(கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு முன் 'ஸம்ஸம்' சஞ்சிகைக்காக எழுதியது...)
அன்பின் தம்பி தங்கைகளே!
இன்றை உலகம் ஓர் அறிவியல்
உலகம். நாளுக்கு நாள் புதிய புதிய கலைகள் உருவாக்கப்படுகின்றன. எத்தனையோ விதவிதமான
கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் அறிந்து உலகத்தோடு சேர்ந்து வாழ
வேண்டுமாயின் நாம் கட்டாயம் பல்வேறு விடயங்களையும் தேடிப் படிக்க வேண்டும். இதற்கான
மிகச் சிறந்த சாதனமே வாசிப்புப் பழக்கமாகும். இதுவே மிகச் சிறந்த பொழுது போக்கு சாதனமும்
ஆகும்.
வாசிப்புப் பழக்கத்தால்
எமக்குக் கிடைப்பது என்ன?
நாம் வாசிப்புப் பழக்கத்தை
ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறோம். அவற்றுள் சிலதை நோக்குவோம்.
1. எமது அறிவை வளர்த்துக்
கொள்ள முடியும்.
2. எமது ஆளுமையைச் செப்பனிட
முடியும்.
3. எமது நேரத்தைப் பிரயோசனமான
முறையில் கழிக்க முடியும்.
4. எந்த சந்தர்ப்பத்திலும்
தயக்கம் இன்றி பேச முடியும்.
5. எமது மொழி அறிவை வளர்த்துக்
கொள்ள முடியும்.
6. தவறான பொழுதுபோக்குகளில்
இருந்து தவிர்ந்து கொள்ள முடியும்.
எதை வாசிப்பது?
வாசிப்பு என்பது பயனள்ளதாகவும்
அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும். எனவே, நாம் எமது வயதுக்கும் தரத்துக்கும் ஏற்ற நூல்களையே வாசிக்க வேண்டும்.
ஒரு குழந்தை பிறந்தவுடன் எப்படி அதற்கு சோறு கொடுக்க முடியாதல்லவா? இது போன்றுதான் வயதுக்கேற்றவகையில்
நூல்களைத் தெரிந்தெடுக்க வேண்டும். சிறு பிள்ளைகள் கதைப் புத்தகங்களையும் சிறுவர் சஞ்சிகைகளையும்
வாசிக்கலாம். பின்னர் வயது செல்லச்செல்ல சற்றுத் தரமான புத்தகங்களை, சஞ்சிகைகளை வாசிக்க
வேண்டும். நாங்கள் வாசிக்கின்ற அனைத்தும் எமது அறிவை மேம்படுத்துவதாகவோ, திருப்தியை அளிப்பதாகவோ
இருக்க வேண்டும். எவ்விதப் பிரயோசனமும் இல்லாதவற்றை வாசிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
வாசிப்பை இன்றே ஆரம்பியுங்கள்!
உங்கள் வாழ்வில் ஒரு நாளைக்கு
குறைந்தது 30 நிமிடமேனும் வாசிப்புக்காக
ஒதுக்க வேண்டும். பாடசாலை மாணவர்கள் தமது பாடப்புத்தகங்கள் தவிர்ந்த ஏனைய புத்தகங்களையும்
வாசிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். ஓய்வு நேரங்கள், ஆசிரியர் சமூகமளிக்காத பாடவேளைகள் என்பவற்றை இயன்றவரை
மேலதிக வாசிப்புக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாசிப்புப் பழக்கத்தினால் உங்களை
அறியாமலேயே உங்கள் அறிவு அதிகரித்துச் செல்லும் என்பதை மறந்துவிடவேண்டாம்.
நூலகம் ஒன்றில் உறுப்பினராகுங்கள்!
நீங்கள் கட்டாயமாக ஒரு நூலகத்தில்
உறுப்பினராக இருங்கள். குறைந்தது வாரத்துக்கு இரு முறையாவது நூலகத்துக்குச் செல்லுங்கள்.
எப்போதும் ஒரு குறிப்புப் புத்தகத்தையும் உங்களுடன் வைத்திருங்கள். அதில் உங்களுக்கு
அவசியமான விடயங்களைச் சுருக்கமாக எழுதி வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும் போது அதனை
நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில், நாம் வாசிக்கின்ற எல்லா விடயங்களும் எம் மனதில் அப்படியே நீண்ட
நாட்களுக்கு நிலைத்திருக்காது.
வீட்டில் ஒரு சிறு
நூலகத்தை உருவாக்குவோம்!
இன்று எம்மில் எத்தனையோ பேர்
தேவையற்ற விடயங்களுக்கெலலாம் பணத்தை அள்ளிக் கொட்டுகிறார்கள். ஆனால், ஒரு புத்தகத்தை அல்லது
ஒரு சஞ்சிகையை, ஒரு பத்தரிகையை வாங்க
அவர்கள் தயங்குகிறார்கள். மாணவர்கள் தமக்கு வீட்டில் இருந்து கிடைக்கும் பணத்தில் நாளாந்தம்
ஒரு சிறு தொகையைச் சேமித்து வந்தால் மாதாந்தம் குறைந்தது இரண்டு புத்தகங்களையாவது வாங்க
முடியும். அப்படியாயின் வருடத்துக்கு குறைந்தது 24 புத்தகங்களை கொள்வனவு செய்யலாம். இவற்றைக் கொண்டு
ஒரு சிறு நூலகத்தை வீட்டிலேயே ஏற்படுத்திக் கொள்ளலாம்.
'நூலகம் இலலாத வீடு மனிதர்களை உயிரோடு புதைக்கும்
புதைகுழிகளே!' என்ற கருத்தை சற்று
சிந்தித்துப் பாருங்கள்.
எனவே, தம்பி தங்கைகளே! நாம்
வாசிப்புப் பழக்கத்தை அதிகரித்துக் கொள்வோம். அதன் மூலம் நாளைய உலகுக்கு வெற்றிகரமாக
முகம் கொடுப்போம்.
No comments:
Post a Comment