ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் பல காரணிகள்
பங்கெடுக்கின்றன. சிந்தனைகள், கோட்பாடுகள், பெறுமானங்கள், உள்நாட்டு
மற்றும் சர்வதேச கள நிலவரங்கள், சவால்கள், சந்தர்ப்பங்கள், பல சமநிலை, உள்நாட்டு
பாதுகாப்பு, வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தல்கள், புவியரசியல்
நிலைமைகள், பொருளாதாரம் என்பன இதில் முக்கியமானவை.
இந்தப் பின்னணிகளில் நின்றுதான் ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை பகுப்பாய்வு
செய்ய வேண்டும். இதில் ஓரிரண்டு காரணிகளை மாத்திரம் வைத்துக் கொண்டு ஒரு நாட்டின்
வெளியுறவுக் கொள்கையை மதிப்பீடு செய்வது பொருத்தமில்லை.
சமகால துருக்கியின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் பல காரணிகள்
பங்கெடுத்துள்ளன. சிந்தனைகள், கொள்கைகள், களநிலவரங்கள்
அங்கு கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. அதுபோக சர்வதேச ஒழுங்கில் ஏற்பட்ட சில
மாற்றங்களும் அதன் வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் பங்கெடுத்துள்ளதை
அவதானிக்கலாம். துருக்கியின் அரசியல் ஆய்வாளர் இப்றாஹீம் காலீன், கடந்த 3 மூன்று
தசாப்தங்கில் துருக்கியன் வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் தாக்கம் செலுத்திய 4 காரணிகளைக்
குறிப்பிடுகிறார். அவற்றை மிகச் சுருக்கமாக இங்கு நோக்குவோம்.
1. 1989-1990 களில் முடிவுக்கு வந்த பணிப்போர்
ஒரு நேட்டோ உறுப்பு நாடு என்ற வகையில் ரஷ்ய கூட்டுக்கு எதிரான
ஐரோ-அமெரிக்கக் கூட்டைச் சார்ந்தே துருக்கி இருந்தது. இருப்பினும் 1990 காலப்பகுதியில் முடிவுக்கு வந்த பணிப்போருக்குப் பின்னர் துருக்கி பல
புதிய நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. இந்த வகையில் முன்னாள் சோவியத்
கூட்டிலிருந்த நாடுகளுடனும் துருக்கி உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. இது சர்வதேச
ரீதியல் புதிய பல சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் துருக்கிக்குப் பெற்றுக்
கொடுத்தது.
2. 9/11 தாக்குதல்கள்
2001/09/11 அமெரிக்க
இரட்டைக் கோபுரத் தாக்குதலோடு அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தததை
ஆரம்பித்தது. அத்தோடு, ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் ஆக்கிரமித்து
இரு நாடுகளையும் இனி இல்லை என்று சொல்லுமளவுக்கு தாக்கி சின்னாபின்னப்படுத்தியது.
தன்னை ஒரு ஜனநாயகக் காவலன் என்று சொல்லிக் கொண்ட போதும், அப்போதைய புஷ்
நிர்வாகம் பாதுகாப்பு மற்றும் கருத்துச் சுதந்திரம், சிவில்
உரிமைகள் என்பனவற்றுக்கிடையே சமநிலையைப் பேணத் தவறியது.
எனவே, உள்நாட்டிலும் பிராந்தியத்திலும் பாதுகாப்பு
மற்றும் கருத்துச் சுதந்திரம், சிவில் உரிமைகள் என்பனவற்றுக்கிடையிலான
சமநிலை பேணப்படாமையால் ஏற்படும் நிலையை துருக்கி மிகக் கவனமாகப் புரிந்து கொண்டது.
ஆகையால், சட்டம், துருக்கியில்
நீண்டகால பிரச்சினையாகத் தொடர்ந்து வரும் குர்திஷ் பிரச்சினை, முஸ்லிம்
அல்லாத சிறுபான்மையினர், அலவிக்கள், ஊடக
சுதந்திரம் குறித்து பல புதிய ஜனநாயக முன்னெடுப்பக்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த
அனைத்து ஜனநாயக முன்னெடுப்புக்களும் குர்திஷ் Pமுமு
பிரிவினைவாதிகளின் பலத்த பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மத்தியில் எடுக்கப்பட்டன
என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
3. 2007 ல் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடி
அமெரிக்காவில் ஆரம்பித்த பொருளாதார நெருக்கடி மிக வேகமாக ஐரோப்பா முழுவதும்
பரவி, அது ஐரோப்பிய பிரச்சினை என்ற வடிவெடுத்தது.
இந்த பொருளாதார நெருக்கடி உலக பொருளாதாரத்தை பல வகையிலும் பாதித்தது. இதனால் பல
அரசாங்கங்கள் -குறிப்பாக ஐரோப்பாவில்- பல புதிய மாற்றங்களை நோக்கி நகர
நிர்ப்பந்திக்கப்பட்டன. இது வெறும் பொருளாதாரப் பிரச்சினையான சுருங்கி விடாது பல
அரசாங்கங்களை சரிவுக்குட்படுத்துகின்ற அரசியல் பிரச்சினையாகவும் பரிமாணம் பெற்றது.
ஐரோப்பியப் பொருளாதாரத்தின் ஒரு பகுதி என்ற வகையில் துருக்கியின்
பொருளாதாரமும் இந்த நெருக்கடியால் பாதிப்புக்காளனது. இருப்பினும் அடுத்த நாடுகளை
விட மிக வேகமாக மீண்டு, வேகமாக வளரும் இரண்டாவது பொருளாதாரமாக
மாறியது. இந்தப் பொருளாதார அடைவுக்கான காரணம் துருக்கியின் அரசியல் ஸ்திராப்பாடும்
நல்லாட்சியும்தான்.
இந்தப் பொருளாதார நெருக்கடியின் விளைவால் பல நாடுகள், வெளிநாடுகளில்
தமது இராஜதந்திர தூதுக்களை குறைத்த போதும், துருக்கி பல
புதிய இராஜதந்திர தூதரகங்களை ஏற்படுத்தியது. இந்த வகையில் ஆபிரிக்கக் கண்டத்தில்
மாத்திரம் 20 தூதரகங்களை நிறுவியது. மொத்தமாக 2012 வரை 32 தூதரகங்கள் நிறுவப்பட்டன.
4. அரபு வசந்தம்
டீயூனிஸியாவின் ஜெஸ்மின் புரட்சியுடன் ஆரம்பித்த அரபு வசந்தம் உலக
ஒழுங்கில் புதிய மாற்றமொன்றைக் கொண்டு வந்த மிக முக்கிய நிகழ்வாகும். அரபுலகில்
ஜனநாயக மாற்றத்தை விரும்பிய மக்களின் திடீர் கொந்தளிப்பால் உருவான இந்த அரபு
வசந்தம் டியூனிஸியா, எகிப்து, லிபியா, யெமன் ஆகிய
நாடுகளை பல தசாப்தங்கள் ஆட்சி செய்த வந்த ஆட்சியாளர்களை வீழ்த்தியது.
இந்த அசாதாரண வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தில் அரபு மக்களின்
பக்கம் நிற்பதாக முடிவெடுத்த துருக்கி குறித்த நாடுகளில் ஏற்பட்ட மக்கள்
புரட்சிக்கு ஆதரவாகவே இருந்தது. இது ஏற்கனவே அரபு மக்களிடம் வளர்ந்து வந்து
கொண்டிருந்த துருக்கிக்கு ஆதரவான நிலைப்பாட்டை இன்னும் அதிகரிக்கச் செய்தது.
No comments:
Post a Comment