Wednesday, June 6, 2012

துருக்கி: நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி புதிய தலைமைகளை நோக்கி...


கலாநிதி முஹம்மத் அப்பாஸி 
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

துருக்கியின் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லாஹ் குல்லின் 8 வருட பதவிக் காலம் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டுடன் முடிவடைய இருக்கின்ற நிலையில் ஆளும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி புதிய தலைமைகளைத் தேடத் தொடங்கியுள்ளது.

அப்துல்லாஹ் குல் பாராளுமன்றத்தினாலேயே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். தற்போது பாராளுமன்றத்தால் ஜனாதிபதி தெரிவுசெய்யப்படும் முறைமை ரத்து செய்யப்பட்டு நேரடியாக மக்களாலேயே ஜனாதிபதி தெரிவுசெய்யப்படும் வகையில் சட்டம் மாற்றப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சட்டத்தின் படி 5 வருடங்களுக்காக ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார். ஜனாதிபதி இரண்டு தடவைகள் பதவி வகிக்கலாம். அடுத்த ஜனாதிபதியாக தற்போதைய பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான் தெரிவுசெய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.



ரஷ்யாவில் விலாடிமிர் புடினும் மெட்வடெவும் தமது ஜனாதிபதிப் பதவியையும் பிரதமர் பதவியையும் மாற்றிக் கொண்டு மீண்டும் பதவியில் அமர்ந்தனர். புடின் இரு முறை ஜனாதிபதியாகப் பதவி வகித்து தனது பதவிக்காலம் முடிவடைந்ததும் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

மெட்வடெவ் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். மெட்வடெவ் மீண்டுமொரு முறை ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிடவுள்ளார். ரஷ்யாவைப் போலல்லாது துருக்கியில் நிகழ்ந்த கருத்துக் கணிப்பீடுகளின்படி அர்தூகானுக்குப் பின்னர் கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்படுவதற்கான சந்தர்ப்பம் அப்துல்லாஹ் குல்லுக்கு அரிதாகவே இருக்கின்றது.

அரீன்ஷ்: எதிர்பார்க்கப்படும் தலைவர்

நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் அடுத்த தலைவராக யார் வருவார் என்பது குறித்து கடந்த ஜனவரி மாதம் இக்ஸாரா என்ற நிறுவனம் நடாத்திய கருத்து கணிப்பீட்டின் பெறுபேறுகள் அவதானிகளை ஆச்சரியத்துக்குட்படுத்தியுள்ளன. கருத்துக் கணிப்பீட்டில் கலந்து கொண்டவர்களில் 20.08% ஆனோர் தம்மிடம் கருத்துக்கள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டதோடு, 18.04% ஆனோர், போலன்ட் அரீன்ஷை தெரிவுசெய்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.



தற்போதைய பிரதிப் பிரதமராக இருக்கும் இவர் கட்சியினுள் மில்லி கோரஸ் சிந்தனையை அதாவது, அர்பகானின் சிந்தனையைக் கொண்டவராவார். இவர் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டால் இஸ்லாமிய ஸஆதா கட்சியின் வாக்குகள் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியை நோக்கி நகரும் என எதிர்பார்க் கப்படுகின்றது.



நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியில் சீர்திருத்தப் போக்கை கடைபிடிக்கின்ற தற்போதைய ஜனாதிபதி அப்துல்லாஹ் குல் தலைவராகத் தெரிவு செய்யப்படுவதனை 14.51% ஆனோர் விரும்புகின்றனர். ரஃபாஹ் கட்சியைத் தொடர்ந்து ஸ்தாபிக்கப்பட்ட ஃபழீலா கட்சியினுள் அர்தூகானுடன் இணைந்து சீர்திருத்த இயக்கத்தை வழிநடாத்திய இவர்,அர்தூகானுடன் இணைந்து நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியை ஸ்தாபித்தவராவார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய பொருளாதார விவகாரங்களுக்கான பிரதியமைச்சருமான அலி பாபா ஜான் தலைவராகத் தெரிவு செய்யப்படுவதனை 7.29% ஆனோர் விரும்புகின்றனர். இவர் கட்சியின் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத் தலைவரான ஜமீல் ஷீஷீக் தலைவராகத் தெரிவுசெய்யப்படுவதை 5.23% ஆனோர் விரும்புகின்றனர். இவர் கட்சியினுள் சூபித் தரீக்காக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். வெளிவிவகார அமைச்சர் அஹ்மத் தாவுத் ஒக்லூ தலைவராகத் தெரிவு செய்யப்படு வதை 5.1%ஆனோர் விரும்புகின்றனர்.

அர்தூகான் முதலிடத்தில்
துருக்கியின் 80 மாகாணங்களைத் தழுவி நடாத் தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பீட்டின் படி 36%ஆனோர் அர்தூகான் குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்படுவதை விரும்புகின்றனர். அத்தோடு 52.4% ஆனோரின் நம்பிக்கையை அவர் பெற்றிருப்பதாகவும் கருத்துக் கணிப்பீடு குறிப்பிடுகின்றது. 28% ஆனோர் எந்தவிதக் கருத்தையும் வெளியிடாததோடு, 6% ஆனோர் தற்போதைய பிரதிப் பிரதமர் போலன்ட் அரீன்ஷ் குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்படுவதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தரவுகளின்படி பார்க்கையில் அர்தூகானுக்குப் பின்னர் பிரதமராகவோ குடியரசுத் தலைவராகவோ தெரிவு செய்யப்படுவதற்கு சாத்தியப்பாடு மிக்கவராக போலன்ட் அரீன்ஷை கருத முடியும்.

பாராளுமன்றத்தில் 135 ஆசனங்களைப் பெற்று பெரும் எதிர்க்கட்சியாக இருக்கின்ற குடியரசு மக்கள் கட்சியின் தலைவர் கமால் க்லீஷ்தார் ஒக்லூ 17.05% ஆனோரின் நம்பிக்கையைப் பெற்றிருந்த போதும் அவர் குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்படுவதை 5% ஆனோரே விரும்புகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதை விட குடியரசுத் தலைவரை தெரிவு செய்வது வித்தியாசப்படுவதனையே இது சுட்டிக் காட்டுகின்றது.

என்றாலும், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்றும் பேசப்படுகின்றது. அதாவது, ஒருவர் மூன்று தடவைகளுக்கு அதிகமாக பாராளுமன்றப் பிரதிநித்துவத்திற்காகப் போட்டியிட முடியாது என்ற அர்தூகானின் கருத்து கட்சியின் தலைமைத் துவ அணியில் வெற்றிடத்தை ஏற்படுத்தும் என்று அவதானிகள் கருதுகின்றனர்.அத்தோடு துருக்கிய மக்கள் ஒரு கடும்போக்கு 


மதச்சார்பின்மைவாதி குடியரசுத் தலைவராக வருவதனை விரும்புவதில்லை என்பதனையும் இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். தேசிய இயக்க கட்சியின் தலைவர் தௌலத் பஹஷ்லீ 9% ஆனோரின் நம்பிக்கையைப் பெற்றிருந்த போதும் அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதை 4% ஆனோரே விரும்புகின்றனர். எனவே, 2014 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்படு வதற்குப் பதிலாக நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்படும் முதலாவது ஜனாதிபதியாக அர்தூ கான் திகழ்வார் என்பது உறுதியாகின்றது.

இந்தப் பின்னணியில் கட்சியின் முக்கிய ஆளுமைகளான போலன்ட் அரீன்ஷ், அலி பாபா ஜான்,ஜமீல் ஷீஷீக் ஆகியோர் உள்ளிட்ட 80 பேர் எதிர் வரும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்குட்பட்டுள்ளனர். இது அஹ்மத் தாவுத் ஒக்லூ போன்ற கட்சியின் இளம் தலைமுறைக்கு கட்சியின் பொறுப்புக்களைச் சுமக்கும் சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.

எனவே, இந்தத் திட்டத்தின் மூலம் கட்சியின் இளம் தலைமுறைக்கு பொறுப்புக்களைச் சுமக்கும் சந்தர்ப்பத்தை வழங்கி உண்மை ஜனநாயகத்தின் பண்புகளை கட்சியினுள் ஆழப்பதித்துள்ளார் அர்தூகான்.

நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் தவணையை வரையறுப்பதற்கான பிரதான காரணம் மக்கள் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியைத் தெரிவு செய்வதற்கான தூண்டற் காரணியாக தனிநபர்களின் செல்வாக்குக்குப் பதிலாக கட்சியின் செயற்திட்டங்கள் இருக்க வேண்டுமென்ற அர்தூகானின் விருப்பமாகும் என்று பேசப்படுகின்றது.

இந்தத் திட்டத்தின் மூலம் நீண்ட நாள் அதிகாரக் கதிரையிலிருக்கும்போது தோன்றும் தனிநபர் சர்வாதிகாரம் அழிக்கப்படுகின்றது. இவ்வகை அனுபவமொன்றை செயற்படுத்தும் முதலாவது துருக்கியக் கட்சி நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியாகும். இக்கட்சி கொண்டிருக்கின்ற இஸ்லாமியப் பின்னணிதான் உண்மையான ஜனநாயகத்தை அது ஆழமாகப் பதித்துக் கொண்டிருப்பதற்கான காரணமாகும்.

நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி வளர்ச்சியடைகின்றது
இன்னும் பல கருத்துக் கணிப்பீடுகளின் படி நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. தற்போது பாராளுமன்றத் தேர்தல் நிகழுமாயின் சென்ற தேர்தலை விட 1% அதிகமான வாக்குகளை அதாவது 51.04% வாக்குகளை இக்கட்சி பெறும் என்று அவை சுட்டுகின்றன.

அத்தோடு, குடியரசு மக்கள் கட்சியின் செல்வாக்கு25.02% ஆகவும் தேசிய இயக்க கட்சியின் செல்வாக்கு12.01% ஆகவும், குர்திஷ் தேசியவாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமாதானத்துக்கும் ஜனநாயகத்துக்குமான கட்சியின் செல்வாக்கு 12.01%ஆகவும் குறைந்திருப்பதாக அவை சுட்டுகின்றன. அனைத்துக் கட்சிகளதும் செல்வாக்கு குறைந்த நிலையில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி மாத்திரம் தான் அதிக செல்வாக்கை சம்பாதித்துள்ளது.



கடந்த 2011 ம் ஆண்டு நிகழ்ந்த மிகப் பெரும் கருத்துக் கணிப்பீடொன்றின் படி 6% ஆன துருக்கியர் மாத்திரமே ஒழுங்குபடுத்தப்பட்ட இஸ்லாமிய இயக்கங்களில் இணைந்திருக்கின்றனர். இவர்களில் 61.08% ஆனோர் நூர்ஸிய பின்னணி கொண்ட பத்ஹுல்லாஹ் கூலானின் இயக்கத்தையும் 16.03% ஆனோர் ஸுலைமானியா, மன்ஸிலிய்யா ஆகிய இயக்கங்களையும்15.02% ஆனோர் நக்ஷபந்தியா இயக்கத்தையும் 7.03% ஆனோர் வேறு இயக்கங் களையும் சார்ந்திருக்கின்றனர்.

இந்தப் பின்னணிகளில் நின்று பார்க்கையில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி இஸ்லாமியத் தளத்தை மாத்திரம் சார்ந்ததாக இல்லை. மாறாக, கட்சியின் செயற்திட்டங்களும் அதன் உள்ளூராட்சி, பாராளுமன்ற மற்றும் அரச நிறுவனங்களது உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஊழல் அற்றவர்களாக இருப்பதும் பல சிந்தனைப் போக்குகளைக் கொண்ட துருக்கியரை அக்கட்சியின் பால் ஈர்த்தெடுத்துள்ளது.

1 comment:

Anonymous said...

good