Thursday, June 16, 2016

இஸ்ரேல் தவிர்ந்த அனைவரும் எமது நண்பர்களே! - பலஸ்தீன தூதுவர் சுஹைர் ஹம்துல்லாஹ் ஸைத்


(இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் சுஹைர் ஹம்துல்லாஹ் ஸைத் அவர்களுடனான நேர்காணல்)

நேர்காணல்: அஷ்கர் தஸ்லீம்
(Navamani 10.06.2016)

கேள்வி:- இலங்கை முஸ்லிம்கள் பலஸ்தீன போராட்டம் குறித்து அறிந்திருக்கின்றபோதும், ஏனைய சமூகத்தினர் அவ்வளவாக அறிந்தில்லை. எனவே, பலஸ்தீனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போராட்டம் குறித்த சுருக்கமான அறிமுகமொன்றைத் தாருங்கள்.

பதில்:- அனைத்து இலங்கையரும் பலஸ்தீன் விவகாரம் குறித்து புரிந்து வைத்திருக்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன். குறிப்பாக இனம் மதம் என்பவற்றுக்கு அப்பால் நம்மோடு தொடர்பு வைத்திருக்கின்றவர்கள், பலஸ்தீனப் போராட்டம் குறித்து நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். இலங்கையில் இனம், மதம், குழுக்கள் என்ற பிரிவுகளுக்கு அப்பால் அனைத்து இலங்கையரும் எம்மோடு நல்லுறவு வைத்திருக்கிறார்கள். இதற்கு அல்லாஹ்வுக்கு நாம் நன்றி கூற வேண்டும்.

இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகத்தினர், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று அனைத்துத் தரப்புக்களும் எம்மோடு நல்லுறவு கொண்டுள்ளனர். நான் பல்வேறு சந்தர்ப்பங்களிலும், நிகழ்வுகளிலும் இதனை அவதானித்திருக்கிறேன்.

சர்வதேச சமூகத்தின் உதவியோடு பலஸ்தீன் என்ற நாடு உருவாகியுள்ளது. 150 க்கும் மேற்பட்ட நாடுகள் பலஸ்தீனை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டுள்ளன. தற்போது ஐ.நா. சபையிலும் பலஸ்தீன கொடி ஏற்றப்படுகின்றது. உலகின் ஏனைய பகுதிகளைப் போன்றே பலஸ்தீனும் ஒரு பகுதிதான். உஸ்மானிய சாம்ராஜ்யாத்தின் ஒரு பகுதியாகவும், இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவும் அது இருந்தது. வரலாறு இதற்கு சாட்சியமாக உள்ளது.

சைக்ஸ் பீகோ உடன்படிக்கை அரபுலகத்தைத் துண்டாடி, பிரான்ஸையும் பிரித்தானியாவையும் இப்பிராந்தியத்தின் அதிகாரத்துக்குக் கொண்டு வந்தது. முதலாம் மற்றும் இரண்டாம் உலக மகா யுத்த காலப் பகுதியில் தேசியவாதம் வளர்ந்தது. நவீன உலக ஒழுங்கும் அக்காலப் பகுதியில்தான் உருவாகியது. எனவே, முஸ்லிம், கிறிஸ்தவ, சிறியளவு யூதாகளைக் கொண்ட பலஸ்தீனிலும் இதன் செல்வாக்கு இருந்தது.



பிரித்தானியா பலஸ்தீனில் அதிகாரத்தக்கு வரு முன்னர், பலஸ்தீனில் 3 வீதமான யூதர்களே இருந்தனர். பின்னர், ஐரோப்பாவிலிருந்த யூதர்கள் பலஸ்தீனுக்கு இடம்பெயரலாயினர். ஆரம்பத்தில் பலஸ்தீனர்கள் அனுதாபத்துடன் அவர்களை வரவேற்றனர். ஆனால், பின்னர்தான் தெரியவந்தது, ஆக்கிரமிப்பு செய்து அவர்களுக்கான ஒரு நாட்டை உருவாக்கத்தான் அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள் என்று.

போல்ஃபர் உடன்படிக்கையின்போது இதுதான் நடைபெற்றது. பலஸ்தீனை யூதர்களுக்கு வழங்குவதற்கு போல்ஃபருக்கு என்ன உரிமை உள்ளது? அவருக்கு சொந்தமில்லாத பலஸ்தீன பூமியை, யூதர்களுக்கு அவர் எவ்வாறு வழங்குவார்? பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியையோ, அல்லது பிரித்தானியாவின் வேறொரு பகுதியையோ, யூதர்களுக்கு அவர் வழங்க வேண்டியதுதானே!

பலஸ்தீனர்களை, அவர்களது கிராமங்களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் வெளியேற்றி, அவற்றின் இடிபாடுகளின் மேலேயே இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. மேற்குலகின் ஒத்துழைப்பும் இஸ்ரேலுக்குக் கிடைத்தது. வெறும் உணர்வுகளின் அடிப்படையில் இவற்றை கூறவில்லை. மாறாக, இதுதான் வரலாறு. இஸ்ரேலிய பதிவுகளும், வரலாற்றாய்வாளார்களும் இதனையே குறிப்பிடுகின்றன.

இஸ்ரேலை உருவாக்கும்போது, பலஸ்தீனர்கள் இன அழிப்புக்கு உட்பட்டனர். அத்தோடு, தமது பூர்வீக பிரதேசங்களிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இன்று பலஸ்தீன சனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளில் அகதிகளாக வாழ்கின்றனர். அத்தோடு மேற்குக் கரையிலும், காஸாவிலும், இஸ்ரேலிலும் பெரும்பாலானா பலஸ்தீனர்கள் அகதிகளாக உள்ளனர்.

பலஸ்தீனர்களின் சட்டபூர்வத்தன்மையை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கின்றது. நாம் இன்னும் ஓர் ஆக்கிரமிப்புக்கு கீழாலேயே உள்ளோம். இந்த ஆக்கிரமிப்பு, ஒரு நிலப் பகுதியில் வாழும் சமூகத்துக்குப் பதிலாக, வேறொரு சமூகத்தைக் கொண்டு வந்து மாற்றீடு செய்ய முயற்சிக்கின்றது.

சர்வதேச வழக்காறு மற்றும் உடன்படிக்கைகளின் பிரகாரம் இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடுவதற்கான உரிமை எமக்குள்ளது. எனவே, இலங்கையும் இந்தியாவும் பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், வியட்நாமும், சீனாவும், ஆபிரிக்க நாடுகளும் தம்மை ஆக்கிரமிக்க வந்தவர்களுக்கு எதிராகவும் போராடியது போல், எம்மை ஆக்கிரமிக்க வருபவர்களுக்கு எதிராகப் போராடும் உரிமை எமக்குள்ளது.

கேள்வி:- பலஸ்தீன் என்பது மேற்குக் கரையையும் காஸாவையும் உள்ளடக்கியதே. காஸாவில் ஹமாஸ் இயக்கம் பலமாகவுள்ளது. எனவே, மஹ்மூத் அப்பாஸின் அரசுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையிலான தொடர்பு எவ்வாறுள்ளது?

பதில்:- பலஸ்தீன விடுதலை இயக்கம் என்பது சர்வதேச ரீதியில் அனைத்துத் தரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் இயக்கமாகும். பலஸ்தீனில் உள்ள பல்வேறுபட்ட தரப்புக்களும், இயக்கங்களும் பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் உள்ளன. எனவே, அதுவொரு குடை அமைப்பாகும்.

உலகெங்கிலும் விடுதலை போராட்டம் என்பது ஒற்றைத் தன்மை வாய்ந்ததாக இருப்பதில்லை. விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு தரப்புக்களும் பங்கெடுப்பர். மதச்சார்பற்றோர், மதத்தை பற்றாகப் பின்பற்றுவோர், மார்க்ஸியர்கள், இஸ்லாமியவாதிகள் என்று பல்வேறு சிந்தனைகளைச் சார்ந்தோரும் விடுதலைப் போராடடத்தில் பங்கெடுப்பர்.

ஹமாஸ் ஓர் இஸ்லாமிய இயக்கமாகும். இக்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் வழிவந்தது என்றே ஹமாஸ் தன்னை அறிமுகப்படுத்துகின்றது. 1987 இல், முதலாவது இன்திபாழாவின்போது ஹமாஸ் இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டது. ஹமாஸ் பலஸ்தீனப் போராட்டத்தில் புதிதாக இணைந்த ஓர் இயக்கமாகும். என்றாலும், ஹமாஸ் என்பது எமது சமூகத்தின் ஓர் அங்கமாகும். பலஸ்தீனப் போராட்டத்திற்காக ஏனைய இயக்கங்கள், உயிர்தியாகம் செய்து போராடியது போன்றே ஹமாஸம் உயிர்த்தியாகம் செய்து போராடுகிறது.

ஹமாஸும், இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பும்தான், பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் இணையாத இரு இஸ்லாமிய இயக்கங்கள் ஆகும். ஹமாஸோடு நெருங்குவதற்காக வழிகள் உருவாக வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அத்தோடு, இவ்விரு இயக்கங்களும் பலஸ்தீன விடுதலை அமைப்பின் சட்டகத்துக்குள் வர வேண்டும் என்றும் விரும்புகின்றோம்.

பலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கும், ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் ஆகிய தரப்புக்களுக்கும் இடையிலான வித்தியாசம், இலக்கு குறித்ததல்ல. மாறாக, அவ்விலக்கை அடைந்து கொள்வதற்கான வழிமுறை குறித்த முரண்பாடே உள்ளது.

காஸாவில் வீர மரணமடைவோரும், துப்பாக்கி ரவையை எதிர்த்து நிற்போரும் எமது சமூகத்தவரே. அவ்வாறே, மேற்குக் கரையில் வீர மரணமடைவோரும் எம் சமூகத்தவரே. இஸ்ரேல் காஸா, மேற்குக் கரை என்று பிரித்துப் பார்ப்பதில்லை. ஹமாஸின் நிலங்களைக் கைப்பற்றிக் கொண்டு, பத்ஹ் அமைப்பின் நிலங்களை அது விட்டுவிடுவதில்லை. காஸா மீது அத்துமீறி, மேற்குக் கரையை விட்டுவிடுவதில்லை.

எனவே, இலக்கு குறித்து அன்றி, வழிமுறைகள் குறித்த முரண்பாடே இங்கு உள்ளது. தற்போதைய சர்வதேச மாற்றங்களின் அடியே பார்க்கையில், மக்கள் போராட்டமே மக்களின் உள்ளங்களுக்கு மிக நெருக்கமானதாக இருப்பதாகவும், பலஸ்தீனர்கள் என்றவகையில் எமக்கான ஆதரவைப் பெறுவதற்குமான பொருத்தமான வழிமுறையாக இருப்பதாகவும் நாம் நம்புகிறோம்.

அதேநேரம், ஆயுதப் போராட்டமும் எமது உரிமையாகும். ஆனால், உலகம் ஆயுதப் போராட்டத்தைப் புரிந்து கொள்ளாது. அத்தோடு, எமது மக்கள் போராட்டத்துக்கு, அமைதியான போராட்டத்துக்கு உதவுவது போன்று உதவியும் கிடைக்காது.

பலஸ்தீன சமூகம் என்ற வகையில், எமது கோரிக்கைகளை அடைந்துகொள்வதற்கான சிறந்த வழிமுறை எது என்பதையே நாம் அவதானிக்க வேண்டும். ஆயுதப் போராட்டமா பொருத்தமானது? பேச்சுவார்த்தைகளா? பொருத்தமானது என்று பார்க்க வேண்டும்.

ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத், பத்ஹ் என்று எந்தவொரு இயக்கத்துக்கும், இஸ்ரேலை எதிர்க்கும் ஆயுத பலம் கிடையாது. காஸா மீது மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலின் யுத்தங்களைப் பாருங்கள். எமது தரப்பு இழப்புக்கள் மிக அதிகம். அதேநேரம் இஸ்ரேலின் இழப்பு மிகச் சொற்பமே.

கேள்வி:- பலஸ்தீனின் நண்பர்கள் என்று யாரைச் சொல்வீர்? அரபு நாடுகளையா? லத்தின் அமெரிக்க நாடுகளையா?

பதில்:- இஸ்ரேலை தவிர, ஏனைய அனைத்து நாடுகளும் பலஸ்தீனின் நண்பர்களே. அமெரிக்காகூட பலஸ்தீன் குறித்த சில நல்ல நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளது. அரபுக்கள் பலஸ்தீனுக்காக உயிர்த்தியாகம் செய்துள்ளனர். தமது செல்வங்களையும் பலஸ்தீனுக்காக செலவு செய்துள்ளனர். அதேபோன்று உலகின் ஏனைய நாடுகளும் உதவி செய்துள்ளன.

இஸ்ரேலின் வன்முறைகளையும் அத்துமீறல்களையும் கண்டிப்பது மாத்திரம் போதாது. ஏனெனில், வெறும் கண்டனங்கள் பொருட்படுத்தப்படாது போகின்றன. இஸ்ரேல் அதனை நன்கு புரிந்து வைத்துள்ளது. உலகம் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும், ஆனால் நாம் செய்ய வேண்டியதை செய்வோம் என்று இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யாலோன் கூறியிருந்தார்.
அண்மையில் பதவியேற்ற, இஸ்ரேலின் தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் லிபர்மேனும், மஹ்மூத் அப்பாஸ் ஓர் இராஜதந்திர பயங்கரவாதத்தில் ஈடுபடும், இராஜதந்திர பயங்கரவாதி என்றும், ஹமாஸ் தலைவர்கள் அழிக்கப்பட வேண்டும் என்றும், பலஸ்தீனர்கள் கோடரியால் வெட்டப்பட வேண்டியோர் என்றும் கூறியுள்ளார்.

எனவே, உலகம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் கோருகின்றோம். உலகம் வன்முறையைப் பிரயோகிக்க வேண்டுமென்றோ, யுத்த பிரகடனம் செய்ய வேண்டுமென்றோ, விமானத் தாக்குதல் மேற்கொள்ள வேண்டும் என்றோ நாம் கேட்கவில்லை. நாம் அமைதியான ஒரு சமூகம். நாம் அமைதியையே விரும்புகின்றோம். நாம் சுதந்திரமாகவும், கண்ணியமாகவும் வாழ விரும்புகின்றோம்.

எனவே, உலகம் இஸ்ரேலின் மீது சர்வதேச சட்டங்களை பிரயோகிக்க வேண்டுமென்று விரும்புகின்றோம். உலகின் ஏனைய நாடுகளுக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றபோதும், இஸ்ரேல் மீது எந்தவொரு அழுத்தமும் பிரயோகிக்ப்படுவதில்லை. தென் ஆபிரிக்கா, ஈராக், சிரியா, ஈரான் போன்ற நாடுகளுக்கு சர்வதேச சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டபோதும், ஏன் இஸ்ரேல் மீது இவ்வாறு பிரயோகிக்ப்படுவதில்லை? இஸ்ரேல் ஏன் சட்டத்துக்கு மேலாலுள்ள ஒரு நாடாக செயற்படுகின்றது?

இலங்கை, இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகள் ஆக்கிரமிப்பு எதிராகப் போராடியதுபோன்று, எமது மக்களையும் பாதுகாப்பதற்காக, அனைத்து வழிமுறைகளையும் கைக்கொள்ளும் உரிமை எமக்குள்ளது.

கேள்வி:- இலங்கை பலஸ்தீனின் நட்பு நாடு. அதேநேரம், இஸ்ரேலில் இலங்கை தூதுவர் ஒருவரும் உள்ளார். எனவே, இதை நட்பு என்று கூறுவதா? பகைமை என்று கூறுவதா?

பதில்:- சில அரபு நாடுகளே இஸ்ரேலுடன் தொடர்புகளை வைத்திருக்கும்போது, இலங்கை, இஸ்ரேலுடன் தொடர்புகளைப் பேணுவதில் என்ன பிழை? என்று சிலர், நீங்கள் எழும்பும் கேள்விக்கு பதிலளிக்கின்றனர். சர்வதேச உறவுகள் நலன்களை அடிப்படையாகக் கொண்டே உருவாகின்றன. காலத்துக்குக் காலம் நலன்கள் மாற்றம் பெறுகின்றன.

70 களில் இலங்கையில்கூட பிரதமர் ஒருவர், இலங்கையில் இருந்த இஸ்ரேலிய தூதரகத்தை மூடியிருந்தார். பலஸ்தீனர்கள் என்ற வகையில் நாம், வேறு நாடுகளின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடுவதில்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் தமது உறவுகள் எப்படியிருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சுதந்திரம் உள்ளது.

இலங்கை பலஸ்தீன விவகாரம் குறித்து, சர்வதேச தளங்களில், எப்போதும் உண்மையின் பக்கம் இருந்து வருகின்றது. இலங்கை ஒன்றுபட்டிருக்க வேண்டும், இலங்கை மக்கள் ஒற்றுமையடைய வேண்டும் என்றும், ஜனநாயகம், அபிவிருத்தி, எழுச்சி என்பன உச்சத்தை அடைய வேண்டும் என்று நாம் பிரார்த்திக்கிறோம்.

பலஸ்தீன மக்கள் என்ற வகையிலும், பலஸ்தீன தலைமைத்துவம் என்ற வகையிலும், எம்மோடு தொடர்புள்ள அரபுநாடுகள் ஊடாகவும், ஏனைய நாடுகள் ஊடாகவும், முடியுமான அனைத்து உதவிகளையும் நாம் இலங்கைக்கு செய்கிறோம். இதற்கு முன்னர் இலங்கை வெளியுறவு அமைச்சு ஊடாக, இலங்கை எதிர்கொண்ட சில பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நாம் நேரடியாக இயங்கியுள்ளோம். சர்வதேச சமூகத்திலும், சர்வதேச தளங்களிலும் இலங்கைக்கு உதவுவதற்காக நாம் செயற்படுகிறோம்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், இலங்கையுடனான பலஸ்தீனின் உறவு சிறந்த நிலையிலேயே உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பலஸ்தீன் தொடர்பான விவகாரங்கள் குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளார் என்பது எனக்கு தனிப்பட்ட வகையில் தெரியும். வெளியுறவு அமைச்சரும் அவ்வாறுதான். நாம் இலங்கையிடம் அதிகமாக எதுவும் கேட்பதில்லை. இலங்கை பலஸ்தீனுக்காக அதிகம் செய்துள்ளது. இன்னும் செய்து வருகின்றது.

காஸா தாக்குதல்களின்போது, ஒரு மில்லியன் டொலரை இலங்கை பலஸ்தீனுக்காக வழங்கியிருந்ததையும் நான் இங்கு நன்றியோடு குறிப்பிட்டாக வேண்டும். இலங்கையின் அனைத்து தரப்பினரும் பலஸ்தீனுக்காக நன்கொடைகள் சேகரித்திருந்தனர்.

ஒரு தடவை ஒரு சிங்கள சகோதரர் 5000 ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு எமது தூதரகத்துக்கு வந்தார். பலஸ்தீனுக்கு உதவுவதற்காகவே அவர் அத்தொகையைக் கொண்டு வந்திருந்தார். அந்த தொகை, அவரது சம்பளத்தில் பாதி என்று நான் அறிந்து கொண்டேன். எனவே, அவர் அவரது உணவிலிருந்தும் எமது சமூகத்துக்காக பங்கு வைத்திருக்கிறார். நான் அவரை ஒருபோதும் மறக்க மாட்டேன். இலங்கையும் இலங்கை மக்களும் சிறந்தவர்கள். இவர்கள் மேற்கொள்ளும் உதவிக்கு நாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

கேள்வி:- பலஸ்தீன பிரச்சினை குறித்து மக்களை தெளிவபடுத்துவதற்காக நீஙகள் என்ன மாதிரியான செயற்பாடுகளை மேற்கொள்கிறீர்கள்?

பதில்:- பலஸ்தீன விவகாரம் குறித்த தெளிவுபடுத்தல்களை வழங்குவதற்காக நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்தப் பணியை நாம் செவ்வனே செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். நாம் பாடசாலைகள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் என்று பல்வேறு மட்டத்தில் விஜயங்களை மேற்கொண்டு, உரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம்.

கேள்வி:- இலங்கையருக்கு, குறிப்பாக இலங்கை முஸ்லிம்களுக்கு நீங்கள் வழங்கும் செய்தி என்ன?

பதில்:- முஸ்லிம் சகோதரர்களே! எப்போதும் சகிப்புத்தன்மையோடு நடந்து கொள்ளுங்கள். இலங்கை முஸ்லிம்கள் அதிகளவு சகிப்புத் தன்மை கொண்டவர்கள். இந்த சகிப்புத் தன்மையை தொடர்ந்தும் பேணுங்கள். இஸ்லாம் அன்பினதும் சகிப்புத்தன்மையினதும் மார்க்கமாகும். உங்களுக்கு இடையே சகிப்புத் தன்மையோடு இருப்பதுபோன்று, ஏனைய தரப்புக்களோடும் சகிப்புத் தன்மையோடும் நடந்து கொள்ளுங்கள். இலங்கை கொண்டிருக்கின்ற பல்வேறு மதங்களாலேயே, அது அழகாகியுள்ளது. எனவே, அனைத்துத் தரப்புக்களோடும் அன்பின் மொழியால் உரையாடித் தொடர்புகளைப் பேணுங்கள்

No comments: