காலிக் கோட்டையின் வெளிப்புறத் தோற்றம்.
அஷ்கர் தஸ்லீம்
'காலிக் கோட்டையில் வாழும் முஸ்லிம்களில் 99 வீதமானோர் தொழுகின்றனர். எமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு முன்னமே, அவர்களுக்கு நாம் இஸ்லாத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறோம். எனவே, எமது அத்திவாரம் உறுதியாக உள்ளது' என்கிறார் காலிக்கோட்டையைச் சேர்ந்த ஷாஃபி ஹாஜியார்.
காலிக் கோட்டை எனும்போது, அதன் சுற்றிலும் அமைந்திருக்கின்ற பாரிய கருங்கல் சுவர்களும், கோட்டையினுள்ளே அமைந்திருக்கின்ற பள்ளிவாயலும்தான் எம் நினைவுக்கு வருகின்றன. தென் மாகாணத்துக்கு சுற்றுலா செல்வோர், தரிசிப்பதற்கு மறந்தேனும் மறக்காத ஓர் இடமாகவே இது உள்ளது. காலிக் கோட்டை குறித்தும் அதில் வாழும் முஸ்லிம்கள் குறித்தும் அறிந்து கொள்வதற்காக நானும் காலிக் கோட்டைக்குச் சென்றேன்.
இலங்கையை ஆக்கிரமித்த போர்த்துக்கேயர் 1588 இல் காலிக் கோட்டையை நிர்மாணித்தனர். பின்னர், 17 ஆம் நூற்றாண்டில், இலங்கையை ஆக்கிரமித்த ஒல்லாந்தர் அதனைப் புணர்நிர்மாணம் செய்தனர். 130 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோட்டையினுள், பல புராதன வரலாற்றுச் சின்னங்கள் இருக்கின்றன.