தமிழில்: அஷ்கர் தஸ்லீம்
(தேசிய ஐக்கியத்துக்கான மன்றம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவுக்கு வௌ;ளவத்தை எக்ஸலன்ஸி மண்டபத்தில் நடத்திய பாராட்டு உபசாரத்தின்போது அமைச்சர் ஆற்றிய உரை)
இந்த மதிப்புமிக்க நிகழ்வில் நான் பாராட்டப்படுவதன் மூலம்
நான் உண்மையில் கௌரவிக்கப்படுகிறேன். இப் பெரும் நிகழ்வில்
சில வார்த்தைகளை பேசுவதற்கு சந்தர்ப்பம் அளித்த தேசிய ஐக்கியத்துக்கான
மன்றத்தின் தலைவர் என்.எம்.
அமீன் மற்றும் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி
ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
என்.எம். அமீன், நாம்
அனைவரும் அறிந்திருப்பதுபோல் ஒரு முன்னணி ஊடகவியலாளர்
மட்டுமல்ல, அவர் ஐக்கியம், சமூக
நல்லிணக்கம் ஆகியவற்றை ஆதரித்துப் பேசும் ஒருவருமாவார். தேசிய
ஐக்கியத்துக்கான மன்றத்தின் தலைவராக இருப்பதன் மூலம்,
எமது நாட்டு சமூகங்களுக்கு மத்தியில்
சமாதானம், நல்லிணக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம், எமது நாட்டுக்கு
பெரும் சேவையை அவர் செய்துள்ளார்.
தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க இராஜாங்க
அமைச்சர் ஏ.எச்.எம்.
பௌஸி அறிமுகம் தேவையற்ற ஒருவர். இலங்கையின் மிகவும்
சிரேஷ்ட முஸ்லிம் அமைச்சரான அவர், அவரது பொது
வாழ்வை, அவரது நாட்டுக்கும், அவரது
சமூகத்துக்கும் சேவை செய்வதற்காக அர்ப்பணித்துள்ளார்.
1959 இல் அவர் அரசியலுக்கு நுழைந்தது
முதல், இலங்கை முஸ்லிம் சமூகத்தை
உயர்த்தி விடுவதற்காக அயராது விடாமுயற்சியுடன் செயற்பட்டிருக்கிறார்
அவர். வயதில் என்னை விட
இரு மடங்காக உள்ளபோதும், எமது
பாராளுமன்றத்தில் களங்கமில்லாத அரசியல்வாதியாக அவர் உள்ளார். அவரும்
நானும் வித்தியாசமான, பல நேரங்களில் எதிர்த்தரப்பு
நிற்கும் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம்.
ஆனாலும், நான் எப்போதும் மெச்சுகின்ற,
மிகவும் மதிக்கின்ற ஒரு அரசியல்வாதியே அவர்
என்பதை நான் சொல்லியாக வேண்டும்.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் குறித்த
அமைச்சர் பௌஸியின் விவகாரம் சவால் நிறைந்தது மாத்திரமன்றி,
நம்மை 26 வருடங்களாகப் கொடுமைப்படுத்திய கொடிய சிவில் யுத்தத்தின்
முடிவைப் பார்த்த நம் நாட்டின்,
எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். ஒரு
காலத்தில் அமைதியாக இருந்த நம் நாட்டில்
இந்த யுத்தம் மூலம் இந்த
நாட்டின் சமூக கட்டுமானம் சிதைந்து
போயிருந்தது. சமூகங்கள் துரவ நிலையை அடைந்து,
பிரிந்து போயின. அச்சத்தினதும், சகிப்பின்மையினதும்,
நம்பிக்கையீனத்தினதும் விதைகள் விதைக்கப்பட்டிருந்தன.
அக்காலத்தில்,
நம் வாழ்வின் பெரும்பாலான பகுதியை அச்சத்துடனேயே கடத்தினோம்.
சொல்ல முடியாத துன்பங்களையும், பேரழிவுகளையும்
கொடூரங்களையும் அந்த யுத்தம் நமக்கு
ஏற்படுத்தியது. இரத்தம் தோய்ந்த இந்த
நெருக்கடியினால், அனைத்து இனங்களையும் சேர்ந்த
ஆயிரக் கணக்கான அப்பாவி உயிர்கள்
பாதிக்கப்பட்டன. எந்தவொரு நெருக்கடியின்போதும், இறுதியில் பாதிக்கப்படுவது அப்பாவி ஆண்களும், பெண்களும்,
குழந்தைகளுமே. இதிலிருந்து எந்தவொரு சமூகமும் தப்பிக்கவில்லை. அரன்தலாவையில் வாகனங்களிலிருந்த பௌத்த பிக்குகள் எல்.ரீ.ரீ.ஈயினரால்
படுகொலை செய்யப்பட்டது முதல் கருப்பு ஜூலை
இனக் கலவரத்தின்போது உயிர்களையும் சொத்துக்களையும் உடமைகளையும் இழந்த அப்பாவி தமிழ்
குடும்பங்கள், காத்தான்குடி பள்ளிவாயலில் மேற்கொள்ளப்பட்ட படுகொலையின்போது நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் பக்தர்கள் தமது உயிர்களை இழந்தது,
வத்தளை புனித அன்னம்மாள் தேவாலயத்தில்
மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்
வரையிலும் அனைத்து இனத்தவர்களும் இந்த
யுத்தத்தால் பாதிக்கப்பட்டனர். இந்த வன்முறை அலையினால்
எல்லா இன மதத்தவரும் பாதிக்கப்பட்டனர்.
அமைச்சர் பௌஸியும், அகுரெஸ்ஸயில் நடைபெற்ற ஒரு முஸ்லிம் மத
நடைவபனியின்போது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலிலிருந்து
மயிரிழையில் உயிர்தப்பினார்.
நாம் நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த
சமாதானத்தை, எமது பாதுகாப்பு படைகளின்
வீரத்தின் காரணமாக, நாம் அடைந்து கொண்டோம்.
நம்பிக்கையீனம், சந்தேகம் ஆகிய சுவர்களை உடைத்தெறிந்து
இந்த நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களையும் ஒற்றுமைப்படுத்தக்கூடிய
பொன்னான சந்தர்ப்பம் தற்போது நமக்கு கிடைத்துள்ளது.
எவ்வாறாயினும், யுத்தத்தின் வடுக்கள் ஆழமாக ஊடுறுவியுள்ளதால், ஒரு
யுத்தத்தை வெற்றி கொள்வதன் மூலம்
மாத்திரம், முடிவுறாத சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. எமது நாட்டின் ஒற்றைத்தன்மையை
பாதுகாப்பதற்கு, எமது படையினர் தமது
உயிர்களை அர்ப்பணித்து யுத்தம் செய்தனர். அவர்கள்
எமக்காக பெற்றுத் தந்த சமாதானத்தை பாதுகாப்பதும்
பேணுவதும் நமது பொறுப்பாகும். நெருக்கடி
காலத்தின்போது நாம் அனுபவித்தவற்றை, எமது
எதிர்கால சந்ததி அனுபவிக்கக்கூடாது என்பதை
நாம் எல்லா வகையான வழிமுறைகளின்
மூலமும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அனைத்து
சமூகங்களையும் இணைப்பதற்கு முறையான நல்லிணக்க பொறிமுறையொன்று
உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாமல் போயின், நாம் இன்று
அனுபவிக்கும் சமாதானம் தற்காலிகமானதாக மாறிப்போகும். நல்லிணக்கத்தின் மூலம் மட்டுமே, யுத்தத்தின்
வடுக்களை ஆற வைக்கவும், எல்.ரீ.ரீ.ஈ
அல்லது வேறு ஆயுதக் குழுக்களின்
உருவாக்கத்தை தடுக்கவும் முடியும். நல்லிணக்கம் தேவையில்லை என்றும், காலப் போக்கில் இக்காயங்கள்
ஆறிப் போகும் என்றும் நாம்
நினைப்போமாயின், ஆம், மேற்பரப்பில் காயங்கள்
ஆறிப் போகும். ஆனால், காயத்தின்
வடுக்கள் அப்படியே காணப்படும். பின்னர், அந்த வடுக்கள் அடியில்
புதைந்து வதைத்து, இறுதியில் மாபெரும் சக்தியுடன் மீண்டும் எழும் என்பதை மாத்திரமே
என்னால் சொல்ல முடியும்.
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர்
ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையிலான ஐக்கிய அரசாங்கம், முறையான
நல்லிணக்க பொறிமுறையொன்றின் மூலம் இறுதித் தீர்வொன்றை
ஏற்படுத்துவதற்கு உறுதி கொண்டுள்ளது. இந்தப்
பொறிமுறை சிவில் உரிமைகளை நிலைநிறுத்துவதோடு,
இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் இடையிலான
ஒற்றுமையையும் ஊக்குவிக்கும். எவ்வாறாயினும் நல்லிணக்கத்தை நோக்கிய பாதை தடைகளாலும்
சவால்களாலும் நிரம்பிய பாதையாகும். இந்த சவால்களை எதிர்கொள்வதற்காக,
நாம் திறந்த மனதுடன் எல்லா
வகையான வழிமுறைகளையும் பயன்படுத்தி முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் எமது எதிர்கால சந்ததி
சமாதானத்துடனும், நல்லிணக்கத்துடனும் வாழமுடியும்.
இந்த நாடு இன ரீதியான
அடிப்படையில் பிரிக்கப்பட முடியாது; பிரிக்கப்படக் கூடாது. நாம் இலங்கையர்
என்ற பொது அடையாளத்துடன், ஒற்றைக்
கொடியின் கீழ் ஐக்கியப்பட வேண்டும்.
நாம் சமாதான மற்றும் நல்லிணக்க
பாதையில் தொடர்ந்து செயற்படுகின்ற அதேவேளை, நாம் ஒரு அரசு
என்ற வகையில் எமது நாட்டின்
தேசிய பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்
என்பதையும் நான் தெளிவாக சுட்டிக்காட்டுகிறேன்.
பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவும், பாதுகாப்பு விவகாரம் குறித்து பொறுப்புச்சாட்டப்பட்டுள்ள நாம் அனைவரும், ஒவ்வொரு
பிரஜையையும் பாதுகாப்பதற்கு உறுதி கொண்டுள்ளோம். இந்த
அரசு தேசிய பாதுகாப்பை ஆபத்தில்
தள்ளியுள்ளதாக குற்றம் சாட்டுகின்ற கூட்டு
எதிர்க்கட்சி, எல்.ரீ.ரீ.ஈ மீண்டும் எழுவதாகவும்
தேசிய பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தல் என்றும்
பேசி வருகிறது. இந்த அரசியல்வாதிகளுக்கு புள்ளிகளைப்
பெற்றுக் கொடுப்பதற்காகவே, அடிப்படை எதுவும் இல்லாத இந்தக்
கருத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு துறையிலுள்ள நாம், தேசிய பாதுகாப்பை
உறுதிப்படுத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திருக்கிறோம்,
செய்கிறோம் என்பதை தெளிவாக பதிந்து
கொள்ள விரும்புகிறேன்.
எல்.ரீ.ரீ.ஈ
மீண்டும் எழும் என்பது போலியனாது.
பாதுகாப்பு படைகள், பொலிஸ் மற்றும்
எமது உளவுத் துறையினர் மிகவும்
எச்சரிக்கையாகவே உள்ளன. எமது செயற்பாடுகளை
என்னால் விளக்கமாகக் கூற முடியாதபோதும், எல்.ரீ.ரீ.ஈ
மீண்டும் எழாதவாறு தடுப்பதற்கு அவசியமான அனைத்து முன்னெடுப்புக்களும் எடுக்கப்பட்டுள்ளன
என்று கூற விரும்புகிறேன். இந்த
நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்துகின்ற எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளக்கூடிய வகையில், எமது படையினர் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதோடு,
அதற்குத் தேவையான தளபாடங்களும் உள்ளன.
எமது நாட்டை பாதுகாப்பதற்காக, பாதுகாப்பு
அமைச்சு, சட்டம் ஒழுங்கு அமைச்சோடு
மிக நெருக்கமாக செயற்பட்டு வருகின்றது.
நம் நாட்டின் சமூக கட்டமைப்பை அச்சுறுத்துகின்ற
குழுக்கள் மற்றும் செயற்பாடுகள் மீது,
நாம் அவதானத்துடன் இருக்க வேண்டும். பயங்கரவாதம்
மட்டுமன்றி, மத கடும்போக்கு மற்றும்
இனவெறுப்பு குழுக்கள் மீதும்கூட சகிப்புத்தன்மை காட்டப்படக் கூடாது.
நீதியான,
சகிப்புத்தன்மை மிக்க சமூகமொன்றைக் கட்டியெழுப்ப
இந்த அரசு உறுதி கொண்டுள்ளது.
புத்தரின் தசராஜதம்ம என்ற ஆட்சி செலுத்துவதற்கான
பத்து விதிகளில் ஆட்சி குறித்த போதனைகளை
நாம் கற்கிறோம். ஒரு ஆட்சியாளர் பெருந்தன்மை,
அறநெறி, தியாகம், வெளிப்படைத்தன்மை, சுயகட்டுப்பாடு, கோபமின்மை, வன்முறையின்மை, பொறுமை, போட்டியற்றதன்மை ஆகிய
பண்புகளைக் கொண்டு ஆட்சி செய்ய
வேண்டும் என்று அவ்விதிகளில் கூறப்பட்டுள்ளன.
‘தம்மம், மனிதன் மற்றும் சட்டம்’
என்ற கே.எம். ஜயதிலகவின்
நூலில், பௌத்த அரசியல் தத்துவம்
பின்வரும் அடிப்படையில் உள்ளதாகக் குறிப்பிடுகிறார். நான் அதனை இங்கு
குறிப்பிடுகிறேன்: ‘நேர்மை, சமத்துவம், சட்டவாட்சி
ஆகியவற்றை நிலைநிறுத்துவதன் மூலமே அதிகாரம் அதனது
சட்டபூர்வத்தன்மையை இயக்குகிறது’. ஒரு அரசு என்ற
வகையில், நாம் பின்பற்றுவதற்கு முயற்சிக்க
வேண்டிய கொள்கைகள் இவைதான். புனித அல்குர்ஆனில் நம்பிக்கை
கொள்ளாதோருக்கு (முஸ்லிம் அல்லாதோருக்கு), ‘உங்களுக்கு உங்கள் மார்க்கம். எனக்கு
எனது மார்க்கம்’ என்று கூறப்பட்டுள்ளது. இதன்
மூலம் மக்களுக்கு சகிப்புத்தன்மை போதிக்கப்பட்டுள்ளது. சுய கட்டுப்பாடு மூலம்
ஏற்படும் நல்லிணக்கம்தான் சகாழ்வுக்கான சிறந்த வழி என்று
இஸ்லாமும் கருதுகிறது.
இலங்கையில்
பௌத்த சமூகமும், முஸ்லிம் சமூகமும் ஆயிரம் வருடங்களாக சமாதானமாகவும்,
நல்லிணக்கத்தோடும் வாழ்ந்து வந்துள்ளன. டி.பி. ஜாயா,
எம்.சி. சித்தி லெப்பை
போன்ற முஸ்லிம் தலைவர்கள், காலணிய ஆட்சியலிருந்து சுதந்திரம்
பெறுவதற்காக, டி.எஸ். சேனாநாயக,
எப்.ஆர். சேனாநாயக, ஸர்
ஜேம்ஸ் பீரிஸ், ஸர் பொன்னம்பலம்
இராமநாதன், ஸர் பொன்னம்பலம் அருணாசலம்
போன்ற தலைவர்களுடன் இணைந்து,இணைந்து செயற்பட்டனர்.
எமது சமூகங்களுக்கு இடையில் விரோதத்தை ஏற்படுத்துவதற்கு,
எந்தவொரு மத கடும்போக்கு அமைப்புக்கும்
நாம் இடமளிக்கக் கூடாது. நாம் சகிப்புத்தன்மையை
ஊக்குவிக்கின்ற அதேவேளை, வெறுப்பை கக்குகின்ற குழுக்களுக்கு மகிழ்வளிக்கவும் கூடாது. நகைச்சுவையாகும். அரசியல்
விமர்சகருமான பில் மாஹெர், ‘சகிப்பின்மையை
சகித்துக் கொள்ளுமளவுக்கு சகிப்புத்தன்மை கொண்டோராக ஆகி விடாதீர்கள்’ என்று
ஒரு தடவை கூறியுள்ளார்.
கடந்த சில வருடங்களாக, குறிப்பாக
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், இவ்வாறான குழுக்கள் உருவாகியிருப்பதை நாம் அவதானிக்கிறோம். இவ்வாறான
குழுக்கள் சமூகங்களுக்கிடையில் எவ்வாறெல்லாம் பதற்றத்தை உருவாக்குகின்றன என்பதற்கு அளுத்கமையில் ஏற்பட்ட வன்முறைகள், முக்கியமான
உதாரணமாகும். இவ்வாறான சம்பவங்கள் இந்த நாட்டில் எந்தவகையிலும்
நடைபெறக்கூடாது. இந்தக் குழுக்களை சட்டத்தின்
கீழ் கொண்டு வருவதற்கு அவசியமான
நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். எந்தவொரு
சமூகமும், ஒரு சமூகத்தை அடிபணிய
செய்வதற்காக அச்சுறுத்த முடியாது. வெறுப்பு வெறுப்பைத்தான் உருவாக்கும்.
பெரும்பான்மையான
பௌத்தர்கள் இவ்வாறான குழுக்களை அங்கீகரிப்பது கிடையாது. எவ்வாறாயினும் சில வெளிநாட்டு ஊடகங்களாலும்,
சமூக ஊடகங்களாலும் உருவாக்கப்பட்டுள்ள நம்பிக்கையீனம் மற்றும் சந்தேகம் காரணமாக,
சிலர் இவ்வாறான குழுக்கள் மீது சகிப்போடு நடந்து
கொள்கின்றனர். அனைத்து சமூகங்களையும் சேர்ந்த
மதத்தலைவர்கள் நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் ஊக்குவிப்பதற்கு முக்கியமான பங்கை எடுத்துக் கொள்ள
வேண்டும் என நான் நம்புகிறேன்.
ஊடகங்களும் இவ்வாறான குழுக்களை உணர்வுபூர்வமாக்காது, அவற்றின் வெறுப்பு பேச்சுக்களையும் செயற்பாடுகளையும் கண்டித்து, மிகுந்த விழுமியத்துடன் செயற்படல்
வேண்டும்.
ஐ.எஸ்.ஐ.எஸ்
தோற்றப்பாடு இலங்கை முஸ்லிம் சமூகம்
மீது எவ்வாறான தாக்கத்தை செலுத்துகிறது என்பது குறித்தும் நான்
நன்கு விழிப்புணர்வடைந்துள்ளேன். எந்தவொரு வெளிநாட்டு அல்லது உள்நாட்டு நபரேனும்,
கடும்போக்கு பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆள் சேர்க்கவோ, பயிற்சி
வழங்கவோ இந்த நாட்டை பயன்படுத்துவதற்கு
முயற்சிப்பதாயின் அது குறித்து பாதுகாப்பு
தரப்புக்களும், பொலிஸும் மிகவும் அவதானத்துடன் இருக்கின்றன
என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். நான்
உங்களது அக்கறை குறித்து அறிகிறேன்.
இந்த அக்கறைகள் குறித்து உரையாடுவதற்காக நாம் உங்களோடு இணைந்து
செயற்படவும் விரும்புகிறோம். எமது இராணுவப் படைகளும்
பொலிஸும் உளவுத்துறையும், எந்தவொரு கடும்போக்கு குழுவுக்கும், எமது நாட்டினதோ, எமது
பிராந்தியத்தினதோ ஸ்திரத்தன்மையை குழைப்பதற்கு இடமளிக்காது என்பதை உறுதிப்படுத்துகிறேன். இந்த விவகாரத்தை
பாதுகாப்பு தரப்புக்கள் மிகவும் சீரியஸாக எடுத்துக்
கொண்டுள்ளன.
எனது உரையை முடிக்குமுன், எனக்கு
இந்த அழைப்பை மேற்கொண்டமைக்காக, என்.எம். அமீன் மற்றும்
அமைச்சர் ஏ.எச்.எம்.
பௌஸி ஆகியோருக்கு மீண்டுமொரு தடவை நன்றி தெரிவித்துக்
கொள்கிறேன். பொறுமைகாத்தமைக்காக சபையோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கு தலைமையேற்றுள்ள என்.எம். அமீன்
அவர்களின் கூற்றொன்றைக் கூறி எனது உரையை
முடித்துக் கொள்ள விரும்புகிறேன்:
"இலங்கையை
எனது சொந்த நாடாகவும், தாய்
நாடாகவும் நான் கருதுகிறேன். நான்
இங்குதான் பிறந்தேன். நல்லிணக்கம் ஊடாக சமாதான வாழ்வொன்றுக்கான
பங்களிப்பை மேற்கொள்ளுமாறு எனது சக ஆண்,
பெண்களை ஊக்குவித்தவனாகவும், பங்களித்தவனாகவும் ஒரு உண்மையான இலங்கையனாக
மரணிக்கவே நான் விரும்புகிறேன். நாம்
அனைவரும் ஒன்றுபட்டு, ஒரே குடும்பமாக வாழ்வோம்!”
No comments:
Post a Comment