Thursday, June 16, 2016

நீதிக்காகக் குரல் கொடுத்த துணிச்சல் வீரன் முஹம்மத் அலி!


-அஷ்கர் தஸ்லீம்-

உலக குத்துச் சண்டை வீரர் முஹம்மத் அலியின் மரணம் சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. ஒரு குத்துச் சண்டை வீரர் என்பதற்கப்பால், முஹம்மத் அலியின் அரசியல் நிலைப்பாடுகளும், சமூகப் போராட்டமுமே அவருக்கு உலகெங்கும் பெருமளவு அபிமானிகளையும் ஆதரவாளர்களையும் பெற்றுக் கொடுத்துள்ளது. 

அமெரிக்க பிரஜையான முஹம்மத் அலி, ஆபிரிக்க பூர்வீகத்தவர். அமெரிக்காவில் நிலவி வந்த, ஆபிரிக்க பூர்வீகத்தவர்களுக்கு எதிரான இனவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில், சுய அபிமானத்துடன் எழுந்து நின்று, உலகளவில் பேசப்படும் ஒரு ஆளுமையாக அவர் தன்னை சமைத்துக் கொண்டவர்.

1942 ஜனவரி 17 ஆம் திகதி அமெரிக்காவில் பிறந்த முஹம்மத் அலியின் இயற் பெயர் கெஸியஸ் க்ளே என்பதாகும். கிறிஸ்தவ மதத்தில் பிறந்த அவர், பிற்காலத்தில் இஸ்லாத்தைத் தழுவி, தன் பெயரையும் முஹம்மத் அலி என்று மாற்றிக் கொண்டார். அவரது இயற்பெயரில் உள்ள க்ளே என்ற சொல் கருப்பு அல்லது களி என்று பொருள்படுவதால், அவர் அதனைப் பயன்படுத்துவதை வெறுத்தார்.

முஹம்மத் அலியின் தந்தை ஒரு பெய்ன்டர் ஆக பணி புரிந்து வந்ததோடு, தாயார் பணக்கார வீடுகளில் சமையல் வேலைகள் செய்து வந்தார். முஹம்மத் அலியின் வாழ்வின் ஆரம்பக் கூறுகளின்போது, அவர் வாழ்ந்த பகுதியில் ஆபிரிக்க கறுப்பு இனத்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் பெருமளவு காணப்பட்டது. இதனால் முஹம்மத் அலியும் பாதிக்கப்பட்டிருந்தார். 



முஹம்மத் அலிக்கு 12 வயதாக இருக்கும்போது, அவரது பிறந்த தினத்தின்போது, அவரது பெற்றொர் அவருக்கு ஓர் சைக்கிளை பரிசாகக் வாங்கிக் கொடுத்திருந்தனர். இந்த சைக்கிளை ஓட்டியவாறு சந்தைக்குச் சென்றிருந்தார் முஹம்மத் அலி. சந்தையில், இந்த சைக்கிளை ஒருவன் திருடி விடுகிறான். கோபம் கொண்ட முஹம்மத் அலி, திருடியவன் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்ததோடு, திருடனைத் தேடி அடிப்பதாகவும் கடிந்து கொண்டார்.

இந்த சம்பவம் நடக்கும்போது, ஜோ மார்டின் என்ற பொலிஸ் அதிகாரி கடமையிலிருந்தார். சிறுவன் முஹம்மத் அலியை அனுகிய அவர், திருடனைத் தேடி அடிக்கும் முன்னர், எப்படி சண்டையிடுவது என்று கற்றுக் கொள்ளுமாறு முஹம்மத் அலிக்கு ஆலோசனை வழங்கினார். ஈற்றில், ஜோ மார்டினே முஹம்மத் அலியின் முதலாவது குத்துச் சண்டை பயிற்றுவிப்பாளராகவும் மாறினார்.

குத்துச் சண்டையில் அதிக ஆர்வம் காட்டிய முஹம்மத் அலி, 18 வயதாகும்போதே, 1960 இல் ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், குத்துச் சண்டைப் போட்டியில் பங்குபற்றிய அவர், தங்கப் பதக்கத்தையும் சுவீகரித்துக் கொண்டார்.

தனது திறமை குறித்து மிகுந்த சுய அபிமானம் கொண்டிருந்த முஹம்மத் அலி, ரோமில் இருக்கும்போது அப்பதக்கத்தை அணிந்த வண்ணமே இருந்தார். அமெரிக்காவுக்குத் திரும்பும்போதும், அப்பதக்கத்தை அணிந்தே வந்தார். அமெரிக்கா வந்திறங்கிய முஹம்மத் அலிக்கு, அவரது ஊரில் பலத்த வரவேற்பு வழங்கப்பட்டது.

தொடர்ந்தும், குத்துச் சண்டைப் போட்டிகளில் மிக ஆர்வத்துடன் பங்குபற்றி வந்த முஹம்மத் அலி, உலக சம்பியனாக பரிணமித்தார். முன்னணி குத்துச் சண்டை வீரர்களை வீழ்த்தி, உலக நாயகனாக வலம் வந்தார் முஹம்மத் அலி. அமெரிக்காவில் வாழ்ந்து வரும் ஆபிரிக்க பூர்வீகத்தவர் மத்தியில் மிகப் பிரபலம் வாய்ந்த ஆளுமையாக விளங்கிய மெல்கம் எக்ஸடனான தொடர்பு, முஹம்மத் அலிக்கு இஸ்லாம் மதத்தின் பாலான ஆர்வத்தை ஏற்படுத்தியது.

மிக இளம் வயதிலேயே -1964- இஸ்லாம் மதத்தின் பால் ஆர்வம் கொண்ட முஹம்மத் அலி, இஸ்லாத்தைத் தழுவி, அதுவரை கெஸியஸ் க்ளே என்றிருந்த தனது பெயரையும் முஹம்மத் அலி என்று மாற்றிக் கொண்டார். நேஷன் ஒஃப் இஸ்லாம் என்ற இயக்கத்தின் முக்கியஸ்தரான அலிஜா முஹம்மதே முஹம்மத் அலிக்கு அப்பெயரைச் சூட்டினார்.

இஸ்லாமிய மத வட்டங்களில் சர்ச்சைக்குரிய இயக்கமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தநேஷன் ஒஃப் இஸ்லாம் என்ற அமைப்போடு நெருக்கமாக இருந்த முஹம்மத் அலி, சிறிது காலத்தில் அதனை விட்டொதுங்கி, இஸ்லாத்தின் பிரதான நீரோட்டத்தில் இணைந்து கொண்டார்.

ஒரு குத்துச் சண்டை வீரர் என்பதற்கப்பால், முஹம்மத் அலிக்கு சர்வதேச அபிமானத்தைப் பெற்றுத் தந்த மிக முக்கியமான விடயம், அவரது நியாயமான, தீர்க்கமான அரசியல் நிலைப்பாடுகள் தான். 1967 இல் அமெரிக்கா வியட்நாமில் மேற்கொண்டு வந்த, யுத்தத்தில் பங்கெடுக்கும்படி முஹம்மத் அலிக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தன்னை எதிர்க்காத, தன் மீது அடக்குமுறையைப் பிரயோகிக்காத ஒரு இனத்தவருக்கெதிராக தான் ஏன் யுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் உரக்கச் சொன்னார். அத்தோடு, தான் பின்பற்றும் இஸ்லாம் மதம், வன்முறைகளை அங்கீகரிப்பதில்லை, இந்த யுத்தம் எனது மதத்துக்கு முரணானது என்றும் உரக்கக் கூறினார்.

அமெரிக்கா வியட்நாமில் புரிந்த அட்டூழியங்களில் பங்கெடுக்க விரும்பாத முஹம்மத் அலி, அமெரிக்காவில் ஆபிரிக்க பூர்வீகத்தவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் எதிர்த்து வந்தார். வியட்நாம் யுத்தத்தில் பங்கெடுக்க மறுத்தமையால், முஹம்மத் அலியின் சம்பியன் பட்டம் பறிக்கப்பட்டதோடு, 10,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டு, போட்டித் தடைகளுக்கும் உள்ளானார்.

முஹம்மத் அலியின் ரசிகர்களுள் எல்விஸ், பேட்ரன்ட் ரஸல், நெல்சன் மண்டேலா போன்ற பெரும் புள்ளிகளும் அடங்குகின்றனர். உலக இடதுசாரி மற்றும் அமெரிக்க எதிர்ப்பு தளங்களில் மிகுந்த மரியாதைக்குரியவராகத் திகழும் முஹம்மத் அலியை பல சர்வதேச தலைவர்கள் சந்தித்துள்ளனர்.

1980 இல் இந்தியாவின் தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் விருந்தினராக சென்னையைத் தரிசித்த முஹம்மத் அலி, ஜவஹார்லால் நேரு அரங்கில் நடைபெற்ற காட்சி போட்டியொன்றிலும் கலந்து கொண்டிருந்தார். இந்நிகழ்வின் இறுதியில் முஹம்மத் அலிக்கு மாலை அணிவித்து தமிழ்நாட்டு முதல்வர் எம்.ஜி.ஆர். மரியாதை செலுத்தியுள்ளார். நம் நாட்டு மாணிக்க வியாபாரியும், பிரபல கொடை வல்லலுமான நளீம் ஹாஜியாரும் முஹம்மத் அலியை சந்தித்து உரையாடியுள்ளார்.

வியட்நாம் யுத்த முரண்பாடு மற்றும் ஆபிரிக்க பூர்வீகத்தவருக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் என்பவற்றால் விசனமடைந்திருந்த முஹம்மத் அலியை சமாதானப்படுத்தும் நோக்கில், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி கெரல்ட் போர், 1974இல் முஹம்மத் அலியை வெள்ளை மாளிகைக்கு அழைத்திருந்தார்.

முஹம்மத் அலி ஒரு இராஜதந்திரி அல்லாதபோதும், அமெரிக்காவிலும் அதற்கு வெளியிலும் அவர் கொண்டிருந்த செல்வாக்கு காரணமாக, பல்வேறு இராஜதந்திர நடவடிக்கைகளில் அவர் ஈடுபட வேண்டியேற்பட்டது.

1980 இல் மொஸ்கோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டியை புறக்கணிப்பதற்காக, ஆபிரிக்க நாடுகளை வசப்படுத்தும் பணியில் ஈடுபடுவதற்காக, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி கார்டர் முஹம்மத் அலியை ஆபிரிக்க நாடுகளுக்கு அனுப்பியிருந்தார்.

சத்தாம் ஹஸைன் குவைத்தை ஆக்கிரிமித்தபோது, பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த அமெரிக்கர்களை விடுதலை செய்வதற்கான இராஜதந்திரப் பணியிலும் முஹம்மத் அலி ஈடுபட்டிருந்தார். இதற்காக ஈராக் பயணமாகினார் அவர். இந்த முயற்சியின் பலனாக 15 அமெரிக்க பணயக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

1980 களின் ஆரம்பத்தில் பார்கின்சன் என்ற நோய்க்கான அறிகுறிகள் முஹம்மத் அலியில் தெரியத் தொடங்கின. இருப்பினும், தனது ஓயாத சமூகப் போராட்டத்தை முடித்துக் கொள்ள விரும்பாத முஹம்மத் அலி, அனைத்துத் தளங்களிலும் இயங்கி வந்தார்.

குத்துச் சண்டையிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னர், சமூக சேவையில் அதிக நாட்டம் காட்டத் தொடங்கிய முஹம்மத் அலி, வட கொரியா, ஆப்கானிஸ்தான், கியூபா போன்ற நாடுகளுக்கு நல்லெண்ணத் தூதுவராகப் பயணம் மேற்கொண்டார்.

கியூபாவுக்கு ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான மருத்துவ உதவிகளையும் கையளித்திருந்தார். 1990 இல் அமெரிக்காவின் லொஸ் ஏன்ஜல்ஸ் நகரில், நெல்சன் மண்டேலாவை சந்தித்த முஹம்மத் அலி, அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்.

இவ்வாறு குத்துச் சண்டை வலையத்துக்கு அப்பால், சமூக நீதிக்காக செயற்பட்ட முஹம்மத் அலி, கடந்த 4 ஆம் திகதி மரணித்தார். அவரது மரண செய்தி, சமூக நீதிக்காக உழைக்கும் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments: