![]() |
| தீமா கதீப் |
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்
‘ஐ.நா சபையில் பலஸ்தீன் ஒரு முழு உறுப்பு நாடாக வேண்டும். நாம் அதனை ஆதரித்துப் பேசுவோம்’ இந்தக் குரல் வெனிஸியூலா நாட்டைச் சேர்ந்தவர்களுக்கோ அல்லது வெனிஸியூலாவில் வாழ்பவர்களுக்கோ பரிச்சயமானதே. ஒலிப் பதிவு செய்யப்பட்ட இந்தக் குரல், உள்நாட்டு வானொலி நிலையமொன்றில், சிதறிய வர்த்தக விளம்பரங்களுக்கு இடையே அடிக்கடி ஒலிக்கும்.
‘எமக்கு சமாதானம் வேண்டும். பலஸ்தீன் மீதான ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது தேவை. எமக்கு இந்த உலகில் சமாதானம் வேண்டும்.’ இந்த ஒலிக் குரல் ஒரு ஹிப்-ஹொப் பாடலுக்குப் பின்னர் ஒலிக்கின்றது. இது வெனிஸியூலாவின் முன்னாள் ஜனாதிபதி ஹியுகோ சாவேஸின் குரல். பலஸ்தீன வரலாறு குறித்தும், அதன் விடுதலைக்கு அழைப்பு விடுத்தும் அவர் பேசிய நீண்ட உரைகளிலிருந்து பெறப்பட்ட சிறிய ஒலி துணுக்குகளே இவை.
இன்னுமொரு அரச சார்பு உள்நாட்டு வானொலி நிலையமொன்றின் அறிவிப்பாளர் தன் சக அறிவிப்பாளரிடம், காஸாவின் பிந்திய தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். அவர் சொல்வதைக் கேளுங்கள்: ‘காஸாவில் நடப்பவை, சில வாரங்களுக்கு முன்னர் மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பானவை அல்ல. அது ஒரு பூமியின் கதை.’

