அஷ்கர் தஸ்லீம்
சமகால சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு, இலங்கை முஸ்லிம் அரசியல் புனருத்தாரணம் செய்யப்படல் வேண்டும் என்பது தவிர்க்க முடியாத வாதமாக தற்போது எழுந்து வருகின்றது. இவ்வளவு காலமும் முஸ்லிம் அரசியல் எவ்வாறான பாத்திரத்தை வகித்து வந்தது என்ற வரலாற்றை ஒருகணம் மீள்விசாரணை செய்து, அதில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலையில் முஸ்லிம் அரசியல் உள்ளது.
மன்னர் காலம் தொட்டு இன்று வரையிலான முஸ்லிம் அரசியலை பல்வேறு பகுதிகளாகப் பிரித்து நோக்க முடியும். இந்த ஒவ்வொரு காலப் பகுதியிலும், இந்த நாட்டின் தலைமைத்துவங்களோடு சேர்ந்து, இந்த நாட்டை வளப்படுத்தும் பணியில் முஸ்லிம் அரசியல் பங்களிப்பு செய்திருப்பதை அவதானிக்கலாம்.
ஆனால், பல்வேறு அரசியல் கருத்தியல்கள் செல்வாக்கு செலுத்துகின்ற, இந்த நவீன யுகத்தில், முஸ்லிம் அரசியலின் போக்கு எவ்வாறு அமைய வேண்டும் என்பது முக்கியமானதாகும். இதற்காக, தற்போதைய முஸ்லிம் அரசியலை விமர்சனபூர்வமாக நோக்குவது தவிர்க்க முடியாத காரணியாக உள்ளது.
இலங்கைக்கு 1948 இல் சுதந்திரம் கிடைத்ததன் பின்னர், தேசிய அரசியல் கட்சிகளுடன் இணைந்து முஸ்லிம்கள் செயற்பட்டனர். தேசிய கட்சிகளுடன், குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியுடன் முஸ்லிம்கள் பின்னிப்பிணைந்திருந்தனர். காலவோட்டத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடும் முஸ்லிம்கள் இணைந்து கொண்டனர்.![]() |
எம்.எச்.எம். அஷ்ரப் |
எவ்வாறாயினும், 80 களின் இறுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது முதல், இலங்கை முஸ்லிம் அரசியல் வித்தியாசமான ஒரு தளத்துக்கு நகர்ந்தது. தேசிய கட்சிகளில் தங்கியிருந்த முஸ்லிம்கள், முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் தமது ஆதரவை வழங்கத் துவங்கினர். ஆனால், ஒரு பெரும் தொகையான முஸ்லிம்கள் தேசிய கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் நிலையும் தொடர்ந்தது.
முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் தூரநோக்கு கொண்ட ஓர் அரசியல்வாதி. முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்ட காலப் பகுதியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காலப் பகுதியாகும். தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கை அரசுக்கு எதிராக யுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்த, அந்தக் காலப் பகுதியில், முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதத்தின் பக்கம் சாயாது, ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் பங்கெடுக்கும் நிலையை, முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கியது. இது அஷ்ரபின் மாபெரும் வெற்றியாகும்.
அஷ்ரபிடமும் முஸ்லிம் காங்கிரஸிடமும் தூரநோக்கு இருந்தது. முஸ்லிம்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற இலக்கை முஸ்லிம் காங்கிரஸ் கொண்டிருந்தது.
அஷ்ரப் நாடெங்கிலும் பயணம் மேற்கொண்டு, முஸ்லிம் காங்கிரஸை முஸ்லிம்கள் மத்தியில் கொண்டு சென்றார். ஒரு தனி மனிதன் என்ற வகையில். பல்வேறு பாரிய பணிகளை அஷ்ரப் தன் வாழ்நாளில் செய்து முடித்திருந்தார்.
தேசிய கட்சிகளில் சங்கமித்ததன் மூலம், முஸ்லிம்களின் பலம் வெளித்தெரியாது போயிருந்த நிலை, முஸ்லிம் காங்கிரஸின் வருகையுடன் மாறியது. இலங்கையின் ஆட்சி மாற்றததை தீர்மானிக்கின்ற சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் மாறியிருந்தது.
எவ்வாறாயினும், முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்டத்திலிருந்து தேசிய ஐக்கிய முன்னணி என்ற உயர் நிலைக்கு அஷ்ரப், தனது சிந்தனைகளை வளம் பெறச் செய்தார். முஸ்லிம்களுக்கு மட்டுமேயான, முஸ்லிம்களை மட்டுமே மையப்படுத்திய முஸ்லிம் காங்கிரஸுக்கு பதிலாக, அனைத்து இனத்தவர்களையும் மையப்படுத்தி செயற்படும் தேசிய ஐக்கிய முன்னணியை அவர் ஸ்தாபித்தார். அஷ்ரபின் சிந்தனை முதிர்ச்சிக்கு இதுவொரு முக்கிய உதாரணமாகும்.
ஆனால், அஷ்ரபின் மறைவைத் தொடர்ந்து, முஸ்லிம் காங்கிரஸ் - தேசிய ஐக்கிய முன்னணி என்ற மாபெரும் சக்தி, துண்டு துண்டாக உடைந்துபோனது. அஷ்ரபின் அரசியல் வாரிசுகள், பல்வேறு கட்சிகளை உருவாக்கிக் கொண்டனர். இந்த பல்வேறு கட்சிகளதும் உருவாக்கத்துக்கு என்னதான் நியாயங்கள் கற்பிக்கப்பட்டாலும், அஷ்ரப் என்ற மாபெரும் ஆளுமையின் கனவுகளை நனவாக்குவதில், அஷ்ரபின் அரசியல் வாரிசுகள் தோற்றுப் போயுள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.
அஷ்ரபின் பார்வையும், சிந்தனையும் தூரநோக்குடையவை. அவரது தேசிய ஐக்கிய முன்னணி குறித்த சிந்தனை மிகவும் முன்னேற்றகரமானவை. இன மைய சிந்தனையிலிருந்து விடுபட்டு, தேசிய நீரோட்டத்தில் செயற்பட வேண்டும் என்ற மாபெரும் அரசியல் தத்துவத்தின் செயல்வடிவமாகவே நாம் அதனைப் பார்க்க வேண்டும்.
தேசிய கட்சிகளால் அவ்வப்போது தனிமைப்படுத்தப்படும் சிறுபான்மையினர் தம்மை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில், இன மைய கட்சிகளை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். எனவே, இலங்கை போன்ற ஒரு நாட்டில், சிறுபான்மையினங்களை மையப்படுத்திய அரசியல் கட்சிகள் உருவாவது தவிர்க்க முடியாத ஒரு நிலைதான்.
என்றாலும், சிறுபான்மையினத்தவரின் உரிமைகளையும், தனித்துவங்களையும் பாதுகாப்பதோடு, தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியிலும் பங்களிக்கும் வகையில் சிறுபான்மையினரே, தேசிய நீரோட்ட கட்சிகளை அமைப்பது ஒரு முன்னேற்றகரமான சிந்தனையாகும். இந்த பார்வையையே அஷ்ரப் கொண்டிருந்தார். அவரது இந்த அணுகுமுறையை அவரது அரசியல் வாரிசுகள் பொருட்படுத்தாது நடப்பது கவலைக்குரியதாகும்.
ஆனால், அஷ்ரபின் அரசியல் வாரிசுகள் தம்மை மீள்பரிசீலனை செய்து கொள்வதற்கான சந்தர்ப்பம் இன்னும் உள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஒரு சிறந்த வாசகர். உலக விவகாரங்கள் குறித்து தெளிவுள்ளவர். முஸ்லிம் உலகின் நவீன சிந்தனைப் போக்குகள் குறித்து பரிச்சயமுள்ளவர். நவீன முஸ்லிம் சிந்தனையாளர்களுடன் அறிமுகமுள்ளவர். எனவே, முஸ்லிம் உலக அனுபவங்கள் மற்றும் உலக அனுபவங்களின்படி, முஸ்லிம் அரசியல் போக்கை சுயவிசாரணை செய்யும் திறன் அவருக்குள்ளது.
அந்த மாபெரும் சுயவிசாரணைப் பணியை ரவூப் ஹக்கீம் செய்ய வேண்டும். அதுவே அஷ்ரபுக்கும், இந்த நாட்டு முஸ்லிம்களுக்கும், இந்த நாட்டுக்கும் அவர் செய்யும் சிறந்த பணியாக அமையும். அஷ்ரப் உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ், அஷ்ரபின் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும். அதுதான் அஷ்ரபுக்கு செய்யும் நன்றிக் கடனாக அமையும்.
இலங்கை முஸ்லிம்கள் ஒரு சிறுபான்மை சமூகம் என்ற வகையில், முஸ்லிம்களுக்கு மட்டுமேயான சில பிரச்சினைகள் உள்ளன என்பது உண்மைதான். முஸ்லிம்களின் மார்க்க, கல்வி, அபிவிருத்தி உரிமைகள் பாதுகாக்கப்படல் வேண்டும் என்பதும் நியாயம்தான்.
ஆனால், முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்காக மட்டுமேதானா குரல் கொடுக்க வேண்டும்? முஸ்லிம்கள் ஏனைய இனத்தவர்களது உரிமைகளுக்காக குரல் கொடுக்கக்கூடாதா? என்பதை அஷ்ரபின் அரசியல் வாரிசுகள் சிந்திக்க வேண்டும்.
இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் தலைவிரித்தாடிய, ராஜபக்ஷவினரின் காலத்தில், அஷ்ரபின் அரசியல் வாரிசுகள் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தார்களா? இல்லையா? என்பது தனி விடயம். ஆனால், முஸ்லிம்கள் பேரினவாதத்தினால் பாதிக்கப்படுவது போன்றே, இந்த நாட்டின் அனைத்து மக்களும் இலஞ்சம், ஊழல், மோசடி, சூழ் மாசடைதல், கடன் சுமை, அடிப்படை வசதிகள் போதாமை என்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்த பிரச்சினைகளில் தலையிட்டு அவற்றுக்கு தீர்வு காண முயற்சிப்பதும் முஸ்லிம் அரசியலின் ஒரு முக்கிய பகுதியாக இருக்க வேண்டும் என்பதை அஷ்ரபின் அரசியல் வாரிசுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
நான் சுட்டிக்காட்டி வலியுறுத்த வருகின்ற விடயம் என்னவென்றால், முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மட்டுமல்ல பிரச்சினைகள்… இந்த நாட்டின் ஏனைய மக்கள் எதிர்நோக்குகின்ற அனைத்து பிரச்சினைகள் குறித்தும், முஸ்லிம் அரசியல் கவனம் செலுத்த வேண்டும். ஒரு பன்மை சமூகத்தில் வாழ்ந்துகொண்டு, முஸ்லிம்களது விவகாரங்களின்போது மட்டுமே களத்துக்கு வரும் அரசியல் அப்பட்டமான சுயநலமாகும். அந்த சுயநல நடவடிக்கையை முஸ்லிம் அரசியல் இனியும் செய்யக்கூடாது.
எல்லாவற்றிலும் முஸ்லிம் என்ற அடையாளம் அவசியமா என்பது குறித்தும் அஷ்ரபின் அரசியல் வாரிசுகள் சிந்திக்க வேண்டும். இந்த நாட்டின் பன்மை சூழலில், பாரிய தாக்கம் செலுத்தும் அரசியல் தரப்பாக உருவெடுக்க வேண்டுமெனின், இனம், மதம் என்று வரையறுத்து, குறித்த மதத்தவருக்கு மட்டுமேயான நிகழ்ச்சி நிரலுடன் செயற்படுவது பன்மை சமூக சூழல் நிலவும் நாட்டுக்கு பொருத்தமற்றதாகும்.
அஷ்ரபின் அரசியல் வாரிசுகள், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமக்கான முன்னுதாரணங்களை பெறலாம். முஸ்லிம் உலகில் இஸ்லாமிய - ஜனநயாக பின்புலத்திலிருந்து தோற்றம்பெற்ற பல்வேறு கட்சிகள் வெற்றிகரமாக முன்நகர்ந்து வருகின்றன. அவற்றின் அனுபவங்கள் குறித்தும் ஆராயப்படல் வேண்டும். அவை இலங்கை முஸ்லிம் அரசியலுக்கான புதிய பார்வையை தரும்.
துருக்கியின் ஆளும் கட்சியான ஏ.கே.பி., தூனிசியாவின் நஹ்ழா கட்சி என்பன மிகவும் வெற்றிகரமான இஸ்லாமிய - ஜனநாயக கட்சிகளாகும். துருக்கியும் தூனிசியாவும் முஸ்லிம் நாடுகள் என்றபோதும். அங்கு பல்வேறு அரசியல் சிந்னைப்போக்குகள் காணப்படுகின்றன. தேசியவாதம், மதச்சார்பின்மை, மார்க்சிஸம், இஸ்லாமியவாதம் என்று நீளுகின்ற இந்த சிந்தனை சூழலை புரிந்து கொண்டு, செயற்படும் இக்கட்சிகள், மிகவும் வெற்றிகரமாக முன்நகர்ந்து வருகின்றன. இவற்றிலிருந்து இலங்கை முஸ்லிம் அரசியல் தனக்கான படிப்பினைகளை பெறலாம்.
அஷ்ரபின் அரசியல் வாரிசுகள் இதனை புரிந்து கொள்ள முன்னரே, முஸ்லிம் சமூகத்திலுள்ள சில தரப்பினர், பன்மை சூழலை புரிந்து கொண்டு, தூரநோக்குடன் அரசியல் களத்தில் செயற்பட ஆரம்பித்துள்ளனர் என்ற தகவலையும் நினைவுபடுத்திக் கொள்கிறேன்.
எனவே, இலங்கையின் பன்மை சூழலை நன்கு புரிந்து கொண்டு, அதன் இயல்புக்கேற்ற மாற்றங்களை தம்மில் கொண்டு வருவதற்கு, அஷ்ரபின் அரசியல் வாரிசுகள் முன்வரல் வேண்டும்.
No comments:
Post a Comment