Thursday, June 16, 2016

போதையை போதனைகளால் மட்டும் அழிக்க முடியாது!

அஷ்கர் தஸ்லீம்



 ஒருகொடவத்தையிலுள்ள கொள்கலன் தளத்திலிருந்து 91.3 கிலோ அளவிலான கொக்கைன் போதைப் பொருட்களை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர். இலங்கை வரலாற்றில் பெருமளவு போதைப் பொருள்கைப்பற்றப்பட்ட முதற் சந்தர்ப்பம் இதுவே.

ரூ. 2 பில்லியன் பெறுமதி வாய்ந்த இந்த கொக்கைன், பிரேஸில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 1 கிலோ பக்கட்களாக ஒழுங்குபடுத்தியே இப்போதைப் பொருள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நிதியமைச்சின் விசேட பிரிவினரால் கொடுக்கப்பட்ட துப்பின் அடிப்படையிலேயே இப்போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் சிசிர விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

40 வருடங்களாக சீனி இறக்குமதியில் ஈடுபட்டிருந்த ஒரு வியாபாரியே இந்த கொக்கைன் போதைப் பொருளை இலங்கைக்கு இறக்குமதி செய்துள்ளார். இந்த வியாபாரியும் இதற்கு ஒத்துழைத்த இன்னும் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


செய்தியறிந்து தலத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரி பாலசிரிசேன, அதிகாரிகளின் செயற்பாட்டை பாராட்டியுள்ளதோடு, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்டம் பிரயோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் பெருமளவு போதைப் பொருள்  கைப்பற்றப்பட்ட சம்பவமாக இது அடையாளப்படுத்தப்படுகிறது. இலங்கை போதை பொருள் கைமாறும் இடம் என்று கூட பா.உ. அத்துரலியே ரதன தேரர் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

இலங்கை ஒரு கேந்திர  முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருப்பதால், இலங்கையிலிருந்து ஏனைய நாடுகளை அடைவதற்கான திட்டங்களை வகுத்து, போதைபொருள் கடத்தல்காரர்கள் கச்சிதமாக செயற்பட்டு வருகின்றனர்.

சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்படும் போதைபொருட்களுக்கு அப்பால், உயர் அதிகாரிகளதும், செல்வாக்குமிக்கோரின் அழுத்தங்களாலும், கைப்பற்றப்படாமல் போகும் போதைப் பொருட்களின் தொகை எவ்வளவு இருக்கும் என்று கணிப்பிடமுடியாதுள்ளது.

இவ்வாறு இலங்கைக்கு கொண்டுவரப்படும், இலங்கை ஊடாகக் கடத்தப்படும் போதை பொருட்கள் இலங்கை சமூகத்தை பெருமளவு பாதித்துள்ளது. நகரங்கள், கிராமங்கள் என்ற வித்தியாசமின்றி, வகை வகையான போதைப் பொருட்களுக்கு இலங்கையர் அடிமையாகியுள்ளனர்.

போதைப் பொருட்களை சில்லறை வியாபாரமாக செய்வோரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைப்பது போன்று, போதைபொருளை பெரும் தொழிலாக மேற்கொண்டுவரும் சமூக விரோதிகளையும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் அதிகாரிகளையும் கைதுசெய்து தண்டிப்பதற்கு நல்லாட்சி அரசு அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும்.

ராஜபக்ஷ ஆட்சியின்போது, பல முக்கியமான அரசியல்வாதிகள் போதைபொருள் கடத்தலில் ஈடுபடுவதாக  வெளிப்படையாகவே குற்றம் சாட்டப்பட்டு வந்தபோதும்நல்லாட்சி அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

இலங்கையில் உள்ள நான்கு பிரதான மதங்களும் போதைப் பொருளுக்கு எதிரான கொள்கைகளைப் பிரசாரப்படுத்தி வருகின்றபோதும், போதைப் பொருட்கள் நாட்டில் கசிய விடப்படுவதால், போதனைகள்ப யனற்றுபோகின்றன. எனவே, போதனைகளுக்கு அப்பால், இலங்கைக்கு கொண்டுவரப்படும் போதைப் பொருட்களை கைப்பற்றி அழிப்பதே இலங்கை அரசு மேற்கொள்ளவேண்டிய பிரதான பணியாகும்.

இருப்பினும், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன போதைப் பொருளுக்கு எதிராகக் கொண்டுள்ள ஆர்வமும் அக்கறையும் பாராட்டுக்குரியது. அவர்தொடர்ந்தும் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்வார் என்று நாட்டு மக்கள் நம்புகின்றனர். நாட்டு மக்களும், போதைபொருள் வியாபாரம் குறித்த துப்புக்களை பாதுகாப்பு தரப்புக்கு வழங்கி, ஒத்துழைக்க வேண்டும். 

No comments: