('2012 ல் இடம்பெற்று வரும் நிகழ்வுகளின் பின்னணியில், இலங்கை முஸ்லிம்கள்
எதிர்கொள்ளும் சவால்கள்' எனும் தலைப்பில், மீள்பார்வை ஊடக மையம்
12.12.2012 அன்று புதன்கிழமை
கொழும்பு தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில், விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்றை நடத்தியது. இதில் முஸ்லிம்
கவுன்ஸிலின் தலைவரும் நவமணி பிரதம ஆசிரியருமான அல்ஜஹாஸ் என்.எம் அமீன் ஆற்றிய உரையின்
முக்கிய பகுதிகளை இங்கு தொகுத்து வழங்குகிறேன். இந்தத் தொகுப்பு நான் மீள்பார்கை;காக செய்தது என்பதையும்
குறிப்பிட்டுக் கொள்கிறேன்.)
தொகுப்பு: அஷ்கர் தஸ்லீம்
நெருக்கடியானதொரு கால கட்டத்தில்
இதுபோன்றதொரு தலைப்பிலே இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள மீள்பார்வை ஊடக மையத்துக்கு
நாம் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். ஏனெனில், இது இந்தக் காலத்தின்
தேவையான ஒரு கலந்துரையாடலாக இருக்கின்றது. எங்களுடைய சமூகம் எதிர்நோக்கியிருக்கின்ற
சவால்கள் பற்றி நாங்கள் அறிந்து வைத்திருக்கின்ற கருத்துக்களை பகிர்ந்து கொள்வது பொருத்தமாக
இருக்கும்.
யுத்தத்துக்குப் பின்னரான
நிலை முஸ்லிம் சமூகத்துக்கு நல்லது நடக்கும் காலமாக இருக்கும் என்று நினைத்த போதும், நிகழ்ந்து வரும் சம்பவங்கள்
அந்த எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கும் வகையில் அமைந்துள்ளன.
48 மணிநேர அவகாசத்தில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை
மீள்குடியேற்றுவதாக இருக்கலாம், தெற்கு முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்த சூழ்நிலையைப் பாதிக்கின்ற
சம்பவங்களாக இருக்கலாம், முஸ்லிம்களின் கல்விப்
பிரச்சினையாக இருக்கலாம்,
வர்த்தக ரீதியான சவால்களாக
இருக்கலாம், அனைத்தும் மும்முரமடைந்து
இந்த சமூகத்துக்கு ஏதும் நடந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி காலத்துக்குக் காலம்
முஸ்லிம்களுக்கெதிரான அச்சுறுத்தல்கள் வந்திருக்கின்றன. வீரவிதான, ஜாதிக ஹெல உருமய, பொது பல சேனா என்று
இவை வருகின்றன. இவை எம்மை இலக்கு வைத்து செயற்படுகின்றன. வாரத்தில் குறைந்தது மூன்று
நாட்கள் ஒரு செய்தியாளர் மாநாட்டைக் கூட்டி அதன் இறுதியில் எமது சமூகத்தை இலக்கு வைத்து
முடிக்கிறார்கள்.
சிங்களப் பத்திரிகையொன்றில்
கொழும்பில் முஸ்லிம் சனத்தொகை அதிகரித்து வருவதாகவும் அது பற்றிய ஆசிரியர் தலையங்கமும்
எழுதப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் திட்டமிட்டு தமது சனத்தொகையைப் பெருக்குவதாக எங்கும்
செய்திகள் பரப்பப்படுகின்றன. இந்த நாட்டை நாம் பிடித்துவிடுவோமோ என்ற அச்சமேற்படும்
வகையில் சிங்களப் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவருகின்றன.
இதற்கான பின்னணியை நாம் ஆராய
வேண்டும். முஸ்லிம்கள் தேசிய அரசியல் நீரோட்டத்திலிருந்து ஒதுங்கியதுதானா காரணம் அல்லது
சில முஸ்லிம்கள் தம்மைப் பணக்காரர்களாக காட்டிக் கொண்டு வாழ்வதா அல்லது இஸ்லாத்தின்
தனித்துவத்தைப் பேணிச் செயற்படும் நிலையா என்று நாம் விரிவாக ஆராய வேண்டும்.
முஸ்லிம் சமூகம் இந்த நாட்டுக்காக
செய்த தியாகங்களைப் பாருங்கள். வடக்கு முஸ்லிம்கள் தாம் பேசுகின்ற மொழியையுடைய தமிழர்களுடன்
இணைந்திருந்தால், இன்று இந்த நாடு இருகூறாகப்
பிரிந்திருக்கும். ஆனால்,
அன்று வடக்கு முஸ்லிம்கள்
எடுத்த நிலைப்பாடுதான் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதற்கான காரணம். இப்படியான
தியாகத்தை முஸ்லிம்கள் செய்திருக்கிறார்கள்.
இந்தத் தியாகத்தை பெரும்பான்மை
சமூகம் உணராமல் இருப்பதுதான் எமக்கிருக்கின்ற பெரும் கவலை. இவர்கள் செய்த தியாகத்தை
இந்த நாடு மதிக்கும் என்று நினைத்தோம். துரதிர்ஷ்டவசமாக, இதனை, இந்த நாட்டு மக்கள்
நன்றியுடன் நோக்கினரா? என்பதுதான் பிரச்சினை.
இந்த நாட்டில் 17 முஸ்லிம் பாராளுமன்ற
உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறோம். இவர்கள் இந்த வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட
முஸ்லிம்களை சந்தித்திருக்கிறார்களா? இவர்கள் வௌ;வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
அரசாங்கத்துக்கு இவர்கள் பலமான
அழுத்தமாக இல்லாததன் காரணமாக, முஸ்லிம்கள் என்றால் தட்டிவிடலாம் என்ற உணர்வோ என்னமோ தெரியாது
இந்த மீள்குடியேற இருக்கின்ற முஸ்லிம்களின் நிலை வேதனைக்கு மேல் வேதனையாக இருக்கின்றது.
இன்று 20,000 முஸ்லிம் குடும்பங்கள்
மீள்குடியேறத் தயார் நிலையிலுள்ளனர். ஆனால், அவர்களைக் குடியேற்றுவதற்கான எந்த உருப்படியான நடவடிக்கையும்
எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
அண்மையில் முஸ்லிம் கவுன்ஸில்
ஒஃப் ஸ்ரீலங்கா வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள் நிறைவடைவதை
முன்னிட்டு, BMICH ல் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தது. அதில் கலந்து
கொண்ட அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள், வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவு கூரும் கடைசி நிகழ்வு
இதுவாக இருக்கும் என்று கூறினார்.
இன்ஷா அல்லாஹ் இதற்கான நடவடிக்கைகள்
எடுக்கப்படும். முஸ்லிம்கள் இங்கு குடியேறாவிட்டால், வாத்துவ என்ற நகரத்தில் முன்பு முஸ்லிம்கள் வாழ்ந்து, பின்னர் அங்கு இருந்ததற்கான
எந்த அடையாளமும் இல்லாமல் போனது போன்று, மன்னாரிலும் ஏனைய பிரதேசங்களிலும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும்
இருக்கின்றது.
முஸ்லிம்கள் பிள்ளைகளைப் பெற்று
2032 ஆம் ஆண்டாகும் போது
இந்த நாட்டில் 52 வீத முஸ்லிம் சனத்தொகை
என்ற இலக்கை அடைவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது.
அண்மையில் வெளிவந்த லக்பிம
இதழொன்றில், கொழும்பு நகரில் சிங்கள
மக்களின் தொகை 24 வீதமாக வீழ்ச்சி
கண்டிருப்பதாகவும், முஸ்லிம்களதும் தமிழர்களதும்
தொகை அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இத்தனைக்கும் முஸ்லிம்கள்
இங்கு பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்றனர்.
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும்
குறிவைத்து 19 வெப்தளங்கள் செயற்படுகின்றன.
இது பற்றி ஜனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். இந்த
வெப்தளங்களைப் பார்ப்பவர்கள் எங்களைப் போன்ற வயதானவர்களல்லர். 14 முதல் 35 வயதுடையவர்களே இவற்றைப்
பார்க்கின்றனர். ஒரு பொய்யைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்ற போது அது உண்மையாகத்
தோன்றலாம்.
அண்மையில் அவர்கள் பேசத் தொடங்கியுள்ள
இன்னொரு விவகாரம்தான், ஜம்இய்யதுல் உலமாவின்
ஹலால் சான்றிதழ் விவகாரம். முஸ்லிம்களுக்குத்தான் ஹலால் தேவை. அதற்காக நாம் ஏன் அதிக
விலை கொடுத்து பொருட்கள் வாங்க வேண்டும் என்று அவர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
பாராளுமன்றத்திலே கூட்டிணைக்கப்பட்டுள்ள
ஜம்இய்யதுல் உலமாவின் குறிக்கோள்கள்: இலங்கையில் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்தல், பாதுகாத்தல் என்று
அமைந்திருக்கின்றன. எனவே,
இஸ்லாமிய பிரச்சாரத்துக்காக
ஏன் நாம் செலவழிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.
கொழும்பிலுள்ள 22 முஸ்லிம் பாடசாலைகளிலிருந்து, 2 அல்லது 3 பேரே பல்கலைக்கழகம்
நுழைகின்றனர். ஒரு தடவை மாளிகாவத்தையிலுள்ள அப்பிள் வத்தையிற்கு ஒரு பரிசளிப்பு விழாவிற்காக
சென்றிருந்தேன். சிறிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிவிட்டு, ஒரு பெரிய மாணவரை
பரிசு பெற அழைத்தார்கள். இவருக்குப் பரிசு வழங்குவதற்கான காரணம், இந்த பிரதேசத்தில்
உயர்தரம் கற்கும் முதல் மாணவர் இவர் என்பதுவே. இதுதான் முஸ்லிம்களின் கல்வி நிலை.
ஜாதிக ஹெல உருமயவின் முக்கியஸ்தரான
அத்துரலிய ரத்தன தேரருடன் நாம் முஸ்லிம் கவுன்ஸில் நடாத்திய கலந்துரையாடல்களின்போது, எமது வர்த்தகர்களின்
நிலை பற்றிக் கூறினோம். தொடர்ந்தும் மழை பெய்தால் எமது சில்லறை வர்த்தகர்களின் வீட்டில்
அடுப்பெரிவது கூட சந்தேகம் என்று சொன்னோம். எங்களிடம் எத்தனை கூட்டுறவு கம்பனிகள் இருக்கின்றன
என்று கேட்டோம்.
எமது நாட்டில் எமக்காகப் பேசுகின்ற
மாற்று மதத்தவர்களை நாம் உருவாக்கத் தவறியிருக்கிறோம். தம்புள்ளைப் பிரச்சினையில் போதியளவு
மாற்றுமத தலைவர்கள் எமக்காகப் பேசியதாக நாம் அறியவில்லை. நீங்கள் சிலவேளை அறிந்திருக்கிறீர்களோ
தெரியாது. சிலவேளை இடதுசாரிக் கட்சிகளைச் சார்ந்தவர்கள் பேசுகிறார்கள். ஆனால், தேசியக் கட்சிகளிலிருந்து
யாரும் பேசுவதாக இல்லை.
சுனாமிக்குப் பிறகு உருவாக்கப்பட்ட
முஸ்லிம் கவுன்ஸில் ஒஃப் ஸ்ரீலங்கா அமைப்பில் 110 நிறுவனங்கள் இணைந்திருக்கின்றன. நாம் அண்மையில் ஜாதிக ஹெல உருமயவுடன்
இரண்டரை மணித்தியாலம் பேசினோம். அவர்கள் பல விடயங்களைக் கேட்கிறார்கள்.
அண்மையில் உங்களது பெண்கள்
முகத்தை மறைக்கத் தொடங்கியிருக்கிறார்களே, மலேஷியாவிலோ இந்தோனேஷியாவிலோ இப்படியில்லை. நீங்கள் பாகிஸ்தானைப்
பின்பற்றுகிறீர்களா என்று வினவினார்கள். நீங்கள் தனிமாகாணம் கேட்கிறீர்களே என்றெல்லாம்
அவர்கள் கேட்டார்கள். இவை தொடர்பான எமது நிலைப்பாட்டை நாம் அவர்களுக்குத் தெளிவாக விளக்கினோம்.
நாம் சவால்களை எதிர்கொள்ள
ஒற்றுமையாக வேண்டும். எமக்கான தினசரி ஒன்று தேவை. ஊடகப் பலமே இன்றைய தேவையாகும். சிங்களத்திலும்
ஆங்கிலத்திலும் குறைந்தது ஒரு வார இதழையாவது நாம் கொண்டு வர வேண்டும்.
No comments:
Post a Comment