ஆபித் ருஷ்தி
பதுல்லையைச் சேர்ந்தவர். இலங்கையில் முதன்முறையாக ஆளில்லா விமானத்துக்கான
தொழினுட்பத்தை கண்டுபிடித்த குழுவில் இவரும் ஒருவர். இது ஆபித்துடன் நான்
மேற்கொண்ட நேர்காணல்.
ஆரம்பமாக உங்களைப்
பற்றிச் சொல்லுங்கள்
நான் ஆபித் ருஷ்தி. எனது ஊர்
பதுல்லை. நான் பதுல்லை மத்திய கல்லூரியில் சிங்கள மொழியில் கற்றேன். 2007 உயர்தரப் பரீட்சையில்
மாவட்டத்தில் முதலாவதாகவும் நாடளாவிய ரீதியில் 34 ஆவதாகவும் நான் சிந்தியடைந்தேன். இந்த வருடம் ஆரம்பத்தில்
மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல் மற்றும் டெலிகொமினிகேஷன் பொறியியலாளராக பட்டம்
பெற்று வெளியேறினேன்.
எனது தந்தை முஹம்மத் ஸாதுல்லாஹ்.
அவர் இலங்கை மின்சார சபையில் பொறியியலாளராகக் கடமையாற்றினார். அதிலிருந்து ஓய்வு பெற்ற
அவர் தற்போது குடும்ப வியாபாரமொன்றை நடாத்தி வருகிறார். எனது தாய் இஸ்ஸதுல் வஸீமா ஒரு
இல்லத்தரசி. எனது மூத்த சகோதரன் பிஷார் ஹாதி மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இரண்டு வருடங்களுக்கு
முன்னர் சிவில் பொறியியலாளராக பட்டம் பெற்று வெளியேறினார். எனது இளைய சகோதரன் ஸாஜித்
உஸாமா கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 3 ஆவது வருடத்தில் கற்கிறார்.
நீங்கள் தயாரித்திருக்கின்ற
இந்த ஆளில்லா விமானம் பற்றி சொல்லுங்கள்
எமது பட்டப்படிப்பின் இறுதி
செயற்திட்டமாகவே இதனை நாம் செய்தோம். பேராசிரியர் ரொஹான் முனசிங்கவி;ன வழிகாட்டலின் கீழ்
அனுரத்த தென்னகோன், ருமேஷ் வத்ஸல்யா, அஷோக் அரவிந்த ஆகியோரும்
நானும் இணைந்து இதனை நிர்மாணித்தோம். இது ஒரு UAV (ஆளில்லா விமானம்)
என்றே பலரும் கதைத்துக் கொண்டனர். உண்மையில் இதனை ஒரு UAV என்று சொல்ல முடியாது. இது ரெஜிஃபோமால் செய்யப்பட்ட ஒரு சிறிய விமானம். இதில்
எமது முக்கிய இலக்காக இருந்தது Auto Pilot System என்ற பகுதியை இதில்
உருவாக்குவதுதான்.
இந்த தொழினுட்பம் இஸ்ரேல், அமெரிக்கா, பாகிஸ்தான் போன்ற
நாடுகளில்தான் காணப்படுகின்றது. இந்தத் தொழினுட்பத்தை அவர்கள் இரகசியமாகவே வைத்திருப்பார்கள். இதனை ஒரு உற்பத்தியாகவன்றி தொழினுட்பமாக அவர்கள்
விற்பது கிடையாது. அதனை வாங்குவதாக இருந்தாலும் இலங்கைப் பணப் பெறுமதியின்படி பில்லியன்
கணக்கில் செலுத்த வேண்டி வரும். ஆனால், அதன் உண்மையான உற்பத்தி செலவு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
எனவே, இலங்கையில் இந்தத்
தொழினுட்பத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவையொன்று உள்ளது. இந்தத் தொழினுட்பத்தின்
மூலம் விமானத்தை அனுப்பி பல வேலைகளை செய்யலாம். உதாரணமாக சுனாமி, வெள்ள அனர்த்தங்களின்போது
இதனை அனுப்பி என்ன நடந்திருக்கின்றது என்பதை அவதானிக்க முடியும். அதேபோன்று கடலோரங்களில்
நடக்கும் கடத்தல்கள், காடுகளில் நடக்கின்ற
சட்டவிரோத செயல்களை அவதானிக்க முடியும். எனவே, இலங்கைக்கு ஒரு உள்நாட்டுத் தொழினுட்பம் மிகவும் அவசியமாக இருந்தது.
இப்போது இலங்கையில் பயன்படுத்தப்படும்
UAV (ஆளில்லா விமானங்கள்) இஸ்ரேலிலிருந்து பெறப்பட்டவை.
இதில் ஒரு சிறிய கோளாறு ஏற்படினும், அதை சரிசெய்ய இஸ்ரேல் நாட்டவர்களே வர வேண்டும். இலங்கை இந்தத்
தொழினுட்பத்தை செய்வதில் மிகப் பெரும் தடையாக இருந்தது Auto Pilot System ஆகும். இதனை இப்படி விளக்கலாம். அதாவது, Auto Pilot System உள்ள விமானத்துக்கு
யாழ்ப்பாணம் போய் வரும்படி நாம் தகவல் கொடுத்தால், அது சுயமாகவே யாழ்ப்பாணம் போய்வரும். இந்தத் தொழினுட்பத்தை
செய்வதுதான் எமது முக்கிய நோக்கமாக இருந்தது.
இந்த தொழினுட்பத்தை பரீட்சித்துப்பார்ப்பதற்கு
நாம் ஒரு சிறிய அளவிலான விமானத்தை நிர்மாணித்தோம். இதனை நாம் 12 நிமிடங்களுக்கு 200 மீட்டர் உயரத்திற்குள்
பயணிக்குமளவுக்கு செய்திருக்கிறோம். எமது பார்வையை விட்டும் விமானம் மறைந்து விட்டால்
அதனை கண்காணிப்பதற்கான ஒரு மென்பொருளை நாம் தயாரித்திருக்கிறோம். இதன் மூலம் விமானம்
எங்கிருக்கின்றது, எந்தத் திசையில் பயணிக்கின்றது, விமானத்தின் மின்கல
சக்தி எவ்வளவு இருக்கின்றது போன்ற தகவல்களை உடனுக்குடன் பெறலாம்.
நாம் இந்த விமானத்தை தயார்
செய்தபோதும் எமக்கு இதனை வானில் பறக்க வைப்பதற்கு தெரியாமல் இருந்தது. எனவே, பொழுதுபோக்காக விமானம்
பறக்க விடும் ஒரு கழகத்தைச் சேர்ந்த பசிந்து மதுசன்க என்ற 20 வயது மாணவனொருவர்
எமக்கு இதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
நீங்கள் ஒரு நிலைக்குத்தான்
இந்தத் தொழினுட்பத்தை அபிவிருத்தி செய்துள்ளீர்கள். இதற்கப்பால் இதனை அபிவிருத்தி எப்படி
முன்னெடுக்கப்படப் போகின்றது?
ஒரு கண்டுபிடிப்பை மேற்கொள்ளும்
பணியைத்தான் பல்கலைக்கழகத்தால் செய்ய முடியும். அதனை தேசிய அபிவிருத்திக்காக ஒரு தொழிற்துறையாக
வளர்த்தெடுக்கும் வேலையை அரசாங்கம் பொறுப்பெடுத்து செய்ய வேண்டும். இது குறித்த கலந்துரையாடல்கள்
பாதுகாப்பு அமைச்சுடனும் விமானப் படையுடனும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்தத் தொழினுட்பத்தை அபிவிருத்தி
செய்யும் பணியை பல்கலைக்கழகம் மேற்கொள்கின்றது. எமது கீழ்வகுப்பு மாணவர்கள் இந்த தொழினுட்பத்தை
ஒரு பெரியளவு விமானத்தில் பொருத்தி அதற்குத் தேவையான அபிவிருத்திகைள செய்யும் வேலையைப்
பொறுப்பெடுத்திருக்கிறார்கள். இப்படி இந்த தொழினுட்பத்தை அபிவிருத்தி செய்யும் பணியை
பல்கலைக்கழகத்தால் செய்ய முடியும்.
உங்கள் எதிர்காலத்
திட்டங்கள் என்ன?
நான் தற்போது நிறுவனமொன்றில்
பொறியியலாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன். உண்மையில் இலங்கையில் இந்தத் துறையில்
முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்புக்கள் குறைவு. என்றாலும், இலங்கையின் இலவசக்
கல்வியினாலேயே நான் படித்துள்ளேன். எனது பெற்றோர் இங்குதான் இருக்கிறார்கள். எனவே, வெளிநாடு செல்லும்
திட்டங்கள் இல்லை. இலங்கையில் கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்துவேன்.
இளம் வயதில் இந்தத்
தொழினுட்பத்தை கண்டுபிடித்துள்ளீர்கள். இது ஒரு சாதனை. இந்த வகையில் இளைஞர் யுவதிகளுக்கு
நீங்களும் கொடுக்க விரும்பும் செய்தி என்ன?
பொதுவாக முஸ்லிம் சமூகத்தைப்
பார்த்தால், கல்வியில் கொஞ்சம்
பின்தங்கியிருப்பதாக உணரப்படுகிறது. நான் ஒரு தடவை மாணவர்களுக்கான நிகழ்ச்சியொன்றை
நடாத்துவதற்கு ஒரு பாடசாலைக்குச் சென்றேன். அப்போது ஒரு மாணவன், தான் சாதாரண தரத்துக்
பின்னர் ஒரு கடையை நடாத்தப்போவதாகவும், நான் படித்து முடித்தும் இன்னும் அலைந்து கொண்டிருப்பதாகவும்
குறிப்பிட்டார்.
நாம் கற்பவை ஒரு நாளும் வீணாகப்போவதில்லை.
நாம் வியாபாரம் செய்வதாக இருந்தால், நாம் கற்பவற்றைக் கொண்டு அதனை இன்னும் வளர்த்துக் கொள்ளலாம்.
எனவே, ஒரு இலக்கை வகுத்துக்
கொண்டு கற்கத் தொடங்க வேண்டும்.
நீங்கள் கற்றது ஒரு
சிங்களப் பாடசாலையில். ஒரு முஸ்லிம் பாடசாலைச் சூழலை விட அது வித்தியாசமானது. அங்கு
சிங்களவர்களுடனேயே அதிகமாகப் பழக வேண்டியுள்ளது. எனவே, சிங்களவர்களுடனான
உறவை நீங்கள் எவ்வாறு கையாண்டீர்கள்?
இரு கலாசாரங்களுக்கிடையில்
நெருக்கடியொன்று இருக்கையில் பிரச்சினைகள் எழுவது இயல்பு. இதன்போது அவர்களுடைய மனதை
நோகடிக்காது அதனைக் கையாள வேண்டும். அடுத்த முக்கியமான விடயம், சிங்களப் பாடசாலைகளில்
படிக்கும் மாணவர்களது வீட்டில் சிறந்த மார்க்க வழிகாட்டல்கள் அவர்களுக்குக் கொடுக்கப்படல்
வேண்டும். இல்லாதபோது, கல்வியில் சிறந்து
விளங்குவார்கள். மார்க்க விடயங்களில் பலவீனமாக இருப்பார்கள். இப்படியான சிறந்த மார்க்க
வழிகாட்டலும் பின்னணியும் எனக்குக் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்.
இலங்கைக்கு முஸ்லிம்கள்
செய்யும் பங்களிப்பு குறைவு என்றதொரு குற்றச்சாட்டு இருக்கையிலேயே நீங்கள் முக்கியமான
இந்த தொழினுட்பத்தை கண்டுபிடித்திருக்கிறீர்கள். இதன் மூலம் இந்த நாட்டுக்கு நீங்கள்
சொல்ல வரும் செய்தி என்ன?
முஸ்லிம்கள் பங்களிப்புச்
செய்வதில்லை என்று சொல்வது கஷ்டம். செய்யும் பங்களிப்புக்கள் அழுத்திச் சொல்லப்படுவதில்லை.
ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம்களில் வரையறுக்கப்பட்டோரே கல்வியைத் தொடர்கின்றனர்.
இருந்தாலும், பலர் இந்த நாட்டுக்குப்
பங்களிப்புச் செய்கின்றனர்.
உங்களது கல்விப் பயணத்துக்கு
பலரும் உறுதுணையாக இருந்திருப்பார்களே!...
ஆம். எனது பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள், பாலர் பாடசாலை முதல்
பல்கலைக்கழகம் வரை எனக்குக் கற்பித்த ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் என அனைவருக்கும் நான் எனது நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன். விசேடமாக எனது சிறிய தந்தை பஸ்லுல்ஹக் மற்றும் அவரது குடும்பத்துக்கு
நான் எனது நன்றிகளைத் தெரிவிக்கிறேன். ஏனெனில், நான் பல்கலைக்கழத்தில் இருந்தபோதும், நோய்வாய்ப்பட்டால்
அல்லது வேறு தேவைகளின்போது;
இங்குதான் அடிக்கடி
வருவேன்.
No comments:
Post a Comment