்பட்டார். அப்போது அவர், நான் பொது பாதுகாப்புக்குத் தீங்கிழைப்பதற்காக மதத்தைப் பயன்படுத்துவதாக நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள். ஆனால் நான் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவே இஸ்லாமியக் கலைகளில் ஆய்வுகள் செய்கிறேன் என்று வாதாடினார்.

இந்த விசாரணைகளின் பின்னர், காஸ்டமூனோ என்ற பிரதேசத்துக்கு இமாமவர்கள் நாடுகடத்தப்பட்டார். இந்தக் காலப் பகுதியில் இஸ்லாமியக் கலைகளில் ஆய்வுகளை செய்வதிலும் எழுதுவதிலும் இமாமவர்கள் ஈடுபட்டார்கள்.  இந்த எழுத்துக்கள் அனைத்தும் பல்கலைக்கழங்கள், இராணுவ முகாம்கள் என அனைத்து இடங்களையும் சென்றடைந்தன.

இதை ஒரு எச்சரிக்கையாகப் பார்த்த முஸ்தபா கமால், கிலாபத்தை வீழ்த்தி மதச்சார்பற்ற துருக்கியை உருவாக்குவதற்கு உதவியளித்த மாசோனிய இயக்கத்தின் முக்கியஸ்தர்களுடன் இணைந்து இமாமவர்களை மீண்டும் விசாரிப்பதற்கான திட்டத்தை தீட்டினான். இதன்படி இமாமவர்கள் மீண்டும் விசாரிக்கப்பட்டார். இவ்வாறு பல முறை விசாரிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட இமாமவர்களுக்கு, 1950 இல் ஜலால் பாயார் தலைமையிலான ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்ததன் பின்னர்தான் சுதந்திரமாக செயற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைத்தன.

1950 இல் நடைபெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது. ஜனநாயகக் கட்சி நடத்திய அரசாங்கம், அடைக்கப்பட்டிருந்த இமாம் பதீஉஸ்ஸமான் நூர்ஸிக்கு பயணிப்பதற்கான சுதந்திரத்தை வழங்கியிருந்தது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட இமாமவர்கள், தனது மாணவர்களை வழிப்படுத்துவதிலும் பயிற்றுவிப்பதிலும் ஈடுபட்டார். 1952 இல் இஸ்தான்பூல் சென்றடைந்த இமாமவர்களுக்கு, அவரது ரிஸாலா ஏ நூரை பதிப்பிக்கும் அனுமதியையும் அரசாங்கம் வழங்கியது.

ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜலால் பாயாருக்கு வாழ்த்து மடலொன்றை இமாமவர்கள் அனுப்பி வைத்தார். பதிலுக்கு ஜலால் பாயாரும் இமாமவர்களுக்கு நன்றிக் கடிதமொன்றை அனுப்பி வைத்தார். இமாமவர்கள் பிரதமர் அத்னான் மன்தரீஸுக்கும் வாழ்த்து மடலொன்றை அனுப்பி வைத்தார். அந்த வாழ்த்து மடலில் அவருக்கு சில உபதேசங்களை குறித்து அனுப்பினார்.

இமாம் பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி, பிரதமர் அத்னான் மன்தரீஸுக்கு அனுப்பிய கடிதத்தில், மதச்சார்பின்மை மக்களை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்றும் உண்மையின் மீதெழும் வெளிவிவகாரக் கொள்கையொன்றைப் பின்பற்றுமாறும் குறிப்பிட்டிருந்தார். அத்தோடு, ஐரோப்பிய கலாசாரம் ஆசை, பொறாமை, ஆக்கிரமிப்பு உணர்வு ஆகியவற்றின் மீதே உருவாகியுள்ளது. அது இறைவனை விசுவாசிப்பதிலலை. எனவே, ஐரோப்பிய கலாசார வழிமுறையை அடிப்படையாகக் கொண்ட சீர்திருத்தங்கள் மூலம் முன்னேற்றங்களைக் கொண்டு வர முடியாது என்றும்; குறிப்பிட்டிருந்தார்.

ஜனநாயகக் கட்சியின் ஆட்சிக் காலப் பகுதியில் இமாம் பதீஉஸ்ஸமான் நூர்ஸி மீதான கெடுபிடிகள் குறைந்திருந்தபோதும், இமாமவர்கள் எழுதிய முர்ஷிதுஷ் ஷபாப் என்ற நூல் மத அடிப்படைகளின் மீதான  ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முயலுவதாகக் குற்றம்சாட்டப்பட்டு, இமாமவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

இமாமவர்கள் தனது முழு வாழ்வையும் மிகவும் சாதாரணமாகவே அமைத்துக் கொண்டிருந்தார். ஸதகா, ஸகாத், பரிசுப் பொருட்கள் என அவருக்குக் கிடைக்கும் அனைத்தையும் அவர் பெறாதிருந்தார். மக்களிடமிருந்து சொத்துக்களை சேர்த்துக் கொள்கிறார்கள் என்பதுவே தற்கால அறிஞர்களுக்கும் அழைப்பாளர்களுக்கும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு என்று அதற்கு விளக்கம் கூறுவார் இமாமவர்கள்.

இஸ்லாமிய ஆட்சி என்பது பலப் பிரயோகத்தின் மூலம் உருவாக்கப்பட முடியாது என்றே இமாமவர்கள் கருதினார். மக்களை நல்வழிப்படுத்தி சிறந்ததொரு அடித்தளத்தை இட வேண்டும். இஸ்லாத்தை பற்றிப் பிடிக்கும் பெரும்பான்மையொன்று உருவாக வேண்டும். அவர்கள் இஸ்லாமிய ஆட்சியை வேண்ட வேண்டும் என்பதுவே இமாமவர்களது சிந்தனையாக இருந்தது.

துருக்கியின் மதச்சார்பற்ற அரச ஒழுங்குக்குள்ளால் மிகுந்த போராட்டங்களுக்கு மத்தியில் செயற்பட்டு, துருக்கியர் மத்தியில் அல்குர்ஆனின் சிந்தனைகளையும் கருத்துக்களையும் வேரூன்டச் செய்த இமாம் பதீஉஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி அவர்கள் 1960 மார்ச் 23 ஆம் திகதி வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


No comments: