1954 ல் துருக்கியின் Rize என்ற கிராமத்தில்
பிறந்தார் அர்தூகான். தனது ஐந்து குழந்தைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்கிக்
கொடுக்க வேண்டும் எனக் கருதிய அர்தூகானின் தந்தை குழந்தைகளோடு இஸ்தான்புல் நகருக்குக் குடிபெயர்ந்தார். அப்போது அர்தூகானுக்கு
வயது 13. ஆரம்பக் கல்வியை
இஸ்லாமியப் பாடசாலையொன்றில் பெற்ற
அர்தூகான், பின்னர் இஸ்தான்புல் மர்மரா பல்கலைக்கழகத்தில்
இனைந்து முகாமைத்துவத் துறையில் பட்டப் படிப்பை முடித்தார். அர்தூகான்
தொழில் ரீதியில் ஒரு உதைப்பந்தாட்ட வீரரும் ஆவார்.
பல்கலைக்கழகத்தில் கற்கும் போது, துருக்கியில் இஸ்லாமிய அரசியல் முன்னோடியான பேராசிரியர் நஜ்முத்தீன் அர்பகானை சந்தித்தார் அர்தூகான். பின்னர் அர்பகான் 1972 ல் நிறுவிய தேசிய
சலாமா கட்சியில் இணைந்தார். இருப்பினும்
அர்பகான் நிறுவிய அனைத்துக் கட்சிகளும் தடை செய்யப்பட்டன. எனவே, தொடர்ந்தும் அர்பகான் நிறுவிய ரபாஹ், பழீலா ஆகிய காட்சிகளில்
அர்தூகான் இனைந்து செயற்பட்டார். 1985ல் ரபாஹ் கட்சியின் இஸ்தான்புல் நகர கிளையின் தலைவராகத் தெரிவு
செய்யப்பட அர்தூகான் 1994 ல் நிகந்த தேர்தலில் இஸ்தான்புல் நகர மேயராகவும் தெரிவு செய்யப்பட்டார். இந்த மேயர் பதவிதான் அர்துகானுக்கு துருக்கியர் மத்தியில்
மிகுந்த மக்கள் செல்வாக்கைப் பெற்றுக் கொடுத்தது. ஏனெனில், அவரின் நிர்வாகத்தின் கீழ் இஸ்தான்புல் ஒரு பசுமை நகரமாக மாற்றப்பட்டது, நீர் விநியோகம் சீர்செய்யப்பட்டது, நகரெங்கும் மரங்கள் நடப்பட்டன.
கமால் அதாதுர்க் என்பவனால் துருக்கியில் நிலவி வந்த இஸ்லாமிய
கிலாபத் இல்லாதொழிக்கப்பட்டு துருக்கி ஒரு மதச்சார்பற்ற
நாடாக மாற்றப்பட்டது. இது முதல் இஸ்லாமியப் பின்னணி கொண்டோர் ஆட்சிக்கு வருவதும், தொடர்ந்தும் ஆட்சியில்
நீடிப்பதும் மிகப் பெரும் கஷ்டமாகவே இருந்தது. இந்தப் பின்னணியில் தான் 1998 ல் ஒரு கூட்டத்தின்
போது இஸ்லாமியக் கவிதையொன்றை வாசித்தார் என்ற குற்றச்சாட்டில் அர்தூகான் சிறை செல்ல நேரிட்டார். என்றாலும் 4 மாதங்களின் பின்னர் அவர் வெளிவந்தார்.
தனது ஆசான் அர்பகானின் நேரடி இஸ்லாமிய அரசியலில் ஈடுபடும் முறை
தற்போதைய துருக்கிக்கு பொருந்தாது என்று கருதிய அர்தூகான் 2001 ல் பழீலா
கட்சியிலிருந்து பிரிந்த சிலரை இணைத்துக்கொண்டு நீதிக்கும் அபிவிருத்திக்குமான
கட்சி என்ற பெயரில் கட்சியொன்றை நிறுவினார். இந்தக் கட்சி மத ரீதியா கட்சி என்று அடையாளப்படுத்தப்படுவதை
விரும்பாத அர்தூகான், அதாதுர்க் நாடிய நாகரிகம் வாய்ந்த சமூக உருவாக்கத்தை தாமும் விரும்புவதாக
தெரிவித்து வருகிறார்.
துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்துக்கொள்ள கடும் முயற்சி மேற்கொள்ளும் அர்தூகான் அதன்மூலம்
தான் அர்பகானை ஒத்த ஒரு பிரதியல்ல என்ற கருத்தை ஏற்படுத்த முயல்கிறார். அத்தோடு துருக்கி ஐரோப்பிய
ஒன்றியத்தில் இணைந்தால் ஐரோப்பிய நாடுகள் போல் துருக்கியிலும் இராணுவத்தின் அதிகார
பலம் குறைக்கப்பட்டு மக்கள் மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றும் உரிமையைப் பெறுவர் என்பதனையும் மறைமுகமாக நாடுகிறார்.
துருக்கியில் பல தசாப்தங்களாக நீடித்து வருகின்ற குர்டிஷ் மக்களுக்கு
எதிரான ஒடுக்குதல்களை இல்லாதொழிக்கும் முயற்சியிலும்
குர்டிஷ் தீவிரவாதிகளை எதிர்பதிலும் தனது கவனத்தை செலுத்திவருகின்றார் அர்தூகான்.
துருக்கியின் விவாகாரங்களோடு மாத்திரம் சுருங்கி விடாத அர்தூகான்
சர்வதேச முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளிலும் தனது கடமையை நிறைவேற்றி
வருகின்றார். 2009ல் இஸ்ரேல் காசா மக்கள் மீது மேற்கொண்ட மிருகத்தனமான
தாக்குதலை வன்மையாகக் கண்டித்தார் அர்தூகான். அத்தோடு 2009ல் நிகழ்ந்த டாவுஸ் மாநாட்டின் போது இஸ்ரேலிய ஜனாதிபதி
செமன் பெரசை கடுமையாக எதிர்த்துப் பேசி பாலஸ்தீன மக்களுக்கான தனது அனுதாபத்தையும் வெளிக்காட்டினார்.
யூதர்களைப் பார்த்து அர்தூகான் இப்படிப்பேசினார்...
' இஸ்ரேல் அப்பாவிக் குழந்தைகளை கொள்கின்றது. உங்களது யூத மூதாதையோர்
ஸ்பெயினில் இஸ்லாமியராஜ்ஜியம் வீழ்ச்சி கண்ட போது சிலுவைக்காரர்களால் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டனர்.
அப்போது உஸ்மானிய துருக்கியர்கள்தான் அவர்களைப் பாதுகாத்தனர்.'
அரபு வசந்தத்தை தொடர்ந்து ஆபிரிக்க அரபு நாடுகளுக்கு விஜயம்
மேற்கொண்ட அர்தூகான் மிகுந்த மக்கள் திரளுக்கு மத்தியில் வரவேட்கப்பட்டுள்ளார். அவர்
எகிப்துக்கு சென்ற போது பல ஆயிரக்கனக்கண் இக்வான் இயக்க இளைஞ்சர்களால் வரவேட்கப்பட்டார். தூனிசியா சென்ற அவர் துனிசியா
இஸ்லாமியவாதிகளை சந்தித்தார். லிபியா சென்ற அவர் லிபிய மக்களோடு இணைந்து ஜும்மா தொழுகையை
நிறைவேற்றினார்.
அரபு வசந்தத்தை தொடர்ந்து நிகழ்ந்த தூனிசியா தேர்தலில் நஹ்தா
இஸ்லாமியக் கட்சியும் மொரோக்கோ தேர்தலில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான (இஸ்லாமிய)
கட்சியும் வெற்றிபெற்றிக்கின்ற நிலையில் எகிப்திலும் இஸ்லாமியவாதிகள் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
எனவே. இனிவரும் காலத்தில் அர்தூகானின் துருக்கிக்கும் அரபு இஸ்லாமிய உலகுக்குமிடையில்
ஒத்துழைப்புடன் கூடிய ஒரு சிறந்த உறவை எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment