![]() |
இந்தோனோசியாவிலுள்ள 09 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போரோபதூர் விகாரை |
அஷ்கர் தஸ்லீம்
புராதன தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சிதைக்கும்படி இஸ்லாம் போதிப்பதாக, பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற கலந்துரையாடலொன்றின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஆனால், இஸ்லாம் இவ்வாறான கருத்துக்கைள ஒருபோதும் போதித்ததில்லை. இது இஸ்லாத்தின் மீது அபாண்டம் சுமத்தும் ஒரு நடவடிக்கையாகும்.
இந்த விவகாரம் குறித்து நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் வினவப்பட்டபோது, அவ்வாறு எதுவும் கூறப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மறாhக, இலங்கையின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இந்த நாட்டின் சிங்களவர், பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான இடங்களல்ல. மாறாக, இந்த நாட்டின் அனைவருக்கும் சொந்தமானது என்பதையே தேரர் புரிய வைத்ததாக விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உண்மையில், தொல்பொருள் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை அழிக்கும்படி இஸ்லாம் ஒருபோதும் போதித்ததில்லை. மாறாக, இப்போது பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளாக உள்ள நாடுகளில், இஸ்லாத்துக்கு முன்னர் காணப்பட்ட மதங்களின் அடையாளங்களை பாதுகாப்பதில் முஸ்லிம்கள் பெரும் அக்கறை எடுத்துள்ளனர்.